சிட்னியில் அப்துல் ஹமீத் அவர்களின் நூல் அறிமுக விழா - செ.பாஸ்கரன்

 .

"வான் அலைகளில் ஒரு வழிப்போக்கன்" என்ற பி ஹெச் அப்துல் ஹமீத் அவர்களின் நூல் அறிமுக விழா சிட்னியில் 17 09 2023, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு ஓபன் சிவிக் சென்டர் மண்டபத்தில் இடம் பெற்றது. உலக அறிவிப்பாளராக பரிணமித்துக் கொண்டிருக்கும் திரு பி ஹெச் அப்துல் ஹமீத் அவர்களுடைய நூலை அறிமுகப்படுத்துவதற்காக டாக்டர் கேதீஸ்வரன், டாக்டர் நளாயினி, திரு . கதிர், திரு விந்தன் ஆகியோர் இன்னும் பலருடன் இணைந்து ஒரு குழுவாக இந்த நிகழ்வை சிட்னியிலே ஏற்பாடு செய்திருந்தார்கள்.

விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார் மறைந்த வானொலியாளர் திரு சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் மருமகனும், SBS வானொலியின் அறிவிப்பாளருமான திரு சஞ்சயன் குலசேகரம் அவர்கள். நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் டாக்டர் கேதீஸ் அவர்கள் அதனைத் தொடர்ந்து நீண்ட காலம் வானொலியில் பணியாற்றிய திரு அப்துல் ஹமீத் அவர்களை நீண்ட காலம் அறிந்தவரும் மெல்பனிலே வசித்து வருபவருமான எழுத்தாளர் முருக பூபதி அவர்கள் இந்த நூலைப் பற்றிய அறிமுகத்தை மிகச் சிறப்பாக செய்தார்.

அப்துல் ஹமீத்அவர்கள் பற்றி, அவர்களுடைய நடவடிக்கைகள், சிறு வயதிலேயே அவர் செய்த விடையங்கள், வளர்ந்த பின் பணியாற்றும் போது செய்து கொண்ட விடயங்கள், நூலிலே பதிந்துள்ள விடயங்கள் என்று மிக அழகாக அந்த அறிமுக உரையை ஆற்றி இருந்தார் எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள்.

வாழ்த்துரையை வழங்க வந்தார் இன்பத் தமிழ் ஒலி நிறுவனரும் அறிவிப்பாளருமான திரு பாலசிங்கம் பிரபாகரன் அவர்கள். அவருக்கே உரித்தான பாணியில் நகைச்சுவையாகவும் ரசிக்கும் படியாகவும் அந்த வாழ்த்துரையை வழங்கி இருந்தார். அப்துல் ஹமீத்அவர்களின் பொறுமை, தன்னடக்கம் என்பவற்றை குறிப்பிட்டு வாழ்த்தினார்.




அதன் பின்பு காணொளிகளாக பல நிகழ்வுகள் ஒளி வடிவில் காண்பிக்கப்பட்டது. அப்துல் ஹமீத் அவர்களோடு பயணித்தவர்கள், அவரைப் பற்றி நினைவு படுத்தியவர்கள் என்று அந்தக் காட்சி அமைந்திருந்தது. குறிப்பாக அப்துல் ஹமீத் அவர்களோடு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் பயணித்தவரான திருமதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தர முடியாத காரணத்தால் ஒலி வடிவில் சிறப்பு உரை ஒன்றை ஆற்றியிருந்தார்.

இறுதியாக அப்துல் ஹமீத் அவர்கள் ஏற்புரை வழங்குகின்ற போது தான் ஒரு எழுத்தாளர் அல்ல ஆனால் இது புதிய வானொலியாளர்களுக்கு தேவையான ஒன்று அதனால் என்னுடைய பயணத்திலே, வானொலியில் இடம் பெற்றவற்றை எழுதி இருக்கின்றேன் என்று குறிப்பிட்டு இருந்தார். அது மட்டுமல்ல இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் வர்த்தக சேவையை முதல் முதல் ஆரம்பித்து வைத்தவர் ஒரு ஆஸ்திரேலியர் என்றும் இன்று அந்த ஆஸ்திரேலியா மண்ணிலே சிட்னியிலே இந்த நிகழ்வு இடம்பெறுவது தனக்கு மனதுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

மிக அடக்கமாகவும், மரியாதையாகவும் அவர் உரை ஆற்றியது எல்லோரையும் கவர்ந்திருந்தது. பல பழைய நினைவுகளையும், அவரோடு பணியாற்றிய வானொலியாளர்களையும் குறிப்பிட்டுக் கொண்டே சென்றது அவர் தன்னோடு பணிபுரிந்தவர்கள் மேல் வைத்திருக்கும் மரியாதையையும், நட்பையும் எடுத்துக்காட்டியது.




55 வருடங்களுக்கு மேல் வானொலியிலே பணியாற்றி உலக மக்களுடைய நெஞ்சங்களிலே குடி கொண்டிருந்த அந்த வானொலியாளன் இவ்வளவு தன்னடக்கமாக இருப்பது பல வானொலி அறிவிப்பாளர்களை கவர்ந்திருந்தது. இதை பாலசிங்கம் பிரபாகரன் அவர்களும் குறிப்பிட்டு கூறியிருந்தார். இந்த நிகழ்வை மிக அழகாக அமைத்த விழா குழுவினருக்கும், இந்த நிகழ்ச்சியிலே பங்கு பற்றி இருந்த மண்டபம் நிறைந்த மக்களுக்கும் சிட்னியிலே தன்னோடு பேசி பழகியவர்கள் தன்னை பேட்டி கண்டவர்கள், தன்னை நலம் விசாரித்தவர்கள் எல்லோருக்குமே நன்றி கூறி தன்னுடைய உரையை நிறைவு செய்து கொண்டார்.


நூல் அறிமுகம் மற்றும் 55 ஆண்டுகால ஊடகப் பணிக்குப் பாராட்டு நிகழ்ச்சியின் முடிவில் B H அப்துல் ஹமீத் அவர்கள் சந்தித்த பிரபலங்கள் அவர்களுடனான உறவு மற்றும் அநுபவங்கள் பற்றி நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு குலசேகரம் சஞ்சயன் கேள்விகள் கேட்க, காணொளிகளுடன் ஹமீத் அவர்கள் பதிலளித்ததும், பின்னர் அவரது அபிமான இரசிகன் என்று, தற்போது சிட்னியில் வாழும் தமிழ்நாட்டை சேர்ந்த 'அதிரை என். ஷஃபாத்' என்பவர் வாசித்த கவிதையும் அரங்கில் இருந்தவர்களைளப் பெரிதும் கவர்ந்தது.




முதல் பிரதியை மூத்த கவிஞரும் , அப்துல் ஹமீத் அவர்கள் தயாரித்த கவிதை நாடகமான யாழ்ப்பாடியை எழுதிக் கொடுத்தவருமான அம்பி என்று அழைக்கப்படும் மூத்த கவிஞர் அம்பிகை பாலன் அவர்களுக்கு வழங்கினார் அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து வருகை தந்திருந்த முஸ்தபா அவர்களுக்கும் சிட்னியிலே இருக்கின்ற அமைப்புகள் மற்றும் பெரியோர்களுக்கும் சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வு சிற்றுண்டி வழங்கலோடு இனிதாக நிறைவு பெற்றது. இது வானொலியாளர் அப்துல் ஹமீத் அவர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவம் அல்ல சிட்னி மக்கள் அவர் மேல் வைத்திருந்த பாசத்தின் வெளிப்பாடு என்று எல்லோருமே எண்ணிக் கொள்கின்றார்கள். எங்கள் நெஞ்சங்களில் குடிகொண்ட ஒரு வானொலியாளனுக்கு வாழ்த்துக்கள்.





























No comments: