Counting & Cracking - போர் தீண்டிய ஈழத்துச் சமூகத்தின் குரல்
http://www.madathuvaasal.com/
அந்தப் படைப்பு கொடுத்த நம்பிக்கையில், சக்தி சக்திதரன் அரங்கேற்றும் “காடும் கடலும்" அரங்கியலுக்காக முன்னோட்ட நிகழ்வுக்கே (Preview session) செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டது. அந்த வகையில் கடந்த நவம்பர் 12 ஆம் திகதி Belvoir St Theatre இல் நிகழ்ந்த முதல் நாள் அரங்கில் கலந்து கொண்டேன். தமிழ்ச் சமூகத்தில் இருந்து அந்நியப்பட்ட சூழலில் 99.9 வீதமான வெள்ளையின சமூகத்தினர் புடை சூழ மீண்டுமொரு இலங்கை இனப்பிரச்சனையை மூலாதாரமாகக் கொண்ட படைப்பைப் பார்க்கும் ஆவல் அந்த நிமிடம் இன்னும் பன்மடங்கு அதிகரித்தது. வட்டக்களரி அமைப்பில் எந்த விதமான சோடனைகளும் அற்ற ஒரு திறந்த தரை மட்டும் முன்னால் இருக்க, அதைச் சூழ அரங்க அமைப்பு இருந்தது. இரண்டாவது வரிசையில் மிக அண்மித்ததாக ஒரு இடத்தையும் எடுத்ததால் இன்னும் வசதியாகிப் போய் விட்டது.
தன்னுடைய கடந்த படைப்பில் 1956, 1977, 1983 மற்றும் 2004 ஆகிய காலப்பகுதிகளை வைத்து மூன்று தலைமுறைத் தமிழரின் வாழ்வியலும் அவர்கள் சந்திக்கும் அரசியல் நெருக்கடிகளையும் காட்டியிருந்தாலும் இலங்கையில் வாழும் சக இனங்கள் இரண்டுமே இந்த இனப் பிரச்சனையால் எவ்விதம் அல்லற்படுகின்றன என்பதையும் கோடிட்டுக் காட்டியிருந்த கதாசிரியருமான சக்திதரன் தன்னோடு முன்னர் இணைந்த இயக்குநர் Eamon Flack உடன் மீண்டும் இணைந்து “காடும் கடலும்” படைப்பை வழங்கியிருக்கிறார்.
இம்முறை 1995 ஆம் ஆண்டு ஜூலை 9 இல் யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) ஆலயத்தின் மீது இலங்கை விமானப்படை நிகழ்த்திய விமானக் குண்டுத்தாக்குதலோடு தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டதாகக் கொள்ளப்படும் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் வரையான கால அளவைக் கொண்டு “காடும் கடலும்” அமைந்திருக்கிறது.
மங்கல் இருள் சூழ்ந்த அரங்கில் தட்டுத்தடுமாறி வரும் கண் கட்டப்பட்ட அந்தத் தாய்க்குச் செய்தி ஒன்று வருகிறது.
அப்படியே காட்சி கடந்த காலத்துக்குத் தாவுகிறது.
எந்தவிதமான கவலைகளுமற்ற, ரியூசன் படிப்பும், கிறிக்கெட்டும், சினேகதரோடும், சகோதரங்களோடும் கொட்டமடித்து வாழும் அந்த அழகியலைக் காட்டும் ஆரம்பத்தைக் கண் முன்னே ஒரு ஓட்டமாகக் காட்டிய போது சிலிர்த்துக் கண் கலங்குமளவுக்கு நெகிழ வைத்து விட்டது.
முன்னால் இருந்த அந்த அரங்கின் வட்டம் சுழலாகப் போய்க் கொண்டிருக்க, நடிகர்கள் நடந்தும், ஓடியும் உரையாடலையும், காட்சித் தளங்களையும் கடத்தும் புதுமையானதொரு அனுபவம்.
தன் மகனைத் தேடும் “கெளரி” என்ற தாயாக புகழ் பூத்த நடனக் கலைஞர் ஆனந்தவல்லி, Emma Harvie, Jacob Rajan, Rajan Velu, Biman Wimalaratne இவர்களோடு
Counting & Cracking இல் நடித்த வகையில் சிட்னி அரங்குக்கு அறிமுகமான
Prakash Belawadi மற்றும், Nadie Kammallaweer இவர்களோடு காளீஸ்வரி என்ற பண்பட்ட நடிகையும் சேர்ந்து பாத்திரப் படைப்புகளாக இயங்குகிறார்கள். ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களில் நடிக்கவும் செய்கிறார்கள். ஆனால் எல்லோரிடமும் காணும் பொதுவானதொரு அம்சம் “நேர்த்தியான நடிப்பு”. அந்தந்தப் பாத்திரப் படைப்புகளாகவே இயங்கி நிற்கின்றார்கள்.
விடுதலைப் புலிகளின் சீருடையில் வரும் அகிலன், பின்னர் இராணுவச் சிப்பாயாக வரும் போது முன்பே அகிலனாகவே மனதில் இருந்தவர் இன்னொரு பாத்திரமாக மாறியதை உள்வாங்கச் சில நிமிடம் பிடித்தது.
மகாபாரதத்தின் காந்தாரி போலத் தன் மகனைக் காணாத உலகத்தை நான் காணப்போவதில்லை என்று கண் கட்டி நிற்கும் தாய்ப் பாத்திரமாக ஆனந்தவல்லி தன் மகனின் இயக்கத்தில் நடித்திருக்கிறார்.
காட்சிகள் மாறும் போது அவற்றைப் பிரதிபலிக்கும் பொருட்களை அவர்களே காவித் திரிந்தும், நகர்த்தியும் அந்தக் கதையோட்டத்தைத் தொய்வற்றுப் பயணிக்கவும் ஏதுவாகின்றார்கள்.
இலங்கை இனப்பிரச்சனையை மையப்படுத்திய ஒரு படைப்பில் அந்தச் சூழலின் பின்னணி இல்லாதவர்களும், படைப்புக்கு
உயிர்கொடுத்து அச்சொட்டாகக் காட்ட முடியும் என்பதை இவர்களின் நடிப்பு யதார்த்தமாகப் பிரதிபலித்தது.
அளவான இசையமைப்பும், பாவேந்தர் பாரதிதாசனின் துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?” பாடலைப் பயன்படுத்தியதும் வெகு சிறப்பு.
ஈழத்தின் கதைப் பின்புலத்தையும், இடங்களையும் இலகுவாகவும், எளிமையாகவும் மாற்றுச் சமூகத்திடம் காட்டிய விதமும் இந்தப் படைப்புக்கான உழைப்பையும், நுணுக்கத்தையும் காட்டுகின்றது.
“காடும் கடலும்” நாடகம் குறித்த விமர்சனப் பார்வையையும் இங்கே பதிவு செய்ய வேண்டியது மிக அவசியமானது.
இலங்கை இனப்பிரச்சனையின் ஒவ்வொரு காலப்பகுதி வரலாற்றுக்கும் இரு முகங்கள் உண்டு, மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு படைப்பாளி தன்னை நடுநிலையானவராகக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவையை அப்பட்டமாகக் காட்டி விட்டாரோ என்பது போல ஒவ்வொன்றுக்கும் சமனும் எதிருமான பார்வையை முன்வைத்திருப்பது ஒரு கட்டத்தில் இந்தப் படைப்பினை இனங்களுக்கான சமரச முயற்சியின் பிரச்சாரமோ என்பது போன்ற ஐயப்பட்டை எழுப்பி நிற்கின்றது.
நவாலித் தேவாலயம் மீதான தாக்குதலுக்கு முன்னான உரையாடலில் கடற்படைப் படகைப் புலிகள் தாக்கியதான செய்தியும், அதன் விளைவையே அரசாங்கத்தின் தாக்குதலாக எதிர்பார்ப்பது போன்றதொரு காட்சியில் தொடங்கி இந்த மாதிரியான இருபக்க நிலைப்பாடுகளையும் விமர்சித்துக் கொண்டே போவது தான் நேர்மைத்தன்மையை உரசிப்பார்க்கிறது. தமிழரது போராட்டத்தின் நியாயப்பாடுகளை விளக்கும் பிரச்சாரப் படைப்பை இங்கு எதிர்பார்க்கவில்லை. ஆனால் நம்முடைய செயற்பாட்டுக்கான எதிர்வினையைத் தான் அனுபவிக்கிறோம் என்பது மாதிரியானதொரு கண்ணோட்டத்தை இந்தப் படைப்பு விதைக்கும் அபாயம் உள்ளது.
வடபகுதியில் இருந்து முஸ்லீம் சமூகத்தை வெளியேற்றிய பின்னர் நவாலித் தாக்குதலில் முஸ்லீஸ் சமூகத்து நண்பர் குடும்பம் கொல்லப்படுவது போலவும், அந்த நண்பர் வர்த்தக நோக்கில் யாழ்ப்பாணம் வந்தததாகவும் சொல்லப்படும் புனைவும் கூட ஒரு குழப்ப நிலைக்கு இட்டுச் செல்கிறது. 1995 ஆம் ஆண்டு வரை தாயகத்தில் இருந்த அனுபவத்தில் முஸ்லீம்களின் வெளியேற்றத்துக்குப் பின் அவர்கள் மீளவும் வியாபார நோக்கில் யாழ்ப்பாணத்துக்கு வரும் வழிகள் அடைபட்டே இருந்தன. அத்தோடு நவாலித் தேவாலயத் தாக்குதலில் கொல்லப்பட்ட 65 பொதுமக்கள் பெயர்களும் வெளிப்படையாக இருக்கும் நிலையில் இவ்வாறான வலிந்திழுத்தல் கற்பனை, குறித்த யதார்த்த நிலையை வலுவிழக்க வைக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் போராளி இயக்கங்கள் நிலைபெற்ற காலத்தில், குறிப்பாக விடுதலைப்புலிகளின் 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னான தீவிர ஆள் சேர்ப்பு நடவடிக்கை என்பது, ரியூசன் சென்டர்கள், சன சமூக நிலையங்கள் வழியே நிகழ்ந்த பிரச்சாரக் கூட்டங்களாகவே அமைந்திருந்தன. தனிப்பட்ட மூளைச்சலவை என்பதைக் கண்கூடாகக் கண்டதுமில்லை. இவ்விதமிருக்க அகிலன் என்ற பாத்திரத்தை விடுதலைப்புலிப் போராளி மூளைச் சலவை செய்வது போன்றதொரு சம்பவம் வருகிறது.
இன்னொன்று இயக்கத்துக்குப் போனவர்களைத் தேடிச் செல்லும் தாய், தந்தைமாரைத் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பதும் அதீதமானதொரு கற்பனை. இயக்கத்துக்குச் சென்ற இளைஞனையோ, யுவதியையோ தேடி உள்ளூர் முகாம்களுக்குப் போகும் போது அவர்கள் அங்கே இருக்க மாட்டார்கள். தேடிக் களைத்து விட்டுத் திரும்பும் பெற்றோர் உண்டு. ஒரு சில மாதங்களில் போராளியாகப் போனவர் தன் வீட்டுக் கதவைத் தட்டுவார். இங்கே 1995 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை தன் மகனைத் தேடும் தாயார் கெளரியாக அமைவது இந்த மாதிரியான புனைவில் மட்டுமே சாத்தியாமானது.
2002 பெப்ரவரி 22 ஆம் திகதி ரணில் அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புகளுக்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ந்த பின்னர் வன்னியில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சுதந்திரமாகப் போராளிகள் வந்து தம் குடும்பத்தையும் பார்த்து விட்டுப் போனார்கள் என்பதும் வரலாறு. ஈழப் போராட்ட வரலாற்றில் எந்த இயக்கத்துப் போராளிகளையும், குடும்பத்தோடு ஆண்டாண்டுகாலமாக தொடர்பில் இருக்கக் கூடாது என்பது வரலாற்றை மீறிய செய்தி. அதை இந்தப் படைப்பின் கதைக்களமாகக் கொண்டிருப்பதே பெரும் சறுக்கல்.
தன்னுடைய மகன் போராட்டத்தில் இணைந்ததால் குடும்பத்தோடு வெளிநாட்டுக்குப் புலம் பெயராமல், தாயகத்தில் தனியானாக இருந்த தாய்மார்கள் உண்டு, அது வேறல்லவா?
உண்மையில் “காடும் கடலும்” குறித்த விளம்பரங்களைக் கண்ட
போது “காணாமல் போன தன் மகனைத் தேடும் தாய்” என்ற கருது பொருளில் அமைந்த போது அதன் ஆழம் இன்னும் வீரியமாகத் தென்பட்டது.
மாதக் கணக்கில் வீதியில் நின்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தம் பிள்ளைகளைத் தேடும் தாய்மார் ஒருவரின் கதையாக “காடும் கடலும்” அமைந்திருந்தால் அதன் வீரியம் இன்னும் ஆழமாகவும், மெய்த்தன்மையோடும் அமைந்திருக்கும்.
“காடும் கடலும்” நிறைய விடையங்களைத் திணிக்க வேண்டும் என்ற ஆவலில் மூலவோட்டத்தைத் தவறவிட்டது போல இன்னும் சில உதாரணங்களைப் பார்க்க முடியும்.
தன்னுடைய மனைவி ஊரில் மகனைத் தேடிக் கொண்டிருக்க, சிவா என்ற குடும்பத்தலைவர் தன்னுடைய இன்னொரு மகளோடு சிட்னிக்குப் புறப்படுவதாக அமைந்ததன் பின்னரான காட்சியமைப்புகள் நேரவிரயமாகவே அமைந்தன.
சிட்னியில் மகளுக்கும், தந்தைக்குமிடையிலான சந்திப்பில் “நேர் பாலீர்ப்பு (lesbian) குறித்த உரையாடல் அரங்கத்தில் சிரிப்பைத் தூவினாலும் இந்தக் காட்சியை அப்படியே கடாசி விட்டாலும் பாதகமில்லை என்பது போன்ற பொருத்தமற்றதாகவே பட்டது.
அவுஸ்திரேலியாவுக்குத் தன் தந்தையோடு புலம் பெயரும் லஷ்மியும், 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மார்ட்டின் ப்ளேஸ் இல் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்வதாகவும், சிட்னியில் ஒரு செயற்பாட்டாளராகக் காட்டிக் கொள்வதும் கூட
அதுபோல சிட்னியில் தன் முஸ்லீம் நண்பரிடம் மன்னிப்புக் கேட்கும் சமரசப் பேச்சும் முன் சொன்ன அந்த இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டுப் பிரச்சார நெடியாக அமைந்து விட்டது. இந்து, முஸ்லீம், கிறீஸ்தவ, பெளத்த மதங்களை வலிந்திழுத்து ஒற்றுமையாக்கும் செயற்பாடாகத் தான் இந்தப் படைப்பு அமைய வேண்டுமா?
மொத்தம் மூன்று மணி நேரம் பயணிக்கும் “காடும் கடலும்”
இரண்டு இடைவேளைகளைக் கொண்டிருக்கிறது. இரண்டாவது இடைவேளைக்குப் பின்னான காட்சிகளும் திசையறியாது தடுமாறி நிற்பதாகவே பட்டது. கொல்லப்பட்ட தன் தம்பிக்கு இறுதி மரியாதை செய்யத் துடிக்கும் சகோதரியின் வாதங்களும், அதைச் சுற்றிப் பின்னப்பட்ட உரையாடல்களும் ஆழமற்றவையாக இருக்கின்றன.
இறுதிப் போரில் ஒரு பாரிய இனச்சுத்திகரிப்பு நடந்திருக்கிறது இதற்கு என்ன மாதியானதொரு பொறுப்புக்கூறலை இலங்கை அரசு செய்ய வேண்டும் போன்ற தர்க்க ரீதியான விளக்கங்களுமற்ற நாடகத் தன்மை மேலோங்கி நிற்கின்றது.
“காடும் கடலும்” நாடகப் படைப்பு உண்மையில் இலங்கை இனப்பிரச்சனையை மையப்படுத்தி, குறிப்பாக முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் பதிவுகளை விசாலமாகக் காட்டிய வகையிலும் சிட்னியில் இருப்பவர்கள் சென்று காண வேண்டியதும். இது குறித்த பரவலான பார்வைகளையும் கொடுப்பது மிக அவசியம்.
கானா பிரபா
13.11.2022.
No comments:
Post a Comment