இலங்கைச் செய்திகள்

வடக்கின் போக்குவரத்து துறையின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

நாட்டை கட்டியெழுப்ப நிதி ரீதியான ஒழுக்கம் அவசியம்

இந்திய உதவியில் வழங்கிய பஸ்கள் இன்று யாழில் கையளிப்பு 

ஜனாதிபதி ரணிலை சந்தித்துரையாடிய இந்திய வெளிவிவகார செயலாளர்

ராஜீவ் கொலை வழக்கு: இலங்கை வர அனுமதிக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு சாந்தன் கடிதம்

ஜனவரியில் மூடப்பட்ட கொழும்பு – யாழ் ரயில் சேவை சனிக்கிழமை ஆரம்பம்


வடக்கின் போக்குவரத்து துறையின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

July 14, 2023 6:00 am

வடக்கு மாகாணத்துக்கு தேவையான போக்குவரத்து பஸ்கள் மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு கிடைக்குமென்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

இந்திய உதவி திட்டத்தின் உதவியுடன் 24 பஸ்களை எமது மாகாணத்துக்கு அமைச்சர் பந்துல குணவர்த்தன வழங்க வந்திருப்பதற்கு வடமாகாண மக்கள் சார்பாக நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் உதவித் திட்டத்தில் இலங்கைக்கு கிடைத்த பஸ்களில் வடக்கு மாகாணத்துக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 24 பஸ்களை இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண டிப்போவுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நேற்று (13) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜன் உட்பட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில், “எமது மாகாணத்திற்கென 08 பஸ்களை ஏற்கனவே வழங்கியமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதுபோல் வடக்கில் உள்ள சில டிப்போக்களுக்கு முகாமையாளர்களும் இல்லாத நிலை காணப்படுகின்றது. எனினும் எமது மாகாணத்துக்கு வழங்கப்பட்ட பஸ்கள் போதாது. மேலும் பஸ்கள் வேண்டும் என இலங்கை கோக்குவரத்து சபையின் தலைவரிடமும் அமைச்சரிடமும் நான் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருக்கின்றேன். அதேபோன்று, சாரதிகள் நடத்துனர்கள் பற்றாக்குறை தொடர்பிலும் தெரியப்படுத்தி அந்த வெற்றிடங்களையும் நிரப்பி தருமாறும் கோரியிருக்கின்றேன். அதை இந்த மேடையிலும் மீண்டும் அவர்களுக்கு நான் நினைவூட்டுகின்றேன்.

அதேபோல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் மட்டுமல்லாது மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை விரைவாக தீர்க்க வேண்டும் என்பதிலும் அதிக அக்கறை செலுத்தி வருகின்றார். அதனடிப்படையில் அவருக்கும் நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.   நன்றி தினகரன் 




நாட்டை கட்டியெழுப்ப நிதி ரீதியான ஒழுக்கம் அவசியம்

- புதிய வருமான வழிகளை உருவாக்கும் மூலோபாயங்களைக் கண்டறியும் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்

July 13, 2023 4:28 pm 

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன், புதிய வருமானம் ஈட்ட துரித முறைமை

நாட்டைக் கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் இன்றியமையாதது எனவும், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன் அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கான முறையான புதிய வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

அரசாங்கம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவிலிருந்தும் அதிகபட்ச பெறுமதி பெறப்பட வேண்டும் எனவும், ஆனால் அது பெரும்பாலும் அரச செலவின செயற்பாடுகளில் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரச வருமானத்தை மறப்பது மாத்திரமன்றி எந்தவித பலனுமற்ற நடவடிக்கைகளுக்காக அரச நிதி கட்டுப்பாடற்ற விதத்தில் செலவு செய்யப்படுவதும் இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது என்று தெரிவித்தார்.

அத்துடன், கடந்த இரண்டு. மூன்று வருடங்களாக இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படாமையே இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நிதிப் பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வருமான வரி மற்றும் அரச நிதி நிலைமை குறித்து ஆராய தற்பொழுது பாராளுமன்றத்தில் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான மூலோபாயங்களைக் கண்டறிவதற்காக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த அறிக்கை இராஜாங்க அமைச்சரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்க மற்றும் கலால் திணைக்களங்கள் என்பவற்றின் வருமான இலக்குகளை அடைவதற்கான முறையான சூழலை உருவாக்குதல், அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அதற்கான டிஜிட்டல் பொருளாதார பின்னணியை தயார் செய்தல் தொடர்பான முன்மொழிவுகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த முன்மொழிவுகள் குறித்து மேலும் கலந்துரையாடி பாராளுமன்ற முறைமைகள் (Ways and Means) குழுவிடம் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இராஜாங்க அமைச்சருக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், இந்த முன்மொழிவுகளை அமுல்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி, பரந்த ஊடகப் பிரச்சாரத்தின் ஊடாக இது தொடர்பில் முறையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

வரி வருமானம் முறையாக வசூலிக்கவில்லை என்பது தான் இன்றைய பொருளாதார நெருக்கடியில் முன்வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று. வருமான வரி செலுத்த வேண்டிய சில தரப்பினர் வருமான வரி செலுத்துவதில்லை. மேலும், சுங்கத்தில் ஏற்படும் தாமதம் காரணமாக அரசுக்கு முழு வரி வருமானம் கிடைப்பதில்லை என தகவல் வெளியாகியுள்ளன. மேலும் கலால் வரி குறித்தும் இதே குற்றச்சாட்டு உள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முயற்சிக்கும் இந்த சமயத்தில், நாட்டில் முழுமையான நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டும். முதலில் அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறன. இரண்டாவதாக, செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவுக்கும உச்ச மதிப்பை அரசாங்கம் பெற வேண்டும். பெரும்பாலும் அரச செலவில் இது நடப்பதில்லை. எனவே இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும். மூன்றாவதாக, அரச வருவாயை அதிகரிக்க வேண்டும். இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டதுடன் அதற்கான பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது. இன்று இந்த அறிக்கையைத் தயாரித்து வழங்கும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

வருமான வரியை உயர்த்த புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த அறிக்கையில் பல விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாராளுமன்றத்தில் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக பாராளுமன்றத்தில் ஆராயப்படாததும் சில சந்தர்ப்பங்களில் இவ்விடயத்தில் அக்கறையின்மையும் இந்நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று கூறலாம். ஆனால் தற்போது வருமான வரி மற்றும் நிதி நிலைமை குறித்து ஆராய பல குழுக்களை நியமித்துள்ளோம். அந்தச் செயல்பாடுகளில் இந்தப் புதிய முறைகளைத் தேடிக்கொள்ள வேண்டும்.

மேலும் இந்த நடவடிக்கைகளில் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானது. யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் அந்தப் பிரிவுகளை விட்டு வெளியேற வேண்டும். ஏனென்றால் டிஜிட்டல் மயமாக்கலுக்கு கால அவகாசம் வழங்கி, அதற்கேற்ப செயல்பட எதிர்பார்க்கிறேன். குறைபாடுகள் இருப்பின், உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

குறிப்பாக இந்த வருமானத்தை உருவாக்கும் முறையை இங்கிலாந்தில் இருந்து பெற்றுள்ளோம். இன்று, அந்த முறைகள் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளன. எனவே, புதிய முறைமைகளை கவனித்து நமக்கு தேவையான முறைமையைத் தயார் செய்ய வேண்டும். கணக்காய்வுச் சட்டத்தில் அதற்கான புதிய சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

பிரதமர் கெமரூனின் கீழ் இது தொடர்பில் பணியாற்றியவர் அமைச்சர் பிரான்சிஸ் மௌட் ஆவார். இந்தத் துறையின் சீர்திருத்தம் குறித்து அவரது கருத்துக்களைப் பெற இலங்கைக்கு வருமாறும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிற்கு வந்த பிறகு, அவர்கள் வருவாய் சேகரிப்பில் அதிக கவனம் செலுத்தினர். அதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். முழுப்பிரதேசமும் தனியொரு முகவரின் கீழ் ஆளப்பட்டபோது, வருவாய்த்துறை அதிகாரிகளும், உள்ளூர் அதிகாரிகளும், வர்த்தகர்களும், வருவாய் சேகரிப்பதில் தனிக் கவனம் செலுத்தினர். அதனால், எந்த சந்தர்ப்பத்திலும் வருமானம் குறையவில்லை. தேயிலை, தென்னை மற்றும் இறப்பர் தொழில்களின் வளர்ச்சியுடன் வருமானம் அதிகரித்தது. ஆனால் 70 களில் இருந்து, வருமானத்தை மறந்து செயற்பட்டனர். நாட்டின் நிர்வாகத் துறையிலிருந்து வருவாய் ஈட்டுதல் நீக்கப்பட்டுள்ளது. வருவாயை மறந்துவிட்டது மட்டுமின்றி அரசின் பணமும் வரையறை இல்லாமல் செலவிடப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய,

தற்போதுள்ள வருமான வழிகளை நெறிப்படுத்துவதற்கும், மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் புதிய வருமான வழிகளை அறிமுகப்படுத்தி குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால முன்மொழிவுகளை உள்ளடக்கி ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரச வருவாய் தொடர்பான சவாலில் பல அனுபவங்களை எதிர்கொண்டு தற்போது ஜனாதிபதியின் வழிகாட்டுதலின்படி குறிப்பிட்டளவு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம். மேலும், மொத்த தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடும் போது நமது அரச வருவாயை அதிகரிப்பதற்கு இன்னும் பல இலக்குகளை அடைய வேண்டும்.

புதிய வரிகளை அறிமுகப்படுத்தல், வரி சதவீதத்தை உயர்த்துதல் ஆகியவற்றில் நாம் உச்ச வரம்பை எட்டியுள்ளோம். எனவே, வரி அடிப்படையை விரிவுபடுத்துவதிலும், வரி வலையில் உள்ள ஓட்டைகளைக் குறைப்பதிலும் நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டும். மேலும், போட்டித்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையின் மூலம் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறோம். நீண்டகாலமாக சர்ச்சைக்குள்ளான விடயங்களை நியாயமான மட்டத்திற்குக் கொண்டுவர இந்த கலந்துரையாடல்கள் உதவியது.

இந்நிகழ்வில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, நிதி அமைச்சின் பதில் செயலாளர் ஆர்.எம். பி. ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.   நன்றி தினகரன் 






இந்திய உதவியில் வழங்கிய பஸ்கள் இன்று யாழில் கையளிப்பு 

July 13, 2023 10:13 am

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் கொழும்பில் வைத்து உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் ஓவ்வொரு மாவட்டங்களிலும் போக்குவரத்தினை இலகுபடுத்த இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் புதிய பேருந்துகள் கடந்த வாரம் வழங்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் வவுனியா 4, யாழ்ப்பாணம் 4 ,கிளிநொச்சி 4, மன்னார் 3, முல்லைத்தீவு 3, பருத்தித்துறை 3, காரைநகர் 3 என 24 பேருந்துகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவை இதுவரை போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வழங்கப்பட்ட பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தாமல் இன்றைய தினம் மீண்டும் விழா எடுத்து பேருந்துகளை கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தி்ல் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் வழங்கப்பட்ட ஒவ்வொரு பேருந்துக்கும் நாள் ஒன்றிற்கு ரூ. 5000 செலுத்தப்பட வேண்டும்.

இந்நிலையில் ஒரு வாரத்திற்கு மேலாக பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளின் குத்தகை பணத்தினை எவ்வாறு செலுத்த முடியும் என்பதோடு கையளிக்கப்பட்ட பேருந்துகளுக்கு மீண்டும் ஒரு விழா அவசியமா? என்கின்ற கேள்வி எழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

– ஓமந்தை விஷேட நிருபர்  - நன்றி தினகரன் 






ஜனாதிபதி ரணிலை சந்தித்துரையாடிய இந்திய வெளிவிவகார செயலாளர்

July 12, 2023 6:00 am 

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (11) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொண்டு, இரு நாட்டு மக்களுக்கும் பலனளிக்கும் வகையில் சமூக மற்றும் பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்வது தொடர்பிலும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இந்திய வெளியுறவுச் செயலாளருக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு, இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார். அதேபோல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த இந்திய விஜயம் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததோடு, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவையும் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா சந்தித்து கலந்துரையாடினார்.

நன்றி தினகரன் 





ராஜீவ் கொலை வழக்கு: இலங்கை வர அனுமதிக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு சாந்தன் கடிதம்

July 11, 2023 10:18 am 

தன்னை இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் இலங்கையை சேர்ந்த சுதந்திரராஜா என்ற சாந்தனும் ஒருவர்.

இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் இவர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், “இலங்கை குடிமகனான நான், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன். தற்போது நான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன்.

கடந்த 32 வருடங்களாக எனது தாயாரை பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன். தயவுசெய்து நான் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று சாந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பிறகு, கடவுச்சீட்டு, அடையாள அட்டையை புதுப்பிப்பது சம்பந்தமாகவும், இலங்கைக்கு திரும்புவது சம்பந்தமாகவும் ஆலோசனை பெற வேண்டி இலங்கை துணை தூதருக்கும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏற்கனவே மனு அனுப்பியுள்ளேன்.

இலங்கையில் என் மீது வழக்கு இல்லை. தயவு செய்து எனது சிரமத்தை கருத்தில் கொண்டு இலங்கைக்கு நான் வர உதவ வேண்டும் என்று சாந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.   நன்றி தினகரன் 






ஜனவரியில் மூடப்பட்ட கொழும்பு – யாழ் ரயில் சேவை சனிக்கிழமை ஆரம்பம்

July 12, 2023 2:02 pm 

அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் சனிக்கிழமை (15) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரை வழமையான நேர அட்டவணைக்கமைய ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையான ரயில் பாதை புனரமைப்பு பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது.

இந்திய கடனுதவியின் கீழ் 62 கிலோமீட்டர் நீளமான இந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக 33 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்டுள்ள இந்தப் பாதையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் பயணிக்க முடியுமெனவும், யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையிலான ரயில் சேவைகளுக்கான ஆசன முற்பதிவுகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.    நன்றி தினகரன் 






No comments: