இலங்கையில் தமிழ் மொழியிலான சினிமா பற்றிய உரையாடல்களை ஏற்படுத்துவதற்கான
தளங்கள் விரிவாக்கப்பட வேண்டிய தேவை அதிகமாக உணரப்படுகின்றது.
இச்சூழலில் காட்சி மொழி காலாண்டு இதழ் பேசப்படவேண்டிய ஒரு இதழாக
வெளிவந்துள்ளது. இலங்கையில் இருந்து உலக சினிமாவிற்காக வெளிவந்திருக்கும்
காட்சிமொழி, சினிமா அரசியலையும் அதன் வடிவங்களையும், வரலாறுகளின்
வளரச்சிப் படிமங்களையும் உரையாடலுக்கான களமாக திறந்துவிட்டுள்ளது.
இந்திய - இலங்கைச் சூழலில் இருந்து
வெளிவரும் பெரும்பாலான
கதாநாயக
வழிபாட்டை
மையப்படுத்திய கமர்ஷியல் சினிமாவின் போக்கும் அதன் பின்னணியில் உள்ள
முதலாளித்துவப் பரப்புரைகளும், விளம்பரங்களும், பெண்ணுடல்
பண்டமாக்கப்படுவதும், பாலியல் சுரண்டல்களும், கிசு கிசு தகவல்களுமே
சினிமாவாக சித்திரிக்கப்பட்டு நமக்குப் பழக்கப்படுத்தப்படுகின்றது.
இது பெரும்பாலும் சினிமாவை ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமே
நம்மிடம் நம்பவைக்க முயற்சிசெய்து கொண்டிருக்கின்றது.
அதற்கு அப்பால் சினிமாவினை கலைவடிவத்தோடு இணைந்த உயிரோட்டமான வெகுசன
சமூக ஊடகமாக வெளிப்படுத்தக் கூடிய வெளிகளை இந் நிலை மறைத்தும் வைத்துள்ளது.
காட்சிமொழி இதழ் அந்த கட்டமைப்புகளை உடைத்து ஒரு சமூக கலை இலக்கிய
சினிமாவிற்கான உரையாடலை நிகழ்த்தக்கூடிய தளமாக உருப்பெற்றிருக்கின்றது.
நான்கு தமிழ் மொழியிலான கட்டுரைகளுடனும் மூன்று மொழிபெயர்ப்புக்
கட்டுரைகளுடனும் வெளிவந்துள்ள இவ் இதழ் , சினிமாவில் வழக்கமாகப் பேசப்படுகின்ற
விடயங்களில் இருந்து விலகிய அல்லது அவற்றிற்கு முரணான வெளிப்படுத்தல்கள்
எந்தளவு தூரம் சினிமாவினை இன்றுவரை ஒரு காத்திரமான கலைப் படைப்பாகவும்
ஊடகமாகவும் கொள்வதற்கு வழிசமைத்துள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன.
முகேஸ் சுப்ரமணியத்தின், "க்ளோஸ்-அப்" கமெரா ஊடாக க்ளோஸ்-அப் காட்சிகளில்
வெளிப்படுத்தப்படும் மனித முகங்கள் மற்றும் உணர்ச்சிகளது எல்லையற்ற தன்மை
சித்தரிக்கப்படுகின்றது.
அத்துடன் ஒரு பாத்திரத்தின் கதைகளை வசனமின்றி பார்வையாளருக்கு எடுத்துச்
செல்லக்கூடிய அக் கலையின் தனித்துவங்களை உலக சினிமா மற்றும் பாலுமகேந்திராவின்
படங்களின் உதாரணங்களோடு வெளிப்படுத்துவது தெளிவான பார்வையைத் தருகிறது.
அஜயன் பாலாவினால் எழுதப்பட்ட " மொகல் ஈ ஆஸம், திரைக்குப் பின்னால்
உள்ள விடயங்களை பார்வையாளர்கள் அல்லது வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணி,
ஒழுக்கம் ( Ethics) மற்றும் உத்தி என்பவற்றின் கையாள்கையுடன்
நீள்கிறது. வாசித்து முடிக்கும் தறுவாயில் , " அட இதுவே ஒரு நல்ல காதல் கதையாகத் தானே
இருக்கிறது இதை சினிமாவாக்கினால் என்ன " என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது.
முருகபூபதி எழுதிய " தமிழ் சினிமாவும் இலக்கிய ரசனையும்“ என்ற
கட்டுரை இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் இடையிலான போக்கு, ஒரு
இலக்கியத்தினை சினிமாவாக்குவதன் கலை, அவற்றிற்கு இடையிலான பலம், பலவீனம்,
சார்புநிலை மற்றும் முரண்நிலைகள் , மூலக்கதையை திரைப்படமாக்கும் போது
எழுதியவருக்கும் திரைப்படமாக்க முயல்பவருக்கும் இடையிலான சமச்சீர் நிலை போன்ற
விடயங்களின் விரிவான பார்வையைத் தந்திருந்தது.
மைக் யெல் எழுதிய "மதம் பிடிக்காத சினிமா" ரஷ்ய இலக்கியங்களது
மொழிபெயர்ப்பு, மதம், சினிமா, அரசியல் எனும் தளங்களில் விரிந்த பார்வையைக்
கொண்டிருந்தாலும், சில அடிப்படைவாத கருத்துக்களையும் உள்வாங்கியிருந்தமை மறுக்க
முடியாதது.
உதாரணமாக , " லேடி
பார்ட்' வேஷம் கட்டி நடித்த ஆண்கள் இருந்த காலம்போய், பாடி பார்ட் காட்டி நடிக்கும்
பெண்கள் நிறைந்த காலமாக இது மாறிவிட்டது ". இங்கு பெண் உடல்கள் ஆணாதிக்க
சிந்தனை கட்டமைப்பில் பண்டமாக்கப்படுவதன் அரசியல் பேசப்படவில்லை என்பதோடு அச்
சிந்தனைக்கு இக் கூற்று வலுச்சேர்த்திருந்தது.
தமிழில் கா. இளம்பாரதி மொழிபெயர்த்திருந்த " மலையாள சினிமாவின்
புரட்சிகர தலைமுறை- Pa backer , இனது கதை சமூக மாற்ற போராட்டங்களுடன் இணைந்து பயணித்த, சினிமா பக்கத்தை
வெளிப்படுத்தியது. கம்யூனிச சித்தாந்தங்களோடு விடுதலைக்கான ஊடகமாக சினிமாவை தன்
வாழ்வியலோடு இணைத்து அதற்காகவே செயற்பட்ட Pa backer ஒரு பேசப்பட வேண்டிய சினிமாவின்
பக்கம்.
தமிழில் மார்க்ஸ் பிரபாஹர் மொழிபெயர்த்த " லூமியர் சகோதரர்கள் "
வரலாற்று ரீதியான சினிமா தொழில் நுட்பங்களது வளர்ச்சி, அதன் பின்னனியில்
காணப்பட்ட தேவை, சவால், போட்டி என்பன தொடர்பாக ஆராய்ந்துள்ளது.
தமிழில் ஹவி மொழிபெயர்த்த "குர்து இன மக்களின் வரலாற்றை பேச
விரும்பினேன்" எனும் 1983 இல் தி மிடில் ஈஸ்ட் மேகசினில்
வெளிவந்த கட்டுரை, சமூகம் சார்ந்த ஒரு
மறுவாசிப்பைத் தந்திருந்தது. ஒரு கொலைக் குற்றவாளியாக குற்றம் நிரூபிக்கப்பட்ட இல்மஸ் குணே சிறையில் இருந்து தப்பி
"தங்கப்பனை" என்ற விருதைப் பெறுகிறார். குர்து இன மக்களின்
வரலாற்றை படமாக்கிய அவர் அடக்குமுறைக்குட்பட்ட தன் இனமக்களின் குரலாக ஒலிக்க
சினிமாவைப் பயன்படுத்தியிருந்தார்.
தொழில் ரீதியானவர்களல்லாதோரைக் கொண்டு தன் படங்களின் கருப்பொருளை கூற
விளைந்துள்ளார். நம் சமூகத்தின் கண்கள் குற்றவாளிகள் என குற்றம்
சுமத்தப்பட்டோரை சமூகத்திலிருந்து விலத்தி அவர்களின் படைப்புகளை
கேள்விக்குள்ளாக்குவது, தனிநபர் விமர்சனம் செய்வது மற்றும் ஒதுக்குவது என்பதன்
மறுவாசிப்பும், படைப்பும் படைப்பாளியின் சொந்த வாழ்வியலும் ஒன்றாகத்
தோன்றினாலும் அவை வேறு வேறாகவே நோக்க வேண்டும் என்பதையும் இக் கட்டுரை
மறுவாசிப்புக்குள்ளாக்குகின்றது.
சிங்காரவேலன் எழுதிய " இவர் படங்களை ஏன் பார்க்க வேண்டும்" எனும்
கட்டுரை , ஹீரோக்களை தேவதூதர்களாக்கும் படங்களை நிராகரிக்க தொடர்ச்சியாக குறைவான
செலவில் படங்களை எடுத்து திரைப்பட துறையில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்ற "
பிரான்ஸ் இயக்குனர்களான Jean Luc Goddard மற்றும் Francois Truffaut பற்றியது.
கமர்ஷியல் சினிமாத் துறையில் மூழ்கியிருக்கும் தமிழ் சினிமாத்துறை
ரசிகர்களை ஆங்காங்கே தோன்றும் சில சிறந்த படைப்புகளை மாத்திரம்
வைத்துக்கொண்டு மாற்றமுடியாது என்பதை எடுத்துரைக்கின்றது.
இதற்குமேலும் ஒரே ஒரு திரைப்படத்தால் மட்டும் எவ்வித மாற்றத்தையும் மனித
சமூகத்தில் கொணர்ந்துவிட முடியாது, அது சினிமாவின் நோக்கமும் அல்ல, அது ஒரு சமூக மாற்ற உரையாடலுக்கான ஒரு கலை
வடிவம்
என்பதையும் இதழ் விரித்துச்செல்கிறது.
என்னைப்போன்ற சினிமாத்துறையை முழுமனே வெறுத்தொதுக்கியவர்களாலுமே வாசிக்க
கூடிய ஒரு இதழ். தமிழில் உலக சினிமாவிற்கான கலந்துரையாடலுக்கான இலக்கியவெளி.
இதனை வெளியிட்டிருக்கும் மாரி_மகேந்திரனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
பிரதிகளுக்கு : மாரி மகேந்திரன் - + 94 76 371 2663
mariemahendran134@gmail.com
----0----
No comments:
Post a Comment