ராமன் தேடிய சீதை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 1971ம் ஆண்டு ஜெயலலிதாவின் நடிப்பில் அவர் சிவாஜியுடன் ஜோடி


சேர்ந்து நடித்த பாதுகாப்பு படம் ஏ பீம்சிங் டைரக்ட்ஷனில் வெளிவந்தது.இந்தப் படத்தில் ஜெயலலிதா வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார்.வாழ வழியின்றி தத்தளிக்கும் பெண்ணாக ஒரு படகில் ஏறும் அவர் படகிற்கு சொந்தக்காரர்களான தந்தைக்கும்,இரண்டு தனயங்ககுக்கும் தான் யார் என்பது பற்றி முரண்பாடான தகவல்களை வழங்குவார்.ஆனால் அவர் யார் என்பது இறுதியிலேயே தெரிய வரும்.


இந்தப் படம் வெளிவந்த அடுத்த ஆண்டே அவர் நடிப்பில் ராமன்

தேடிய சீதை படம் திரைக்கு வந்தது.எம் ஜி ஆருடன் இப் படத்தில் அவர் நடித்திருந்தார்.இதில் மூன்று விதமான வேடங்களில் வரும் அவர் கதாநாயகனுக்கு தான் யார் என்பதை மூன்று விதமாக சொல்லுவார்.ஆனால் கடைசியிலே அவர் யார் என்ற உண்மை வெளியாகும்.இவ்வாறு ஓராண்டு இடைவெளியில் சிவாஜி,எம் ஜி ஆர் என்று இருவருடனும் ஒரே சாயலைக் கொண்ட கதையில் நடித்திருந்தார் ஜெயலலிதா.

இரண்டு படத்தின் கதையும் அவரை மையப்படுத்தியே அமைந்ததால் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு அவருக்கு கிட்டியது.கிட்டியதை அவர் தட்டி விடவில்லை.சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். படம் முழுதும் வித வித ஆடை அலங்காரத்துடன் ஜெயலலிதா தோன்றுகிறார்.

குலமகள் சீதாவாகவும் நடனப் பெண் ரம்பாவாகவும் வரும் ஜெயலலிதா காபரே டான்சராக வந்து படு கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.முக்கால் நிர்வாணமான அந்த பாடல் காட்சி சென்சார் போர்ட் அங்கத்தவர்களையும் கவர்ந்து விட்டது போலும்!

கோடிஸ்வரனான ராமனுக்கு சித்தப்பாவை தவிர சொந்தம் என்று சொல்ல யாருமில்லை.திருமணம் செய்யும் படி சித்தப்பா வற்புறத்தும் போதெல்லாம் அதனை தட்டிக் கழிக்கும் ராமன் எதிர்பாராத விதமாக சீதாவை சந்தித்து அவளை மணக்க விரும்புகிறான்.பெரியோர்கள் அவனுக்கு சொல்லியிருக்கும் ஆறு குணங்களையம் கொண்ட பெண் சீதா தான் என்று அவன் நம்ப , தீ விபத்தில் சீதா இறந்து விட்டதாக கேள்விப்படுகிறேன்.அதிர்ச்சியும்,சோகமும் அவனை வாட்டுகிறது.ஆனால் சீதாவின் உருவத்தை கொண்ட நடனக்காரி ரம்பா,சித்த சுவாதீனமற்ற ராணி,பேரே டான்ஸர் என்று மூன்று பேரை ராமன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்கிறான்.அவன் மனதுக்கு பிடித்த ஆறு குணங்கள் கொண்ட ராமன் தேடிய சீதை கிடைத்தாளா என்பதே கதை!


படத்தின் கதையை மா ரா எழுதியிருந்தார். அவர் ஒரு வசனகர்த்தாவாக இருந்த போதும் படத்திற்கான வசனங்களை சொர்ணம் எழுதியிருந்தார்.குறிப்பிடும் படியாக இல்லாவிட்டாலும் ரசிக்கும் படி வசனங்கள் இருந்தன.படத்திற்கான ஹை லைட் பாடல்கள்தான்.கண்ணதாசனின் திருவாளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ ,என் உள்ளம் உந்தன் ஆராதனை,நல்லது கண்ணே கனவு பலித்தது நன்றி உனக்கு ஆகிய பாடல்கள் பிரபலமாகின.வாலியும் தன் பங்கிற்கு மூன்று பாடல்களை எழுதினார்.பாடல்களில் மட்டுமன்றி பின்னணி இசையிலும் தன் கைவரிசையை காட்டியிருந்தார் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்.

பெரும்பாலும் ஏழையாகவே படங்களில் தோன்றும் எம் ஜி ஆர் இந்தப்

படத்தில் கோடீஸ்வரராக தோன்றி வித விதமான ஆடைகள் அணிந்து ஸ்டைலாக காட்சியளித்தார்.மேக் அப் மேன்
பீதாம்பரம் பாராட்டுக்குரியவர். அதே போல் ஆடம்பரமான செட் போட்ட செல்வராஜுக்கும் சபாஷ்.

படத்தை விறுவிறுப்பாக்கியதில் நாகேஷ்,ராமபிரபா,ஓ ஏ கே தேவர் மூவரும் தோன்றும் நகைச்சுவை காட்சிகள் ஜோர். மனோரமா படத்தில் இருக்கிறார், ஆனால் அவருக்கு ஜோடி நம்பியார்.இவர்களுடன் வி கே ராமசாமி,ஜி சகுந்தலா,வி எஸ் ராகவன்,எஸ் ராமராவ்,சந்திரகாந்தா,கே கண்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர்.மொட்டைத்தலையுடன் எண்ணெய் மினுங்கும் முகத்துடன் வரும் அசோகன் மிரட்டுகிறார்,எம் ஜி ஆருடன் ஆக்ரோஷயமாக சண்டையும் போடுகிறார்.


படத்தின் மற்றும் ஒரு பிளஸ் பாயிண்ட் எழில் ததும்பும் காஷ்மீர்

காட்சிகள்.அவற்றை கலரில் தன் கமரா மூலம் பருகியிருந்தார் ஒளிப்பதிவாளர் வி ராமமூர்த்தி.ஏற்கனவே தனது ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் ப நீலகண்டன் டைரக்ஷனில் மாட்டுக்கார வேலன் படத்தை தயாரித்து வெற்றி கண்ட தயாரிப்பாளர் கனகசபை செட்டியார் ராமன் தேடிய சீதை படத்தையும் அதே நீலகண்டன் இயக்கத்தில் தயாரித்து வெற்றி கண்டார். தமிழகத்திலும்,இலங்கையிலும் படம் சக்கை போடு போட்டது!

No comments: