இலங்கைச் செய்திகள்

நெருங்கிய நண்பனான இலங்கை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள ஒத்துழைப்பு வழங்கப்படும்

மாணவர் விசாவுக்கான விண்ணப்பங்களை விரைவாக சமர்ப்பிக்கவும்

யாழ்.- பாண்டிச்சேரி படகுச் சேவை பாதுகாப்பு அமைச்சு நேற்று அனுமதி

கையிருப்பில் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு நாணயம்: 15,000 இலிருந்து 10,000 டொலராக குறைப்பு

இலங்கை அகதிகளுக்காக தமிழகத்தில் வீட்டுத்திட்டம்


நெருங்கிய நண்பனான இலங்கை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள ஒத்துழைப்பு வழங்கப்படும்

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

நெருங்கிய நண்பராக ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இந்திய அரசாங்கம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா (Vinay Kwatra) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்குதல் தொடர்பில் இன்று (23) முற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய விசேட தூதுக்குழு கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்திய கடன் உதவியின் கீழ் எரிபொருள், மருந்து, உரம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கை ஏற்கனவே பெற்றுள்ளது. அது தொடர்பில்  மீளாய்வு செய்த தூதுக்குழு, இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க இந்திய அரசாங்கமும் அரசியல் அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடினமான காலங்களில் இலங்கைக்கு உதவுவதில் இந்திய அரசாங்கம் கணிசமான பங்கை வகிக்கிறது. அதற்காக இலங்கை மக்களும் அரசாங்கமும் பாராட்டுகளையும் நன்றியையும் இந்திய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அவர்கள் தூதுக் குழுவினரிடம் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், இயல்பு நிலைக்கு மாற்றவும் இந்திய உதவித் திட்டத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடினர். இக்கட்டான காலகட்டத்திற்குப் பிறகு நாடு மிக விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தூதுக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்திய பொருளாதார உறவுகள் தொடர்பான செயலாளர் அஜய் சேத் (Ajay Seth), தலைமை பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி அனந்த நாகேஸ்வரன் (V Anantha Nageswaran),  இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, துணை உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் (Vinod K Jacob), இந்திய கடல்சார் பிராந்திய (IOR) ஒன்றிணைந்த செயலாளர் கார்த்திக் பாண்டே (Kartik Pande)  மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.    நன்றி தினகரன் 

 




மாணவர் விசாவுக்கான விண்ணப்பங்களை விரைவாக சமர்ப்பிக்கவும்

பிரிட்டனுக்கான மாணவர் விசா விண்ணப்பங்களை துரிதமாக சமர்ப்பிக்குமாறு கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் தமது விசாவுக்கான விண்ணப்பங்களை துரிதமாக சமர்ப்பிக்குமாறு பரிந்துரைப்பதாகவும் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு முடிவுகள் வெளியாக 05 வாரங்கள் செல்லும் என்பதே இதற்குக் காரணமென பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அதிகளவிலான விண்ணப்பங்கள் கிடைப்பதாகவும் எனவே உடனடியாக விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஆரம்பிக்குமாறும் பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் இலங்கை மாணவர்களிடம் கோரியுள்ளது.   நன்றி தினகரன் 





யாழ்.- பாண்டிச்சேரி படகுச் சேவை பாதுகாப்பு அமைச்சு நேற்று அனுமதி

அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையிலான சரக்கு படகுச் சேவை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மிக விரைவில் சரக்கு படகுச் சேவை ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவித்தார். இப் படகு சேவை மூலம் தேவையான மண்ணெண்ணெய், டீசல் போன்ற எரிபொருட்களையும், உரம், பால் மா, மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் தேவையானளவு எடுத்துவர முடியுமென்று வலியுறுத்தி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இப் படகு சேவையை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க முயற்சிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார்.

அதேவேளை, பலாலி, - திருச்சி, சென்னைக்கிடையிலான விமான சேவையையும் திட்டமிட்டபடி ஜூலை 01 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   நன்றி தினகரன் 





கையிருப்பில் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு நாணயம்: 15,000 இலிருந்து 10,000 டொலராக குறைப்பு

- வைப்பிலிட ஜூன் 30 வரை அவகாசம்

இலங்கையில் உள்ளவர் அல்லது  வசிப்பவர் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு 15,000 டொலரிலிருந்து 10,000 டொலராக அல்லது அதற்கு சமமான வெறு வெளிநாட்டு நாணயமாக குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவித்தலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அவ்வறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொதுமக்களின் கைகளிலுள்ள வெளிநாட்டு நாணயத்தை முறைசார்ந்த வங்கித்தொழில் முறைமையினுள் கொண்டுவரும் நோக்குடன், நிதி அமைச்சர்  2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட கட்டளைக்கு  பின்வருமாறு திருத்தமொன்றினை வழங்கியுள்ளார். 

  1. இலங்கையிலுள்ள அல்லது வதிகின்ற ஆளொருவரினால் உடமையில் வைத்திருக்கப்படும் வெளிநாட்டு நாணயத் தொகையை ஐ.அ. டொலர் 15,000 இலிருந்து ஐ.அ. டொலர் 10,000 அல்லது வேறு வெளிநாட்டு நாணயங்களில் அதற்குச் சமனான தொகைக்குக் குறைத்தல்.
  2. வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்ற  இலங்கையிலுள்ள, அல்லது வதிகின்ற ஆட்களுக்காக பின்வருவனவற்றுக்காக கட்டளைத் திகதியிலிருந்து (2022 யூன் 16) செயற்படத்தக்கவாறு 14 வேலை நாட்களைக் கொண்ட பொதுமன்னிப்புக் காலத்தை வழங்குதல்: 

i. கட்டளையில் குறித்துரைக்கப்பட்டவாறு தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கில் அல்லது வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கில் வைப்பிலிடுதல், அல்லது 

ii. அதிகாரமளிக்கப்பட்ட வணிகருக்கு (உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி)  விற்பனை செய்தல். சொல்லப்பட்ட பொதுமன்னிப்புக் காலப்பகுதியின் இறுதியில் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கமைய கட்டளையை மீறி வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்ற ஆட்களுக்கெதிராக நடவடிக்கைகளைத் தொடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கி உரிமையைக் கொண்டிருக்கும். 

மேலதிகத் தகவல்களுக்கு;

(அ) ஏதேனும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கியை அல்லது தேசிய சேமிப்பு வங்கியைத் தொடர்புகொள்ளலாம். 

(ஆ) வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின்  உத்தியோகபூர்வ இணையத்தளமான www.dfe.lk ஊடாக 2284/34 ஆம் இலக்க 2022 யூன் 16ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமான பத்திரிகை (அதிவிசேட) அறிவித்தலில் வெளியிடப்பட்ட வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளையைப் பார்க்கலாம்.

(இ)வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தை 011-2477255, 011-2398511  என்ற இலக்கமூடாகவும் dfe@cbsl.lk என்ற மின்னஞ்சலூடாகவும் தொடர்புகொள்ளலாம்.    நன்றி தினகரன் 






இலங்கை அகதிகளுக்காக தமிழகத்தில் வீட்டுத்திட்டம்

முதற்கட்டமாக தூத்துக்குடியில் ஆரம்பம்

தூத்துக்குடி, விளாத்திகுளமருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருடன் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் கலந்துரையாடி, தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். தாளமுத்துநகர், மாசார்பட்டி, குளத்துவாய்பட்டியிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களையும் ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைப்படி  தமிழகம் முழுவதும் 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு 317 கோடிரூபாவில் புதியதாக வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை அறிவித்தார்.

முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி முகாமிலுள்ள மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன. விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது  -  நன்றி தினகரன் 







No comments: