நான் ஏன் பிறந்தேன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 எம் ஜி ஆர் படம் என்றால்,படத்தில் பிரம்மச்சாரியாக வருவார்,கதாநாயகியே அவரை தேடி வந்து காதலிப்பார்,சற்று தயக்கத்துடனே காதலை ஏற்பார்,இடையில் காதலுக்கு இடையூறாக வரும் வில்லனை பந்தாடி விட்டு காதலியின் கரம் பற்றுவார் இவ்வாறே படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும்.ஆனால் இவற்றுக்கு மாற்றாக அத்தி பூத்தாற் போல் அவர் நடிப்பில் ஒரு படம் வந்தது.அந்தப் படம் தான் நான் ஏன் பிறந்தேன்.



இந்தப் படத்தில் ஆரம்பத்திலேயே எம் ஜி ஆர் ஒரு குடும்பஸ்தராக அறிமுகமாகிறார்.மனைவி,குழந்தை,தாயார்,சகோதரர், சகோதரி, கொழுந்தன் என்று பெரிய குடும்பஸ்தராக காட்சியளித்தார் எம் ஜி ஆர். புரட்சி நடிகரின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல,திரை ரசிகர்கள் எல்லோருக்குமே இது புதுமைதான்.

1970ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஆனந்த விகடன் வார இதழில்

தனது சுய சரிதையை நான் ஏன் பிறந்தேன் என்ற பேரில் எம் ஜி ஆர் தொடர்ந்து எழுதி வந்தார்.அதனை தொடர்ந்து அதே பேரில் உருவான படத்திலும் அவர் நடித்தார்.ஆனால் இது அவரின் சுய சரிதை அல்ல!

பட்டதாரியும்,குடும்பஸ்தனுமான கண்ணன்தான் குடும்பத்துக்கு வருமானம் தேடித் தரக் கூடிய ஒரே ஜீவன். குடும்பமோ கடனில் சிக்கித் தவிக்கிறது,அதனால் பாரம்பரிய வீடும் பறிபோகிறது. இதன் காரணமாக வேலை தேடி பட்டணம் வருகிறான்.வந்த இடத்தில் வேலை கிடைக்கிறது,அதே கையோடு நோயாளியான இளம் பெண்ணின் காதலும் தேடி வருகிறது.தான் திருமணமானவன் என்பதை மறைத்து வேலைக்கு சேர்ந்த கண்ணன் உண்மையை சொல்ல முடியாமலும்,காதலை ஏற்க இயலாமலும் தத்தளிக்கிறான்.இதற்கு இடையில் கிராமத்தில் இருந்த அவன் குடும்பம் அவனைத் தேடி பட்டணத்துக்கு வருகிறது.வீட்டில் மனைவி,தொழில் செய்யும் இடத்தில் ஒருதலையாய் காதலிக்கும் காதலி என்று சிக்கிக் கொள்கிறான் கண்ணன்.

சிவாஜி.அல்லது ஜெமினி நடித்திருக்க வேண்டிய கதையில் துணிந்து நடித்திருந்தார் எம் ஜி ஆர்.வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் அவரின் நடிப்பும் வித்தியாசமாக இருந்தது.அவருக்கு இணை கே ஆர் விஜயா.பல படங்களில் ஏற்ற குடும்பத்தலைவி வேடம்,சிக்கலில்லாமல் அதனை கையாண்டார் அவர்.எம் ஜி ஆரை விரும்பி காதலிக்கும் வேடம் காஞ்சனாவுக்கு.உருகுவது,துடிப்பது என்று தன் பாத்திரத்தை முறையாக செய்திருந்தார்.வில்லனாக வருபவர் தேங்காய் சீனிவாசன்.அவரின் கை ஆள் நம்பியார்.என்னே காலத்தின் கொடுமை!இவர்களுடன் சுந்தரராஜன்,வி கோபாலகிருஷ்ணன்,எஸ் என் லட்சுமி,வீரராகவன், சேதுபதி,ஆகியோரும் நடித்திருந்தார்கள்.நாகேஷ் இருக்கிறார்,அளவுடன் நடிப்பையும்,நகைச்சுவையையும் வழங்குகிறார்.


பழைய நடிகையான ஜி சகுந்தலாவுக்கு இதில் நல்ல வேடம்,ஆனால் வில்லி வேடம்.நடிப்பில் அனுபவம் தெரிந்தது.

படத்தின் பாடல்களை நான்கு பேர் எழுதினார்கள்.புரட்சி கவிஞர் பாரதிதாசனின் சித்திரை சோலைகள் உம்மை திருத்த இப் பாரினிலே பாடல் கருத்துடன் தொழிலாளர் குரலாய் ஒலித்தது.புலமைப்பித்தனின் உனது விழியில் எனது பார்வை இனிமை.நான் ஏன் பிறந்தேன்,நான் படும் பாடல் வாலியின் வரிகள். இது தவிர என்னம்மா சின்ன பொண்ணு,தம்பிக்கு ஒரு பாட்டு,தலை வாழை இல்லை போட்டு ஆகிய பாடல்களும் படத்தில் இடம் பெற்றன.
படத்துக்கு இன்னிசை வேந்தர்களான சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர் .அவர்களின் இசைப் பயணத்தில் இப்படம் ஒரு மைல் கல்லாகும்.அட்டகாசமாக இசையமைத்து அசத்தியிருந்தனர் இரட்டையர்கள்.

72ம் வருடம் தான் நடிக்கும் படங்களுக்கு தன்னுடைய ஆஸ்தான

வசனகர்த்தாக்களை மட்டும் பயன்படுத்தாது சிவாஜியின் படங்களுக்கு எழுதும் வசனகர்த்தாக்களையும் எம் ஜி ஆர் பயன்படுத்த தொடங்கியிருந்தார்.அன்னமிட்ட கைக்கு ஏ எல் நாராயணன்,சங்கே முழங்குவிற்கு கே எஸ் கோபாலகிருஷ்ணன்,என்ற வரிசையில் நான் ஏன் பிறந்தேனுக்கு வியட்நாம் வீடு சுந்தரம் வசனங்களை எழுதியிருந்தார்.அவருடைய கை வண்ணத்தில் வசனங்கள் கருத்துடன் அமைந்தன.

செல்வத்தை கொடுக்கும் போதே கவலையையும் சேர்த்து கொடுத்து விடுகிறானே கடவுள் ஏன் , எங்கே மனிதன் தன்னை மறந்துடுவானோ என்ற பயம் தான் காரணம்,உங்களுக்கு தெய்வ பக்தி உண்டா,ஓ இருக்கே ,கோவிலுக்கு போற பழக்கம் ,ஓ போவேனே ,உங்க குலதெய்வம்,என்னுடைய அம்மாதான்,வாழ்க்கையில் உங்க இலட்சியம்,அழுறவங்களை சிரிக்க வைக்கணும்,சிரிக்கிறவங்களை சிந்திக்க வைக்கனும் !

இது போன்ற சுந்தரத்தின் வசனங்கள் மூலம் 1972ல் புதுக் கட்சி தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன் எம் ஜி ஆர் தன்னைப் பற்றி ஒரு கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டிருந்தார்.


எம் ஜி ஆர் ,சிவாஜியின் நடிப்பில் பல வெற்றி படங்களை தயாரித்த ஜி என் வேலுமணி இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.ஏற்கனவே தயாரித்த குடியிருந்த கோயில் வெற்றி பெற்ற போதும் அப்படத்தின் தயாரிப்பில் வேலுமணிக்கும்,எம் ஜி ஆருக்கும் மன கசப்பு ஏற்பட்டிருந்தது.அதன் பின் வேலுமணி தயாரித்து இயக்கிய நம்ம வீட்டு தெய்வம் வெற்றி பெற்ற பின் மீண்டும் எம் ஜி ஆரை அணுகும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது.அதன் பலன்,கே ஆர் விஜயாவின் கணவர் வேலாயுதம் நாயரின் நிதியுதவி மூலம் நான் ஏன் பிறந்தேன் தயாரானது.கே ஆர் விஜயா கதாநாயகியாக நடித்ததில் ஆச்சரியம் இல்லைதானே!

செண்டிமெண்ட் நிறைந்த குடும்பப் படங்களிலும் எம் ஜி ஆரால் நடிக்க முடியும் என்பதை நிரூபிப்பது போல் படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார் எம் கிருஷ்ணன்.நான் ஏன் பிறந்தேன் என்ற ராமச்சந்திரனின் கேள்விக்கு ரசிகர்கள் தியேட்டரில் தங்கள் பதிலை அளித்திருந்தார்கள்!

No comments: