காரைக்கால் அம்மையார் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 சைவ சமய நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவர் என்ற பேறு


பெற்றவர் காரைக்கால் அம்மையார். பெண் நாயன்மார்கள் மூவருள் ஒருவரான இவரை சிவனே அம்மையார் என்று போற்றி அழைத்துள்ளார். அவருடைய சரித்திரத்தை இ வி ஆர் பிக்சர்ஸ் பட நிறுவனம் 1973ம் ஆண்டு கலரில் படமாகத் தயாரித்தது. படத் தயாரிப்பாளர் இ வி ராஜன் , இயக்குனர் ராமண்ணாவின் மைத்துனராக இருந்த போதும் படத்தை இயக்கம் பொறுப்பை ராமண்ணாவிடம் தராமல், ஏ பி நகரராஜனிடம் ஒப்படைத்தார். பக்திப் படங்களை உருவாக்குவதில் புகழ் பெற்ற நாகராஜனும் அவ்வாறெ படத்தை இயக்கினார்.


காரைக்காலில் பிரபல வணிகரின் மகளாகப் பிறந்த புனிதவதி சிறு வயது முதல் சிவபெருமான் அடியவளாகவே விளங்கி வருகிறாள். அவளின் திருமணம் தள்ளிப் போவதை கண்டு கவலைப் படும் அவளின் பெற்றோர் தங்களுக்கு அறிமுகமான பரமதத்தன் என்ற இளம் வணிகனுக்கு அவள் சம்மதத்தின் பேரில் அவளை மணம் முடித்து வைக்கிறார்கள். பரமதத்தன் நல்லவன், ஆனால் இறை மறுப்பாளன். ஆனாலும் மனைவியின் பக்திக்கு குறுக்கே நிற்பவன் அல்ல. இதனால் இல்வாழ்வு இனிதே நடக்கிறது. ஒருநாள் தன் வேலையாள் மூலம் இரண்டு மாங்கனிகளை தன் மனைவிக்கு கொடுத்து அனுப்புகிறான் பரமதத்தன். அச்சமயம் புனிதவாதியின் இல்லத்துக்கு ஒரு வயதான சிவனடியார் வரவே புனிதவதி அவருக்கு அமுது படைக்கிறாள். தனக்கு கிடைத்த மாங்கனிகளில் ஒன்றையும் அவருக்கு பரிமாறுகிறாள்.

பரமதத்தன் இல்லம் திரும்பவே அவனுக்கு உணவு பரிமாறி, மீதி

இருந்த மாங்கனியையும் அவனுக்கு கொடுக்கிறாள் புனிதவதி. அதை உண்ட பரமதத்தன் மற்றைய கனியையும் கொண்டுவரும் படி கேட்கவே பூஜை அறைக்கு சென்று சிவனை வணங்க மற்றுமொரு மாங்கனி அவள் கரங்களில் விழுகிறது. அதனை கணவனுக்கு கொடுக்கவே இரண்டு மாங்கனிகளுக்கும் சுவையில் வித்தியாசம் இருப்பதை சுட்டிக்காட்டி காரணம் கேட்கிறான் அவன். நடந்த உண்மையை அவனிடம் கூற , தன்னை இறை நம்பிக்கை உள்ளவனாக்க அவள் நாடகமாடுவதாக அவன் சந்தேகப் படுகிறான். மீண்டும் புனிதவதி சிவனை வணங்க மற்றுமொரு மாங்கனி அவள் கரங்களில் விழுகிறது. இதைக் கண்டு திகைக்கிறான் பரமதத்தன். கடவுள் எங்கே, அவனை காண முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தவன் இப்போது தன் மனைவியையே தெய்வம் என்று போற்றி வணங்குகிறான். அவளுடன் இல்லறம் நடத்த முடியாது என்று கூறி அவளை பிரிந்து சென்று விடுகிறான். அதன் பின் தன்னுடைய இளமையை எடுத்துக் கொண்டு முதுமையை தரும் படி புனிதவதி சிவனை வேண்ட இறைவன் அவளை மூதாட்டியாக்குகிறான். காரைக்கால் அம்மையாராக உருமாறும் புனிதவதியின் ஆன்மீகப் பயணமே மீதி படம்.


படத்தில் புனிதவதியாக லக்ஷ்மியும், காரைக்கால் அம்மையாராக கே பி சுந்தராம்பாளும் நடித்தனர். இருவரும் பாத்திரத்துடன் ஒன்றிப் போயிருந்தார்கள். பக்தி உணர்வைக் காட்டும் போதும், கணவனிடம் உருகும் போதும், சிவனிடம் மன்றாடும் போதும் லக்ஷ்மியின் நடிப்பில் முதிர்ச்சி தெரிந்தது. காரைக்கால் அம்மையாராக வரும் சுந்தராம்பாள் நடிப்பு மட்டுமன்றி அவரின் குரலும் கணீர் என்று ஒலித்து பரவசப்படுத்துகிறது. பரமதத்தன் வேடம் முத்துராமனுக்கு. கஷ்டப்படாமல் நடிக்கிறார். இவர்களுடன் எஸ் வி சகஸ்ரநாமம், குமாரி ருக்மணி, வி எஸ் ராகவன், சீதாலஷ்மி, குமாரி பத்மினி, கே டி சந்தானம் ஆகியோரும் நடித்தனர். சுரிராஜன், மனோரமா நகைச்சுவை ஜோடி படத்தின் கதையோடு ஒட்டி நகர்க்கிறது.

சிவனாக சிவகுமாரும், பார்வதியாக ஸ்ரீவித்யாவும் நடித்திருந்தனர்.

நடிப்போடு இருவரும் இணைந்து சிவத் தாண்டவமும் புரிந்திருந்தனர். அதற்கு கே பி எஸ்ஸின் தக தக தகவென ஆடிவா பாடல் மெருகு சேர்த்தது. படத்துக்கு இசை குன்னக்குடி வைத்யநாதன். நடனத்தை பி எஸ் கோபாலகிருஷ்ணன் அமைத்திருந்தார் . பிரபல கேமராமேன் டபிள்யு ஆர் சுப்பாராவ் படத்தை அழகாக ஒளிப்பதிவு செய்தார். அரங்க நிர்மாணத்தை கங்கா அருமையாக அமைத்திருந்தார்.


இரா பழனிச்சாமி எழுதிய கதைக்கு திரைக்கு கதை வசனம் எழுதி இயக்கியிருந்தார் ஏ பி நாகராஜன். நட்சத்திர நடிகர்களை பயன்படுத்தாமல் கே பி சுந்தராம்பாளை பாதிப் படத்துக்கு மேல் கதாநாயகியாக போட்டு வெற்றிகரமாக பக்திப் படத்தை உருவாக்கியிருந்தார் ஏ பி என் !

No comments: