இலங்கைச் செய்திகள்

புதிய வருடத்தில் புதிய கூட்டமைப்பு

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு சகல கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்

சிறுவர்களை போதைக்கு அடிமையாக்க இரகசிய திட்டம்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டுகள்

தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமாக மாற்ற ஆய்வு

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர படகுச் சேவை


 புதிய வருடத்தில் புதிய கூட்டமைப்பு

மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு

நாட்டின் எதிர்கால அரசியலுக்கான புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியை எதிர்வரும் ஜனவரி மாதம் அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியை வழிபடுவதற்காக நேற்று முன்தினம்(14) சென்றிருந்த போதே, அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 

 
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு சகல கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்

த.மு.கூ கண்டி MP வேலுகுமார் வேண்டுகோள்

"உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நிறுவப்படவுள்ள தேசிய கொள்கைத் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்" என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.

பட்டினியால் வாடும் மக்களை அதிலிருந்து மீட்பதும், உணவுப் பஞ்சம் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வது மக்கள் பிரதிநிதிகளின் கடப்பாடாகும். எனவே, இது தொடர்பில் முன்வைக்கப்படும் சட்டமூலங்களுக்கு கட்சி, பேதமின்றி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதவு வழங்க வேண்டும் எனவும் வேலுகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

"நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் பாரிய சமூக நெருக்கடியும் ஏற்பட்டது. இதில் உணவு பற்றாக்குறை அல்லது உணவு பஞ்சமென்பது பிரதான விடயமாகும். மறுபுறத்தில் உரப்பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் உள்நாட்டு உற்பத்தியும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் உணவு பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு என்ற விடயப்பரப்புக்குள் பொருளாதார பாதுகாப்பும் வருகின்றது. அதில் ஓர் அங்கமாக உணவு பாதுகாப்பு என்ற விடயமும் உள்ளடக்கப்பட வேண்டும். இதனை உணர்ந்து தேவையான சட்டங்கள் இயற்றப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளது வரவேற்ககூடிய விடயமாகும். அதேபோல உணவு பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியால் உருவாக்கப்படவுள்ள தேசிய வேலைத்திட்டத்துக்கு எமது தரப்பு யோசனைகளும் முன்வைக்கப்படும். உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களின் போஷாக்கு நிலையை உறுதிப்படுத்துவதில் துல்லியமான தரவுகளைப் பெறுவதற்கு இவ்வேலைத்திட்டம் உதவியாக இருக்குமென நம்புகின்றோம்.

ஏனெனில் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுள் 50 வீதமானோர் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். வறுமையும் பிரதான காரணம். மறுபுறத்தில் சிறார்கள் மத்தியில் மந்தபோஷணை விகிதமும் அதிகரித்துள்ளது. அதன் அபாயத்தை - ஆபத்தை உலக உணவு திட்டம் உரிய தரவுகளுடன் பட்டியலிட்டுள்ளது.

எனவே, மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கு அவசரமாக - அத்தியாவசியமாக உதவிகள் தேவைப்படுகின்றன. அதற்கு இந்த தேசிய வேலைத் திட்டம் வழிவகுக்கும். இதன் காரணமாகவே அதனை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றேன். என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 

சிறுவர்களை போதைக்கு அடிமையாக்க இரகசிய திட்டம்

பெற்றோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு விருந்துபசார வைபவங்கள் நடத்தி ஐஸ் போதைப்பொருளை பல்வேறு தரப்பினருக்கு அறிமுகப்படுத்தும் இரகசியத் திட்டமொன்று போதைப் பொருள் கடத்தல்காரர்களால் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த இரகசிய வேலைத்திட்டத்தின் முதல் இலக்கு பாடசாலை மாணவர்களென தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விருந்தில் புதிய உணவு பானங்களை பருகி பார்க்குமாறு புதிதாக வருபவர்களிடம் ஐஸ் போதை பொருளுக்கு அடிமையான சிறுவர்கள் அல்லது பெரியவர்கள் இதனை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிடைத்துள்ள தகவல்களுக்கமைய, வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சிறுவர்களை அழைத்து வரும்போது மிகவும் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.   நன்றி தினகரன் 


ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டுகள்

யாழில் விசேட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு

 

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் அவதரித்து 200 ஆண்டுகள் நிறைவடையும் மாநாடு – 2022 இன்று (15) ஆரம்பமாகவுள்ளதாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ய.அநிருத்தனன் அறிவித்தார்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் திருவவதாரம் செய்து இருநூறாவது ஜனன ஆண்டிலேயே, இம்மாநாடு நடைபெறுகிறது. இந்து சமய,   கலாசார அலுவல்கள் திணைக்களம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, யாழ்.மாநகரசபை சமய விவகாரக் குழு ஆகியவை இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.இந்நிகழ்வு,

இம்மாதம் 14, 15, 16 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. நாவலர் பெருமான் அவதரித்த – கந்தன் திருவீதியுலா வரும் புனித பதியிலே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு நடத்தப்படவுள்ளது.

நாவலர் பெருமானின் குருபூஜை நன்னாளில் ஆரம்பமாகி, ஜனன தின நாளில் இம்மாநாடு நிறைவு காணவுள்ளது. நிகழ்வுகள் நல்லூர்ப் பதியிலே நாவலர் மணிமண்டபம், நாவலர் கலாசார மண்டபம், ஸ்ரீ துர்க்கா மணிமண்டபம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபம் ஆகிய இடங்களிலே மாநாட்டின் ஆன்மிக அரங்கு, பொது அரங்கு, ஆய்வரங்குகள் நடைபெறவுள்ளன.   நன்றி தினகரன் 


தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமாக மாற்ற ஆய்வு

தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமாமாற்ற தேவையான இரு பக்க ஆய்வை  மேற்கொள்ளுமாறு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தபட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பான கூட்டம் இன்று (15) ஜனாதிபதி தலைமையில்  பதுளையில் மாவட்டத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தின் பின் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானிடம் ஜனாதிபதி  தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமாக மாற்ற இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு தரப்பினரும் கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் போது பதுளை மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர படகுச் சேவை

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய பொழுதுபோக்கு சேவைகள் வழங்கப்படும் வகையில் பத்தரமுல்ல, தியவன்னா ஓயாவில் "தியத்மா" ஓய்வு படகுச் சேவை (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனத்தினால் இந்தப் பொழுதுபோக்கு படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இத்தகைய பொழுதுபோக்கு சேவைகள் உள் நீர்வழிகளில் படகு சேவை தொடங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நேரத்தில் அந்நியச் செலாவணியை அதிகரிக்க இந்த நாட்டுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், அவர்கள் நாட்டிலே தங்கியிருக்கும் காலத்தை அதிகரிப்பதற்கும் உரிய வேலைத்திட்டம் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார். அந்த சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்காக இதுபோன்ற பயணிகள் படகு சேவைகள் மிகவும் முக்கியமானதெனவும் குறிப்பிட்டார்.

இந்த படகு 13 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதுடன் தியத்மா என்றும் பெயரிடப்பட்டது. இதில் சுமார் 30 பேருக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. கலந்துரையாடல்கள், மாநாடுகள், நட்பு சந்திப்புகள் போன்றவற்றை நடத்தும் திறனையும் இது கொண்டுள்ளது.

இந்த முழு குளிரூட்டப்பட்ட படகில் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு 20,000 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொழுது போக்கு படகு சேவை தொடங்கி சில மணி நேரங்களில் இந்தப் படகை 09 பேர் முன்பதிவு செய்துள்ளதாக காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனம் கூறுகிறது.   நன்றி தினகரன் 
No comments: