உலகச் செய்திகள்

பதற்றத்திற்கு இடையே ஷி-ஜோ பைடன் சந்திப்பு

மன்னரின் மீது முட்டை வீசிய இளைஞர் கைது

பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து 19 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் முன்னேற்றம்

வடகொரிய அச்சுறுத்தல்: ஜப்பான் போர் ஒத்திகை

அமெரிக்க தேர்தலில் கடும் போட்டி

தலிபான்களை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம்

கார்பன் மாசு இந்த ஆண்டில் வரலாறு காணாத அதிகரிப்பு


பதற்றத்திற்கு இடையே ஷி-ஜோ பைடன் சந்திப்பு

கடந்த ஆண்டு ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் முதல் முறையாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்னை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார். வரும் திங்கட்கிழமை நடைபெறும் இந்த சந்திப்பில் தாய்வான் விவகாரம் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த இரு வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையிலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

சுயாட்சி இடம்பெறும் தாய்வானுக்கு சீனா உரிமை கோரி வருவதோடு அது ஆசியாவில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா சீனாவுக்கான கணினி சிப் தொழிநுட்ப அணுகலை கட்டுப்படுத்தி வருகிறது. தொலைபேசிகள் தொடக்கம் மின்சார கார் வரை அனைத்தின் வர்த்தகம் மற்றும் உற்பத்திக்கு இந்தத் தொழில்நுட்பம் அவசியம் என்ற நிலையில் சீன ஏற்றுமதிப் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

அண்மைக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலில் அமெரிக்காவின் ஆசிய கூட்டாளிகளான இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இரு தலைவர்களின் சந்திப்பை உன்னிப்பாக அவதானிக்கும்.

ஜி20 மாநாட்டை முன்னிட்டு பாலி நகரில் வரும் திங்கட்கிழமை (14) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

கொவிட் பெருந்தொற்றின்போது ஷி பெரும்பாலான காலத்தை சீனாவிலேயே கழித்த நிலையில் அண்மையிலேயே வெளிநாட்டு பயணங்களை ஆரம்பித்தார்.

“தாய்வான் பற்றி நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்பதில் உறுதியாக உள்ளேன். எம் இரு தரப்பினரதும் வரம்புகள் என்ன என்பது பற்றி இருவரும் பேச்சுவார்த்தையில் நிர்ணயிக்க நான் விரும்புகிறேன்” என்று வெள்ளை மாளிகையில் கடந்த வியாழக்கிழமை (10) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.    நன்றி தினகரன்    


மன்னரின் மீது முட்டை வீசிய இளைஞர் கைது

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் அவரது துணைவியாரான ராணி மீது முட்டை வீசிய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யோர்க் நகரில் மன்னருக்கு இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வின்போதே கடந்த புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முட்டை வீசிய அந்த இளைஞன், “இந்த நாடு அடிமைகளின் இரத்தத்தால் கட்டியெழுப்பப்பட்டது” என்று கூச்சலிட்டார்.

யோர்க் பல்கலைக்கழக மாணவனான அந்த இளைஞர் பொது ஒழுங்குக்கு எதிராக செயற்பட்ட சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்த இளைஞர் பல முட்டைகளை மன்னரை நோக்கி வீசியபோதும் அதில் ஒன்றுகூட மன்னர் மீது படவில்லை. உடனடியாக மன்னர் தம்பதியினர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.    நன்றி தினகரன் 

பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து 19 பேர் உயிரிழப்பு

தன்சானியாவின் ஏரிக்கரை நகரான புகாபோவில் தரையிறங்க முயன்ற பயணிகள் விமானம் ஒன்று விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

43 பேருடன் சென்ற விமானத்தில் 24 பேர் உயிர்தப்பியதாக அந்த விமான சேவையான பிரசிசியோன் ஏயார் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் உயிர் தப்பிய இரு விமானிகளாலும் விமானி அறையில் இருந்து உள்ளூர் அதிகாரிகளை தொடர்புகொண்ட நிலையில் அதனைத் தொடர்ந்து அவர்கள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

புகோபா விமானநிலை ஓடுபாதையின் முடிவிலுள்ள கரைக்கு அருகிலேயே விமானம் மோதியுள்ளது.

மீட்பாளர்கள் நீரில் போராடி விமானத்துக்குள் இருந்த சிலரை காப்பற்றியுள்ளனர்.

மோசமான காலநிலை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளது. அவசரப் பிரிவு பணியாளர்கள் விமானத்தை கயிறு கட்டி கரையை நோக்கி இழுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விமானத்தின் உடலின் பெரும் பகுதி தண்ணீரில் இருந்து மேலெழுந்த வண்ணம் காணப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற உடன் விமானத்தின் சிறகுப் பகுதி மாத்திரே வெளியே தெரியும்படி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் முன்னேற்றம்

உக்ரைனின் தெற்கில் இருக்கும் ஹெர்சன் நகரைவிட்டு ரஷ்யப் படை வெளியேறுவதாக அறிவித்த பின்னர் உக்ரைன் அங்கு தொடர்ந்து வெற்றிபெறுவதாகக் கூறியுள்ளது.

ஹெர்சன் பெருநகருக்குச் சுமார் ஐம்பது கிலோமீற்றர் வடக்கே இருக்கும் ஸ்னியூரிவ்கா நகரைக் கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் தெரிவித்தது.

ஹெர்சன் நகரைவிட்டு ரஷ்யா வெளியேறுவதாகக் கூறுவது ஒரு போர்த் தந்திரமாகவும் இருக்கலாம் என்று உக்ரைனிய அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே இதுவரை போரில் இருநூறு ஆயிரம் ராணுவத்தினர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உயர்தளபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி 24 முதல் இதுவரை தரப்புக்கு நூறாயிரம் பேர் பலியாகி இருப்பதாக அவர் தெரிவத்துள்ளார்.

ஆனால் ரஷ்யாவும் உக்ரைனும் உயிரிழப்பு விபரத்தை இதுவரை வெளியிடவில்லை.   நன்றி தினகரன் 

வடகொரிய அச்சுறுத்தல்: ஜப்பான் போர் ஒத்திகை

வட கொரியா பலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதை அடுத்து ஜப்பானின் கடல்சார் பாதுகாப்புப் படை நடத்திய சர்வதேச கடற்படை மீளாய்வு போர் ஒத்திகையில் தென் கொரியாவும் பங்கேற்றுள்ளது.

அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட 12 நாடுகளில் இருந்து 18 கப்பல்கள் இதில் பங்கேற்றதாகவும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் மொத்தம் ஆறு போர் விமானங்கள் இந்த மீளாய்வு நடவடிக்கையில் இணைந்ததாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.

கனகாமா மாகாணத்திற்கு அப்பால் சக்மா விரிகுடாவில் பெரும் எண்ணிக்கையான கப்பல்கள் மற்றும் விமானங்கள் இணைந்ததோடு ஜப்பான் பிரதமர் புமியோ கஷிடா அவைகளை மேற்பார்வையிட்டார்.   நன்றி தினகரன் 


அமெரிக்க தேர்தலில் கடும் போட்டி

அமெரிக்க இடைத்தவணைத் தேர்தலில், செனட் சபைக்குக் கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் இறுதியாக வெளியான முடிவுகளின்படி செனட் சபையில் குடியரசுக் கட்சி ஏற்கனவே உள்ள 29 இடங்களுடன் 18 இடங்களை வென்றுள்ளது. அதனிடம் இப்போது 47 இடங்கள் உள்ளன.

ஜனநாயகக் கட்சி, ஏற்கனவே உள்ள 36 இடங்களுடன் தற்போது 12 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதற்கு இப்போது செனட் சபையில் 48 இடங்கள் உள்ளன.

இடைத்தவணைத் தேர்தலுக்கு முன்னர் செனட் சபை ஜனநாயகக் கட்சியின் வசம் இருந்தது.

தற்போது போட்டி நடைபெறும் 35 இடங்களில் குடியரசுக் கட்சியின் கரம் மேலோங்கினால் ஜனாதிபதி ஜோ பைடனின் திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் போகும். அது 2024ஆம் ஆண்டு வரக்கூடிய அடுத்த ஜனாதிபதி தேர்தலைப் பாதிக்கக்கூடும்.

மக்களவையைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 435 இடங்களுக்குப் போட்டி நடைபெறுகிறது. அவற்றில் 172 இடங்கள் ஜனநாயக் கட்சி வசம் சென்றுள்ளன. 197 இடங்களைப் பிடித்து குடியரசுக் கட்சி முன்னணியில் இருப்பதாக கடைசி முடிவுகள் கூறுகின்றன.

மக்களவை, செனட் சபையோடு சில மாநிலங்களின் ஆளுநர்கள், மாநிலச் செயலாளர்கள், மாநிலத் தலைமைச் சட்ட அதிகாரிகளையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.   நன்றி தினகரன் 

தலிபான்களை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்பதற்கும் வேலைக்குச் செல்வதற்கும் தலிபான்களால் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக காபுலில் பெண்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

பெண்கள் மீதான தடைகளால் நாட்டில் வறுமை அதிகரித்திருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த உள்துறை அமைச்சின் முன்னாள் ஊழியர் ஒருவர், “நாம் எதிர்கொண்டுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் கவனம் செலுத்தி எம்மைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.   நன்றி தினகரன் 


கார்பன் மாசு இந்த ஆண்டில் வரலாறு காணாத அதிகரிப்பு

அபாயம் பற்றி விஞ்ஞானிகள் எச்சரிக்கை

காலநிலை மாற்றத்திற்கு பிரதான காரணியான புதைபடிவ எரிபொருட்களில் இருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வு ஒரு வீதம் அதிகரித்து இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா காலநிலை மாநாடு எகிப்தில் நடைபெற்று வரும் நிலையில் உலக கார்பன் பட்ஜட் அறிக்கை நேற்று (11) வெளியிடப்பட்டது. அதில் கொரோனா தொற்றுக்குப் பின்னர் போக்குவரத்துகள் மீண்டும் வழமைக்கு திரும்பிய நிலையில் எண்ணெய், எரிபொருளில் இருந்து வெளியாகும் உமிழ்வுகள் அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு வீதத்துக்கு மேற்பட்ட அதிகரிப்பாக இருக்கக் கூடும் என்றும் 2014இல் உச்சம் பெற்றதாக சிலர் கருதிய நிலக்கரி உமிழ்வுகள் சாதனை அளவுக்கு அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“கொவிட்டில் இருந்து மீளும் நிலையில் எண்ணெய் அதிகம் இயக்கப்படுவதோடு உக்ரைன் நிகழ்வுகளால் நிலக்கரி மற்றும் எரிவாயு அதிகம் இயக்கப்படுகிறது” என்று நோர்வேயின் காலநிலை மாற்ற ஆய்வு நிறுவன ஆய்வுப் பணிப்பாளர் கிளென் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

காடழிப்பு உட்பட அனைத்து மூலங்களாலும் வெளிப்படும் உலகளாவிய கார்பன் உமிழ்வு 40.6 பில்லியன் தொன்களை அடையவுள்ளது. இது 2019இன் சாதனை அளவை விட குறைவு என்று 100க்கும் அதிகமான விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில் 90 வீதமானது புதைபடிவ எரிபொருள்களை எரிப்பதன் காரணமாகவே உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய போக்குடன் தொடர்ச்சியான அதிகரிப்பு கவலை அளிப்பதாக உள்ளது என்று தரவுகள் காட்டுவதாக இந்த ஆய்வு அறிக்கையின் இணை ஆசிரியரான கிளென் பீட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

2015 இல் கைச்சாத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின்போது இருந்ததை விடவும் உமிழ்வுகள் ஐந்து வீதத்திற்கு மேல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாரிஸ் உடன்படிக்கையில் உலக வெப்பமாதலை தொழில்மயமாக்கலுக்கு முந்திய நிலைக்கு 1.5 பாகை செல்சியஸுக்குக் கீழ் வைத்திருக்க இணக்கம் எட்டப்பட்டது. எனினும் தற்போதைய தரவுகளின்படி உடன்படிக்கைக்கு அமைய உமிழ்வுகளை வேகமாகக் குறைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்த வரம்புக்கு மேல் வெப்பம் அதிகரிப்பது காலநிலை அமைப்பில் ஆபத்தான திருப்பமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

தற்போது வெப்பமயமாதல் 1.2 பாகையான இருக்கும் நிலையில் ஏற்கனவே வெப்ப அலைகள், வரட்சி, பெரும் வெள்ளங்கள் மற்றும் வெப்ப மண்டலப் புயல்களால் பேரழிவுகள் இடம்பெற்று வருகின்றன.   நன்றி தினகரன் 

No comments: