இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் தரப்பில் எத்தனை அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து தோன்றின…? எத்தனை கட்சிகள் காணாமல் போயின…? எத்தனை கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து பின்னர் முரண்பட்டன..? முதலான கேள்விகளுக்கு விடை காணவேண்டுமானால், இலங்கை அரசியல் கட்சிகளின் தோற்றமும் - வளர்ச்சியும் - அழிவும் என்ற நீண்ட பதிவையே எழுதமுடியும்.
சிலவேளை அத்தகைய பதிவுகள், இலங்கை அரசியலை
கற்கவிரும்பும் வரலாற்று மாணவர்களுக்கு ஆய்வுகள் எழுதுவதற்கு உதவக்கூடும்.
ஆனால், அக்கட்சிகள் தேர்தலில்
நிற்கும்போது வழங்கும் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏதும் நன்மை கிடைக்குமா..?
என்றால், இல்லை என்ற பதில்தான் நிச்சயம் !
அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ்
கட்சி 1944 ஆம் ஆண்டு தோன்றியது. இலங்கை தமிழரசுக்கட்சி 1949 ஆம் ஆண்டில் உருவானது. அதாவது முன்னையதிலிருந்து
பிரிந்து வந்த அணி உருவாக்கிய கட்சி.
ஐக்கிய தேசியக்கட்சி 1946 ஆம் ஆண்டு தொடங்கியது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1951 ஆம் ஆண்டு உருவானது. அதாவது முன்னையதிலிருந்து பிரிந்து வந்த அணி உருவாக்கிய
கட்சி.
இவற்றை தோற்றுவித்த தலைவர்கள்
தற்போது இல்லை. இவை தவிர, இடதுசாரிக் கட்சிகள் பலவும் இலங்கையில் தோன்றின.
பிளவுபட்டன. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக
தேய்ந்தும் போனது. அதற்கு சீன – ருஷ்ய சித்தாந்த முரண்பாடுகள் பிரதான காரணமாகத் திகழ்ந்தன.
ஆனால், முன்னைய வலதுசாரி சிங்கள கட்சிகளும் தமிழ்க்கட்சிகளும்
பிளவுபடுவதற்கும் , பிரிந்து தனித்தனி வழிசெல்வதற்கும் எந்தவொரு சித்தாந்தமும் காரணமாக
இருக்கவில்லை.
முழுக்க முழுக்க ஆணவமும்
தன்முனைப்பு அகங்காரமும்தான் காரணம்.
ஜனநாயக வழிமுறைகளில் பிரிந்து
நின்று, கூப்பாடு போட்டுக்கொண்டிருந்த தமிழ்க்கட்சிகளை
ஆயுதம் ஏந்திய விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2001 ஆம் ஆண்டு ஒன்றிணைத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்.
எனினும், ஆனந்தசங்கரியின் தலைமையில் இயங்கிய தமிழர் விடுதலைக்
கூட்டணி அந்த கூட்டமைப்பில் உள்வாங்கப்படவில்லை.
அவர் தனிவழி சென்றார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளின் இயக்கம் மௌனிக்கப்பட்டபோது, லண்டன் பி. பி. சி. வானொலிக்கு பேட்டி வழங்கிய தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அய்யா, “ விவேகமற்றவர்களின் முடிவு “ என்று வாக்குமூலம் அளித்தார்.
அதன்பின்னர் இந்தத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் விவேகமான ( ?
) செயற்பாடுகளையும் உள்குத்து போராட்டங்களையும்
பார்த்து வருகின்றோம்.
சில மாதங்களுக்கு முன்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாகத் தரக்கூடிய திட்டம் தொடர்பாக ரெலோ கட்சி வழங்கிய கடிதம் இதர கூட்டமைப்புக் கட்சிகளிடையே வாதப்பிரதிவாதங்களை எழுப்பியிருந்தது. தற்போது குறிப்பிட்ட மோடிக்கு அனுப்பிய கடிதம் பற்றி பேசுவார் எவருமிலர்.
இது இவ்விதமிருக்க, தேசிய இனப்பிரச்சினைக்குத்
தீர்வு காண்பதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் ஒற்றுமைப்படல் வேண்டும் என்று
மூத்த சிங்கள அரசியல் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டீ சில்வா சொன்னதும், அதற்கு எதிர்வினையாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ.
சுமந்திரனும் ரெலோ கட்சியின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரனும் கருத்துக்களை
வெளியிட்டுள்ளனர்.
“ நீங்கள் ஒற்றுமைப்பட்டால்
தீர்வு நிச்சயம் “ என்று நிமல் சிறிபால டீ சில்வா சொல்கிறார்.
“ உங்கள்
சிங்கள கட்சிகள் இதுவிடயத்தில் ஒற்றுமையாக நிற்காமல் இழுபறி அரசியல் நடத்தியமையால்தான்
தேசிய இனப்பிரச்சினைக்குரிய அர்த்தமுள்ள அரசியல் தீர்வு தொடர்ந்தும் தள்ளிப்போகிறது “ என
சுமந்திரனும் சுரேந்திரனும் ஏக குரலில் சொல்கின்றனர்.
அவ்வாறாயின் சிங்கள கட்சிகளுக்கும்
தமிழ்க்கட்சிகளுக்கும் இன்று தேவைப்படுவது
கருத்தொற்றுமைதான். இது இந்த யுகத்தில்
சாத்தியமா..? என்று கேட்கிறார் ஶ்ரீமான் பொதுஜனன்.
அரசியல் தீர்வு வருமோ, இல்லையோ, அடுத்த பாராளுமன்றத் தேர்தல் வந்துவிடும். அப்போது எத்தனை கட்சிகள் போட்டியிடும் என்பதையும்
பார்த்துவிடலாம்.
இந்தப்பதிவின் தொடக்கத்தில்
குறிப்பிடப்பட்ட அனைத்து அரசியல்கட்சிகளும், அவற்றிலிருந்து பிரிந்த ( ஐக்கிய மக்கள்
சக்தி – பொதுஜன பெரமுன என்ற மொட்டுக்கட்சி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிலிருந்து விலகிச்சென்ற
கட்சிகள் ) அனைத்து கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் களத்தில் நின்று வாக்குப்
பிச்சை கேட்கத்தான் போகின்றன.
இலங்கையில் முதலில் தோன்றிய ஐக்கிய தேசியக்கட்சி உருவான காலத்தில் ( 1946 ஆம் ஆண்டு ) பிறந்திருக்காத அதன் இன்றைய தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில்
விக்கிரமசிங்கா, கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வி கண்டவர். அவரது ஐக்கிய தேசியக்கட்சி
ஒரு ஆசனமும் பெறமுடியாமல் படுதோல்வியடைந்திருந்தது.
எனினும் அவரது மாமனாரும், அரசியல் குருவுமான ஜே. ஆர். ஜெயவர்தனாவின் புண்ணியத்தினால்,
( ஜே. ஆர். அறிமுகப்படுத்திய விகிதாசார தேர்தல் முறை – தேசியப்பட்டியல் ) பாராளுமன்றம் வந்து, பிரதமராகி, ஜனாதிபதியுமாகிவிட்டார்.
இனி அவருக்குரிய முக்கிய
நிகழ்ச்சி நிரலானது , அவரது கட்சியை நிமிர்த்தி எடுக்கவேண்டியதாகவே அமையும். அதற்காக
அவர் இரவு பகலாக Home Work செய்யவேண்டியிருக்கிறது.
அதேவேளை, அடுத்துவரும் பொதுத்தேர்தலில் யார் யாரை நிறுத்தவேண்டும்…?
என்பது பற்றிய நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும்
Home Work
இல், அமைச்சர்
நிமால் சிறிபால டீ சில்வா ஒற்றுமைப்படுங்கள்
எனக்கூறும் தமிழ் கட்சிகள் ஈடுபடவேண்டியிருக்கிறது.
மொத்தத்தில் அனைத்து அரசியல்
கட்சிகளும் அடுத்து வரவிருக்கும் பொதுத்தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில்தான்
இனிமேல் கவனம் செலுத்தும்.
அவற்றுக்கு வாக்களிக்கப்போகும்
மக்கள் எத்தகைய நிகழ்ச்சி நிரலை முன்வைப்பார்கள்..? காலிமுகத்திடலில் தன்னெழுச்சியாக
ஒன்றிணைந்த மக்களும் மீண்டும் ஒன்றிணைய வேண்டிய காலம் கனியலாம்.
---0---
No comments:
Post a Comment