எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 19 ஊடகங்களில் வெளிவராத செய்தி அறிக்கை ! எதிரிக்கு எதிரி நண்பரானால் அதன் பலன் யாருக்கு….? ! முருகபூபதி


எமது தாயகம் இலங்கையில் சமகாலத்தில் தோன்றியிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியில் அனைத்து மக்களும் சிக்கியிருக்கும் இவ்வேளையில் அயல்நாடான இந்தியாவும், அண்டை மாநிலமான தமிழகமும் உதவிவருகின்றன.

இந்த வாரமும் தமிழகத்திலிருந்து நிவாரண உதவிகள் கப்பல் மார்க்கமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அத்துடன், சுமார் நான்கு மணிநேரம் குறுகியகால  அவசரப் பயணமாக வந்து திரும்பியிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவையும் தனித்தனியாக சந்திந்து,  இலங்கை எதிர்நோக்கியிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்“  எனக்கூறியுள்ளனர்.

இவ்விடத்தில்  பின்னோக்கிப்பார்த்து, இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் ( இரண்டாம் பாகம் ) 19 ஆவது அங்கத்திற்குள் பிரவேசிக்கின்றேன்.

அரசியல்வாதியும் வியாபாரியும்  ஆதாயத்தை எதிர்பார்த்திருப்பார்கள்.  சமகால இலங்கை நெருக்கடியிலும் இதனை அவதானிக்க முடியும்.

ஆனால், ஊடகவியலாளர்கள் மக்களுக்கு சரியான செய்தியை வழங்கவேண்டியவர்களாக இருப்பார்கள்.  ஊடகங்களில்


வெளியாகும் செய்திகளிலிருந்தே மக்களும் முடிவுக்கு வருகிறார்கள்.

அதே சமயம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார பீடத்திலிருப்பவர்களினால் ஊடகங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும்போது, மக்களிடம் செல்லவேண்டிய உண்மைச்செய்திகளும் தடுக்கப்பட்டுவிடும்.

இன்று இந்தியாவினதும், தமிழ்நாட்டினதும் தாராள உதவிகளை பெற்றுவரும் இலங்கையர்கள், குறிப்பாக பெரும்பான்மை இனத்தவர்கள் அன்றைய 1987 – 1988 – 1989 காலப்பகுதிகளை திரும்பிப் பார்ப்பார்களா..?

வடமராட்சியில் 1987 ஆம் ஆண்டு அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் உத்தரவுக்கு அமைய குண்டுகள் பொழியப்பட்டு, மக்கள் அல்லல்பட்டபோது, இந்தியா விமானம் மூலம் உணவுப்பொட்டலங்களை வழங்கியது.

அன்று தமிழ் மக்களுக்கு அபயக்கரம் நீட்டிய இந்தியாதான் இன்று முழு இலங்கைக்கும் நேசக்கரம் நீட்டியிருக்கிறது.


அண்டை நாட்டுடன் நாம் நேசத்துடன் இருக்கவேண்டிய தேவை இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதலே உணரப்படுகிறது.   அதற்கு முன்பே இந்திய தமிழ்க்குடிமக்கள் பிரித்தானியரால்  கடல் மார்க்கமாக அழைத்துவரப்பட்டனர். மன்னாரில் அவர்களை இறக்கி, மாத்தளை ஊடாக மலையகத்திற்கு அனுப்பி கோப்பி, தேயிலை, ரப்பர்,கொக்கோ பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வாழ்ந்த அந்த மக்களின் வாக்குரிமை மட்டுமல்ல, அவர்கள்  இங்கே தொடர்ந்து வாழும் உரிமையும் மறுக்கப்பட்டனர். அதற்காக ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன.

மலையக தோட்டத் தொழிலாளர்கள் ஒப்பாரிக்கோச்சிகளில் ஏற்றப்பட்டு திருப்பியனுப்பப்பட்டனர். இந்த வரலாற்றுப் பின்னணிகளுடன்தான் இலங்கைத்  தமிழ் அகதிகளும் தமிழகத்தில் அடைக்கலம் தேடி படகுகளில் பயணித்தனர். அவ்வாறு சென்றவர்களை தமிழகம் வரவேற்று அடைக்கலம் வழங்கியது. இந்தக்கதை சமகாலத்திலும் தொடருகின்றது.

அன்று படகுகளில்  இந்தியத் தமிழர்கள் இலங்கைக்கு அழைத்து


வரப்பட்டபோது, அவர்களை கள்ளத்தோணிகள் என்றார்கள். 1983 கலவரத்தின் பின்னரும், 2009 இறுதி யுத்தத்தின் பிறகும், 2022 சமகால பொருளாதார நெருக்கடியை யடுத்தும் வடக்கு கிழக்கிலிருந்து அங்கே படகுகளில்  செல்பவர்களை தமிழகத்தில் எவரும் அவ்வாறு அழைப்பதில்லை.

முப்பத்தியைந்து  வருடங்களுக்கு முன்னர் 29-09-1987 ஆம் திகதியன்று கொழும்பில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானபோது, தென்னிலங்கையில் பேரினவாதிகள் அதனை இந்திய விஸ்தரிப்பு வாதம் என்றனர்.  சோஷலிஸம் பேசிய மக்கள் விடுதலை முன்னணி இந்திய இறக்குமதி  உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு  முதலானவற்றை பகிஷ்கரிக்கவேண்டும் என்று குரல் எழுப்பியது.

இன்று சரித்திரம் வேறு ஒரு திசையில் திரும்பியிருக்கிறது.

அன்று 1987 ஒபந்தத்தையடுத்து,  இந்தியாவின் பிரவேசத்தை முற்றாக விரும்பாத பிரதமர் பிரேமதாச, ஜனாதிபதியானதும் உதிர்த்த வார்த்தைகள் பல. அதில், “ My boys “ என விடுதலைப்புலிகளை விளித்தது பிரபல்யமானது ! அவர்களுக்கு அழைப்புவிடுத்து, உல்லாச விடுதிகளில் தங்கவைத்து  பேச்சுவார்த்தை நடத்தினார்.


அதற்கு அடிப்படையாக விளங்கியது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கருத்தியல்தான். அரசியலில் இதுவும் ஒரு நடைமுறைதான். இந்தியாவை எதிர்த்த விடுதலைப்புலிகளின் கோட்டில்தான் பிரேமதாசவும் இணைந்தார். அந்த இரண்டு தரப்பும்  அரசியல் ஆதாயத்துடன்  அன்று சந்தித்தன. அதற்கான முழுச்செலவையும் அன்றைய பிரேமதாசவின் அரசே பொறுப்பேற்றது.  அது மக்களின் வரிப்பணம். 

விடுதலைப்புலிகளுடன் பின்னர் முரண்பட்ட அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தின   ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில்,  “ நாம் அன்டன் பாலசிங்கத்தை மாத்திரமல்ல, அவரது Bar Maid யும் உபசரித்தோம்“  என்று ஏளனமாகச் சொன்னார்.

1991 மார்ச் மாதம் ரஞ்சன் விஜேரத்தினவும் 1993 மே மாதம் பிரமேதாசவும் விடுதலைப் புலிகளினாலேயே குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர். இவர்களுடன் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐம்பதிற்கும் அதிகம் !

எதிரிக்கு எதிரி நண்பர்களாக விளங்கியவர்களினால் யாருக்கு நன்மை விளைந்தது..?

இந்த முன்கதைச்சுருக்கத்துடன், 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா


தலைநகரம் கன்பராவில் அமைந்த Hyatt Hotel  இல் நடந்த ஒரு முக்கியமான சந்திப்பு பற்றி நினைவூட்டுகின்றேன்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பதட்டம் ஈழத்தமிழர்களின் நலன் குறித்து அக்கறை கொண்டிருந்த பலரிடம் உருவாகியிருந்தது.  அந்தப்பலர் ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டிருந்தார்கள்.  இந்தியப்படையும் இலங்கையில் பிரவேசித்திருந்த காலம்.

அப்போது இந்திய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ், தென்னாபிரிக்கா தொடர்பான விவகாரங்களை ஆராயும் கொமன்வெல்த் நாடுகளின் மகாநாட்டிற்காக அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்து, கன்பரா Hyatt Hotel  இல் தங்கியிருந்தார்.

அவ்வேளையில் சட்டத்தரணி ரவீந்திரன் அண்ணர். தனக்கிருந்த இந்திய தூதரக அதிகாரிகளின் நட்புறவினால், அமைச்சர் நரசிம்மராவுடன் பேசுவதற்கு நேரம் கேட்டிருந்தார். அப்போது அவரது அலுவலகம் நான் வசித்த Brunswick இல் சிட்னி வீதியில் அமைந்திருந்தது.


தான் நரசிம்மராவை சந்திக்கச் செல்லவிருப்பதாகவும் எமது மக்கள் குரல் ஆசிரிய பீடத்திலிருந்து யாரேனும் வந்தால் தம்முடன் வரலாம் என்று அழைத்தார். இதுபற்றி என்னுடன் உரையாடினார்.  எமது இதழின் ஆசிரிய பீடத்தை சேர்ந்தவர்களில் நான் உட்பட எவருக்கும் நேரம் ஒதுக்க முடியாதிருந்தது.

நான் தொடர்ந்தும் இங்கே நிரந்தர வதிவிட அனுமதியின்றி இருந்தமையால், இதுபோன்ற அரசியல் சார்ந்த சந்திப்புகளில் நேரடியாக ஈடுபடாமலிருந்தேன். இறுதியில் எமது நண்பர் கொர்னேலியஸை ரவீந்திரன் அண்ணருடன் அனுப்பத் தீர்மானித்தோம்.

அண்ணர் விக்ரோரியா தமிழ்ச்சங்கத்தின் பிரதிநிதிகளையும் அழைத்தார். அவர்கள் எப்படி வருவார்கள்…?  அவர்கள்  “ பெரிய கம்பனி  “ யின் அனுமதியை பெறவேண்டுமே…!

இலங்கையில் ஜனாதிபதி பிரேமதாச பெரிய கம்பனியின் பிரதிநிதிகளை தங்கத் தாம்பாளத்தில் ஆராத்தி எடுத்து அழைத்து கலதாரி மெரிடினில்  தங்கவைத்து உபசரித்துக்கொண்டிருக்கும்போது,  இங்கே அவர்களின் பினாமிகள் எவ்வாறு இந்திய வெளியுறவு அமைச்சரை சந்திக்க வருவார்கள்…?

இறுதியில் நரசிம்மராவை சந்திப்பதற்காக ரவீந்திரன் அண்ணரும் நண்பர் கொர்னேலியஸும் சிட்னியிலிருந்து தமிழ் மனித உரிமைகள் அமைப்பினைச்சேர்ந்த கணக்காளர் துரைசிங்கமும் கன்பராவிலிருந்த எழுத்தாளரும் நாடகக்கலைஞரும் சமூக ஆர்வலருமான ஏர்ணஸ்ட் மெக்கிண்டாயரும் சென்றனர்.

அவர்கள் அச்சந்திப்புக்கு செல்லுமுன்னர் மெல்பன் பிரதிநிதிகள் அங்கு என்ன பேசவேண்டும் என்று எனக்கு வகுப்பு எடுத்தவர் நண்பர் இராஜரட்ணம் சிவநாதன்.

அன்று அதிகாலை ஐந்து மணிக்கு நான் வேலையால் திரும்பியதும்


நண்பர் கொர்ணேலியஸுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் முன்னர் இலங்கையில் தமிழ் மக்கள் உரிமைகள் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டமையால் கைதாகி சிறையிலும் தடுத்துவைக்கப்பட்டவர்.  எமது விக்ரோரியா தமிழ் அகதிகள் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினர்.  சிவநாதன் சொன்னவற்றை கொர்ணேலியஸிடம் சொன்னேன்.

அதிகாரப்பகிர்வு தொடர்பாகவே அந்த சந்திப்பில் வலியுறுத்திப்பேசவேண்டும் என்று சிவநாதன் சொல்லியிருந்தார்.

எம்மூவருக்கும் இடையிலான அந்தத் தொலைபேசி உரையாடல் அதிகாலை ஐந்து மணியளவில் நடந்தது.

ரவீந்திரன் அண்ணர் கன்பரா சந்திப்பு முடிந்து திரும்பியதும் அவரது அலுவலகம் சென்று சந்தித்தேன்.  நடந்தவற்றை கேட்டு குறிப்புகளை எழுதிக்கொண்டு திரும்பினேன்.

தாமதிக்காமல் வீரகேசரி பொது முகாமையாளர் எஸ். பாலச்சந்திரன், பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச் செல்வன், மற்றும் அலுவலக நிருபர் அன்டன் எட்வர்ட் ஆகியோருடன் கன்பரா சந்திப்பு பற்றிச்சொன்னேன்.

பாலச்சந்திரன், முழுச்செய்தியையும் அறிக்கையாக எழுதி தனக்கு Fax இல் அனுப்புமாறும், அதனை வீரகேசரியில் வெளியிடுவதாகவும் சொன்னார். அவரிடம் Fax இலக்கங்களை பெற்றுக்கொண்டு, ரவீந்திரன் அண்ணர் தந்த குறிப்புகளை ஆதாரமாக வைத்து அந்த செய்தி அறிக்கையை எழுதினேன். மாலை ஐந்து மணிக்கு நான் வேலைக்குச்செல்லவேண்டும்.

அதற்கிடையில் அதனை எழுதி, மீண்டும் ரவீந்திரன் அண்ணரிடம் காண்பித்துவிட்டு, அவரது அலுவலகத்திலிருந்தே வீரகேசரிக்கு Fax இல் அனுப்பவேண்டும்.

அவ்வாறே செய்தேன்.

அந்த அறிக்கை இன்னமும் எனது கைவசம் எனது கையெழுத்திலேயே இருக்கிறது.  அதனால், இன்று 33 வருடங்களுக்குப்பின்னரும் அதனை  இங்கு எழுத முடிகிறது.

அந்தச்செய்தி அறிக்கை :

 “ இலங்கை தமிழ் மக்களின் உரிமைக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கப்பட்டு வட, கிழக்கு மாகாண சபை இடையூறு எதுவுமின்றி இயங்க உறுதியான நிலை தோன்றும் பட்சத்தில் இந்திய இராணுவம் முற்றாக வெளியேறிவிடும் 

இவ்வாறு இந்திய வெளியுறவு அமைச்சர் திரு. பி.வி.  நரசிம்மராவ் அவுஸ்திரேலியாவில் வைத்து தெரிவித்தார்.

தென்னாபிரிக்கா தொடர்பான விவகாரங்களை ஆராயும் கொமன்வெல்த் நாடுகளின் மகா நாட்டிற்காக வருகை தந்த அமைச்சர்,  இங்குள்ள இலங்கை தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுவிடமே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 “ பிரபாகரனும் புலிகள் இயக்கத்தினரும் தனது பிள்ளைகள் என இலங்கை அதிபர் பிரேமதாச கூறுகிறார். அதனால், இந்திய அரசு நேரடியாக இலங்கை அரசுடன் புலிகளின் நிலைப்பாட்டைப்பற்றி பேசுவதுதான் பொருத்தமானது  “ எனவும் திரு. நரசிம்மராவ் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது : -

 “ வாருங்கள்  “ என அழைக்கும்போது வருவதற்கும் செல்லுங்கள் என துரத்தும்போது ஓடுவதற்கும் இந்தியா ஒன்றும் எடுபிடி ஆள் அல்ல. இந்தியா,  இலங்கை தமிழ் மக்களின் பாதுகாப்பை முற்றாக கருத்தில்கொண்டுதான் இலங்கை தமிழ் பகுதிகளுக்குள் தனது படைகளை அனுப்பியது. இந்தியாவின் பாதுகாப்புக்காகத்தான் படைகளை அனுப்பினோம் என்ற கூற்று அபத்தமானது.

பிரபாகரன் – ஜே. ஆர். மற்றும் தமிழ் மக்களின் ஆதரவின்றி இந்தியப்படைகள் அனுப்பப்படவில்லை.

இந்தியப்படைகள் பிரவேசித்தபோது சிங்களப்பகுதிகளில் எவ்வளவு விரோத மனப்பான்மைகள் உருவாகின என்பது தெரியாததல்ல.  ஆனாலும் தமிழ் மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, இலங்கையுடனான நல்லுறவை தொடர்ந்தும் பேணவேண்டும் என்ற அடிப்படையிலேயே காரியங்களை செய்யக்கூடியதாக இருந்தது.

புலிகள் இயக்கத்தை அழிப்பதற்காகத்தான் வட, கிழக்கில் எமது படைகள் நுழைந்ததாக எவரும் கூறினால், அது அரசியல் விவேகமற்ற பேச்சு. வடமராட்சி தாக்குதல்களை தொடர்ந்து அமைச்சர் லலித்,  அப்பகுதியை இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இன்னும் சில தினங்கள் கொடுக்கப்பட்டிருப்பின் இலங்கைப்படைகள் யாழ். குடாநாட்டின் ஏனைய பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பின்பு புலிகளை வேட்டையாடி பொது மக்களையும் அழித்திருப்பார்கள். புலிகளுக்கும் தெரிந்திருந்த இராணுவ நிலைப்பாட்டின் உண்மையும் அதுதான். அத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் பிரபாகரனின் அழைப்பை ஏற்றே முடிவுகள் அமைந்தன.

புனர்வாழ்வு

வேண்டுமானால், அந்த அழைப்பையும் நிராகரித்து இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் அழித்த பின்பு நாம் யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசித்திருக்கலாம்.  புலிகள் அழிந்தபின்னர், எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி எம் கரங்களில் கறை படாமல் ஏனைய இயக்கங்களையும் அங்கு காலூன்ற வைத்திருக்கலாம்.  அவ்விதம் செய்யாமல், பிரபாகரனையும் புலிகளையும் காப்பாற்றும் நோக்குடனேயே நாம் வந்தோம்.

டில்லியிலிருந்து பிரபாகரனை அனுப்பியபோது அவரை தமிழ்பகுதிகளின் முதலமைச்சராகத்தான் அனுப்பினோம். அதற்குரிய மரியாதைகளுடன் அவர் தனது தளபதிகளுடன் பேசுவதற்கும் போராளிகளுக்கு புனர்வாழ்வு கொடுக்கவும் முன்வைத்த திட்டங்களையும் ஏற்றுக்கொண்டிருந்தோம்.

இவை இலங்கை அரசுக்கு பிடித்தமான செயல்களாக இருக்கவில்லை.

தமிழ் ஈழம் உருவாவதற்கு இந்தியா தடையாக இருக்கிறது என்றும் பிரசாரம் செய்யப்படுகிறது.

தமிழ் ஈழம் ஒன்றை ஈழத்து தமிழ் மக்கள் அமைத்துக்கொள்வார்களேயானால் அதற்கு இந்தியா முட்டுக்கட்டையாக இருக்காது.  40 வருட அரசியல் போராட்டத்திலே தமிழ் மக்கள் சம்பாதித்துக்கொண்டதும் சாதித்துக்கொண்டதும் என்ன…?

அகதிகளாக தமிழ் நாட்டுக்கு ஓடிவந்ததுதானே  கண்ட பலன்.

எனவே, 40 வருட அரசியல் வாழ்வில் பெற்றுக்கொள்ள முடியாததை ஒரு வருடகாலத்தில் சிங்கள மக்களிடமிருந்து முழுமையாக பெற்றுத்தந்துவிடலாம் என தமிழ் மக்கள் எண்ணக்கூடாது.

உங்களுக்கு சிங்களத் தலைவர்களது போக்குத் தெரியும்.  கல்லிலே நார் உரிப்பது போல கொஞ்சம் கொஞ்சமாகத்தான் காரியங்களை சாதிக்கவேண்டியுள்ளது.

அதற்காக பேச்சுவார்த்தை நடத்தும்போது இந்தியா ஒரு நாடு என்றும் இலங்கை இன்னுமொரு சுதந்திர அரசு என்றும் சர்வதேச பண்பாட்டின் அடிப்படைகளையே இந்தியா கருத்தில் கொள்கிறது.

புரிந்துணர்வு

தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. ஆனால், சிங்கள அரசின் மரியாதைக்காக காத்து நின்ற போது  துவக்குச்சோங்கினால் அடிவாங்கிய இந்தியப் பிரதமர் ராஜீவின் உணர்வுகளையும் அதன் மூலம் கொச்சைப்படுத்தப்பட்ட இந்தியாவின் தன்மான உணர்வுகளையும் கூட தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

டில்லியிலிருந்து இலங்கை சென்ற பிரபாகரனின் இத் திடீர் மாற்றத்தின் காரணங்கள் உங்களுக்குத் தெரியுமா…? தெரிந்தால் சொல்லுங்கள் !

இந்தியாவைப் பொறுத்தவரையில் அவரது இயக்கத்தினுள் நிலவிய முரண்பாடுகளினால் ஆயுத ஒப்படைப்பு சரியாக நிறைவேறவில்லை. இந்தப் பின்னணியிலேயே இந்தியப் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தது. தொடரும் சம்பவங்கள் இதனையே வலியுறுத்துகின்றன.

தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கும் வழிவகுத்துவிட்டு வெளியேறுவதுதான் இந்தியாவின் நிலைப்பாடு.

உங்கள் இயக்கங்களிடையே நிலவும் வன்முறைப் போக்குகளையும் குரோதங்களையும் நீங்களும் அறிவீர்கள். வட, கிழக்கில் சில இயக்கங்களை நாம் ஆதரிப்பதாக கூறுகிறார்கள். அது சரியென்று சொன்னாலும், அந்த இயக்கங்களும் – பல பொது மக்களும் தமது உயிர்களுக்கு புலிகளினால் ஆபத்து வருமென்றும் தமக்கு பாதுகாப்பு வேண்டுமென்றும் கூறுகிறார்கள்.

புலிகள் இன்று இலங்கை அரசுடன் பேசுகிறார்கள்.  திரு. பாலசிங்கத்தின் கூற்றைப்பார்த்தால், இந்தியப்படைகள் வெளியேறிய பின்பு தங்களது இயக்கத்தவரின் உயிர்களுக்கு ஏனைய இயக்கங்களினால் ஆபத்து தோன்றக்கூடும் – எனவே அச்சமயம் இலங்கைப் படையின் ஆதரவை கோர வேண்டும் என்ற அர்த்தத்தை புலப்படுத்துகிறது.

சுருக்கமாகச் சொல்வதாயின் ஒவ்வொரு இயக்கமும் ஒன்றையொன்று  பார்த்து பயப்படுகின்றன. பொது மக்கள் இயக்கங்களை பார்த்து பயப்படுகிறார்கள்.

தமிழ் மக்கள், இரண்டு தரப்பினரதும் சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் பேசித் தீர்த்து ஒரு சுமுகமான வழியில் வட, கிழக்கு நிருவாகத்தை ஏற்றுக்கொண்டு, ஆயுத பயத்தை அகற்றிவிட்டால் இந்தியா வௌியேறிவிடும். இலங்கை படைகளின் நடவடிக்கைகளையும் இந்தியா கட்டுப்படுத்தும்.

இயக்கங்களிடையே நிலவும் சந்தேகங்களையும் பொறாமையையும் வெளிப்படையாகப் பார்த்துக்கொண்டு இந்தியாதான் இவைகளை தூண்டுகிறது என்று சொன்னால் அதற்கு அர்த்தம் இல்லை.

இலங்கை அரசின் மூலமாக புலிகளும் மற்ற இயக்கங்களுடன் நேரடியாக பேச முன்வரட்டும். நாம் ஈ. பி. ஆர். எல். எஃப் இயக்கத்தை பேசத்தூண்டுகிறோம். இரண்டு இயக்கங்களும் பேசித்தீர்த்து தமிழ் மக்கள் பயமின்றி வாழ வழியேற்படுமாயின் எங்களுக்கு அங்கே வேலையில்லை. நாம் அகன்றுவிடுவோம்.

இலங்கைக்குள்ளே  ஐம்பதினாயிரம் போர் வீரர்களை வைத்துக்கொண்டுதான் இந்தியா தனது பிரதேச பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலை இந்திய பாதுகாப்பு மந்திரிக்கோ,  அல்லது இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ இல்லை.

1981 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழரின் பிரச்சினைகளை அணு அணுவாக அறிந்தவன் என்ற முறையிலும் தமிழர் விடுதலைக்காக போராடிய குழுக்களின் அபிலாஷைகளை புரிந்துகொண்டவன் என்ற ரீதியிலும் எனது கருத்துக்களை தெரிவிக்கின்றேன்.

தூதுக்குழு

வட, கிழக்கில் தமிழ் மாணவர்களும் இளைஞர்களும் இந்தியப்படையினால் பலவந்தமாக பயிற்சிகளுக்கு அழைக்கப்படுவதனாலும்  அமைதிப்படையினர் தொடர்ந்தும் சிவிலியன்களை தாக்குவதனாலும் அங்கு பதட்டம்  தணியவில்லையே..?        என்று அவுஸ்திரேலிய தமிழ் தூதுக்குழுவினர் அமைச்சரிடம் பிரஸ்தாபித்தனர்.

    மாணவர்களையும் இளைஞர்களையும் பலவந்தமாக பயிற்சிக்கு அழைக்கும் கட்டாயம் இந்தியாவுக்கு இல்லை. அது தொடர்பாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. இயக்கங்களின் நடவடிக்கைகளினாலேயே பல இளைஞர்கள் கொழும்புக்கு இடம்பெயர்ந்துள்ளனர். புலிகள், சிவிலியன்களை பணயமாக வைத்து தாக்குதல்களை தொடர்வதனால் சிவிலியன்களின் மரணமும் தவிர்க்க முடியாததாகிறது. இதனையிட்டு நாம் வேதனையடைகின்றோம். அதனாலேயே தாக்குதல்களை நிறுத்துமாறும் கோருகின்றோம்.  -   என அமைச்சர் மேற்படி கேள்விக்கு பதில் அளித்தார்.

இது இவ்விதமிருக்க, விக்ரோரியா சிட்னி தமிழ்ச் சங்கங்களினதும் தென்துருவ தமிழ்ச்சங்கங்களின் பேரவையினதும் சார்பில் தனித்தனியாக அமைச்சர் நரசிம்மராவிடம் மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்தச்  செய்தி அறிக்கையை வீரகேசரிக்கு அனுப்பிவிட்டு, பொதுமுகாமையாளர் பாலச்சந்திரனுக்கும் தெரிவித்தேன். செய்தி அறிக்கை வெளியிடப்பட்டதும், எனக்கு வீரகேசரி பிரதியை தபாலில் அனுப்பிவைப்பதாக அவர் சொன்னார்.

ஆனால், அச் செய்தி அறிக்கை வெளியாகவில்லை என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன். அக்காலப்பகுதியில் இலங்கையிலிருந்த இந்தியத்தூதுவர் ஜே. என். தீக்‌ஷித் பல இரவுகள் உறங்கியிருக்கமாட்டார்.

அவர் எத்தனை தடவைகள் அதிபர் ஜே.ஆரை சந்திக்கச்சென்றார் என்ற புள்ளிவிபரமும் சொல்லப்பட்டது.

பிரேமதாசவின் பதவிக்காலத்தில், அந்த செய்தி அறிக்கை வெளிவரவேயில்லை. அவரை மீறி அதனை வெளியிடுவதற்கு வீரகேசரியும் தயாரில்லை.

எதிரியின் எதிரியிடம் பேசுவதற்கு சென்றவர்கள் இறுதியில் என்ன செய்தார்கள்…? என்பதையும் வரலாறு எமக்கு பாடமாக புகட்டியிருக்கிறது.

அமைதிக்காக வந்தவர்கள் என்ன செய்தார்கள்…?  என்பதையும் வரலாறு சொல்லியிருக்கிறது.

இறுதியில் வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபையும் செயல் இழந்தது. இறுதியில் அனைத்து மாகாண சபைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டன.

இன்றும் 13 ஆவது திருத்தம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.  அன்று இதுபற்றி பேசிய பலர் பரலோகம் சென்றுவிட்டனர்.

( தொடரும் )

 

 

 

 

No comments: