எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 44 தீவுக்கூட்டமாக திகழும் எழுத்தாளர்கள் – கலைஞர்களை ஒன்றிணைப்பதில் சந்திக்கும் சவால்கள் ! முருகபூபதி


எங்கள் ஊரில் சில அமைப்புகளிலும் கொழும்பில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் நான் அங்கம் வகித்திருந்தமையால், அங்கிருந்து பெற்றுக்கொண்ட புத்திக்கொள்முதலின் அடிப்படையில்தான் புகலிடத்திலும் இயங்கினேன்.

வெகுஜன அமைப்புகளில் பலதரப்பட்ட குணவியல்பு


கொண்டவர்களும் இணைந்திருப்பார்கள்.  இவர்களிடத்தில்  ஊடலும் கூடலும் தவிர்க்கமுடியாதது.

அனைவரையும் சமாளிக்கவும் முடியாது.  முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் நான் 1973 இல் இணைவதற்கு முன்பே அது இரண்டு அணியாக பிரிந்துவிட்டது.

எஸ். பொ. நற்போக்கு என்று தொடங்கினார்.

நான் இணைந்த காலப்பகுதியில்  கே. டானியல், என். கே. ரகுநாதன், சாருமதி, புதுவை இரத்தினதுரை, சில்லையூர் செல்வராசன் ஆகியோர் விலகிச் சென்றிருந்தார்கள்.

இச்சங்கத்தில் மாஸ்கோ சார்பு எழுத்தாளர்களும் பீக்கிங் சார்பு எழுத்தாளர்களும் தொடர்ந்து இணைந்திருந்தனர்.

இதேவேளை பூரணி காலாண்டிதழை வெளியிட்டவர்கள்  அணியேதும் உருவாக்காமல் மார்க்ஸீய சிந்தனை கொண்ட எழுத்தாளர்களிலிருந்து வேறுபட்டு, மு. தளையசிங்கத்தின் சிந்தனைக்கு  நெருக்கமாக  இயங்கினார்கள்.

எனக்கு அனைவருடனும் எந்த முரண்பாடுமற்ற நட்புறவு இருந்தது.  அப்போது நான் அங்கே புதிய இளம் தலைமுறை. அதனால் அனைவருக்கும் நான் செல்லப்பிள்ளை.  அங்கிருந்த ஒவ்வொரு எழுத்தாளர்களினதும் குணவியல்புகளை நன்கு அறிந்து வைத்திருந்தேன். அவ்வாறு பெற்ற புத்திக்கொள்முதல் அனுபவத்துடன்தான் அவுஸ்திரேலியாவில் கால் ஊன்றினேன்.

இங்கே இலங்கை மாணவர் கல்வி நிதியம், தமிழ் அகதிகள் கழகம், அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியம் ஆகியனவற்றை உருவாக்குவதில் முன்னின்று உழைத்திருந்தாலும், இங்கிருந்த ஏனைய தமிழ் அமைப்புகளின் செயற்பாடுகளிலிருந்து விலகியிருந்தேன்.  இடையில் மக்கள் குரல் கையெழுத்து சஞ்சிகை, உதயம் இருமொழி மாத இதழ் ஆகியனவற்றின் ஆசிரியர் குழுவிலுமிருந்தேன்.

எனினும்,  எனது முழுக்கவனமும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில்தான் குவிந்திருந்தது.  இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியிருப்பதனால் மீண்டும் அதுபற்றி பதிவுசெய்யவேண்டிய அவசியமில்லை என கருதுகின்றேன்.

இதில் இணைக்கப்பட்டுள்ள காணொளிகளின் வாயிலாக இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வரலாற்றை வாசகர்கள் ஓரளவு தெரிந்துகொள்ள முடியும்.

சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேசவைப்பதுமே எழுத்தாளர்களின் முக்கிய கடமை எனக் கருதுபவன் நான். இந்த பால பாடத்தை வீரகேசரி நாளிதழ் எனக்கு கற்றுத் தந்திருந்தது.


அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியமும், தமிழ் அகதிகள் கழகமும்  காலப்போக்கில்  செயல் இழந்தன. அதற்கு பின்னணிக் காரணம் அரசியல்தான்.  எனினும்,  மாணவர் கல்வி நிதியத்திற்குள் அரசியல் நுழையவில்லை.

அதனால்தான் இந்நிதியம் 35 ஆவது வருடத்தை நோக்கி இயங்கிக்கொண்டிருக்கின்றது.

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த கலை, இலக்கியவாதிகள் அங்கே வருடாந்தம் இலக்கிய சந்திப்புகளை நடத்தி வந்தார்கள்.  அதன் மூலம் பல கருத்தரங்குகளையும் நூல், இதழ் வெளியீடுகளையும் நடத்தினார்கள். அத்துடன் பெண்கள் சந்திப்பு என்ற இயக்கமும் ஐரோப்பாவில் தொடர்ந்துகொண்டிருந்தது.

1997 ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து மெல்பனுக்கு வருகை


தந்திருந்த எனது தாய் மாமனாரின் மகள் தேவா, இலக்கிய ஆர்வம் மிக்கவர். இவரும்  அங்கே சில இலக்கிய சந்திப்புகளிலும் பெண்கள் சந்திப்புகளிலும் கலந்துகொண்டவர்.

   அவுஸ்திரேலியாவிலிருக்கும் எழுத்தாளர்களையெல்லாம் அழைத்து இங்கும் இலக்கிய சந்திப்பு இயக்கத்தை தொடங்கலாமே என்று ஒரு நாள் தேவா எனக்கு ஆலோசனை சொன்னார்.

அவர் வந்து திரும்பிய பின்னர் எமது இல்லத்திற்கு மேலும் சில எழுத்தாளர்கள் வந்து சென்றார்கள். அவர்களில் ஒருவர்தான் சார்வாகன். இவர் ஒரு மருத்துவ நிபுணர். இந்தியாவில் தொழு நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்தவர். அத்துடன் பத்மஶ்ரீ விருதும் பெற்றவர். அப்போது மெல்பனில் வசித்த திருமதி பாலம் லக்‌ஷ்மணன் அம்மையாரின் நெருங்கிய உறவினர்.

சார்வாகன் பற்றி மேலதிக தகவல்கள்:

அவரது இயற்பெயர் ஶ்ரீநிவாசன். கேர்ணல் ஹரிகரன், திரைப்பட


நடிகர் டில்லி விஸ்வநாதன் ஆகியோரின் உடன் பிறந்த சகோதரர். 

எழுத்தாளர் சார்வாகனை, மெல்பன் ஶ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் எதிர்பாராதவகையில் சந்தித்தேன். அவரது அமர பண்டிதர் என்ற குறுநாவலை 1970 களிலேயே சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை தொகுப்பில் படித்திருக்கின்றேன்.

அவர் சிறுகதை எழுத்தாளராக நன்கு அறியப்பட்டிருந்தாலும் அதிகம் கதைகள் எழுதவில்லை. எதுக்குச்சொல்றேன்னா என்ற கதைத் தொகுதி மாத்திரமே வெளியாகியிருந்தது.

அவர் மெல்பனில் தங்கியிருந்த வீட்டுக்குச்சென்று காரில் அழைத்து வந்து உபசரித்தேன். மீண்டும் அவரை அந்த வீட்டில் விட்டேன். காரைச் செலுத்தியவாறே அவரை நேர்காணல் செய்து மூளையில் சேகரித்துக்கொண்டேன். அவரிடமிருந்து பல செய்திகளை கறக்க முடிந்தது.

அதனை எழுதி இலங்கை தினகரன் வாரமஞ்சரியிலும் மெல்பன்


உதயம் மாத இதழிலும் வெளியிட்டுவிட்டு, அதன் நறுக்குகளை அவரது சென்னை வால்மீகி நகர் முகவரிக்கு அனுப்பிவைத்தேன். இந்த நேர்காணலும் எனது சந்திப்பு                          ( நேர்காணல் தொகுப்பு ) நூலில்  இடம்பெற்றுள்ளது.

அவருடனான உரையாடலில் எழுத்தாளர்களை ஒன்றிணைப்பது பற்றிய எனது கருத்தைச் சொன்னபோது சிரித்தார்.   “ அது முடியாத செயல்.  ஒவ்வொரு மனிதர்களும் தனித்தனி தீவு. அதிலும் அவர்களுக்குள்ளே இருக்கும் எழுத்தாளர்கள் முற்றிலும் வேறுவகையான தீவுக்கூட்டங்களை சேர்ந்தவர்கள்.  “ என்றார்.

சில வருடங்களின் பின்னர் மீண்டும் அவர் மெல்பன் வந்தார். தென் அவுஸ்திரேலியாவில் அடிலைற்றில்  நடந்த மருத்துவர்கள் மாநாட்டிற்காக வந்தசமயம் மெல்பனுக்கும் வந்தார். அப்போதும் சந்தித்தேன். சென்னைக்கு சென்றவிடத்திலும் அவருடன் தொலைபேசியில் உரையாடினேன். சார்வாகன் எனக்கு மிகவும் பிடித்தமான படைப்பாளி.  அவர் 2015 ஆம் ஆண்டு சென்னையில் மறைந்தார். அப்போதும் அவர் பற்றிய விரிவான நினைவேந்தல் பதிவை எழுதியிருக்கின்றேன்.


அவர் அன்று சொன்னது போன்று தீவுகளை ஒன்றிணைப்பது சிரம சாத்தியமானதுதான். தீவு  கரையை  அணைத்து                               ( அரித்து ) தன்னை விஸ்தரிக்கும்.   இந்த விஸ்தரிப்பை கடல் அரிப்பு என்பார்கள்.  அல்லது வற்றிப்போகும்.  இறுதியில் காணாமல் போய்விடும்.

எழுத்தாளர் சார்வாகன் சொன்னதுபோல் பார்த்தால் நானும் ஒரு தீவுதான். இந்தத்தீவு எவ்வாறிருக்கவேண்டும் என்பதை நான்தானே தீர்மானிக்க முடியும்.  கரைகளை அணைத்து விஸ்தரிப்பதா..? அல்லது வற்றிப்போவதா..?

படைப்பாளி சார்வாகனனின் கதைகளை பிரான்ஸ்  காஃப்காவின் ( 1883 – 1924 ) கதைகளுடன்   ஒப்பிட்டும் சில விமர்சகர்கள் கருத்துரைத்துள்ளனர்.  செக் குடியரசின் பிராக் நகரைச்சேர்ந்த - பிரான்ஸ்  காஃப்காவின் பாணியில் எங்கள் இலங்கையிலிருந்து  படைப்பாளி மு. தளையசிங்கமும்    எழுதியிருப்பதாக சொல்லப்படுவதுண்டு. 

இலங்கை  சிங்கள திரைப்பட  இயக்குநர் தர்மசேன பத்திராஜ,  பிரான்ஸ்  காஃப்காவின் உருமாற்றம் ( The Metamorphosis ) கதையை பின்னணியாகக் கொண்டு ஸ்வரூப என்ற சிங்களப்படத்தையும் எடுத்திருக்கின்றார். அதனை பின்னாளில் மெல்பன் திரையரங்கில் அவருடனே அமர்ந்து பார்த்தேன்.

எழுத்தாளர்கள் குறித்து சார்வாகன் சொன்ன கருத்து என்னை


ஆழ்ந்து சிந்திக்க வைத்தது.

சார்வாகனைத் தொடர்ந்து மேலும் சில இந்திய – மலேசிய எழுத்தாளர்கள் என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்களில் கவிக்கோ கவிஞர் அப்துல் ரஃமான், பீர் முகம்மது ஆகியோர்  குறிப்பிடத் தகுந்தவர்கள். அத்துடன் கவிஞர் அம்பி, எழுத்தாளர்கள் எஸ்.பொ. ஆசி. கந்தராஜா, மாத்தளை சோமு, முருகர் குணசிங்கம், தி. ஞானசேகரன், ஆகியோரும் வந்து சென்றிருக்கிறார்கள்.  அவ்வாறு வந்தவர்கள்  வெளி மாநிலங்களை அல்லது வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

எழுத்தாளர்களையும்  கலைஞர்களையும்  கொண்டாடுவது எனது இயல்பு.

அவுஸ்திரேலியாவில், விக்ரோரியா ,  நியூசவுத்வேல்ஸ், தெற்கு அவுஸ்திரேலியா, மேற்கு அவுஸ்திரேலியா, குவின்ஸ்லாந்து, கன்பரா முதலான மாநிலங்களில் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் வசிக்கிறார்கள். அத்துடன் நடன, இசைக்கலைஞர்களும் ஓவியர்களும் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் அழைத்து,   அறிந்ததை பகிர்தல், அறியாததை அறிந்துகொள்ள முயற்சித்தல் என்ற நோக்கத்துடன், கலையும் இலக்கியமும் இனத்தின் கண்கள் என்ற அடிப்படையில் முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்கான முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்தேன்.

இங்கே குறிப்பிட்ட மாநிலங்களில் வசிக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்களின் தொலைபேசி – முகவரிகளை சேகரித்தேன்.  மின்னஞ்சல், கைத் தொலைபேசி பாவனைக்கு எம்மவர்கள் பழக்கப்படாத காலம்.

ஒரு பேரேட்டில் விபரங்களை குறித்தேன். இது இவ்விதமிருக்க எனக்கு தினம் தினம் வரும் கடிதங்களையும் சேகரித்து ஒரு கோவையில் பத்திரப்படுத்தினேன்.



பல உள்நாட்டு. வெளிநாட்டு கடிதங்களும் எனது சேகரிப்பில் இருந்தன. இன்றும் அவை என்வசம் பாதுகாப்பாக இருக்கிறது.  பல ஆளுமைகளின் கையெழுத்துக்களை அவ்வப்போது எடுத்துப்பார்ப்பேன்.  எனக்குப்பின்னர் அவற்றை என்ன செய்வது..?  என்ற கவலைதான் தற்போது மனதை அரிக்கும் மற்றும் ஒரு கவலை.

1999  ஆம் ஆண்டு இலங்கை சென்றவேளையில் எனது அக்காவீட்டில் மல்லிகை ஜீவாவுக்கும் நண்பர் திக்குவல்லை கமாலுக்கும் மதியபோசன விருந்து வழங்கியபோது,  அவுஸ்திரேலியாவில்  எழுத்தாளர்கள் – கலைஞர்களை ஒன்றுகூடச்செய்யவிருக்கும் எனது யோசனையை டொமினிக் ஜீவாவிடம் சொன்னேன். அந்த விழாவுக்கு நீங்களும் வரவேண்டும்.  அந்த விழாவில் மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பு மலரும் வெளியிடவேண்டும்  என்றேன்.

அதனைக்கேட்டு அவர் சற்றுத் தயங்கினார்.      நான் வருவது இருக்கட்டும்.  உம்மால் மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்புமலரை  வெளியிடுவதற்கு முடியுமா..? எனக்கேட்டார்.

 முடியும். உங்களுக்கு நினைவில்லையா..? 1972 ஆம் ஆண்டு மல்லிகை,  எங்கள் நீர்கொழும்பூர் சிறப்பிதழ் வெளியீட்டதே.  என்றேன்.

அந்த இதழ் திட்டமிட்டவாறு 1972 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளிவந்தது. அதன் வெளியீட்டு அரங்கினை நடத்துவதற்கு இங்கே இந்து இளைஞர் மன்ற மண்டபத்தை கேட்டபோது ஏதேதோ சாக்குப்போக்குச் சொல்லி அதன் நிருவாகத்தினர் தருவதற்கு மறுத்தனர்.

அதனால், அந்த நீர்கொழும்பு மல்லிகைச்சிறப்பிதழ் வெளியீடு இந்த  வீட்டில்தானே  நடந்தது.  உங்களுக்கு நானே மாலை சூட்டி வரவேற்றேனே…?! மறந்துவிட்டீர்களா..? எனக்கேட்டேன்.

  பூபதி உங்களை அவுஸ்திரேலியாவுக்கும் அழைத்து மாலை சூட்டப்போகிறார்.  போய்த்தான் பாருங்களேன் என்றார் திக்குவல்லை கமால்.

ஐம்பது ஆண்டுகளாகிவிட்டன. ஜீவா தற்போது எம்மிடம் இல்லை. ஆனால், அந்த நீர்கொழும்பு  சிறப்பிதழை இந்தத் தொடரை படிக்கும் வாசகர்கள் நூலகம் ஆவணகத்தில் பார்க்கவும் படிக்கவும் முடியும்.  அதுவே மல்லிகை வெளியிட்ட முதலாவது பிரதேச சிறப்பிதழ்.

அதனை அன்று சாத்தியமாக்க முடிந்த என்னால், ஏன் அவுஸ்திரேலியா மல்லிகை சிறப்பு மலரை  வெளியிடுவதற்கு முடியாது என்றும் ஜீவாவிடம் அன்று சொன்னேன்.  

முடியும் என்றால் முடியாதது ஒன்றும் இல்லை.

திட்டமிட்டவாறு மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பு மலர்   2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே வெளிவந்தது.  இங்கு வதியும் சில எழுத்தாளர்கள் அதில் எழுதினார்கள்.  அதற்கான முகப்பு ஓவியத்தை அச்சமயம் சிட்னியிலிருந்த இலக்கிய  நண்பர் கலாமணியின் மூத்த புதல்வன் பரணீதரன்தான் வரைந்து தந்தார். இவர்தான் சமகாலத்தில் யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து ஜீவநதி மாத இதழை வெளியிடும் அதன் ஆசிரியர்.

திரும்பிப்பார்த்தால்,  இந்த இலக்கியப் பயணம்  சங்கிலித் தொடராகவே காட்சியளிக்கிறது.

1999 ஆம் ஆண்டு மெல்பனுக்கு வந்து திரும்பியிருந்த இலக்கியவாதி மருத்துவர் தி. ஞானசேகரன் மீண்டும் வரவிருந்தார்.  எமது எழுத்தாளர் விழாவை 2001 ஜனவரியில்                    ( கோடை விடுமுறைகாலம் )  நடத்தவிருக்கும் தகவலை அவருக்குச் சொன்னேன்.

மல்லிகை ஜீவா,  தனக்கு மல்லிகை ஆண்டு மலர் வேலைகள் இருப்பதாகச் சொல்லி வரவில்லை.  இலக்கிய சகோதரி ஜெயந்தி வினோதன்,  அவருக்கான விசா ஒழுங்குகளை செய்து கொடுப்பதற்கும் தயாராயிருந்தார்.

பின்னர், ஜெயந்தி வினோதனின் ஏற்றுமதி – இறக்குமதி நிறுவனமே மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பு மலர் பிரதிகளை எமக்கு விமானம் மூலம் அனுப்பிவைத்தது.

அந்தச்சிறப்பு மலரில், ஜீவா,  இலக்கிய அடையாளத்தின் நிழல் என்ற  தலைப்பில் விரிவான குறிப்பும் வாழும் காலத்தில் வீசும் காற்று என்ற தலைப்பில் நீண்ட ஆசிரியத்தலையங்கமும் எழுதியிருந்தார்.

இச்சிறப்பு மலரில் இயந்திர வாழ்விலும் இயங்கியல் தேடல் என்ற கட்டுரையை நான்  எழுதியிருந்தேன். புவனா இராஜரட்ணம், நல்லை க. குமாரசாமி, எஸ். சுந்தரதாஸ், நடேசன், பேராசிரியர் பொன். பூலோகசிங்கம், பாலம் லக்‌ஷ்மணன், களுவாஞ்சிக்குடி யோகன், உரும்பை மகள், பிரவீணன் மகேந்திரராஜா, ஜெயசக்தி பத்மநாதன், ஞானம், தி. ஞானசேகரன், கலாநிதி வே. இ. பாக்கியநாதன், அசன், கவிஞர் அம்பி, மாவை நித்தியானந்தன், அருண். விஜயராணி, மாத்தளை சோமு, கன்பரா யோகன், அ. சந்திரகாசன், ஆசி. கந்தராஜா, ரேணுகா தனஸ்கந்தா, த. கலாமணி, ஆகியோர் எழுதியிருந்தனர்.

த. கலாமணியும் அவரது புதல்வன் பரணீதரனும் அவுஸ்திரேலியா பற்றிய குறிப்புகளை எழுதியிருந்தனர்.

2001 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் 06 ஆம் திகதி மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் முற்பகல் முதல் இரவு வரையில் முதலாவது தமிழ் எழுத்தாளர் விழா வெகு சிறப்பாக நடந்தது.

மெல்பன், சிட்னி, கன்பராவிலிருந்து பலரும் கலந்துகொண்டனர்.  அவர்களில் பலருக்கும் தங்குமிட வசதியும் செய்துகொடுக்கப்பட்டது.

மண்டபத்தில் நடந்த கண்காட்சியை பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்  நாடா வெட்டி திறந்துவைத்தார்.

முற்பகல் முதல் மாலை 6-00 மணி வரையில் கருத்தரங்குகள் நடந்ததன.  எட்டு  அமர்வுகளில்  24 பேர் உரை நிகழ்த்தினர்.  அனைத்து உரைகளும் அச்சிடப்பட்டு ஒரு கோவையில் பார்வையாளர்களுக்கு தரப்பட்டது.  அவற்றை எமக்கு அச்சிட்டுத்தந்தவர் மருத்துவர் பொன். சத்தியநாதன்.

மதியபோசன விருந்தும், மாலையில் தேநீர் விருந்தும்  இடம்பெற்றது.  

இரவு நிகழ்ச்சியில் மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்புமலர் வெளியிடப்பட்டது. தமது துணைவியார் எழுத்தாளர் திருமதி ஞானம் அவர்களுடன் வருகை தந்து சிறப்பித்த தி. ஞானசேகரன் , குறிப்பிட்ட மல்லிகை சிறப்பு மலரையும் அறிமுகப்படுத்தி  உரையாற்றினார்.

 இரவு நிகழ்ச்சியில் மூன்று நாடகங்கள் இடம்பெற்றன.   த. கலாமணியின் இயக்கத்தில் பூதத்தம்பி இசை நாடகம், அ. சந்திரகாசனின் இயக்கத்தில் ஒரு பொல்லாப்பும் இல்லை – நவீன நாடகம்,  புவனா இராஜரட்ணம் இயக்கத்தில்  வால்மீகி வில்லிசை நாடகம் ஆகியன அரங்கேறின.

மறுநாள் பண்டுரா பூங்காவில் ஒடியல் கூழ் விருந்துடன் கவியரங்கும் கலந்துரையாடலும் நடந்தது.

இவ்வளவும் நடந்தன. ஆனால், இந்த முதலாவது எழுத்தாளர் விழாவுக்குச்  செல்லவேண்டாம் எனவும் இதனை  பகிஷ்கரிக்குமாறும்  சில படித்த மனிதர்கள் ( ? )  பிரசாரமும் மேற்கொண்டனர்.

அந்த எழுத்தாளர் விழா இயக்கத்தின் தொடர்ச்சியாக  2002 இல் சிட்னியிலும் 2003 இல் மீண்டும் மெல்பனிலும் 2004 இல் கன்பரவிலும்  எழுத்தாளர் விழாக்கள் நடந்தன.

அந்த இயக்கத்தின் வளர்ச்சியின் மற்றும் ஒரு படிக்கல்லாக சில ஆண்டுகளில் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் உதயமாகியது.

கங்காரு தேசம் என்ற இந்தப்பெரிய தீவில், தனித்தனி தீவுகளாக வாழும் எழுத்தாளர்கள், கலைஞர்களை அன்று 2001 ஆம் ஆண்டில், 21 ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிணைப்பதற்கும் சில சவால்களை சந்திக்க நேர்ந்தது.

சவால்கள் வந்தால்,  சமாளிக்கவேண்டியதுதானே..?

இந்த அங்கத்தை மறைந்த படைப்பாளி சார்வாகன் அவர்களுக்கே சமர்ப்பிக்கின்றேன்.

( தொடரும் )

letchumananm@gmail.com

 

 

 

 

 

 

 

 

No comments: