உலகச் செய்திகள்

 மலேசிய நிலச்சரிவில் புதைந்து 13 பேர் பலி

புத்தாண்டில் உக்ரைனுக்கு எதிராக புதிய தரைவழித் தாக்குதலுக்கு ரஷ்யா திட்டம்

இந்திய - சீன எல்லைப் பகுதியில் இரு துருப்புகளும் மீண்டும் பூசல்

கொங்கோ வெள்ளத்தினால் 120 இற்கும் அதிகமானோர் பலி

2ஆவது ஆர்ப்பாட்டக்காரருக்கும் ஈரானில் தூக்கு

24 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா ஏற்றுமதிக் கட்டுப்பாடு

அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ: 5 சிறுவர்களுடன் 10 பேர் பலி


மலேசிய நிலச்சரிவில் புதைந்து 13 பேர் பலி

மலேசியாவின் செலன்கோர் மாநிலத்தில் உள்ள முகாமிடும் தளம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்திருப்பதோடு பல டஜன் பேர் காணாமல்போயுள்ளனர்.

தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வடக்காக ஜென்டிங் மலைப்பிரதேசத்திற்கு வெளியில் நேற்று (16) அதிகாலையில் இந்த நிலச்சரிவு இடம்பெற்றுள்ளது.

சேற்று மண்ணில் புதையுண்டதாக அஞ்சப்படுவோரை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். வீதியோரத்திற்கு அருகில் இருக்கும் இந்த பண்ணை நிலத்தில் 90க்கும் அதிகமானோர் முகாமிட்டு இருந்துள்ளனர்.

இதுவரை 53 பேர் மீட்கப்பட்டதாக மலேசியாவின் தேசிய அனர்த்த முகாமை நிறுவனம் நேற்று தெரிவித்தது. முகாமிட்டிருக்கும் இடத்தில் இருந்து 30 மீற்றர் உயரத்தில் உள்ள சேற்று மண் சரிந்ததில் சுமார் ஒரு ஏக்கர் வரையான நிலப்பகுதி புதையுண்டுள்ளது.

மழைப் பருவத்தில் இந்தப் பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.   நன்றி தினகரன் 

 




புத்தாண்டில் உக்ரைனுக்கு எதிராக புதிய தரைவழித் தாக்குதலுக்கு ரஷ்யா திட்டம்

ரஷ்யா அண்மையில் பெரும் பின்னடைவை சந்தித்தபோதும், புத்தாண்டின் ஆரம்பத்திலேயே அந்த நாடு பரந்த அளவு தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிடுவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி மற்றும் அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உக்ரைனின் கிழக்கு டொன்பாஸ் பிராந்தியம், தெற்கு அல்லது தலைநகர் கீவ் மீதே இந்தத் தாக்குதல் தொடுக்கப்படலாம் என்று மூத்த இராணுவ ஜெனரல்கள் எச்சரித்துள்ளனர்.

தரை வழி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான ரஷ்யாவின் திறன் குறைந்து வருவதாக மேற்கத்திய தரப்புகள் கூறி வருகின்றன. இந்தப் போர் ரஷ்யாவுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தி இருப்பதாகவும் அந்த நாடு வெடிபொருட்களின் தீவிர பற்றாக்குறையை எதிர்கொண்டிருப்பதாகவும் பிரிட்டனின் மூத்த இராணுவ அதிகாரியான அட்மிரல் சேர் டோனி ரடாகின் இந்த வாரம் கூறியிருந்தார்.

இந்நிலையில் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோ ஊடகத்திடம் பேசும்போது, போர்க்களத்தில் பெரும் இழப்புகளை சந்திக்கும் நிலையில் பரந்த தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் போருக்காக இணைக்கப்பட்ட 300,000 துருப்புகளில் பாதிப் பேர் தமது பயிற்சிகளை பூர்த்தி செய்யும் நிலையில் இந்த தாக்குதல் வரும் பெப்ரவரியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

“சுமார் 150,000 ஆக உள்ள அணிதிரட்டப்பட்ட படையினரில் இரண்டாவது பகுதியினர் தயார் நிலைக்கு குறைந்தது மூன்று மாதங்களை எடுத்துக் கொள்ள முடியும். இதன்படி கடந்த ஆண்டைப் போன்று வரும் பெப்வரியில் இரண்டாவது அலை தாக்குதலுக்கு முயற்சிக்கக் கூடும். அது தான் அவர்களின் திட்டம்” என்று ரெஸ்னிகோ, கார்டியன் பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார்.

“எப்படி வெற்றியை எட்டுவது என்று புதிய வழி ஒன்றை ரஷ்யா முயற்சிக்கும்” என்று குறிப்பிட்ட அவர், இதற்காக மேலும் பிரஜைகளை அணிதிரட்ட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யாவின் புதிய தாக்குதல் ஜனவரி விரைவில் ஆரம்பமாகக் கூடும் என்றபோதும் அது வசந்த காலத்தில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக எக்கொனமிக்ஸ் பத்திரை குறிப்பிட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி, ஜெனரல் வலெரி சலுஸ்னி மற்றும் ஜெனரல் ஒலெக்சாடர் சிரிஸ்கி ஆகியோரின் அண்மைய நேர்காணல்களை மதிப்பீடு செய்தே அந்தப் பத்திரிகை இதனை குறிப்பிட்டுள்ளது.

“ரஷ்யா சுமார் 200,000 துருப்புகளை தயார் செய்து வருகிறது. அவர்கள் மீண்டும் ஒருமுறை கீவை நோக்கி அனுப்பப்படுவார்கள் என்பது எனக்கு சந்தேகம் இல்லை” என்று உக்ரைன் ஆயுதப் படைகளின் தளபதி ஜெனரல் சலுஸ்னி குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்மஸை ஒட்டி போர் நிறுத்தம் ஒன்றை இரு தரப்பும் நிராகரித்திருப்பதோடு, போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் எதுவும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை.

டொனட்ஸ்க் பிராந்தியம் முதற்கொண்டு உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றபோதும் குளிர்லாக இழுபறிச் சூழல் இடம்பெற்று வருகின்றது. எனினும் ரஷ்யா பக்முட் நகரை கைப்பற்ற முன்னேறி வருகிறது.

மேற்கத்திய ஆதரவுடன் ரஷ்ய ஏவுகணைக்கு எதிரான வான் பாதுகாப்பை உக்ரைன் குறிப்பிடும்படியாக மேம்படுத்தியுள்ளதோடு, மேலும் மேம்பட்ட ஆயுதங்களை அது கோரி வருகிறது.

உக்ரைனுக்கு மேலதிக நிதிகள் மற்றும் இராணுவ பயிற்சிகளை வழங்க மேற்கத்திய கூட்டணிகள் முன்வந்துள்ளன.   நன்றி தினகரன் 





இந்திய - சீன எல்லைப் பகுதியில் இரு துருப்புகளும் மீண்டும் பூசல்

இந்திய, சீன எல்லையில் மீண்டும் இருநாட்டுத் துருப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இமயமலை எல்லைப் பகுதியில் இது இடம்பெற்றது.

இருதரப்பிலும் துருப்பினர் சிலர் காயம் அடைந்தனர் என்றும் அந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (09) ஏற்பட்டது என்றும் ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீனாவினால் உரிமை கொண்டாடப்படும் தாவாங் பகுதியில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த எல்லை அருகே அண்மையில் இந்தியாவும் அமெரிக்காவும் இராணுவப் பயிற்சியை நடத்தின.

இந்திய–சீன எல்லையில் இருநாட்டவரும் செல்லக்கூடாத வட்டாரத்துக்கு அருகே சீனப் படை வீரர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது. இருதரப்பிலும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

இது பற்றி சீனத் தரப்பு எந்த அறிவித்தலையும் விடுக்கவில்லை என்றபோதும் ஆறு படை வீரர் காயமடைந்தாக இந்திய இராணுவ வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. 'அந்தப் பகுதியில் இருந்து இரு இராணுவமும் உடன் விலகிக்கொண்டது' என்று இந்திய இராணுவம் குறிப்பிட்டது.

அமைதியை நிலைநாட்ட இரு தரப்பு கட்டளைத் தளபதிகளும் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் நேர்ந்த எல்லைப் பூசலிலிருந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றம் கடுமையாகி வருகிறது. அப்போது எல்லையில் நடந்த மோதலில் இருதரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.   நன்றி தினகரன் 





கொங்கோ வெள்ளத்தினால் 120 இற்கும் அதிகமானோர் பலி

கொங்கோ தலைநகர் கிஷாசாவில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 120க்கு அதிகமானோர் கொல்லப்பட்டு பல டஜன் பேர் காயமடைந்துள்ளனர்.

ஒட்டுமொத்த சுற்றுப்புறங்களும் சேற்று நீரால் மூழ்கடிக்கப்பட்டிருப்பதோடு நெடுஞ்சாலைகள் உட்பட வீடுகள் மற்றும் வீதிகள் நிலச்சரிவு மற்றும் பள்ளங்களால் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.

சுமார் 12 மில்லியன் மக்கள் வசிக்கும் கிஷாசாவின் 24 சுற்றுப்புற பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நிகாலிமா பகுதியில் மூன்று டஜனுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதோடு சடலங்கள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு வருவதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். மற்றொரு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டிருப்பதோடு சிலர் மின்சார கசிவால் பலியாகியுள்ளனர்.   நன்றி தினகரன் 





2ஆவது ஆர்ப்பாட்டக்காரருக்கும் ஈரானில் தூக்கு

ஈரானின் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புபட்டு இரண்டாவது நபர் ஒருவர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாடு குறிப்பிட்டுள்ளது.

மாஜித்ரேசா ரெஹ்னவர்த் என்பவர் நேற்று (12) காலை பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டார் என்று நீதித்துறை அறிவித்துள்ளது.

ஈரானிய துணைப்படை உறுப்பினர்கள் இருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததுடன் தொடர்புபட்டு அவர் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார்.

எனினும் முறையான நடைமுறை இல்லாத வழக்கு விசாரணை மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மரண தண்டனை விதிக்கப்படுவதாக மனித உரிமைக் குழுக்கள் எச்சரித்துள்ளன.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை 23 வயதான மாஹசன் ஷெகாரி தூக்கிலிடப்பட்டார். துணைப்படை வீரர்கள் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதாக அவர் குற்றங்காணப்பட்டார்.

முறையற்ற வகையில் ஹிஜாப் அணிந்த குற்றச்சாட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட 22 வயது மஹசா அமினி என்ற பெண் மரணித்த சம்பவத்தைத் தொடர்ந்தே ஈரானில் ஆர்ப்பாட்டம் வெடித்தது.   நன்றி தினகரன் 







24 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா ஏற்றுமதிக் கட்டுப்பாடு

ரஷ்யாவின் இராணுவம், அதன் இராணுவ கைத்தொழில் தளம், பாகிஸ்தானின் அணுசக்தி செயற்பாடுகள் மற்றும் ஈரானின் இலத்திரனியல் கம்பனிகள் என்பவற்றுக்கு ஆதரவாக செயற்படும் 24 கம்பனிகள் உள்ளிட்ட மற்றும் சில நிறுவனங்களை அமெரிக்கா ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்துள்ளது.

தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் கொள்கைளைக் காரணமாகக் கொண்டு அமெரிக்கா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

லத்வியா, பாகிஸ்தான், சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைத் தளமாகக் கொண்டுள்ள நிறுவனங்களே இவ்வாறு ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் தொழில்நுட்ப, இலத்திரனியல் உற்பத்தி நிறுவனங்கள், விஞ்ஞான ஆராய்ச்சி தொடர்பான தாயாரிப்பு கம்பனிகள் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் மீதான போர் ஆரம்பமானது முதல் வெளிநாட்டு தொழில்நுட்பங்கள் ரஷ்யாவுக்குக் கிடைக்கப்பெறுவதையும் ரஷ்ய படையினருக்கு ஆதரவாக நிறுவனங்கள் செயற்படுவதையும் கட்டுப்படுத்த அமெரிக்கா இப்பட்டியலைப் பயன்படுத்தியுள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.    நன்றி தினகரன் 






அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ: 5 சிறுவர்களுடன் 10 பேர் பலி

பிரான்ஸின் லியோன் நகருக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயில் ஐந்து சிறுவர்கள் உட்பட பத்துப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று (16) ஏற்பட்ட இந்தத் தீ ஏழு மாடிகள் கொண்ட அடுக்கு மாடியிலே பரவியுள்ளது. இதில் நால்வர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் இரு தீயணைப்பு வீரர்கள் உட்பட பத்துப் பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

170 தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ பரவியதற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் கெரார்ட் டர்மனின் குறிப்பிட்டார். இதில் மூன்று தொடக்கம் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களே உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

தரைத் தளத்தில் ஏற்பட்ட தீ மேல் மாடிகளை நோக்கி பரவியுள்ளது.   நன்றி தினகரன்






No comments: