தேர்ந்திடு நல்லவை வாழ்க்கையில் ! -

 .

 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண்  - அவுஸ்திரேலியா பனி உருகினால் நீராகும்
பகை பெருகினால் அழிவாகும்
மனம் குறுகினால் பகையாகும்
குணம் சிறந்திடில்  உயர்வாகும்

பணம் பெருகினால் திமிராகும்
தனம் வழங்கினால் மிடிபோகும்
குறை நிறைந்திடில் இருளாகும்
தரை குளிர்ந்திடில் ஒளியாகும்

உயிர் வதைத்திடல் இழிவாகும்
ஊழல் களைந்திடல் சிறப்பாகும்
எழில் குலைத்திடல் பழியாகும்
பழி அழித்திடல் தெளிவாகும்

நீதியை மிதிப்பது முறையல்ல
நேர்மையை இழப்பது முறையல்ல
தோல்வியை தொடுவது முறையல்ல
துவளா திருப்பதே முறையாகும்

கற்றிடல் ஒதுக்குதல் சீரல்ல
நற்செயல் வெறுப்பது நன்றல்ல
கற்பவை கசடறக் கற்றிடு
கற்றதை வாழ்கையாய் ஆக்கிடு 

வேதனை தருவதை விட்டிடு
விருப்புடன் நல்லவை செய்திடு
போதனை மனத்தினில் இருத்திடு
சாதனை ஆக்கிடு வாழ்வினை

அறமதை அனைத்திலும் பார்த்திடு
அகமதில் ஒழுக்கத்தை இருத்திடு
திறமையாய் செயற்பட நினைத்திடு
தேர்ந்திடு நல்லவை வாழ்க்கையில் 

இறையதை மறவா இருந்திடு
பொறையுடன் யாவையும் செய்திடு
கறையினை கண்டதும் ஒதுங்கிடு
கடவுளைத் துணையென நம்பிடு 

No comments: