உலகம் சுற்றும் வாலிபன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 .

தமிழ் திரையுலகில் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்த எம் ஜி ஆர் மீது பொதுவாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுவதுண்டு. அவரை வைத்து படத்தை ஆரம்பித்தால் உரிய காலத்துக்குள் அதில் நடித்து கொடுக்க மாட்டார் என்பதே அந்த குறையாகும். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் எம் ஜி ஆர் தான் சொந்தமாக தயாரித்த மூன்று படங்களையே உரிய காலத்துக்குள் நடித்து முடிக்கவில்லை என்பதாகும். நீண்ட கால தயாரிப்பில் இருந்த நாடோடி மன்னன் பல இலட்சங்களை விழுங்கி விட்டே திரைக்கு வந்து வெற்றி கண்டது. அடிமைப்பெண் ஆரம்பிக்கப் பட்டு , பின்னர் நிறுத்தப்பட்டு , பிறகு கதை, நடிகர்கள் மாற்றப்பட்டு திரைக்கு வந்து வெற்றி கண்டது. அதே நிலை தான் உலகம் சுற்று வாலிபனுக்கு ஏற்றப்பட்டது.

சிவாஜி நடிப்பில் சிவந்த மண் ஐரோப்பிய மண்ணில் உருவானதைத் தொடர்ந்து அதே போல் தானும் வெளிநாடுகளில் படம் தயாரிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எம் ஜி ஆருக்கு ஏற்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு சித்ரா கிருஷ்ணசாமி, ஆனந்த விகடன் மணியன் இருவரிடமும் கொடுக்கப்பட்டது. ஜப்பானில் நடக்கும் எக்ஸ்போ 70 படத்தில் இருக்க வேண்டும் என்ற ஏற்பாட்டில் 70ம் ஆண்டில் தொடங்கிய படப்பிடிப்பு மூன்று ஆண்டுகள் இழுபட்டு 73ம் ஆண்டே படம் திரைக்கு வந்தது.

இந்த வகையில் நடிகர் எம் ஜி ஆர் தயாரிப்பாளர் எம் ஜி ஆரை மூன்று படத் தயாரிப்பின் போதும் கஷ்டப்படுத்தி இருக்கிறார் என்பதே உண்மை! ஆனாலும் மூன்று படங்களும் வெற்றி கண்டதால் தயாரிப்பாளர் எம் ஜி ஆர் தப்பி விட்டார்.

நான்கு கதாநாயகிகள், ஏழு வில்லன்கள் , பத்து பாடல்கள், ஐந்து ஆசிய நாடுகளில் படப்பிடிப்பு இந்த அமைப்பில் தான் உலகம் சுற்றும் வாலிபன் உருவானது. ஆனால் படத்துக்காக எடுக்கப்பட்ட எக்கச்சக்கமான காட்சிகளை எடிட்டிங் மேசையில் அமர்ந்து , எடிட்டர் எம் உமாநாத் அனுசரணையுடன் எம் ஜி ஆர் நேர்த்தியாக வெட்டி ஒட்டி , சேர்த்து படத்தை முழுமையாக்கி விட்டார்.

சயன்டிஸ் முருகனை அவன் காதலியோடு சேர்த்து வில்லன் பைரவன் கடத்தி சென்று மிரட்டுகிறான். முருகனை தேடி அவன் தம்பி ராஜு பல நாடுகளுக்கு அலைகிறான். இந்த அலைச்சலில் மூன்று காதலிகளும் , சில வில்லன்களும் அவன் வாழ்வில் குறுக்கிடுகிறார்கள். அவர்களை எப்படி சமாளித்து தானும் தப்பி, தன் அண்ணணையும் அவன் காதலியையையும் அவன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே படத்தின் கதை.

படம் முழுவதும் வந்து சதித் திட்டங்களை தீட்டும் எஸ் ஏ அசோகன் நடிப்பு ஒரு ஸ்டைல் என்றால் மேக் அப் இன்னுமொரு ஸ்டைல். சில காட்சிகளில் மட்டும் வருகிறார் நம்பியார். அவரின் ஜப்பானிய மேக் அப் , ஆஜாபாகுவான உடல்வாகு எல்லாம் மிரட்டுகின்றன. அவருக்கு மேக் அப் போட்ட மேக்கப்மேன் ராமுவுக்கு ஸ்பெஷல் பாராட்டு! மனோகர் முக பாவத்திலேயே கொடுமையை வெளிப்படுத்துகிறார். இவர்கள் போதாதென்று ஜஸ்டின் வந்து குறைந்தளவு வசனம் பேசி நீண்ட நேரம் ஆக்ரோஷயமாக சண்டை போடுகிறார். இந்த படத்தில் எம் ஜி ஆரின் தாய் , தந்தை செண்டிமெண்ட் ஏதும் இல்லை. ஆனால் காதலியாக உருகியவள் திடீரென்று மனம் மாறி அண்ணா என்று அழைக்கும் சகோதர செண்டிமெண்ட் உண்டு!




மஞ்சுளா, சந்திரகலா, லதா மூன்று ஹீரோயின்கள். எல்லோரும் இயக்குனர் எம் ஜி ஆரின் சொல் கேட்டு நடக்கிறார்கள், நடிக்கிறார்கள். ஆனாலும் சந்திரகலா தனித்து நிற்கிறார். சில காட்சிகளில் வந்தாலும் தாய்லாந்து நடிகை மெட்ரா ரூத் தன் வெள்ளை சிரிப்பால் கொள்ளை கொள்கிறார். நாகேஷ் அவ்வப்போது திருடும் நல்லவன். தன் நடிப்பால் ரசிகர்களையும் திருடுகிறார். இவர்களோடு தேங்காய் சீனிவாசன், வி கோபாலகிருஷ்ணன், திருப்பதிசாமி , ஷியாம் சுந்தர், ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் நடிக்க நம்பியார் பணம் வாங்கவில்லை என்பது அவரே சொன்ன செய்தி.



படத்துக்கு வசனம் எழுதியவர் சொர்ணம். அங்கங்கே வசனங்கள் பொருளுடன் வந்து விழுந்தன. டான்ஸ் மாஸ்டர் பி எஸ் கோபாலகிருஷ்ணன் பாரத நாட்டியம் ஒன்றையும் பாராட்டும் வண்ணம் அமைதிருந்தார். இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளுக்கு ஷியாம் சுந்தர் எக்ஸ்ட்ராவாக பாடுபட்டிருக்கிறார்.



எம் ஜி ஆரின் பல படங்களை ஒளிப்பதிவு செய்த வி ராமமூர்த்திக்கு இது சவாலான படம் . அதில் வெற்றியும் கொண்டிருந்தார் அவர். அரங்க அமைப்பாளர் அங்கமுத்துவின் வேலை பலே!

படத்தின் மற்றொரு ஹீரோ மெல்லிசை மன்னர் எம் எஸ் விசுவநாதன். எல்லா பாடல்களிலும் தன்னை நிலை நிறுத்தியிருந்தார் அவர். கண்ணதாசன், வாலி,புலமைப்பித்தன்,புலவர் வேதா என நால்வர் பாடல்களை இயற்ற டீ எம் எஸ், சீர்காழி, ஸ் பி பி, சுசிலா,ஜானகி, ஈஸ்வரி ஆகியோர் தங்கள் குரலால் அவற்றுக்கு இனிமை சேர்த்தார்கள் . கிரேட்!



படம் வெளிவந்த சமயம் விளம்பரங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அன்றைய கால கட்டத்தில் எம் ஜி ஆர் அரசியல் ரீதியில் பலத்த அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார். படத்தின் நெகட்டிவ் எரிந்து விட்டது, அந்நிய செலாவணி சிக்கலால் படம் வெளிவராது, படத்தை திரையிட விட மாட்டோம் என்பது போன்ற வதந்திகள் அன்றைய கருணாநிதி தலைமையிலான தி மு க அரசு அங்கத்தவர்களால் தொடர்ந்து பரப்பப்பட்டு வந்தன. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. எம் ஜி ஆர் ரசிகர்கள் மட்டுமன்றி ஏனைய ரசிகர்களும் படத்தை பார்க்க ஆவலோடு துடித்துக் கொண்டிருந்தார்கள். கலைஞர் கருணாநிதி அரசால் கிடைத்த இந்த செலவில்லாத விளம்பரம் படத்தின் வெற்றிக்கு நன்கு துணை புரிந்தது!

படத்தில் இடம் பெற்ற வெளிப்புற காட்சிகள் அற்புதம். அரங்க அமைப்புகள் அருமை. ஒளிப்பதிவு சூப்பர். சண்டை காட்சிகள் விறுவிறுப்பு. இவற்றோடு போட்டி போடும் எம் எஸ் விஸ்வநாதனின் இசையும் , பாடல்களும். இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து படத்தை டைரக்ட் செய்த எம் ஜி ஆர் ஒர் அதிசயம்!


No comments: