தர்ம-சங்கடம் - Ravichandran

 .


ப்ரியாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.மணி பர்ஸை மறந்து வீட்டில் வைத்துவிட்டு, இப்போது பேருந்து இருக்கையில் சுமார் பத்து நிமிடமாக பயணித்து கொண்டிருக்கிறாள்.பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.இல்லையென்றால் கண்டக்டர்  அவளை இந்நேரம் துரத்தி இருப்பார்.எப்படியாவது அலுவலகத்திற்கு சென்றுவிட்டாள் போதும், சுமதியிடம் திரும்பி வருவதற்கான தொகையை பெற்றுக் கொண்டாள் ஆச்சென நினைத்தாள்

ஒவ்வொரு தடவை கண்டக்டர் டிக்கெட் கேட்கும் பொழுதும் இவளையே பார்ப்பது போலிருந்தது.அவரை தவிர்க்க இப்பொழுது காதில் ஹெட்செட் போட்டுக் கொண்டாள்.பார்வையை அதன் பின் அவர் பக்கம் முடிந்த மட்டும் திருப்பாமல் பார்த்துக் கொண்டாள்.கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்தபடியே இருந்தது.அவள் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்ததும் இறங்கி நடந்தவளை திடீரென கண்டக்டர் அழைத்தார்

போவதா, வேண்டாமா குழப்பத்தோடு நெருங்கியவள் கையில் மணிபர்சை கொடுத்தவர்
"பர்ஸ் உங்க சீட்டுக்கு கீழ விழுந்து கிடந்தது மேடம். இந்தாங்க எல்லாம் கரக்டா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க"

வெட்கம் பிடுங்க மணி பர்சை பெற்றுக் கொண்டாள்.தேங்க்ஸ் சொல்வதற்குள் பேருந்து அவளை கடந்து போயிருந்தது.
அன்றைய பேருந்து கட்டணத்தை கோவில் உண்டியலில் செலுத்திவிட்டு மனநிறைவோடு அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.சுமதி இன்று விடுப்பு எடுக்க போவதாக நேற்று அவளிடம் கூறியது, அப்பொழுது தான் அவள் நினைவுக்கு வந்தது...

நன்றி https://eluthu.com/kavithai/434311.html



No comments: