திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர் ❤️✍🏻 கானா பிரபா

 “நடிகர் ஜெய்சங்கரிடம், இவ்வளவு சீக்கிரமாக இந்த உலகத்தை


விட்டுப் போக அப்படியென்ன உங்களுக்கு அவசரம்?”

 என்ற கேள்வியைக் கேட்பேன் என்றார் சித்ரா லட்சுமணன் Chithra Lakshmanan அவர்கள்,

சமீபத்தில் Touring Talkies இல் வரும் கேள்வி பதிலில் ஒரு நேயர்
கேட்ட “இந்த உலகத்தை விட்டு மறைந்த யாராவது ஒருவரைப் பேட்டி எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?”
என்ற கேள்விக்கு.
சித்ரா சாரின் அந்த ஜெய்சங்கருக்கான கேள்வி அல்லது நேயருக்கான பதிலுக்குள் அடங்கியிருக்கிறது இன்றும் ஜெய்சங்கரை நேசிக்கும் ஆயிரக்கணக்கான உள்ளங்களின் கிடக்கை.
 
இந்த வார இறுதியில் இனியன் கிருபாகரன் Iniyan Kirubakar எழுதிய “திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர்" என்ற நூலை வாசிக்கத் தொடங்கினேன்.
முதலில் எடுத்த எடுப்பில்
 
“ஹாய் எனது அன்பு ரசிகர்களே!” என்று ஜெய்சங்கர் 1967 ஏப்ரல் மாதப் பொம்மை இதழில் எழுதிய கடிதத்தைப் படித்து விட்டு அதே சூட்டோடு நடிகர் சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்று முன்பாதியில் இருந்த ஒவ்வொருவரும் ஜெய்சங்கர் என்ற மனிதாபிமானி மேல் கொண்ட காதலை சம்பவ, வரலாற்று உதாரணங்களோடு பேசியதைப் படிக்கத் தொடங்கியவன் அப்படியே புத்தகத்தின் பின் பக்கம் போய், இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு, இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், சோ, இயக்குநர் முக்தா சீனிவாசன், எஸ்.வி.சேகர், ஸ்டில்ஸ் ரவி, ஜெய்சங்கரின் உதவியாளர் ராஜாராம், ஆர்.கே.கணேஷ் (ஜெய்சங்கர் ரசிகர் மன்றத் தலைவர்) என்று ஒவ்வொருவராக பேச அழைத்தேன், அதாவது படிக்க ஆரம்பித்தேன். கண்கள் பனிக்க ஆரம்பித்தது, ஒவ்வொருவர் சொல்லும் “ஜெய்சங்கர் என்ற மனிதநேயரின் கதை” கேட்டு.
 
நள்ளிரவைக் கடந்து என் வாசிப்புப் போய்க் கொண்டிருந்தது. அந்த இடத்தில் நிறுத்தி விட்டு, புத்தகத்தில் இருந்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தேன், அது நூலாசிரியர் இனியன் கிருபாகரனுக்குப் போனது.
“முதலில் இப்படியொரு நூலைக் கொண்டு வந்தமைக்கு உங்களுக்குப் பாராட்டுகள்” என்று நான் சொன்னதுமே அகமகிழ்வுடன்
“நீங்க ஜெய்சங்கர் சார் ரசிகரா? “ என்று கேட்டார்.
 
“ நான் அவரின் ரசிகர் என்பதை விட சித்ரா லட்சுமணன் அவர்களின் டூரிங் டாக்கீஸ் வழியாக அவரும், அவரிடம் நிகழ்ச்சிக்கு வந்து போன விருந்தினர்களும் ஜெய்சங்கரின் மனித நேயம் குறித்துச் சம்பவ உதாரணங்களோடு பேசியதை எல்லாம் கேட்டு அவர் மீதான மதிப்பு உயர்ந்து விட்டது, இப்போது உங்கள் புத்தகமும் சேர்ந்து இன்னும் அவரை உயர வைத்து விட்டது” என்றவன் மேற்கொண்டு இந்தப் புத்தக வடிவமைப்பில் எடுத்துக் கொண்ட சிரத்தையை விலாவாரியாகச் சொன்னதும் இன்ப அதிர்ச்சியோடு ஏற்றுக் கொண்டார் நூலாசிரியர் இனியன்.
 
 
நான் அவருக்குச் சொன்னது போலவே சாய் வித் சித்ரா தொடர்களின் வழியாகத் தான் ஜெய்சங்கர், விஜயகாந்த் ஆகிய ஆளுமைகளின் நிஜ பிம்பம் மலையளவாக உயர்ந்தது. சித்ரா லட்சுமணன் அவர்கள் தன் பார்வையில் “பஞ்சு அருணாசலம்” நூலை எழுதியது போல ஜெய்சங்கருக்கும் ஒரு நூல் கொண்டு வர வேண்டும் என்ற ஆசை என்னுள் இருக்கிறது. அவரின் சினிமா இதழில் கூட ஜெய்சங்கர் தொடர் பேட்டி ஒன்றைக் கொடுத்ததையும் முன்னர் சொல்லி இருந்தார்.
 
விஜயகாந்த் குறித்த தொடரை நான் எழுதும் போது குறிப்பிட்டிருந்த ஒரு தகவல், “என்ன ஆச்சரியம் விஜயகாந்த் தொடர்ந்து தன் படங்களில் ஜெய்சங்கரை வைத்திருக்கிறாரே” என்று. ஜெய்சங்கருக்குப் பின் வந்த தன் வலது கை கொடுப்பதை இடது அறியா மாமனிதர் விஜயகாந்துக்கும் அவருக்குமான பந்தம் கூட இப்படியாகப் பிணைக்கத் தோன்றியதோ என்றெண்ணினேன்.

ஊமை விழிகள் படத்தில் தான் நடிக்கச் சம்மதித்ததோடு ஶ்ரீவித்யாவையும் இணைந்து நடிக்க அழைத்தவர் ஜெய்சங்கர் தான். இவ்விதம் புதியவர்களைக் கை தூக்கி விடும் பண்பு நிறைந்தவர்.
 
“திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர்” என்ற வரலாற்று ஆவண நூல் வெறும் சினிமாக்காரராகத் தொழில் நடித்த மனிதரின் சுய விளம்பரப் படம் அல்ல, இதைப் படித்துக் கொண்டு போகும் போது இப்படியொரு வணிகச் சந்தையில் இப்படி ஒரு மனிதரா என்ற வியப்பே மேலோங்கிக் கொண்டு போனது ஒவ்வொரு பக்கங்களையும் புரட்டிக் கொண்டு போகும் போது.
 
இறுதியில் ஜெய்சங்கர் நடித்த 347 படங்களின் பட்டியலை இயக்குநர், வெளியிட்ட தேதி, மாதம், ஆண்டு ஈறாகத் தொகுத்துத் தந்திருக்கிறார்.
நிறைய அரிய படங்கள் பக்கங்களைப் புரட்டிக் கொண்டே போகும் போது கண்களை நிறைக்கின்றன. புத்தக வடிவமைப்பைப் பொறுத்தவரை எழுத்துப் பிழை இல்லாத, நேர்த்தியான எழுத்துருக்களோடு, அட்டைப் படத்தை அள்ளியெடுத்து முத்தம் வைக்கக் கூடிய அளவு வடிவமைப்போடு கச்சிதமாக வந்திருக்கிறது.
இதற்குப் பின்னால் இனியன் கிருபாகரனின் உழைப்பு மின்னுகிறது.
 
 
சிவகுமார், கமல்ஹாசன் ஆகியோர் ஆரம்ப காலகட்டத்தில் சந்தித்த சவால்களின் போது ஜெய்சங்கர் வழிகாட்டிய விதம் நெகிழ வைக்கும்.
அதுவும் கமல்ஹாசன் இவ்வளவு நீளமாக, விலாவாரியாக ஜெய்சங்கர் நட்பைப் பதிவு செய்திருப்பது இன்ப ஆச்சரியம்.

தான் உதவி செய்யும் கருணை இல்லங்களுக்கு பத்திரிகையாளர் வரக்கூடாது என்ற கட்டளை போடும் ஜெய்சங்கர், சக கலைஞர்களைக் கெளரவிக்கும் நிகழ்வுகளைக் கருணை இல்லங்களில் நடத்தி சொல்லாத செய்திகளைச் சொல்ல வைத்து அறப்பணிகளுக்கு வழி கோலுவாராம்.
 
கூத்தபிரானின் நாடகங்களில் தோன்றி, “சினிமா ஆசையை விட்டுவிடு” என்ற சோவின் அறிவுரையையும் ஒரு பக்கக் காதில் போட்டு முட்டி மோதித் திரையுலகம் வந்தவருக்குப் பறி போன வாய்ப்பும், இன்னொரு பக்கம் வழி காட்டிய “இரவும் பகலும்” தொடங்கி “ஜெய்” சங்கர் ஆனவர்,  தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஆன கதைக்குப் பாய்ந்து, எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஒரு ஆக்க்ஷன் நாயகன் என்ற உயர்விலும் சந்தித்த சாதனைகளும், சோதனைகளுமாகப் பயணிக்கிறது இந்த நூல்.

முதல் அத்தியாயத்தில் கதாநாயக வாய்ப்புத் தேடுவதோடு தொடங்கி அடுத்தடுத்த அத்தியாயங்கள் முன்னோக்கி சங்கர் என்ற இளைஞனின் வாழ்க்கையை அலசும் எழுத்தாடல் மிகச் சிறப்பு.

ஜெய் என்ற கதாநாயகன் கருணையாளன் ஆன கதையும் இருக்கிறது. டி.ஆர்.பாப்பா இக்கட்டில் இருந்த போது ஜெய் செய்த உதவியைப் படிக்கும் போது கண்கள் நிறைகின்றன. ஜெய்சங்கர் வாழ்வில் முக்கிய இயக்குநர்கள், படங்கள், எம்.ஜி.ஆர், சிவாஜி என்று வரலாற்றுப் பின்னாணியோடு சுவையாக நகர்த்துகிறார் எழுத்தாளர். ஜெய்சங்கரின் மிக முக்கிய இயக்கு நர் கர்ணன் குறித்து இன்னும் விலாவாரியாகப் பதிவு செய்யலாம். இந்த நூல் இன்னொரு பாகம் போடும் போது இன்னொரு மடங்கு வரலாற்றைப் பதிப்பிக்க முடியும் அவ்வளவுக்கு இந்த நூலே அடியெடுத்துக் கொடுக்கிறது.
 
ஜெய்சங்கரின் சினிமா ஓட்டத்தோடு, அரசியல் சூழலுக்குள் அவர் அடியெடுக்க வேண்டுமா என்ற இக்கட்டான நிலையையும்,
உச்ச நாயகனாகப் போய்க் கொண்டிருந்தவர்
“முரட்டுக் காளை” வில்லனாகும் முடிவை எடுத்துக் கொண்டதில் இருந்து அவரின் இறுதிச் சுற்று வரை அலசுகிறது.
 

“அங்கிருந்து சரியான அழைப்பு இல்லாமல் போலி அழைப்பில் போய் விட்டார் என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது”

ஜெய்சங்கர் மறைவில் இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த் சொன்னார் இப்படி.

“விதி” பட வில்லன் வக்கீல் டைகர் தயாநிதி மேல் அப்போது கடுப்பில் இருந்தேன் நான்.

ஜெய்சங்கர் அடுத்த ஆட்டத்தில் வில்லனாகவும், குணச்சித்திரனாகவும் கலந்து கட்டி ஆடினாலும் 80ஸ் கிட்ஸ் இற்குக்குக் கூட அவரின் முழு ஆளுமையின் பரிமாணம் விளங்கவில்லை. அதையெல்லாம் இந்த நூல் மாற்றிக் கழுவி விடும்.

 ஜெய்சங்கரின் நூறாவது படம் “இதயம் பார்க்கிறது”. இந்தப் படத்தில் விழிப் புலன் இழந்தவராக அவர் நடித்ததும், தன் மகன் விஜயசங்கரை கண் வைத்தியம் படிக்க வைத்து இன்று புகழ்பூத்த கண் மருத்துவராகவும் உருவாக்கியிருப்பது நடமாடும் வரலாறு.

ஜெய்சங்கரின் முதற் பட வாய்ப்புக்கு வழிகாட்டியவர் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. அந்த முதற் படமான “இரவும் பகலும்” இசை கூட அவரே.

இந்தப் புத்தகம் கொடுத்த சூட்டோடு அப்படியே “இதயம் பார்க்கிறது” படத்தை ஓடவிட்டேன். இசை டி.ஆர்.பாப்பா என்று தெறித்தது எழுத்தோட்டத்தில். தன் நூறாவது படத்தில், தன் திரையுலகக் கதவைத் திறந்து விட்டவருக்கு ஜெய்சங்கர் சொல்லாமல் செய்த மரியாதையோ என்று என் சிந்தையில் எழுந்தது.
ஒரு பெருமூச்சோடு புத்தகத்தை மூடவும்
 
“இவன்
கண்தான்
சின்னது:
பார்வை
மிகப் பெரியது !”
 
என்று வாலி எழுதிய ஜெய்சங்கருக்கான நீள் கவிதை பின்னட்டையில் மின்னிக் கொண்டிருந்தது.
 
“ஹாய்” 
என்று ஜெய்சங்கர் கூப்பிடுமாற் போலொரு 
அசரீரி மனதில் எழுகிறது.

12.07.2023 ஜெய்சங்கரின் 85 வது பிறந்த நாள் ❤️
 
கானா பிரபா
12.07.2023
 
திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர்(ஆசிரியர் : இனியன் கிருபாகரன்)
டிஸ்கவரி புக் பேலஸ் இல் வாங்கினேன். தவறாமல் நீங்களும் வாங்கிப் படிக்க வேண்டிய பொக்கிஷம்.


No comments: