இலங்கைச் செய்திகள்

மகாராணியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் அனுதாபம் தெரிவிப்பு

மறைந்த எலிசபெத் மகாராணிக்காக செப்டெம்பர் 19ஆம் திகதி இலங்கையில் துக்கதினம்

எலிசபெத் மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தில் 05 சிறுபான்மையினர்

கைதான தமிதா அபேரத்னவுக்கு செப்டெம்பர் 14 வரை விளக்கமறியல்

நடிகை தமிதா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி


மகாராணியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் அனுதாபம் தெரிவிப்பு

- இன்று முதல் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி
- தேசிய துக்க தினம் தொடர்பில் அறிவிக்கப்படும்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் தலைவரும், 1952-1972 வரை இலங்கை ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு தொடர்பில் இங்கிலாந்து அரச குடும்பம், மற்றும் இங்கிலாந்து மக்களுக்கு ஜனாதிபதி ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடைசி மகாராணியாக பதவி வகித்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று (09) முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய, அமைச்சின் செயலாளர், எம். எம். பி.கே. மாயாதுன்னே இவ்வறிவிப்பை விடுத்துள்ளார்.

தேசிய துக்க தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.    நன்றி தினகரன் 
மறைந்த எலிசபெத் மகாராணிக்காக செப்டெம்பர் 19ஆம் திகதி இலங்கையில் துக்கதினம்

- அதுவரை அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்படும்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையிட்டு எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதியை துக்க தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு இது தொடர்பில் ஜனாதிபதியினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதுவரை எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதி வரை அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணி 70 ஆண்டுகள் ஆட்சியைத் தொடர்ந்து, நேற்று தனது 96ஆவது வயதில் பால்மோரல் எஸ்டேட் இல்லத்தில் வைத்து காலமானார்.

திடீர் சுகவீனமுற்ற அவர், மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்ட நிலையில் நேற்றையதின் காலமானார்.

இது தொடர்பில், தனது இரங்கலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, "பொதுநலவாய நாடுகளின் தலைவரும், 1952-1972 வரை இலங்கை ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு தொடர்பில் இங்கிலாந்து அரச குடும்பம், இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் இங்கிலாந்து மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்" என அறிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றையதினம் (08) மரணமடைந்த, இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இன்றையதினம் (09) இலங்கை பாராளுமன்றத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 


எலிசபெத் மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

நேற்றையதினம் (08) மரணமடைந்த, இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று (09) பாராளுமன்றம் மு.ப. 9.30 மணிக்கு கூடியது.

இதன்போது, பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இலங்கை பாராளுமன்றம் சார்பாக இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு குறித்து சோகத்தை வெளியிடுவதற்காக 2 நிமிட மௌன அஞ்சலிக்கு அனுமதி கோரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணிக்குழாமினர் எழுந்து நின்று பிரிட்டிஷ் மகாராணிக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது சபையில் குறைந்த அளவிலான பாராளுமன்ற உறுப்பினர்களே பிரசன்னமாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் கடைசி மகாராணியாக பதவி வகித்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று (09) முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 
புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தில் 05 சிறுபான்மையினர்

ஜனாதிபதி முன்னிலையில் நேற்று பதவியேற்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் நேற்று நியமிக்கப்பட்ட 37 இராஜாங்க அமைச்சர்களில் ஐந்து சிறுபான்மை இன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக எஸ். வியாழேந்திரன், கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சிவநேசன்துரை சந்திரகாந்தன், கல்வி இராஜாங்க அமைச்சராக அ. அரவிந்தகுமார், உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக சுரேன் ராகவன், கிராம அபிவிருத்தி அமைச்சராக காதர் மஸ்தான் ஆகியோர் நியமனம் பெற்றுள்ளனர்.   நன்றி தினகரன் 


கைதான தமிதா அபேரத்னவுக்கு செப்டெம்பர் 14 வரை விளக்கமறியல்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது அத்துமீறி ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதான நடிகை தமிதா அபேரத்னவுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (08) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்திய போது, நீதவான் திலிண கமகே இவ்வுத்தரவை வழங்கினார்.

கடந்த ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் நடிகை தமிதா அபேரத்ன நேற்றையதினம் (07) கைது செய்யப்பட்டிருந்தார்.

அதற்கமைய, அவருக்கு 7 நாட்கள் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 


நடிகை தமிதா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்ன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று முன்தினம் (08) வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டு பெண்கள் பிரிவில் வைக்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் அவரது உடல்நிலையை பரிசோதித்த வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தமிதா அபேரத்னவை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பரிந்துரைத்துள்ளார்.

இதன்படி சிறைச்சாலை அதிகாரிகள் தமிதா அபேரத்னவை வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.   நன்றி தினகரன் 

No comments: