உலகச் செய்திகள்

 பனிப்போர் திட்டத்திற்கு திரும்பும் நேட்டோவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

நீண்ட தூர ஏவுகணையை சோதித்தது வட கொரியா

செனகல் தஞ்ச படகு 200 பேருடன் மாயம்

 புகலிடக் கொள்கையில் முரண்பாடு: நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது

சூடானில் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 22 பேர் பலி


பனிப்போர் திட்டத்திற்கு திரும்பும் நேட்டோவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

July 14, 2023 6:04 am 0 comment

நடந்து முடிந்த நேட்டோ மாநாடு மேற்கத்திய இராணுவ கூட்டணி பனிப் போர் திட்டங்களுக்கு திரும்புவதை காண்பிப்பதாக உள்ளது என்றும் அனைத்து அச்சுறுத்தலுக்கும் தேவையான ‘எல்லா வழிகளிலும்’ பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

லிதுவேனி தலைநகர் விலினியஸில் கடந்த புதன்கிழமை (12) நிறைவடைந்த நேட்டோ உச்சு மாநாட்டுக்கு பின்னர் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டி நிலம் மற்றும் அதிகாரத்தின் மீது மோகம் கொண்டவர் என்றும் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் இராணுவ கூட்டணியின் முடிவை தவறாக மதிப்பிட்டவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்தே ரஷ்யா இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

நேட்டோ கூட்டத்தின் முடிவுகள் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது பற்றி கவனமாக ஆராயப்பட்டது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. “அடையாளம் காணப்பட்டுள்ள ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கான சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, எங்கள் வசம் உள்ள அனைத்து வழிகளையும் முறைகளையும் பயன்படுத்தி, சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான முறையில் பதிலளிப்போம்” என்ற அந்த அமைச்சின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோட்டோ தனது படைகளை பயன்படுத்தும் வரம்பை குறைத்துவரும் அதேநேரம் உக்ரேனுக்கு அதிக சக்திவாய்ந்த மற்றும் அதிநவீன ஆயுதங்களை வழங்குவதன் மூலம் அரசியல் மற்றும் இராணுவ பதற்றங்களை அதிகரித்து வருகிறது என்றும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

“மோதலை முடிந்தவரை நீடித்து சோர்வடையச் செய்வதற்காக, மேலும் மேலும் நவீன மற்றும் நீண்ட தூர ஆயுதங்களை உக்ரைன் அரசுக்கு வழங்குவதாக அவர்கள் புதிய வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ரஷ்யா தனது இராணுவ அமைப்பையும் பாதுகாப்பு முறைமையையும் பலப்படுத்துவதன் மூலம் இதற்கு பதிலளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவீடன் நேட்டோவில் இணைய துருக்கி ஒப்புதல் அளித்த நிகழ்வுடன் ஆரம்பமான நோட்டோ மாநாடு உக்ரைனுக்கு புதிய பாதுகாப்பு உத்தரவாதம் அளித்ததுடன் நிறைவுக்கு வந்தது.

இந்த உச்சிமாநாட்டில் உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கியும் பங்கேற்றிருந்தார். இதன்போது உக்ரைனுக்கு நீண்டகால பாதுகாப்பு வாக்குறுதி அளிக்கப்பட்டபோதும் அந்த நாடு நேட்டோவில் இணைவதற்கான தெளிவான காலக்கெடு ஒன்று வழங்கப்படவில்லை. செலன்ஸ்கி நேட்டோவில் இணைய தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இந்த முடிவு அவருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.   நன்றி தினகரன் 
நீண்ட தூர ஏவுகணையை சோதித்தது வட கொரியா

July 13, 2023 6:02 am 0 comment

வட கொரியா தனது கிழக்கு கடற்கரைக்கு அப்பால் நீண்ட தூர பலிஸ்டிக் ஏவுகணையை சோதித்திருப்பதாக அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்துள்ளன.

ஒரு மணி நேரத்திற்கு மேல் பறந்திருக்கும் இந்த ஏவுகணை ஜப்பான் கடலுக்கு நெருக்கமாக நேற்று (12) காலை விழுந்துள்ளது.

இது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை என்றும் இந்த ஏவுகணை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இது மாதிரியான ஏவுகணை சோதனைகள் வட கொரியாவின் இராணுவத்தை நவீனமயமாக்கும் கிம் ஜொங் உன்னின் திட்டத்தின் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க உளவு விமானம் ஒன்று தமது ஆட்புலத்திற்குள் ஊடுருவியதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று வட கொரியா அண்மையில் எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்திருந்தது.

வட கொரிய புதிய ஆயுத சோதனைகளை தீவிரப்படுத்திய நிலையில் கொரிய திபகற்பத்தில் பாதுகாப்பு தொடர்பான கவலை அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிலும் வட கொரிய அமெரிக்கா வரை செல்லக் கூடிய திறன் கொண்ட ஏவுகணை உட்பட பெரும் எண்ணிக்கையான ஏவுகணை சோதனைகளை நடத்தியது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு இராணுவப் பயிற்சிக்கு பதிலடியாக கடைசியாக கடந்த ஜூன் நடுப் பகுதியில் வட கொரியா இரு குறுகிய தூர ஏவுகணைகளை சோதித்தது. கடந்த பெப்ரவரியில் அது கண்டம் விட்டு கண்டம் பாகும் ஏவுகணையை கடைசியாக ஏவியமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

செனகல் தஞ்ச படகு 200 பேருடன் மாயம்

July 11, 2023 6:00 am 0 comment

 

கனேரிய தீவுகளுக்கு அப்பால் குறைந்தது 200 ஆபிரிக்க குடியேறிகளுடன் ஒரு வாரத்திற்கு முன் காணாமல்போன தஞ்ச படகு ஒன்றை ஸ்பானிய மீட்பாளர்களை தேடி வருகின்றனர்.

கனேரிய தீவுகளில் இருந்து சுமார் 1,700 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் தெற்கு செனகலின் துறைமுக நகரான கபுன்டீனேவில் இருந்து இந்த மீன்பிடிப் படகு வந்திருப்பதாக ‘வேகிங் போடர்’ என்ற உதவிக் குழு தெரிவித்துள்ளது.

படகில் பல சிறுவர்கள் இருந்திருப்பதோடு, இதனையொத்த இரு படகுகளும் பல டஜன் பேரை ஏற்றிவந்த நிலையில் காணாமல்போயிருப்பதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

தேடுதல் நடவடிக்கையில் விமானம் ஒன்றும் பயனப்படுத்தப்பட்டிருப்பதாக ஸ்பெயினின் கடல்சார் மீட்பு சேவை தெரிவித்துள்ளது.

மேற்கு ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவை அடையும் கனேரி தீவை நோக்கிய குடியேறிகளின் பயணம் மிக ஆபத்தான பயணப் பாதைகளில் ஒன்றாக உள்ளது. இந்த தீவை அடையும் முயற்சியில் கடந்த ஆண்டு குறைந்தது 559 பேர் உயிரிழந்ததாக ஐ.நாவின் குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 

புகலிடக் கொள்கையில் முரண்பாடு: நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது

July 10, 2023 11:47 am 0 comment

புகலிடக் கொள்கை தொடர்பில் ஆளும் கூட்டணி கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாட்டினால் நெதர்லாந்து அரசு கவிழ்ந்துள்ளது.

பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் மர்க் ருட்டே தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் நான்கு கட்சிகளிடையிலும் பிளவு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து மன்னர் வில்லம் அலெக்சாண்டரை ஹேகில் கடந்த சனிக்கிழமை (08) சந்தித்த பிரதமர், புதிய தேர்தல் வரையான காலத்திற்கு காபந்து அரசுக்கு தலைமை வகிக்க ஒப்புக்கொண்டுள்ளார் எதிர்வரும் நவம்பர் நடுப்பகுதியில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியேற்ற குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பை கட்டுப்படுத்தும் பிரதமரின் பரிந்துரைக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டதே பிளவுக்கு காரணமாகியுள்ளது.

நெதர்லாந்து அரசு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட நிலையில் குடியேற்றம் தொடர்பில் சில காலமாக அரசுக்குள் முறுகல் இருந்து வந்தது.

நெதர்லாந்தில் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு மூன்றில் ஒரு மடங்கு அதிகரித்து 47,000ஐ தாண்டி இருந்ததோடு இந்த ஆண்டில் சுமார் 70,000 விண்ணப்பங்கள் கிடைக்கு என்று எதிர்பார்ப்பதாக அரசின் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில் போர் அகதிகளின் உறவினர்கள் நெதர்லாந்துக்கு வருவதை மாதத்திற்கு 200 பேர் என கட்டுப்படுத்துவது உட்பட புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் பிரதமர் ருட்டே ஈடுபட்டிருந்தார்.

எனினும் அவரது கூட்டணி கட்சிகளான கிறிஸ்டியன் ஒன்றியம், குடும்ப ஆதரவு கட்சி மற்றும் சமூக விடுதலை டி66 கட்சிகள் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள.

நெதர்லாந்தில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகிப்பவர் என்ற சாதனைக்கு உரியவரான 56 வயது ருட்டே 2010 தொடக்கம் அந்தப் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது தவணைக்கு பதவி வகிக்க தனக்கு சக்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டபோதும் தனது கட்சியுடன் ஆலோசனை பெற்ற பின்னரே இறுதி முடிவை அறிவிக்கவுள்ளார்.

நாட்டில் தீவிர வலதுசாரி கட்சிகளின் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்துவதற்கான அழுத்தத்தை அவர் எதிர்கொண்டுள்ளார்.   நன்றி தினகரன் 

சூடானில் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 22 பேர் பலி

July 10, 2023 6:14 am 0 comment

சூடான் இராணுவம் தலைநகர் கார்டூமில் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பார்த்தவர்கள் மற்றும் அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் இருப்பதாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

நைல் நதிக்கரையில் தலைநகர் கார்ட்டூமுக்கு எதிரே உள்ள ஓம்டுர்மானின் டார் எஸ் சலாம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (08) இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தலைநகரை கைப்பற்றுவதற்கு இராணுவம் மற்றும் பலம்மிக்க துணைப் படை ஒன்று கடந்த ஏப்ரல் தொடக்கம் சண்டையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நாட்டின் எதிர்காலம் பற்றி இராணுவத் தளபதி மற்றும் துணைப்படை தலைவர் இடையே ஏற்பட்ட மோதலே அங்கு தற்போது போராக வெடித்துள்ளது.

அந்த வான் தாக்குதலில் வீடுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக துணைப் படை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பன்னிரண்டு வாரங்களாக நீடிக்கும் மோதலால் தலைநகரின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு கடைகள் மற்றும் சந்தைகள் அரிதாகவே திறக்கப்படுவதோடு கிட்டத்தட்ட அனைத்து மருத்துவ வசதிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த மோதல் தலைநகரைத் தாண்டி இன வன்முறை நீடிக்கும் மேற்கு டார்புர் பிராந்தியம் உட்பட பல இடங்களுக்கு பரவியுள்ளது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதோடு கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் கிழக்கு ஆபிரிக்க பிராந்திய அமைப்பின் மத்தியஸ்தத்திலான அமைதிப் பேச்சு இன்று (10) எத்தியோப்பியாவில் நடைபெறவுள்ளது.   நன்றி தினகரன் 


No comments: