வாங்க மச்சான் வாங்க… உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயை பார்த்தானாம் ! அவதானி


இலங்கை அரசியலில் சமகாலத்தில் நடக்கும் மாற்றங்களை பார்க்கும்போது எமக்கு நீண்ட காலத்திற்கு முன்னர் வெளியான தமிழ்த் திரைப்படங்களும் திரைஇசைப்பாடல்களும்தான் நினைவுக்கு வருகின்றன.

சமூக வலைத்தலங்களில்  ‘ மீம்ஸ்  ‘ துணுக்குகளை பதிவேற்றுபவர்களுக்கும் எமது அரசியல்வாதிகள் கேலிக்கைக்குரியவர்களாகிவிட்டனர்.

முன்னாள் ஜனாதிபதியை கலைப்பதற்கான  மக்கள் எழுச்சிப்


போராட்டத்தில் முக்கிய தொனிப்பொருளாக இருந்தது Gotha Go Home .  இந்த தலைப்பிலேயே காலிமுகத்திடலிலும் நூறு நாட்களையும் கடந்து மக்கள் தன்னெழுச்சியாக போராடினர்.


பாராளுமன்றத்திற்கு  இறுதியாக அவர் வந்தபோதும் , எதிரணியினர் Gotha Go Home என உரத்து கோஷம் எழுப்பினர்.  அத்தோடு அவர் பதவி விலகியிருக்கவேண்டும்.

ஆனால், 69 இலட்சம் மக்கள் தமது   வாக்குப்பலத்தினால் தன்னை இந்தப்பதவியில் அமர்த்தியிருக்கின்றனர் என்ற இறுமாப்புடன்,  அவர் பதவி விலகாமல் இருந்துவிட்டு,   ஜூலை நடுப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறினார்.

அவருக்கும் அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் எதிரான போராட்டம்   காலிமுகத்திடலில் மட்டுமன்றி, கொழும்புக்கு வெளியே பல பிரதேசங்களிலும் தொடர்ந்தது.  குறிப்பிட்ட நூறு நாட்களுக்குள்ளும் அதன்பிறகும் காட்சிகள் மாறின.  கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதியுடன் கோத்தபாய ராஜபக்‌ஷவின் அதிகாரம் அகற்றப்பட்டது.  எனினும் அவ்விடத்திற்கு மற்றும் ஒருவராக ரணில் விக்கிரமசிங்கா 134 வாக்குகளுடன் வந்தார். 

கோத்தபாய  ராஜபக்ச  முதலில்  ஜூலை 14 ஆம் திகதி விமானப்படை விமானம் மூலம் மாலைதீவுக்குச் சென்றார்.

பின்னர்,  அங்கிருந்து சிங்கப்பூர் சென்று ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை அங்கே  தங்கியிருந்தார். இராமன் இருக்குமிடம்தான் சீதைக்கும் அயோத்தி என்பதுபோல், அவரது மனைவி அயோமா ராஜபக்‌ஷவும், அவர் செல்லுமிடமெங்கும் பின்தொடர்ந்தார். சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட இந்தத் தம்பதியர் கடந்த ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி தாய்லாந்து சென்றனர்.  இவ்வாறு மூன்று நாடுகளில் தனது  அஞ்ஞாதவாசத்தை முடித்துக்கொண்டு,  எதற்கும் தான் அஞ்சவில்லை என்பதை நிரூபிக்க தாய்நாடு திரும்பியிருக்கின்றார் கோத்தா.

இவரது குறிப்பிட்ட அஞ்ஞாதவாச காலம் ஒரு மாதமும் 19 நாட்களும். இக்காலப்பகுதியில் அவரும் பாரியாரும் தங்கியிருந்த உல்லாச விடுதிகளுக்கான செலவுகளை யார் கவனித்தார்கள் என்பது இரகசியம்.

அவருக்காக இலங்கை அரசு நான்கு ரூபாயைக்கூட செலவிடவில்லை என்பது தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்காவின் வாதம்.   கோத்தா தம்பதியர் கொழும்பு விமானநிலையத்தில் வந்திறங்கி பலத்த பாதுகாப்புடன் வெளியேறிய காட்சி சமூக வலைத்தலங்களில் மின்னல் வேகத்தில் பரவியது.

அவர் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என ஒரு சாராரும் வரக்கூடாது என மற்றும் ஒரு சாராரும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

அவருக்கு  தேசியப்பட்டியல் ஆசனம் வழங்க சிலர் தமது பாராளுமன்ற ஆசனத்தையும் விட்டுக்கொடுக்கத் தயார் எனவும்,  அவ்வாறு அவர் பாராளுமன்றம் வரும்போது பிரதமர் பதவியும்  வழங்கப்படலாம் என்ற ஊகங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இதற்கு முன்னர் அமெரிக்காவிலிருந்து மீண்டும் அரசியல் பிரவேசம் செய்வதற்கு வந்த இவரது சகோதரர் பஸில் ராஜபக்‌ஷவுக்காகவும் ஒருவர் தனது ஆசனத்தை விட்டுக்கொடுத்ததை நாம் மறந்துவிட முடியாது. அவ்வாறு வந்து நிதியமைச்சர் பதவியும் பெற்றவர்,  இறுதியில் என்னவானார் என்பதையும் அறிவோம்.

இவற்றுக்கெல்லாம்,  மூக்கணாங் கயிறு யார் கையில் இருக்கிறது என்பது இரகசியமல்ல.  இலங்கை அரசியலில் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக ராஜபக்க்ஷவினர் தம்மால் முடிந்த அத்தனையையும் செய்வார்கள்.  அதற்காக தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தனித்தனி நிகழ்ச்சி நிரலும் வைத்திருப்பார்கள்.

அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு  ஏற்றவாறுதான் இன்று எதிரணியினரும் ஆளையாள்  காலை வாரிவிட்டுக்கொண்டிருக்கின்றனர். 

பொதுஜன பெரமுனவிலும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலும் ஐக்கிய மக்கள் சத்தியிலும்,  தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிலும்,  மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளிடையேயும் பிளவுகள் அதிகரித்து வருகின்றன.  இந்த சில்லெடுப்புகளுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்காவும் தனது ஐக்கிய தேசியக்கட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுப்பதற்கான பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளார்.

வாரிசு அரசியல் என பார்த்தாலும், ராஜபக்‌ஷவினருக்குத்தான்  சாதகமாகவிருக்கிறது.  அங்குதான் “  நாமல்  “ என்ற புதிய ராஜபக்‌ஷ தலைமுறை உருவாகியிருக்கிறது. 

இந்த வாரிசு ஜனநாயகம் மைத்திரிபால சிறிசேனவிடமோ, ரணில் விக்கிரமசிங்காவிடமோ,  சஜித் பிரேமதாசவிடமோ, சம்பந்தன், திகாம்பரம், மனோ கணேசன், ரிஷாட் ,  ரவூப் ஹக்கீடமோ இல்லை.

எனவே ராஜபக்‌ஷ குடும்பத்தினரின் தலைவர் மகிந்தர், தனது பட்டத்து இளவரசனுக்காக மீண்டும் கோத்தபாயவை அரசியலுக்குள் இழுத்துவிடுவதில்தான் கண்ணும் கருத்துமாக இருப்பார். அதற்கேற்பவே காய்களை நகர்த்துவார்.  

அதனால்,  கோத்தாவின் மீள் வருகையைப்பார்த்து,  “ வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப்பார்த்து போங்க என்றோ, ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படி பார்க்கிறீங்க  “ எனப்பாடமுடியாது.

அவர் அஞ்சாதவாசம் இருந்த சுமார் ஐம்பது நாட்களுக்குள் உள்நாட்டில் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி மகிந்த ராஜபக்‌ஷ ஒரு நிகழ்ச்சி நிரலை தயாரித்துவிட்டார்.

இனி அதனை நடைமுறைப்படுத்துவதில்தான் அவரது முழுக்கவனமும் இருக்கும்.  அதனால்தான்  தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்காவும், பாராளுமன்றத்தில் எதிரணியினர் பக்கம் சிநேகபூர்வமான பேச்சுவார்த்தைகளை தொடருகின்றார்.

இவ்வாறு குழம்பிய குட்டையில் எத்தகைய மீன்களை பிடிக்கலாம் என கூர்ந்து பார்த்து வருகின்றன  சீனாவும் இந்தியாவும் மேற்குலகமும்.

நாட்டின்  ஏழை மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தமது எதிர்காலம் குறித்து தீர்க்கமான முடிவுகளை எடுக்கமுடியாமல்,  விலைவாசி உயர்வுகளை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

இவர்கள் கால் வயிறு, அரைவயிறு உணவுக்காக அல்லல்படுகையில்  அதிகாரத்தை தங்கள் வசம் தக்கவைத்துக்கொள்வதற்கு ராஜபக்‌ஷவினர் சுழியோடிக்கொண்டிருப்பார்கள்.

கோத்தாவின் மீள்வருகையிலிருந்து அந்த சுழியோட்டத்தை அவதானிக்கலாம்.No comments: