பலவருடங்களுக்கு முன்னர் பேராசிரியர் மௌனகுரு, சிறுவர்களுக்காக மாத்திரமன்றி பெரியவர்களுக்காகவும் வேடனை உச்சிய வெள்ளைப்புறாக்கள் என்ற கவிதை நாடகத்தை எழுதி அறிமுகப்படுத்தினார்.
இந்நாடகம் இலங்கையில் மட்டுமன்றி
தமிழர் புகலிட நாடுகளிலும் அரங்கேறியது.
இதன் கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். ஒற்றுமையே பலம்
என்ற உபதேசத்தை கூறும் கதை. வேடன் விரித்த வலையில் சிக்குண்ட வெள்ளைப் புறாக்கள் எவ்வாறு அந்த வலையுடனேயே தப்பிச்சென்ற கதை.
அதில் ஒரு வசனம் வரும். “ தத்துவத்தை விட்டு விட்டு தப்ப வழிசொல்லு. “
சமகாலத்தில் காலிமுகத்
திடலில் நடந்துவரும் கோத்தா கோ கம போராட்டத்தில் நேரடியாக கலந்துகொண்ட அல்லது கலந்துகொள்ளாத பார்வையாளர்களாக
இருக்கும் அறிவுஜீவிகளும் அரசியல் விமர்சகர்களும்
கருத்தரங்குகள் நடத்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அத்துடன் இது தொடர்பாக மெய்நிகர் அரங்குகளும் நடக்கின்றன.
ஆனால், காலிமுகத்திற்கு அப்பால், மக்கள் தினம் தினம் அதிகாலையே எழுந்து எரிபொருள் பெறுவதற்காக வரிசையாக காத்திருக்கத் தொடங்குகிறார்கள். ஒரு குடும்பத்தின் தலைவன், காலையே சென்று அந்த வரிசையில் நின்றால், அவரது மனைவியோ, பிள்ளையோ அவருடைய பசியை போக்குவதற்காக உணவுப்பொதியுடன் அங்கு செல்கிறார்கள்.
அவர் சிரம பரிகாரம் செய்யச்செல்லும்போது, அவர் வரிசையில் நின்ற இடத்தில் வந்து அவர்கள் நின்றுகொண்டு, தொடர்ந்தும் எரிபொருளுக்காக காத்திருக்கிறார்கள்.
இவ்வாறு காலை முதல் இரவு
வரையில் நடக்கும் காட்சிகள் முடிவில்லாமல்
தொடருகின்றது.
எரிபொருள் பற்றாக்குறை,
அதன் எதிரொலியாக நேர்ந்த பாரிய பொருளாதார நெருக்கடி, அதன் பின்விளைவான பஞ்சம் முதலான
சங்கிலித் தொடர் காரணங்களினால்தான் மக்கள், பொறுத்தது போதும் இனி பொங்கி எழுவோம் என
கொந்தளித்து காலிமுகத்திடலில் ஒன்று கூடினர்.
இரண்டு மாதங்களையும் இக்காட்சி
கடந்துவிட்டது. பாரிய பொருளாதார நெருக்கடிதான்
மூல காரணம். அரசியல் அதிகாரப்பகிர்வோ, தேசிய இனப்பிரச்சினையோ அல்ல! இந்நிலையில் அங்கே ஏற்பட்ட சில சிந்தனை மாற்றங்கள்
செயல்வடிவம் பெற்றபோது, வெளியே நின்ற புத்திஜீவிகளும்
அரசியல் ஆய்வாளர்களான பலரும், தேசிய இனப்பிரச்சினையை தீர்த்துவைத்திருந்தால், இந்த
நெருக்கடி தோன்றியிருக்காது என்று கீதோபதேசம் கூறத்தொடங்கியுள்ளனர்.
காலிமுகத்திடல் போராட்டத்தை
முதலில் தொடக்கியவர்கள் தென்னிலங்கை சிங்கள இளைஞர்களும் யுவதிகளும். பின்னர்தான் தமிழ் , முஸ்லிம் மக்களும் படிப்படியாக
இணைந்தனர். அதற்கும் காரணம் இருந்தது.
சிங்களவர் தவிர ஏனைய இன
மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தால், பேரினவாத அரசு இதற்கு இனவாத சாயம் பூசி, அவர்கள் மீது தாக்குதலை ஏவிவிட்டிருக்கும்.
கொழும்பில் வாழ்ந்த தமிழர்களும் , முஸ்லிம்களும், மலையகத்தமிழரும், கிறிஸ்தவர்களும் ( ஈஸ்டர் தாக்குதலில் ) கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்கள் அநேகம்.
வடக்கில் வாழ்ந்த தமிழர்கள் அன்றைய அரசின் பொருளாதாரத்
தடையின்போது கற்றுக்கொண்ட பாடத்தை மறக்கவில்லை. அதற்கேற்ப வாழப்பழகியவர்கள், சமகாலத்தில் அந்த அனுபவத்தை புத்திக்கொள்முதலாக்கியுள்ளனர். மின் வெட்டு அவர்களுக்கு பழக்கமானது.
எனினும் காலிமுகத்திடல் போராட்டம் தொடர்ந்தும் கொதிநிலையில்
இருக்கவேண்டிய அரசியல் தேவை அடுத்த தேர்தல் மூலம் பதவிக்கு வரவிரும்பும் அரசியல் வாதியிடத்திலும்
இருக்கிறது. அத்துடன் இதுபற்றி பேசிக்கொண்டே
இருப்பதற்கான தேவை புத்திஜீவிகளிடத்திலும் சிவில் சமூக அமைப்புகளிடத்திலும் இருக்கிறது.
ஆனால், இதனை கண்டுகொள்ளாத
சாதாரண மக்கள், அடுத்த வேளைக்கு எரிபொருளும் விலை குறைந்த உணவுப்பொருட்களும் கிடைக்குமா..?
என காத்திருக்கின்றனர்.
இந்தப்பின்னணிகளுடன்தான்
காலிமுகத்திடல் போராட்டத்தை அரசியல்மயப்படுத்தவேண்டும் என்ற குரல் எழுகின்றது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் வெளிநாட்டு கடன்களையே முழுமையாக நம்பியிருக்கிறார்கள்.
இடைக்காலத்தீர்வாக அரச ஊழியர்களின் வேலை நேரத்தை குறைப்பதிலும், பாடசாலை நேரத்தை மட்டுப்படுத்துவதுமாக பல்வேறு பிரயத்தனங்களில்
அவர்கள் ஈடுபடுகின்றனர்.
வடக்கு – கிழக்கில் வாழும்
தமிழர்கள் இனவாதத்தின் கோரத்தாண்டவத்தினால் நிலங்களை பறிகொடுத்துள்ளனர். அந்நிலங்களில்
இராணுவம் குடியமர்ந்துள்ளது. அத்துடன் பௌத்த
விகாரைகள் அங்கு எழுகின்றன. குருந்தூர் மலை விவகாரம் ஒரு உதாரணம்.
அடுத்து முஸ்லிம் மக்களினதும்
மலையக தமிழ் மக்களினதும் நீண்ட கால தீராத பிரச்சினைகள். இது பற்றி, கோத்தா கோ எனக்கூறும் சிங்கள எதிரணியினர்
மத்தியிலும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடத்திலும்
ஏதாவது வேலைத்திட்டம் இருக்கிறதா..? என்பதே புத்திஜீவிகளிடமும் அரசியல் ஆய்வாளர்களிடமும்
எழுந்துள்ள சந்தேகம்.
காரணம் இல்லாமல் காரியம்
இல்லை என்பதுபோன்று, காலிமுகம் இந்த புத்திஜீவிகளினதும் அரசியல் ஆய்வாளர்களினதும்
கண்களை திறந்துள்ளது.
அதன் அர்த்தம், இதுவரை
காலமும் அவர்கள் கண்களை மூடிக்கொண்டிருந்தனர் என்பதல்ல!
அவர்கள் ஆளுக்கொரு திசையில்
நின்று தத்துவம் பேசிக்கொண்டிருந்தவர்கள். தத்துவமும் நடைமுறையும் ஒன்றிணைந்தால்தான்
ஆக்கபூர்வமான பணிகள் முன்னெடுக்கப்படும். ஆனால்,
இதுவரை காலமும் தத்துவார்த்தவாதிகள் ஒரு திசையிலும் வயிற்றில் அடிவிழுந்த ஏழை மக்கள்
வேறு ஒரு திசையிலும் பயணித்துக்கொண்டிருந்தனர்.
எரிபொருளுக்கு கால் கடுக்க
நீண்ட நேரம், சில சமயம் நாள் முழுவதும் நிற்கும் ஒரு சாதாரண குடிமகனிடம் சென்று,
இதற்கெல்லாம் காரணம் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்காதமைதான் என்று சொன்னால், என்ன கருதுவார்…?
பல்லாயிரக்கணக்கான மக்கள்
தெருவில் நின்று கையேந்திக்கொண்டிருக்கையில், நான்கு சுவர்களுக்குள் இருந்து புத்திஜீவிகள்
மெய்நிகரில் அரசியல் வகுப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
நாடாளுமன்றை கலைத்து தேர்தல்
நடத்தினால் தீர்வு கிடைத்துவிடும் என்று சொல்லும் அரசியல்வாதி, அடுத்த நாடாளுமன்ற ஆசனம்
தனக்கும் கிடைக்கும் என கனவு காண்கிறார்.
பொருளாதார நெருக்கடியின்போதெல்லாம் கருத்தரங்குகள் நடத்தி பேசிக்கொண்டிருக்கும் புத்திஜீவி, தனது மேதமையை பறைசாற்ற முயற்சிக்கிறார்.
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம்
செய்துகொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள்,
1958 – 1977 – 1981 – 1983 கலவரங்களை சந்திக்காதவர்கள். யாழ். நூலக எரிப்பினை
காணாதவர்கள். எனினும், முள்ளிவாய்க்கால் படுகொலைகளை , மலையக தோட்டத்தொழிலாளர்களின்
சம்பள அதிகரிப்பு போராட்டங்களை அறிந்தவர்கள்.
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என்பதை ஊகித்தறிந்தவர்கள். முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளை அறிந்தவர்கள்.
அதனால்தான் காலிமுகத்திடலில்
இவை நினைவு கூரப்பட்டன. எமது மக்களை இன, மத,
மொழியால் வேறுபடுத்தவேண்டாம் என்றும் உரத்து குரல் கொடுக்கின்றனர். இது ஒருவகையில் கொதி நிலை. இவ்விடத்தில் புத்திஜீவிகள்
ஆரசியல் ஆய்வாளர்களின் வகிபாகம் என்ன…?
தொடர்ந்தும் தத்துவார்த்த கதைகளை அளந்துகொண்டிருக்கப்போகிறார்களா..?
தத்தவமும் நடைமுறையும் சந்திக்கும் புள்ளியில் இளம் தலைமுறையை இணைக்கப் போகிறார்களா..?
---000---
No comments:
Post a Comment