ஆனந்தத் தமிழை அரவணைக்கும் மாதம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ..... அவுஸ்திரேலியா


              மார்கழி என்றாலே மனமெல்லாம் குளிரும்


          நீர்பெருகி நிற்கும் நிலம்மகிழ்ந்து சிரிக்கும்
          ஊர்முழுக்க விழித்து உவந்தேற்று நிற்கும்
          கார்மேகம் வானைக் கவ்வியே இருக்கும்

         ஆறு குளமெல்லாம் ஆர்ப்பரித்து நிற்கும்
         வீறுடனே நீரும் வெளியில் வரப்பாக்கும் 
         ஊரவரின் கவனம் நீர்பெருக்கை நோக்கும்
         மார்கழியும் மகிழ்வாய் வந்துமே நிற்கும்

         குளிர்வுடைய மாதம் குறைவதனைத் தருமா

         கீதைதந்த கண்ணன் மார்கழியைப் புகழ்ந்தான் 
         தேவரது மாதம் மார்கழியாய் சிறக்க
         நாமதனைப் பீடை எனவுரைத்தல் தகுமா 

         சீர்காழிச் செல்வர் சம்பந்தர் பிறந்தார் 
         சேந்தனார் தேரை தமிழ்பாடி அசைத்தார் 
         சிவனாரின் நடனம் சிரேஷ்டர்கள் கண்டார்
         சிறப்புகள் அனைத்தும் சேர்ந்ததே மார்கழி 

        தோடுடை செவியனைத் தொழுதேற்றும் மாதம்
        மாதொரு பாகனை மனமிருத்தும் மாதம் 
        மாசிலா மனத்துடை மாணிக்க வாசகர்
        வழங்கிய திருவெம்பா முழங்கிடும் மாதம் 

        மாலவன் மாண்பினைப் போற்றிடும் காலம்
        மாண்புடை திருப்பாவை மலர்ந்திடும் காலம்
        ஊனையும் உருக்கிடும் உன்னதத் தமிழை
        உவந்துமே ஆண்டாள் வழங்கிய காலம் 

        ஆதியந்தம் இல்லா அருட்பெரும் சோதியை
        வீதியெங்கும் பாடி வியந்தேற்றுங் காலம்
        தாளல யமோடு பாடிவரு மடியார்  
        காலையது வேளை காட்டிவிடு காலம் 

        வண்ணத் தமிழ்பாடி வாலைக் குமரியெலாம்

        எண்ணரிய பரம்பொருளை இறைஞ்சுகின்ற காலம் 
        கண்விழிக்கா கன்னியரை கனிவான தமிழ்பாடி
        உண்ணா முலையானை உவந்தேற்றும் காலம்

        கண்ணுக் கினியானை கனிவான தமிழாலே
        காரிகைகள் வீதியெலாம் பரவிநிற்கும் காலம் 
        பெண்ணுக் கினியானை பேரருளைத் துயிலெழுப்ப 
        மண்பிறந்தார் தமிழ்பாடி மனமுருகும் காலம்  

       சைவமும் வைணவமும் சங்கமிக்கும் காலம் 

       சபரிமலை நாதனை உவந்தேற்றும் காலம் 
       ஐயப்பா சரணமென அடியார்கள் ஒலிக்கும்
       உய்விக்கும் பாடலெலாம் உளமமரும்  காலம் 

       மனங்குளிரும் மாதம் மண்சிரிக்கும் மாதம்
       உளம்மகிழ இறையை உவந்தேற்றும் மாதம்
       மனமுறையும் அழுக்கை துடைத்தெறியும் மாதம்
       வருடமதில் நிறைவாய் வாழ்த்துரைக்கும் மாதம் 

      அருளான மாதம் அழகான மாதம்

      ஆனந்தத் தமிழை அரவணைக்கும் மாதம்
      தேவரது மாதம் திருமிக்க மாதம்
      யாவருக்கும் நலமே நல்கிவிடும் மாதம் 

No comments: