பேணியுடல் காக்கும் பெருவழியில் நடப்போம் ! " உலக நிரிழிவு தினத்தினை முன்னிட்டு இவ்வேண்டுதல் கவிதை "


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 
மூவிரண்டு சுவையதனுள் முன்னிற்கும் சுவைதான்

நாவிரும்பும் இனிப்பான நற்சுவையே ஆகும்
போயிருந்து விருந்துண்ணும் பொழுதெல்லாம் அங்கே
வாவென்று வரவேற்கும் நற்சுவையும் இனிப்பே 

இனிப்பில்லாக் கொண்டாட்டம் எங்குமே இருக்கா
இல்லத்து விழாவனைத்தும் இணைத்துவிடும் இனிப்பு 
இல்லறத்தில் இணைவாரை வாழ்த்துகின்ற போதும்
இனிமையுடன் வாழ்கவென எடுத்து மொழிகின்றோம் 

திருமணத்தில் இனிப்பு திருவிழாவில் இனிப்பு

தித்திப்பு வாழ்வினிலே முத்திரையாய் இருக்கு 
ஆலயத்தில் இனிப்பு அரங்குகளில் இனிப்பு
அனைத்துக்கும் முன்னிற்கும் அரனுக்கும் இனிப்பே 

பிறப்புமுதல் இறப்புவரை இனிப்புமது தொடரும்
கசப்புநிறை வாழ்வுதனை விரும்பிடுதல் உண்டோ 
நினைப்பெல்லாம் இனிப்பாக நிறைந்துமே இருக்கு
இனிப்பதனை ஒதுக்கிவிட நினைத்திடுவார் உண்டோ 

உடல்வளர உடல்சிறக்க உண்ணுகின்றோம் உணவை
உண்னுகின்ற உணவினுக்கும் ஒழுங்குமுறை தேவை 
அளவறிந்து உண்ணுகின்ற அணுகுமுறை தவறின்
அல்லலொடு தொல்லைவரும் எனவுணர்தல் வேண்டும் 

உலகத்தைப் பலநோய்கள் பற்றியே இருக்கு
அதையகற்ற பலமருந்தும் வந்தபடி இருக்கு
நிலவுலகில் நீரிழிவு நீண்டபடி இருக்கு
அதையுணராப் பலபேர்கள் அல்லலுறு கின்றார் 

இனிப்பதனை விட்டுவிட எவர்க்கும் மனமில்லை
இனிப்பதனைக் கண்டுவிட்டால் இருந்திடுவார் பக்கம்
எடுத்துவிடும் இனிப்பதனால் என்னவரு மென்று
எண்ணாது இருப்பவரே ஏற்றிடுவார் சுமையை

சாதிமதம் பாராது சமத்துவமாய் இருக்கு
இனங்கடந்து மொழிகடந்து எல்லை கடந்திருக்கு
உலகத்தில் நீரிழிவு பேரலையாய் எழுந்து 
யாவரையும் மூழ்கடிக்கத் துடிக்கிறது நாளும் 

ஊசிமுதல் மாத்திரைகள் எடுக்கிறார் பலரும்
உடற்பயிற்சி செய்யாமல் உண்ணுகிறார் இனிப்பை
வீதியெலாம் விற்கின்ற விதம்விமாம் உணவை
வாங்கியுண்டு நோய்பெருக்கி வதங்கிறார் நாளும்

நீரிழிவு வியாதியல்ல எனவுரைக்கும் வார்த்தை
நெஞ்சுக்கு நிம்மதியைக் கொடுக்கின்ற வார்த்தை
ஆனாலும் கட்டுக்குள் வைக்காமல் விட்டால்
ஆபத்தை அதுவாங்கிக் கொடுத்துவிடும் எமக்கு 

நிரிழிவு வந்தால் நெருங்கிவரும் பலநோய்
பார்வை பழுதாகும் பக்கவாதம் கிட்டவரும்
நரம்பு தடுமாறும் நம்மிதயம் நோவெடுக்கும்
நம்மை யறியாமல் நலனனைத்தும் போக்கிவிடும் 

நீரிழிவு நம்மை  நெருங்கிவிட  வைக்காமல்
நிதமுமே நலன்வேலி நாமதைத்தல் அவசியமே 
வந்துவிட்ட பின்னாலே வதங்கிவிடல் முறையல்ல
வாராமல் காப்பதற்கு வழிவகுத்தல் அவசியமே 

உடற்பயிற்சி செய்து உணவை ஒழுங்காக்கி
நடைப்பயிற்சி நாளும் சென்றிடுதல் நன்றே 
இனிப்பதனை நினைப்பில் இருத்திடுதல் நன்றே
இனிப்பதனை உணவாய் இருத்திடுதல் தவிர்ப்போம் 

மாச்சத்தைக் குறைப்போம் மாங்கனியை விடுவோம்
பேரீச்சை பலாக்கனியை பெயர்மட்டும் உரைப்போம் 
வெந்தயத்தை கீரையினை விரும்பியே உண்போம்
வில்லங்கம் தருமுணவை விலத்தியே வைப்போம் 

பசித்தவுடன் உண்போம் பாயாசம் தவிர்ப்போம்
பழப்பாகு பழரசங்கள் பால்கோவா விடுப்போம்
தானியங்கள் எடுப்போம் தவிட்டரிசி உண்போம்
பேணியுடல் காக்கும் பெருவழியில் நடப்போம் 

No comments: