நல்ல நேரம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 

புரட்சி நடிகர் எம் ஜீ ஆரின் நடிப்பில் மள மள என்று 16 படங்களை தயாரித்து வெளியிட்ட பெருமைக்குரியவர் சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவர்.அந்த வரிசையில் அவர் எம் ஜீ ஆர் நடிப்பில் தயாரித்த கடைசி படம் நல்ல நேரம்.எம் ஜீ ஆர் நடிப்பில் அவர் தயாரித்த ஒரே ஒரு வண்ணப் படமும் இதுதான்.1972ம் வருடம் இந்தப் படம் வெளிவந்தது.ஏற்கனவே தெய்வச் செயல் என்ற பெயரில் படமாக்கி பின்னர் சில

மாறுதல்களுடன் அதனை ஹிந்தியில் ஹாத்தி மேரே சாத்தி என்று தயாரித்து வெற்றி கண்டு,மீண்டும் அதனை தமிழில் நல்ல நேரம் என்று எடுத்தார் தேவர்.இது தேவரின் சாமர்த்தியம் என்றுதான் சொல்ல வேண்டும்.இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எம் ஜீ ஆரின் நடிப்பில் காதல் வாகனம் படத் தயாரிப்பின் போது எற்பட்ட மனத்தாங்களினால் எம் ஜீ ஆரின் நடிப்பில் படம் தயாரிக்காமல் இருந்தார் தேவர்.ஆனால் ஹாத்தி மேரே சாத்தி படத்தின் வெற்றி இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது.அதுவே அவர்களுக்கு நல்ல நேரம் ஆனது.

நான்கு யானைகளுடன் ராஜாங்கம் நடத்தும் ராஜு தொழிலில் ஏற்பட்ட சரிவால் யானைகளுடன் தெருவுக்கு வருகிறான்.ஆனால் விடா முயற்சியாக யானைகளை வைத்து வித்தை காட்டி பிழைக்கிறான்.ஆனால் அவன் காதலி விஜயவின் தந்தையோ ராஜுவின் நிலை கண்டு அவர்கள் காதலை எதிர்க்கிறார்.விஜயாவோ வீட்டை விட்டு வெளியேறி ராஜூவை சேர்கிறாள்.ராஜுவின் உற்ற நண்பர்களான நான்கு யானைகளும் எவ்வாறு ராஜுவுக்கு உதவி,அவனை வாழ்க்கையில் வெற்றி பெற செய்கிறது என்பதுதான் படத்தின் கதை.


தேவர் தனது சகாக்களுடன் உருவாக்கிய கதைக்கு ஆர் கே சண்முகம் வசனங்களை செறிவுடன் எழுதியிருந்தார்.எம் ஜீ ஆருக்கும் கண்ணதாசனுக்கும் இடையில் முறுகல் நிலை இருந்த போதும் தேவர் தயவால் இரண்டு டூயட் பாடல்களை அவர் எழுதியிருந்தார்.டிக் டிக் டிக் இது உறவுக்கு தாளம்,நீ தொட்டால் இரண்டு பாடல்களும் இனிமையாக அமைந்தன.ஆனால் புலமைப்பித்தனின் ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஓலித்து பிரபலமானது.இது தவிர அவினாசிமணியின் ஆக்கட்டும்டா தம்பி ராஜா பாடலும் படத்தில் இடம் பெற்றது.தேவர் படம் என்றால் வழக்கமாக ஏழு,எட்டு பாடல்கள் படத்தில் இடம் பெறும் .ஆனால் இதில் வெறும் நான்கே

பாட்டுதான்.இசையமைத்தவர் தேவரின் எல்லா எம் ஜீ ஆர்

படங்களுக்கும் இசையமைத்த கே வி மகாதேவன்.பாடல்களில் மட்டுமன்றி பின்னணி இசையிலும் தன் திறமையை அவர் வெளிப்படுத்த்தியிருந்தார்.

படத்தில் நாகேசும் சச்சுவும் சிரிக்க வைக்கிறார்கள்.தேங்காய் சீனிவாசன் இருந்தும் அவரிடம் காமெடி இல்லை.வழமையாக வில்லனாக வரும் அசோகன் இதில் விஜயாவின் தந்தை.தந்தை வேடங்களில் நடிக்கும் சுந்தரராஜன் இப் படத்தில் வில்லன்.அவரின் கையாள் ஜஸ்டின்.நன்றாக எம் ஜீ ஆருடன் சண்டை போடுகிறார்.போதாக்குறைக்கு சின்னப்பா தேவரும் எம் ஜீ ஆருடன் மோதுகிறார்.இவர்களுடன் வி கோபாலகிருஷ்ணன்,எஸ் வி ராமதாஸ்,ராதிகா ஆகியோரும் நடித்தார்கள்.


படத்தின் வெற்றிக்கு யானைகள் பெரிதும் துணை புரிந்தன.அவை செய்யும் சாகசங்கள் தமிழ் ரசிகர்களை மட்டும் அன்றி வேற்று மொழி ரசிகர்களையும் கவர்ந்தன.சுந்தரபாபு படத்தின் ஒளிப்பதிவை மேற் கொண்டார்.சண்டைக்காட்சிகளை ஷியாம்சுந்தர் அமைத்திருந்தார்.

தேவரின் தம்பி எம் ஏ திருமுகம் படத்தை சீராக இயக்கியிருந்தார்.எம்

ஜீ ஆரின் 16 படங்களை டைரக்ட் செய்த பெருமையும் அவரை சார்ந்தது.வெற்றி படமான நல்லநேரம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வசூலையும் வாரி வழங்கியது.

No comments: