எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 30 வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா ….. முருகபூபதி

“ ஒரு மனிதனின் பெயர் நிலைத்திருக்கவேண்டுமாயின், அவன்


பின்வரும்  மூன்று விடயங்களில் ஏதாவது ஒன்றைச்  செய்தாகவேண்டும்.  அவை:  அவன் ஒரு வீடு கட்டவேண்டும்.  பிள்ளைகள் பெறல் வேண்டும்.  அல்லது குறைந்தபட்சம் ஒரு புத்தகமாவது எழுதவேண்டும்.     இவ்வாறு சொன்னவர் சுவாமி விவேகானந்தர்.

ஆனால், என்னைக்கேட்டால், மனிதன் மனிதனாக மனிநேயத்துடன் வாழ்ந்தாலே போதும் . அவன் பெயர் நிலைத்துவிடும்.  என்பேன்.

நன்றிகெட்ட சமூகத்தில் ஒருவன் மனிதநேயனாக வாழ்ந்தும் பிரயோசனம் இல்லை எனச்சொல்பவர்களும் இருக்கிறார்கள். 

எனக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தரவதிவிட உரிமையும் குடியுரிமையும் கிடைத்த,  தாயகத்திலிருந்து குடும்பம் வந்து சேர்ந்த காலப்பகுதியில் எமது விக்ரோரியா மாநிலத்தில்  ஒரு நெருக்கடி தோன்றியது. அதனை Recession என்றார்கள்.

பலர் தமது வேலையை இழந்தனர்.  நான் பணியாற்றிய Australia Textile Printing Company இலும் ஆட்குறைப்பு நடவடிக்கை ஆரம்பமாகியிருந்தது.

எனது மகனுக்கு அப்போது நான்கு வயது.  ஊரில் ஓடித்திரிந்து விளையாடியவன்.  வீதிக்கு ஓடுகிறான் என்பதனால், வாயிலில் கேட் போட்டிருக்கிறார்கள். ஆனால், அவனோ அந்த கேட்டில் ஏறி வீட்டின் கூரைக்குச்சென்றிருக்கிறான்.

இறுதியில் புதிதாக இணைக்கப்பட்ட கேட்டையும் அப்புறப்படுத்த நேர்ந்துள்ளது.

அவனால் இரண்டு படுக்கை அறைகொண்ட  மாடிக் குடியிருப்பில் சுதந்திரமாக ஓடித் திரியமுடியவில்லை. 

நிலத்தில் வீடு அமைந்திருந்தால், வெளியே ஓடி விளையாட  முடியும்தானே என்ற எண்ணம் அவனுக்கு வந்திருந்தது.

இரவில்  வெளியே வந்து அவனுக்கு நிலாவைக்காண்பித்து கதைகள்


சொல்லி உணவூட்டியபோது,   “ அந்த நிலாவில் மெக்டொணால்ட்ஸ் இருக்குமா..?  “  எனக்கேட்டான்.

ஊரில் எனது அம்மா, அவனுக்கு நிலாக்காட்டி உணவூட்டியபோது, அங்கே அவ்வைப்பாட்டி இருப்பதாக கதையளந்துள்ளார்கள். 

 “ இலங்கையில் பார்த்த நிலாவா, அவுஸ்திரேலியாவிலும் இருக்கிறது..?  “ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு என்னைத்துளைத்தெடுப்பான்.

அவனது சுவாரசியமான கேள்விகளை மையமாக வைத்துத்தான்   “  அம்புலிமாமாவிடம் போவோம்  “  என்ற சிறுகதையை எழுதினேன்.  இச்சிறுகதை பிரான்ஸிலிருந்து வெளியான ஓசை இதழில் ( ஆசிரியர் : மனோகரன் ) வெளியானது.

அக்கதையை மகனுக்கு வாசித்துக்காண்பித்தேன்.  ஊரில் ஆச்சி சொன்ன கதை என்று திருஞானசம்பந்தர் உமாதேவியாரிடம் பால் குடித்த கதையை நினைவுபடுத்தினான். அதனையும் அவனுக்கு மீண்டும் சொல்லிக்கொடுத்தேன்.

அக்காலப்பகுதியிலும்  தொலைக்காட்சியில் World Vision International விளம்பரம் ஒளிபரப்பாகியது.  அவற்றைப்பார்த்த மகன்,  “  திருமதி உமாதேவியார் சோமாலியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் செல்லமாட்டாரா..?  “ எனக்கேட்டான்.

இவ்வாறு அன்று கேட்ட எனது மகனுக்கு தற்போது இரண்டு குழந்தைகள். அவர்களுக்கு அவன் கதை சொல்லி புட்டிப்பால் பருக்குகிறான்.

எனக்கு கதைகள்  எனது குடும்பத்திற்குள்ளிருந்தே கிடைத்தன.

அந்நாட்களில்  மகனது லூட்டி தாங்கமுடியாமல் அவனது விருப்பத்தின் பிரகாரம் தரையிலிருக்கும் வீடு தேடும் படலத்தில் ஈடுபட்டேன்.


மெல்பனில் ஒருநாள் மாநகரத்திற்கு சென்று ஒரு ட்ராம் வண்டியில் திரும்பும்போது அதில் ஒட்டப்பட்டிருந்த சிறிய விளம்பரம் என் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.    வாரம் 150 வெள்ளிகள் வழங்கினால்,  ஒரு வீட்டுக்கு உரிமையாளராக முடியும் என்பதுதான் அந்த விளம்பரம்.

அதிலிருந்த தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டுவிட்டு, குறிப்பிட்ட Real estate அலுவலகத்திற்கு நேரில் சென்றேன்.

அங்கிருந்தவர்,  வீட்டை காண்பிக்க தனது காரில் அழைத்துச்சென்றார்.  நான்கு அறைகள் கொண்ட புத்தம் புதியவீடு.  முன்னர் எவரும் குடியிருக்கவில்லை.  மாதிரி வீடாக  ( Display Home ) பார்வைக்கு விடப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறும், அதன்பிறகு வங்கியில் கடன் பெறலாம் எனவும் ஆலோசனை தரப்பட்டது. எனது சேமிப்பிலிருந்து முற்பணம் செலுத்தினேன்.

வங்கிக்கு விண்ணப்பிக்கத் தயாரானபோது ,  நாட்டில்  தொடங்கிய Recession நெருக்கடியினால் எனது வேலையை இழந்தேன்.  எனது நிலைமையை சொல்வதற்காக  குறிப்பிட்ட Real estate  அலுவலகத்திற்கு ஓடினேன்.

செலுத்திய முற்பணத்தை கேட்டேன். 

அந்த அலுவலர் முதியவர். எனது தோளைத்தட்டி,     “  உனது குழந்தைகளுக்கு ஒரு வீடு வேண்டும்.  கவலைப்படாதே.  வேலை இழந்தால் என்ன, முயற்சி செய். கிடைக்கும்.  Social Security க்குச்சொல். மீண்டும் வேலை கிடைக்கும்வரையில் உதவிப்பணம் வரும்.  வாரம் 150 வெள்ளிகள் மாத்திரம் வாடகையை கொடு. அதற்கு பற்றுச்சீட்டு தருகின்றேன்.   நான் உனது தந்தையின் ஸ்தானத்திலிருந்து சொல்கின்றேன்.  இந்த நல்ல புத்தம் புதிய வீட்டை இழந்துவிடாதே. புதிய வேலை கிடைத்தவுடன்  வங்கியை தொடர்புகொள்    “  என்றார்.

விதியிடமிருந்து எவரும் தப்பமுடியாது.  அந்த வீடுதான் எனக்கென்றால், யார்தான்  என்ன செய்துவிடமுடியும்.

சுவாமி விவேகானந்தர் சொன்னவாறு பிள்ளைகள் பெற்றாயிற்று. புத்தகம் எழுதியாயிற்று.  இனி ஒரு வீடும் வாங்கிவிட்டால் சரிதானே..?!

நான் வேலை தேடும் படலத்தில் இறங்கினேன்.  ஒருநாள் Social Security அலுவலகம் சென்று,  வெளியே வருகின்றேன்.

தொலைக்காட்சி ஒளிப்பதிவு சாதனங்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் எதிர்ப்பட்டு,   “ நான் எவ்வாறு வேலையை இழந்தேன்..?   இனி என்ன செய்யப்போகின்றேன்…?  அடுத்த தேர்தலில் யாருக்கு  வாக்களிப்பேன் ?  “  முதலான கேள்விகளை கேட்டனர்.

பதில் சொல்லிவிட்டு அகன்றேன்.

அடுத்தநாள் Herald sun பத்திரிகையின் நடுப்பக்கத்தில் பலருடைய படங்களுடன் எனது படமும்,  நான் சொன்னதும் வெளியாகியிருந்தது.

ஒரு நண்பர் தகவல் தந்தமையால் குறிப்பிட்ட பத்திரிகையை வாங்கிப்பார்த்தேன். 

முதலில் குறிப்பிட்ட Display Home பற்றி என்மீது அன்பும் அக்கறையும் கொண்டிருக்கும் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் அண்ணரிடம் சொன்னேன்.  அவரும்  வீடு விற்பனை முகவருடன் பேசினார்.

புதியவீட்டுக்கு வாடகை செலுத்தி இடம்பெயர்ந்தோம். 

ஒரு வீட்டை  முதலில்  வாடகைக்கு வாங்கிக்கொண்டு, அதன் பின்னர் வேலையும் தேடிக்கிடைத்தால், வங்கியில் கடன் பெற்று அதனையே வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன்,  மிகவும் அமைதியாக  எனது குடும்பத்துடன் அந்த புதிய வீட்டுக்கு குடிபெயர்ந்தபோது அய்யரும் வரவில்லை.  சமயச்சடங்குகளும் நடக்கவில்லை.

சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் அண்ணரும் அண்ணியும்,  அண்ணரின் பெற்றோரும் வீடு சம்பந்தமான வங்கிக்கடன் விண்ணப்பங்களை தயாரிக்க உதவிய குடும்ப நண்பர் இலேடியஸும் அவரது துணைவி ஶ்ரீகாந்தியும் மற்றும் ஒரு குடும்ப நண்பர் நவரத்தினமும் அவரது துணைவியாரும் வந்தனர்.

ரவீந்திரன் அண்ணரின் அப்பா ஓவியர் செல்வத்துரை அவர்கள் வீட்டு வளவில் ஒரு மரக்கன்றை நாட்டினார். அவரது துணைவியார் பால் காய்ச்சினார்.

புது மனை புகுவிழா இத்துடன்  அமைதியாக எளிமையாக முடிந்தது.

எனது மகனுக்கு மிக்க மகிழ்ச்சி.  அவனால் சுதந்திரமாக ஓடித்திரிய முடிந்தது.  ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணமுடியும் என்பார்கள். அதுபோன்று குழந்தைகளின் சிரிப்பிலும் இறைவனைக்காண முடியும்.

அன்பார்ந்த வாசகர்களே, நீங்கள்  சிவாஜி கணேசன் நடித்து 1956 ஆம் ஆண்டு வெளியான நான்பெற்ற செல்வம் திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா..?

அதில் கவிஞர் கா. மு. ஷெரீப் இயற்றி, ஜி. ராமநாதன் இசையில்  ரி. எம். சவுந்திரராஜன் பாடிய பாடலைக் கேட்டிருக்கிறீர்களா..?

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா …..

வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்

நான் வசித்த மாநிலத்தில் தமிழர் சார்ந்த அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்த ஒரு “ பெரிய கம்பனி “ அன்று  செல்வாக்குடன்  இயங்கியது.  அவர்களை மீறினால், Character assassination நடக்கும். அதனால் சிலர் சூழ்நிலையின் கைதிகளாகவுமிருந்தனர்.

அந்தக்கம்பனிக்கு இசைவாக நடக்காதமையினால்,  என்மீதும் Character assassination நிகழ்ந்தது.  சிரமப்பட்டு ஒரு வீட்டுக்கு குடிபெயர்ந்ததும்,  வேலை இழந்த ஒருவர் எவ்வாறு நான்கு அறைகொண்ட வீட்டுக்கு குடிபெயர்ந்தார்..? என்ற கேள்விக்கு கண், காது , மூக்கு வைத்து கதை சோடித்தனர்.

தந்தையாரின் பூர்வீகம் இந்தியா என்ற செய்தி அக்கதையை சோடிக்கபோதும்தானே..?

இந்திய அரசின்  உதவியுடன் வீடு வாங்கியிருக்கலாம் என்ற கற்பனையில் சிலர் மிதந்தனர்.

இலங்கை தமிழ்ப்பிரதேசங்களுக்குள்  நுழைந்த இந்தியப்படை   மீதுள்ள கோபம், என்னவெல்லாம் பேசவைக்கிறது என மனதிற்குள் சிரித்தேன். 

விக்ரோரியா மாநிலத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராகவிருந்த தில்லை ஜெயக்குமார் பழகுவதற்கு இனியவர்.  தமது பாதையில் என்னையும் அழைக்க விரும்பினார்.  அவரைப்போன்ற கண்ணியமான மனிதர்கள் இந்த நாட்டில் இருந்தமையால்தான், பிரான்ஸ் உட்பட சில ஐரோப்பிய நாடுகளில் நடந்த பெரிய கம்பனியின் வன்செயல்கள் இடம்பெறவில்லை.

அவுஸ்திரேலியா கடல் சூழ்ந்த கண்டம்.  அதனால், வன்செயல் புரிந்துவிட்டு தப்பிச்செல்ல முடியாது.

ஐரோப்பா கண்டத்தில் அது சாத்தியம். 

இங்கே பெரிய கம்பனிக்காரர் சிலரால்  Character assassination மாத்திரமே செய்யமுடிந்தது.

காலம் அவர்களையும் மாற்றியது. என்னையும் மாற்றியது.  ஆனால்,  நினைக்கத் தெரிந்த மனதால் மறக்கவும் தெரியவில்லை. அதனால் இந்த சுயசரிதைத் தொடரில் சொல்லவேண்டியவற்றை பதிவுசெய்கின்றேன்.

எனது மகனின் சுட்டித்தனங்களினால்,  நான் எனது எழுத்து வேலைகளை இரவில் அவன் உறங்கிய பின்னரே மேற்கொண்டேன்.  அவ்வாறு ஒரு நாள் இரவு 11 மணிக்குப்பின்னர் லண்டன் இதழ் ஒன்றுக்கு ஆக்கம் அனுப்புவதற்காக நான் எழுதிக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவத்தை இங்கே பதிவுசெய்கின்றேன்.

எனது சொல்ல மறந்த கதைகள் நூலிலும் இந்தப்பதிவு இடம்பெற்றது.  அதனை படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம்.

ஈழத்தமிழர் தாயகத்தில் மட்டுமல்ல,  அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வழக்கமாகச் சொல்லப்படும் ஒரு வார்தைப் பிரயோகம்: “சும்மா பேக்கதை கதையாதை...”
இந்தப்பேச்சுவழக்கு தமிழகத்திலிருக்கிறதா என்பது தெரியவில்லை.


அதென்னபேக்கதை?
பேய்க்கதைதான் காலப்போக்கில் பேக்கதையாக மருவியதா? “பேயன்” என்ற சொல்லும் எம்மவரிடம் வழக்கத்திலிருக்கிறது. சுந்தரமூர்த்திநாயனார் சிவபெருமானை ‘பித்தா’ என விளித்து தேவாரம் பாடினார்.
பித்தன் - பேயன் இரண்டு சொல்லும் ஒரே கருத்தைக்கொண்டவையா? என்பதை தமிழ்கற்றுத்தேர்ந்த பண்டிதர்கள்தான் சொல்லவேண்டும்.
பேய்க்கதைகள் தமிழர்களிடம் மட்டுமல்ல மேல்நாட்டினரிடமும் ஏராளம் இருக்கின்றன. ஊடகங்கள் திரைப்படங்களும் பேய்க்கதைகளுக்கு நல்ல களம் கொடுத்துள்ளன. இரவில் தொலைக்காட்சிகளில் பேய்க்கதைகளை ஆவியுலகக்கதைகளைப்பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதன்பின்பு சில நாட்களுக்கு இரவில் தனியே உறங்குவதற்கும் பயப்படுவார்கள். பேய்கதைகளைக்கொண்ட திரைப்படங்களை கண்டுகளிப்பதும் ஒருவகையில் திகில் அனுபவம்தான். திரில்லர் படங்கள் அத்தகைய அனுபவங்களை தரவல்லவை.

பேய்க்கதைகள் சொல்லும் நாவல்கள்,  சிறுகதைகளும் அப்படியே.

தமிழில் நான் அறிந்தவரையில் சுஜாதா, ஜெயமோகன், செங்கை ஆழியான் முதலானோர் பேய்க்கதைகள் எழுதியிருக்கிறார்கள்.

ஜெயமோகனின் நிழல்வெளிக்கதைகள், செங்கை ஆழியானின் இரவுநேரப்பயணிகள் தொகுப்புகளில் அத்தகைய கதைகளை காணலாம். ஆங்கில வாசகர்களுக்கும் பேய்க்கதைகள் நல்ல பரிச்சியமானவை. ட்ரகுலா வகையறா திரைப்படங்களை சிறுவயதில் வீட்டுக்குத்தெரியாமல் நண்பர்களுடன் மெட்னிஷோவில் பார்த்திருக்கின்றேன்.

 

எனது வாழ்வில் நடந்த பல உண்மைச்சம்பவங்கள் இன்றுவரையில் அவிழ்க்கமுடியாத முடிச்சுகளாக மர்மக்கதைபோன்று நினைவிலிருக்கின்றன. நம்பினால் நம்புங்கள். இது நடந்த கதைதான்.

 கணினி,  மின்னஞ்சல்,  செல்போன் இல்லாத காலத்தில் நடந்தது..

கடிதங்களையும் இலக்கியப்படைப்புகளையும் கையால் எழுதி தபாலில் அனுப்பிக்கொண்டும், பதில்களையும் படைப்புகள் பிரசுரமான இதழ்களையும் தபாலில் எதிர்பார்த்துக்கொண்டுமிருந்த காலத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் பற்றி,  நண்பர்கள்,  உறவினர்களுடனான கதையளப்பின்போதும், ஆவிகள், பூர்வஜன்மம், மறுபிறவி பற்றியெல்லாம் ஆய்வுசெய்யும் தருணங்களிலும் எப்படியோ எங்கள் பெரியம்மாவின் கதையையும் மறக்காமல் சொல்லிவிடுவேன்.

 

 இந்தக்கதை  நான் சென்ற நாடுகளில் சந்தித்த நண்பர்கள் உறவினர்களிடமெல்லாம் பொழுதுபோக்குக்காக சொல்லப்பட்ட கதைதான்.

 ஆனால் அந்தப்புரியாத புதிரின் முடிச்சு அவிழ்க்கப்படவில்லை. கதையை கேட்பவர்கள் ஒன்றில் அந்த முடிச்சை அவிழ்ப்பதாக பாவலா காட்டுவார்கள். அல்லது முடிச்சை மேலும் இறுக்கிவிட்டுச்செல்வார்கள்.

 அதனால் அந்த அவிழ்க்கமுடியாத புதிர் என் வாழ்வோடு தொடருகிறது.

அவுஸ்திரேலியாவில் எத்தனையோ இரவுகள் என்னைக்கடந்து சென்றுவிட்டன. தொடர்ந்தும் இரவுகள் கரைந்து பொழுதும் விடிகிறது.

 ஆனால் அந்த சுவாரஸ்யமான இரவு மறக்கமுடியாத கனவுபோன்று நினைவில் சஞ்சரிக்கிறது.

 மனைவி, பிள்ளைகள் உறக்கத்திற்குச் சென்ற பின்னர்தான் எழுதும், வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கியிருந்த காலம். ஏனையநேரங்களில் எனது மகன் விடைதெரியாத வினாக்களையெல்லாம் கேட்டு ஒரேசமயத்தில் சினத்தையும் சிரிப்பையும் ஊட்டுவான்.

 அவனுக்கு நான் உணவூட்;டும்போது, அவன் எனக்கு வினாக்களை விடுத்து விடை கிடைக்கும் வரையில் அவன் ஊட்டிய சுவாரஸ்யங்களையே ஒரு தொகுப்பாக எழுத முடியும்.

 

 அவனுக்கும் அக்காமாருக்கும் இடையில் தோன்றும் வாதப்பிரதிவாத சச்சரவுகளையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவந்து உறங்கவைக்கும் தாய்க்கு அதுவே களைப்பாகி அவளும் பிள்ளைகளுடன் நித்திராதேவியுடன் சங்கமமாகிவிடுவாள்.

 அன்றும் அவர்கள் உறங்கும் வரையில் காத்திருந்து,  கதிரையை மேசையருகே இழுத்து எடுத்துக்கொண்டு லண்டனிலிருந்து வெளியாகும் ஒரு இதழுக்காக எழுத அமர்ந்தேன்.

 இரவு பதினொரு மணியிருக்கும். எழுதிக்கொண்டேயிருந்தேன். நான் எழுதிக்கொண்டிருக்கும் அறையில் மாத்திரம் மின்வெளிச்சம்.  படுக்கை அறை, சமையலறை, குளியலறை யாவற்றிலும் மின்வெளிச்சம் அணைக்கப்பட்டிருந்தது.

 சுவர்ப்பக்கமாக மேசை. அதன் முன்பாக நான் அமர்ந்து எழுதும் கதிரை. எனக்குப் பின்னால் யாரோ வந்து சென்றதுபோன்ற அமானுஷ்ய உணர்வு. 

 எழுதுவதை நிறுத்திவிட்டு திரும்பிப்பார்த்தேன். எவரும் இல்லை. மீண்டும் விட்ட இடத்திலிருந்து எழுத்தைத் தொடர்ந்தேன். ஆனால் எழுத முடியவில்லை. சிந்தனை ஒருகணம் தடைப்பட்டது.

 

 யார் வந்து எட்டிப்பார்த்தது?

கதிரையை விட்டு எழுந்தேன். சமையலறை, குளியலறையெல்லாம் சென்று பார்த்தேன். எவரும் இல்லை.

 வீட்டின் வாசல் கதவண்டை சென்று பார்த்தேன். கதவு பூட்டியே இருந்தது. படுக்கை அறையிலிருந்து மனைவி முணகும் சத்தம் மென்மையாக வந்தது.

 கனவு கண்டு பிதற்றுகிறாளாக்கும்.

அந்த அறைக்குள் சென்று சுவிட்சைப்போடுகிறேன்.

‘லைட்டை அணையுங்கள். யாரோ ஒரு கிழவி என்னை வந்து அழைக்கிறாள். எனக்கு பயமாக இருக்கிறது.’

‘ என்ன கனவு காண்கிறாயா?’- கண்களை இறுக மூடியவாறு உறக்கத்திலிருந்து பிதற்றுபவளை தட்டிக்கேட்கிறேன்.

‘ கனவு இல்லை. நிஜம். எனக்கு தண்ணீர் தாருங்கள்.’

சமையலறைக்குச்சென்று டம்ளரில் தண்ணீர் எடுத்துவந்து கொடுக்கிறேன். குடித்துவிட்டு திரும்பிப்படுத்துவிட்டாள்.

 நான் அந்த அறை லைட்டை அணைத்துவிட்டு, மீண்டும் வந்து எழுத்தை விட்ட இடத்திலிருந்து தொடருகிறேன். இரண்டு வரிகளுக்கு மேல் எழுத முடியவில்லை.

மீண்டும் எழுந்துசென்று கதவுகள், யன்னல்கள் ஒழுங்காக மூடப்பட்டிருக்கிறதா என்பதை பார்த்து உறுதிசெய்துகொள்கின்றேன்.

 நானும் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துகின்றேன். கதிரையில் அமர்ந்தாலும் எழுத முடியாத தயக்கம். எழுத்தை தொடராமல் பாதியில் நிறுத்திவிட்டு வந்து படுக்கிறேன்.

தூக்கம் வரவில்லை.

 அருகில் அவள் எந்தப்பிதற்றலும் இல்லாமல் உறங்குகிறாள். பிள்ளைகளும் ஆழ்ந்த உறக்கம்.

 மனைவிதான் ஏதும் கெட்ட  கனவுகண்டு பிதற்றியிருந்தாலும், நான் ஏன் அமானுஷ்ய சக்தியினால் எழுதுவதை நிறுத்திவிட்டு எழுந்தேன். மீண்டும் மீண்டும் அந்தக்கணங்கள்தான் நினைவுப்பொறிக்குள் அலைமோதியது.

 

 அந்தக்கணங்கள், எழுந்து வீட்டை உட்புறமாக இரண்டு தடவை சுற்றியது,  யன்னல்,  கதவுகளைப்பார்த்தது,  மனைவியின் பிதற்றல், தண்ணீர் டம்ளர்,  நான் உறக்கமின்றி தவித்தேன். நல்லவேளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. வேலைக்குச்செல்வதற்காக வேளைக்கே எழுந்திருக்கவேண்டிய அவசியமில்லை.    

 எத்தனை மணிக்கு நித்திராதேவி என்னை அணைத்தாள் என்பது தெரியாது.

எனக்கு முன்பே வீடும் குடும்பமும் விழித்துக்கொண்டன. பிள்ளைகளின் வாக்குவாதம் சச்சரவுகளை தீர்த்து வைக்கும் பிரயத்தனத்துடன், மனைவி சமையலறையில் காலை உணவை தயாரிக்கும் ஓசை கேட்கிறது.

  தான் பார்க்கவேண்டிய ரி.வி. சனலை பார்க்கவிடாமல் சின்னக்கா தடுப்பதாக கத்திக்கொண்டுவந்து என்னைத்தட்டி எழுப்பி முறைப்பாடு வைக்கிறான் மகன். அதன் பிறகு எப்படி உறங்க முடியும்.

 சமையலறைக்குச்சென்று தேநீர் அருந்தியவாறு முதல் நாள் இரவு நான் எதற்காக கதிரையை விட்டெழுந்தேன் என்பது இன்னமும் புரியவில்லை என்று மனைவிக்குச்சொன்னேன்.

 “ யாரோ ஒரு கிழவி வந்து அழைத்ததாகச்சொன்னாயே… அப்படி என்ன கனவு கண்டாய்?” – என்று கேட்டேன்.

 “கனவு இல்லையப்பா? ஒரு வயதுபோன அம்மாதான்… கிட்டத்தட்ட உங்கட பெரியம்மாவைப்போல இருக்கும். வா…வா…போவோம். என்றார்கள். எங்கே கூப்பிடுகிறீர்கள். நான் அவுஸ்திரேலியாவிலல்லவா இருக்கிறேன். எப்போது நீங்கள் இங்கே வந்தீர்கள்?” என்று கேட்டேன். அது கனவா நனவா என்பதுதான் புரியவில்லை.

 “ சரி…பிறகு என்ன நடந்தது?”

 “ நான் போகப்போறேன். நீ வராவிட்டால் பரவாயில்லை” எனச்சொல்லிவிட்டு வாயை கோணலாக இழுத்து வழுப்பங்காட்டிவிட்டு மறைந்துவிட்டார்கள். பெரியம்மாவைப்போலத்தான் இருந்தா”

 

 அதற்குமேல் நான் அந்தக்கதையைத்தொடரவில்லை.

சுமார் பத்துநாட்கள் கழித்து எனது அம்மாவிடமிருந்து வந்த கடிதம் அந்தச்சோகச்செய்தியை பதிவுசெய்திருந்தது.

பெரியம்மா இறந்துவிட்டார்கள்.

என்மீதும் என் மனைவி பிள்ளைகள் மீதும் பாசத்தைப்பொழிந்த அந்தப் பெரியம்மா கடின உழைப்பாளி.

 அவர்களின் கணவரான எங்கள் பெரியப்பா பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இலங்கைக்கு சுதந்திரத்தை எழுதிக்கொடுத்த பிரிட்டிஷ்காரன் அவருக்கு ஓய்வூதியம் கிடைக்க வழிசெய்யாதது மட்டுமல்ல இன்றைய தேசிய இனப்பிரச்சினைக்கும் வழிசொல்லாமல் போய்விட்டான்.

 கல்வி அறிவே இல்லாத பெரியம்மா, ஐந்து பெண்களும் ஓரே ஒரு ஆண் மகனும் உள்ள பெரிய குடும்பத்தை தோசை சுட்டும்  இடியப்பம் அவித்தும் விற்று வருவாய் தேடி காப்பாற்றியவர். சிறுகச்சிறுக சேமித்து ஒவ்வொரு பெண்ணையும் கரைசேர்த்தவர். அந்தப்பெண்கள் தத்தம் கணவர் பிள்ளைகள் சகிதம் கொழும்பு வாசியானார்கள். மகனோ எந்தப்பொறுப்பும் இன்றி நாளோரு வேலையும் பொழுதொரு வண்ணமுமாக வாழ்ந்தவன். பெரியப்பா இறந்த பின்பும் தனது உழைப்பை நம்பியே வாழ்ந்த பெரியம்மா, முடியாத காலத்தில் எங்களிடமும் தஞ்சமடைந்திருக்கிறார். ஆனால் அதிக நாட்கள் நிற்கமாட்டார். மக்கள் பேரப்பிள்ளைகளைப்பார்க்க கொழும்பு சென்றுவிடுவார்.

 எனது குடும்பம் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டபோது கூடுதலாக அழுது கண்ணீர் விட்டது பெரியம்மாதான்.

 இனி எப்போது உங்களையேல்லாம் பார்க்கப்போகிறேன் என்று கதறி அழுது மனைவி,  பிள்ளைகளை கட்டி அணைத்து விடைகொடுத்தார்.

 அந்தப்பெரியம்மா இறந்துவிட்டதாக அம்மாவின் கடிதம் செய்தி சொல்கிறது.

கடிதத்தை ஊன்றிக்கவனிக்கின்றேன்.

 பெரியம்மா இறந்த திகதி நேரம் யாவும் எழுதப்பட்ட கடிதம்.

அவுஸ்திரேலியா நேரத்தை இலங்கை நேரத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கின்றேன்.

 சரிதான்…. அன்று இரவு பெரியம்மா வந்தது விடைபெற்றுச்செல்லத்தான். பெரியம்மாவின் பெயரும் செல்லம்தான்.

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்.

 நம்பினால் நம்புங்கள்.

என்னை கதிரையை விட்டு எழுப்பிய அமானுஷ்ய சக்தி செல்லம் பெரியம்மாதான் என்ற முடிவுக்கு வந்தேன்.

 

( தொடரும் ) 


No comments: