இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் முழு உலகினதும் ஆளுமையின் அடையாளம்

 Saturday, September 10, 2022 - 6:00am

உலக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த மிகப் பெரும் சரித்திர வரலாறு நேற்றுமுன்தினத்துடன் முடிவடைந்தது!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்றுமுன்தினம் காலமானார். அவருக்கு வயது 96. மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். தொடர்ந்து நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்து கொண்டார். சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், மகாராணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிலையில், இரண்டு நாட்களாக மகாராணியில் உடல்நிலை ஆரோக்கியமாக இல்லை என்று தகவல்கள் வெளியாகின. உடல்நிலை மோசமான நிலையில் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். இதனிடையே, பால்மோர இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது என்று பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் மரணத்தை அடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

21 ஏப்ரல் 1926 அன்று லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்தவர் எலிசபெத் மகாராணி. பிரிட்டிஷ் வரலாற்றில் சுமார் 70 ஆண்டு காலம் அரசபதவியில் இருந்தவர். தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார்.

பிரிட்டனில் ஆறாம் ஜோர்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது, நாட்டின் ராணியாக பதவியேற்றவர். அப்போது பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சேர்ச்சில், அதன் பின்னர் வந்த சேர் அண்டனி ஈடன், போரிஸ் ஜோன்சன் தொடங்கி, லிஸ் ட்ரஸ் வரை 15 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி உள்ளார். 96 வயதாகும் ராணி எலிசபெத், 3 நாட்களுக்கு முன்பு பிரிட்டனின் புதிய பிரமதராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு ராணி எலிசபெத்தின் கணவரும், எடின்பரோ கோமகனுமான பிலிப் காலமானார். கணவர் மறைவையடுத்து அவரது உடல் நலம் குன்றியது.

பிரிட்டன் இராணி எலிசபெத் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவரது மகன்களும், இளவரசர்களான சார்ள்ஸ், எட்வர்ட், அண்ட்ரூ, மகள் ஆனி ஆகியோர் அவருடனேயே இருந்தனர்.

இராணியின் மூத்த மகனான இளவரசர் சார்ள்ஸின் மகன் வில்லியமும் அவருடனேயே இருந்தார். வெளிநாட்டில் இருக்கும் மற்றொரு மகன் ஹரி, ஹரியின் மனைவி மேகன் ஆகியோர் லண்டனுக்கு வந்தனர்.

மக்கள் மனதில் இடம் பிடித்து பின்பு ராணியாக 1952-ஆம் ஆண்டு முடிசூட்டிக் கொண்டு ஒரு நாட்டை 70 ஆண்டு காலம் ஒரு பெண்ணால் ஆள முடியும் என்பதை நிரூபித்துகாட்டியவர் தான் ராணி இரண்டாம் எலிசபெத்.

1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்தவர் எலிசபெத் அலெக்சேன்ட்ரா மேரி. அவர் பிறந்தபோது இங்கிலாந்தை அவரது பாட்டன் ஐந்தாம் ஜோர்ஜ் ஆண்டு கொண்டிருந்தார்.

இவரது தந்தை பெயர் ஆறாம் ஜோர்ஜ். தாய் பெயர் எலிசபெத். இதனால் இவர் இரண்டாம் எலிசபெத் இராணி என அழைக்கப்பட்டு வந்தது.

அவரது பாட்டன் ஐந்தாம் ஜோர்ஜ் 1936-ல் மரணமடைந்தபோது மன்னராக மூத்த மகன் எட்டாம் எட்வர்ட் அரியணை ஏறினார்.

ஆனால் குறுகிய காலத்திலேயே தன்னுடைய காதலுக்காக மன்னர் பதவியைத் துறந்தார். அதைத் தொடர்ந்து எலிசபெத்தின் தந்தையான அல்பர்ட் ஆறாம் ஜோர்ஜ் என்ற பெயருடன் மன்னரானதும் 10 வயதில் பட்டத்து இளவரசி ஆனார் எலிசபெத்.

1952 ஆம் ஆண்டில் தந்தை மறைந்ததும் இங்கிலாந்தின் இராணியாக முடிசூடினார் இரண்டாம் எலிசபெத்.

இவர் பிறந்த நேரத்தில், மணிமுடியை ஏற்பது இவருக்கு விதிக்கப்பட்டதாக இருக்கும் என வேறு எவரும் ஊகித்துக் கூட பார்த்திருக்காத ஒன்றாக இருந்தது.

முன்னதாக மகாராணி பிரிட்டன் இளவரசியாக இருந்தபோது செல்வச் செழிப்பான வாழ்க்கையை நடத்தினார். அனைத்து வசதிகளும் அரண்மனையிலேயே இருந்தன. ஆசிரியர்கள் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு கல்வி போதித்தனர். குதிரை சவாரி செய்ய விண்ட்சர் கிரேட் பூங்காவிற்கு சென்று வந்த எலிசபெத் தனது கணவரான பிலிப்பை முதன் முதலில் அங்கு தான் சந்தித்தார்.

பிலிப் கிரீஸ் மற்றும் டென்மார்க்கின் இளவரசராக இருந்தார். எலிசபெத் தனது 13வது வயதில் காதலை பிலிப்பிடம் வெளிப்படுத்தினார்.

இதையடுத்து இருவரும் காதல் கடிதங்களை பரிமாறிக் கொண்டனர். அதன் பிறகு ஜூலை 1947ல் நிச்சயதார்த்தம் நடந்தது. அதே ஆண்டு நவம்பர் 20ல் திருமணம் நடந்தது.

இந்த திருமணம் சர்வேதேச நிகழ்வாக இருந்தது. காதல் கொண்ட நிலையில் 1947-ல் ராணி எலிசபெத்தின் கரம் பற்றினார் பிலிப்.

இவர்களுக்கு ஒரு வருடம் கழித்து இளவரசர் சார்ள்ஸ் பிறந்தார். அதன்பிறகு ஆன், அண்ட்ரூ, எட்வர்ட் என்ற மகன்கள் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராணி எலிசபெத்தின் உடல்நிலையும் மோசமானது. ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோர் அரண்மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். தொடர்ந்து நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்து கொண்டார். சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், மகாராணியை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

சுமார் 70 ஆண்டுகாலம் அரசபதவியில் இருந்த மகாராணி தனது பதவிக்கால வரலாற்றில் வின்ஸ்டன் சேர்ச்சில் முதல் இன்றைய போரிஸ் ஜான்சன் வரை 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் உலகில் எந்த நாடுகளுக்கு வேண்டுமானாலும் அவர் சென்று வரலாம், அதற்கு கடவுச்சீட்டு தேவையில்லை என்பது விதியாக இருந்தது. இங்கிலாந்தில் அவர் கார் ஒட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை.

அவர் போக்குவரத்து விதிகளை மீறினாலும் தண்டிக்க முடியாது. ஆனாலும் இதுவரை எந்த சர்ச்சையிலும் அவர் சிக்கியதில்லை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை இன்று வரை உயிர்ப்போடு வைத்திருப்பது மட்டுமல்ல சமூக மாற்றத்திற்கான முன்னோடியாகவும் இருந்துள்ளார்.

மன்னர் ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வந்தவர். குறிப்பாக அரச குடும்பத்திற்கும், அரண்மனைக்கும் தேவையான செலவினங்களை இங்கிலாந்து மக்களின் வரி பணத்திலிருந்து வழங்கும் முறையை 2012- ஆம் ஆண்டு மாற்றினார்.

கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளின் பிரதமர்கள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அந்த நாட்டிற்கான நிரந்தர அதிபர் ராணி எலிசபெத் தான்.

எந்த நாட்டின் மீது போர் தொடுக்கும் அதிகாரம் இருந்தாலும் இதுவரை போர் தொடுக்க விரும்பியதில்லை. பிரிட்டனில் இவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தபின் இதுவரை 13 அமெரிக்க அதிபர்கள் மாறியிருக்கிறார்கள். இவ்வாறு உலக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த மிகப் பெரும் சரித்திர வரலாறு நேற்றுமுன்தினத்துடன் முடிவுரை எழுதிக் கொண்டது.    நன்றி தினகரன் 

No comments: