எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம்- 72 “ புத்தகம் காவி “ பட்டத்தையும் சுமந்து வாழும் வாழ்க்கை ! இயற்கையை மக்களுக்குப் பயன்படுத்தும் கட்டார் தேசம் ! முருகபூபதி


பயணங்களின்போது,  கிடைக்கப்பெறும் புத்தகங்களை முடிந்தவரையில் சுமந்துகொண்டு திரும்புவது எனது வழக்கம்.  அதனால், எனது குடும்பத்தில் எனக்கு புத்தகம் காவி   என்றும் ஒரு பட்டப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

நான் 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தபோது,


  எங்கள் ஊரில் எமது உறவினர்கள் சிலர்,  “ இந்தியாவுக்கு போனார் புத்தகங்களுடன் திரும்பினார். அதன் பிறகு ருஷ்யாவுக்குப்போனார், புத்தகங்களுடன் வந்தார், இப்போது அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டிருக்கிறார், என்ன கொண்டுவருகிறார் பார்ப்போம்?  “ என்று என்னை எள்ளி நகையாடினார்கள் என்று அம்மா சொன்னார்கள்.

   அம்மா, திரும்பி வரும்போது புத்தகங்களுடன்தான் நான் வருவேன் “ என்று சொன்னதுடன் நில்லாமல்,  எனது புதிய புத்தகத்துடனும்தான் ( பாட்டி சொன்ன கதைகள் )  1997 இல் தாயகத்திற்கு திரும்பி வந்தேன்.

எழுத்தாளர்கள் இவ்வாறு புத்தகங்களை காவிக்கொண்டிருப்பது பாரதியார் காலத்திலிருந்து நடப்பது. பாரதியாரும் ஒரு சமயம் வெளியூர் பயணம் சென்றுவிட்டு திரும்புகையில் புத்தகங்களை பொட்டலமாக கட்டிக்கொண்டுதான் வந்தார்.

அவரது மனைவி செல்லம்மா, கணவர் தனக்கு ஏதும் புடவை கொண்டு வந்திருப்பார் என்ற நம்பிக்கையில் அந்தப்பொட்டலங்களை ஆராய்ந்து ஏமாற்றமடைவார். இந்தக்காட்சியை நாம் பாரதி திரைப்படத்திலும் பார்த்திருக்கின்றோம்.

நான் புத்தகங்கள் சுமப்பதற்காக குறைசொல்லாத எனது மனைவி,  அவற்றை சுமந்துகொண்டுவரும் பிரயாண பைகள் குறித்தே பெரிதும் கவலை கொள்வதுண்டு.

நான் பல பிரயாணப்பைகளை புத்தகச் சுமையினால் சேதமடையச்செய்திருக்கின்றேன்.

  நானும் இலக்கியப்பயணங்களின்போது எனது புத்தகங்களை இலக்கிவாதிகளுக்கும்  வாசகர்களுக்கும் வழங்குவதுண்டு.  அவர்கள் அவற்றை படிக்கிறார்களா? அல்லது தங்கள் புத்தக ஷெல்ஃபில் அழகாக அடுக்கி வைக்கிறார்களா..?  என்பது தெரியாது!

எனக்கு இந்தப் பயணங்களில் கிடைக்கும் புத்தகங்களை முடிந்தவரையில் படித்து எனது வாசிப்பு அனுபவத்தையும் எழுதிவிடுவேன். அதனால், எமது எழுத்தாளர் நண்பர்கள் என்னைக் காணும்போது தங்கள் புத்தகங்களை தருவதுண்டு.


கனடாவிலிருந்து ஜூன் மாதம் 15 ஆம் திகதி அதிகாலை புறப்படும்போதும் எனது சுமையில் புத்தகங்களின் எடைதான் அதிகரித்திருந்தது.

அன்றைய தினம் அதிகாலை 3-00 மணிக்கே துயில் எழுவதற்கு நேர்ந்தது.  தங்கை செல்வமணியின் கணவர் ராஜதுரை, டொரண்டோ விமான நிலையத்திற்கு அருகாமையில்  ஒரு பிரபல உல்லாச பயணிகள் விடுதியில் பணியாற்றுகிறார்.

அங்கிருந்து பயணிகளை விமான நிலையத்திற்கு ஏற்றிச்செல்லும் முதல் பஸ் வண்டி அதிகாலை 4-00 மணிக்கு புறப்படவிருப்பதனால், அதில் என்னை ஏற்றி அழைத்துச்செல்வதற்காக சகோதரர் ராஜதுரையும் வேளைக்கே துயில் எழுந்து தயாராகிவிட்டார்.

தங்கை செல்வமணி என்னை வழியனுப்ப, அவரது கணவரின் காரில் எனது பொதிகளுடன் ஏறினேன்.  எனது பொதிகளின் கூடுதல் எடை குறித்து அவரும் கவலைப்பட்டார்.

அன்று அதிகாலை அவரது காரில் ஏறியபோது அதிலிருந்து ஒலித்த  திரைப்படப் பாடலை நீண்ட இடைவெளிக்குப்பின்னர் கேட்டேன். 

1970 களில் மொடர்ன் தியேட்டர்ஸ் வெளியிட்ட சி. ஐ. டி. சங்கர் படத்தில் இடம்பெற்ற பாடல். 

நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நடத்தும் நாடகம் என்ன...
காதலாலே கால்கள் பின்ன பின்ன
கனியும் காவியம் என்ன...

இதற்கு இசையமைத்த இசையமைப்பாளர் வேதா இலங்கையைச்


சேர்ந்தவர்.  1950 களிலேயே சென்னை சென்று புகழ்பெற்றவர்.  பெரும்பாலும் இந்தி திரைப்படங்களில் பிரபல்யமான பாடல்களின் இசையை தழுவி தென்னாட்டு தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களின் வரிகளுக்கு ஏற்ப இசையமைக்கும் ஆற்றல் மிக்கவர்.

கனடா வானொலி ஒன்றிலிருந்து அந்த அதிகாலை வேளையில் ஒலித்த இந்தப்பாடலின் இசையை நீங்கள் இந்தி திரைப்படப்பாடலிலும் கேட்டிருக்கலாம்.

மெட்டுக்கு ஏற்ப பாடல்களை இயற்றும்  நடைமுறையை  உருவாக்கியவர்களில் இசையமைப்பாளர் வேதா முக்கியமானவர். இவர் பற்றி எவரும் குறிப்பிடத்தகுந்த வகையில் எழுதி வைக்கவில்லை.

பெரும்பாலான மொடர்ன் தியேட்டர்ஸின் தமிழ்த்திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்தான் வேதா.  அவை ஒரு காலத்தில் புகழ்பெற்றவை. அன்று சகோதரர் ராஜதுரையின் காரில் ஒலித்த அந்தப்பாடல், தொடர்ந்தும் சில நாட்கள் எனது செவிகளில் கேட்டுக்கொண்டே இருந்தது.

டொரண்டோ விமானநிலையத்தில் எனது பொதிகளின் எடையை விமான நிலைய பெண் ஊழியர் ஒரு காகிதத்தில் பேனையால் எழுதி, கூட்டிக்கழித்து எடை அதிகம் என்ற ஸ்டிக்கரையும் ஒட்டி உள்ளே அனுப்பினார்.

எனது செவியில் அப்போதும் வேதாவின் இசைதான் ஒலித்துக்கொண்டிருந்தது.

எனது பொதிகளை  நியூயோர்க் ஜோன். எஃப். கே. விமான நிலையத்தில் மீளப்பெற்று டோகா ( கட்டார் ) செல்லும் விமானத்திற்கு மாற்றவேண்டுமா..?  என்று கேட்டேன்.

ஏனென்றால், இந்தச்  சிரமத்தை கனடா – டொரண்டோ  வரும்போது,  லோஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் அனுபவித்தேன்.

இல்லை என்ற பதில் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

இரண்டு மணிநேரத்தில்  அமெரிக்கா ஜோன் எஃப். கே. விமான நிலையத்தில் இறங்கி, கட்டார் செல்வதற்கான விமானத்தில் ஏறுவதற்கு வழியை விசாரித்துக்கொண்டிருந்தபோது எனது பெயர் விமான நிலையத்தில்  அடுத்தடுத்து  அழுத்தம் திருத்தமான  உச்சரிப்புடன் ஒலித்தது.

ஒரு வாயிலின் இலக்கம் சொல்லி உடனடியாக அவ்விடத்திற்கு வருமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

வேண்டா வெறுப்புடன் கைப்பொதிகளையும் சுமந்துகொண்டு நீண்ட தூரம் நடக்கநேர்ந்தது.

குறிப்பிட்ட அந்த வாயிலில் கடமையிலிருந்த பெண் ஊழியர்,  எனது விமானப்பயண அனுமதிச்சீட்டையும்  கடவுச்சீட்டையும் பார்த்துவிட்டு, கட்டார் செல்வதற்கு விசா இருக்கிறதா…,?  எனக்கேட்டார்.

 “ நான் தற்போது அவுஸ்திரேலியா பிரஜை. கட்டாரில் நிற்கப்போவது நான்கு நாட்கள்தான்.    என்றேன்.

 “ எந்த விடுதியில் தங்கப்போகிறீர்கள்…?   என்ற அடுத்த கேள்வி முளைத்தது. 

 “ இந்த நாட்டில் பணியாற்றும் எமது உறவினர் வீட்டில் தங்குவேன். இதோ அவர்களின் முகவரி .    என்று  எனது சிறிய டயறியை காண்பித்தேன். 

அந்தப் பெண் ஊழியர் மேலதிகாரியிடம் சென்று திரும்பினார்.

 “ உங்களுக்கு விசா அனுமதி அவசியமில்லை   என்றார்.

   இந்தப்பதிலை சொல்வதற்காகவா,  விமான நிலைய ஒலிபெருக்கியில் பல தடவைகள் எனது பெயரை ஒலிப்பரப்பினீர்கள்?   எனக்கேட்டேன்.

புன்னகைதான் பதிலாக வந்தது.

கட்டாரிலிருக்கும்  மியூசியத்தையும் பொது நூலகத்தையும் அவசியம் பார்க்குமாறு, ஏற்கனவே அங்கே சென்றிருக்கும் நண்பர் நடேசன் எனக்குச் சொல்லியிருந்தார்.

டோகா விமான நிலையத்தில் என்னை அழைத்துச்செல்ல வந்திருந்த எனது தங்கை மகள் ஜனனியும் அவளது கணவர் ரகுவும் அவர்களின் குழந்தை எனது செல்லப்பேரன் கவினும் வந்திருந்தனர்.

கட்டாரின் வெக்கை வாட்டியது. 

மன்னர் ஆட்சியில் இயங்கும் இந்தத் தேசத்தை அழகாக வைத்திருக்கிறார்கள். போதை வஸ்து நுழைய முடியாதிருப்பதும் அதற்கு ஒரு முக்கிய  காரணம்.

இயற்கையை மக்களின் தேவைக்காக பயன்படுத்தும் தீர்க்கதரிசனம் மிக்க நாடு கட்டார்.

கடல் நீரை, குடிநீராக மாற்றவும், சூரிய வெப்பத்தை மின்சாரமாக மாற்றவும் தெரிந்த கலையை பின்பற்றும் கட்டார் நாட்டின்  கட்டிடக்கலை பிரமிப்பைத்  தருகிறது.

இங்கிருக்கும் மியூசியத்தை ஒரு நாளில் பார்த்துவிட முடியாது. பொது நூல் நிலையமும் சிறப்பானது.

மருமகள் ஜனனி இங்கெல்லாம் என்னை அழைத்துச்சென்றாள்.

அவளும் என்னைப்போன்று ஊடகவியலாளராக வந்திருக்க வேண்டியவள்.  கொழும்பில் ஊடக கற்கை நெறியை ஆ. சிவநேசச்செல்வன்,  தேவகௌரி ஆகியோரிடம்   ஒரு ஊடகக்கல்லூரியில் முன்னர் கற்றவள். பயிற்சிப் பத்திரிகையாளராக அவள் இயங்கிக்கொண்டிருந்தவேளையில்  பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டனர்.

இவ்வாறு பலரதும் விதியை  எமது சமூகம் மாற்றியிருக்கிறது.

எனது சிறுகதைகள்  தொடர்பாக  MPhil ஆய்வு செய்த மாணவி ஒருவர், தான் கற்ற துறையில் மேலும் வளராமல்,  குடும்பத்தலைவியாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்டதாக இலங்கை வந்தபோது அறிந்தேன்.

நல்லவேளை இந்த இளம் பெண்கள் தப்பினார்கள். இல்லையேல் இவர்களும் என்னைப்போன்று புத்தகம் காவி என்ற பெயரைப் பெற்றிருப்பார்கள்.

கட்டாரில் எனது நீண்டகால இலக்கிய நண்பர் ஜின்னா ஷரிபுதீனை சந்தித்தேன். அவரது குடும்பத்தினர் எமக்கு ஒரு நாள் இராப்போசன விருந்து வழங்கினார்கள்.

கட்டார் நான் இதுவரையில் பார்த்து ரசித்த நாடுகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது. 

இந்த நாட்டை முன்மாதிரியாகக்கொண்டால், எங்கள் இலங்கையில் அதிகரித்துவரும் வெப்பத்தை சரியாக பயன்படுத்தலாம்.

பாலைவனம் கட்டிடங்களின் தேசமானது எவ்வாறு ?  நாம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய வரலாறு கட்டாரிலும் நிறைய இருக்கிறது. 

( தொடரும் )

No comments: