கொழும்பில், கொம்பனித்தெரு பிரதேசத்தில் மக்கள் பிரசுராலயம் என்ற புத்தகக்கடை இருந்தது. அங்கும் பொரளை கொட்டாவீதியில் அமைந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்காரியாலயத்திலும் ஒரு புத்தகக்கடை இயங்கியது.
இங்கு சோவியத் இலக்கியங்களின் மொழிபெயர்ப்பு நூல்களை பெறலாம். அத்துடன் சோவியத் தகவல் பிரிவில் பணியாற்றிய ராஜகுலேந்திரன் என்ற நண்பரும் எனக்கு பல சோவியத் இலக்கிய நூல்களை தருவார்.
மாக்சிம்கோர்க்கி, அன்டன் செக்கோவ், தாஸ்தாவஸ்கி, டால்ஸ்டாய், முதலானோரின் படைப்புகளும் வாசிக்கக்கிடைத்தன.
வீரகேசரிக்கு பணிக்குச்செல்லும்போது நான் எடுத்துச்செல்லும் பேக்கில் வீட்டில் தந்துவிடும்
சாப்பாட்டுப்பொதியுடன், ஏதாவது ஒரு புத்தகமும் இருக்கும். பஸ்பயணத்தில் அமருவதற்கு ஆசனம் கிடைத்தால் படிப்பேன்.
சிலசமயங்களில் மல்லிகை இதழும் எனது பேக்கில் இருக்கும். வீரகேசரி ஒப்புநோக்காளர் பிரிவுக்கு நான் தெரிவுசெய்யப்பட்ட காலத்தில், வடக்கில் கரவெட்டியிலிருந்து வந்து இணைந்துகொண்ட வீரகத்தி தனபாலசிங்கம், எப்பொழுதும் தலைகுனிந்தவாறு அமைதியாகத்தான் இருப்பார். அதிகம் பேசவும்மாட்டார்.
என்னிடம் சோவியத் பிரசுர நூல்கள், மல்லிகை இருப்பதை பார்த்துவிட்டு, அவற்றை வாசிப்பதற்கு கேட்பார். அவ்வாறுதான் நாம் நண்பர்களானோம்.
அவர்
வீரகேசரி விளம்பரப்பிரிவில் முக்கிய பொறுப்பில் இருந்த கந்தசாமியின் சகோதரியின் மகன்.
எனினும் கந்தசாமியுடனும், தனபாலசிங்கம் அவசியமின்றி பேசமாட்டார்
.
அவ்வாறு அமைதியாக 1977 – 1978 காலப்பகுதியில்
மௌனத்தவமியற்றிய தனபாலசிங்கம்தான், பின்னாளில் வீரகேசரி துணை ஆசிரியராகவும், அதன்பிறகு தினக்குரல் பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும், காலப்போக்கில் அதன் பிரதம ஆசிரியராகவும், பின்னர் மீண்டும் வீரகேசரியில் சிரேஷ்ட ஆசிரியராகவும் உயர்ந்தார்.
தற்போது, சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு ஆளாகவேண்டிய நிலையில் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.
1977 ஆம் ஆண்டுமுதல் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான நண்பர் தனபாலசிங்கம், விரைவில் பூரண குணமடையவேண்டும் என பிரார்த்தித்தவாறே இந்தப்பதிவை தொடருகின்றேன்.
தனபாலசிங்கத்திற்கு பத்திரிகைத்தொழில் எதிர்பாராமல் நேர்ந்த விபத்து என்றுதான் கூறவேண்டும். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியில் க.பொ. த. ( உயர்தரம் ) வரையில் படித்துவிட்டு, தரப்படுத்தலினால் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பையும் இழந்து, தோழர் சண்முகதாசனின் தலைமையில் இயங்கிய இலங்கை கம்யூனிஸ்ட் ( பீக்கிங் சார்பு ) கட்சிப்பணிகளில் அலைந்துகொண்டிருந்தவரை பெற்றோர்கள் கொழும்புக்கு ரயிலேற்றிவிட்டார்கள்.
அதன்பின்னர் 1977 ஆம் ஆண்டுமுதல் தனபாலசிங்கம் கொழும்புவாசியாகிவிட்டவர்.
வீரகேசரி ஒப்புநோக்காளர் பிரிவில் தனபாலசிங்கம், என்னுடன் உலக அரசியல் முதல் இலங்கை அரசியல் வரையில் பேசுவார்.
நானும் இடதுசாரிகளுடனும் முற்போக்கு எழுத்தாளர்களுடனும்
அலைந்துகொண்டிருந்தமையால், தனபாலசிங்கம் என்னுடன் நெருக்கமானார்.
ஒருநாள் அவரை, ஆமர்வீதி சந்தியில் மக்கள் விடுதலை முன்னணி தலைமைக்காரியாலயத்திற்கு அழைத்துச்சென்று செயலாளர் தோழர் லயனல்போப்பகே அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.
அவருக்கு தமிழ் தெரியாது, தனபாலசிங்கத்திற்கு சிங்களம் தெரியாது, இடையில் நான் மொழிபெயர்ப்பாளராகி அவஸ்தைப்பட்டதையடுத்து, இருவரும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் செஞ்சக்தி பத்திரிகைக்கு தனபாலசிங்கத்திடமிருந்து ஆக்கங்கள் பெற்று பிரசுரித்தேன். வடபுலத்தில் நிலவிய சாதீய ஒடுக்குமுறையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளினதும் அணுகுமுறை குறித்து எழுதினார்.
பிறிதொரு சந்தர்ப்பத்தில் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் சில கவிதைகளையும் பெற்று செஞ்சக்தியில் வெளிவரச்செய்தேன்.
புதுவையும் சீனச்சார்பு நிலைப்பாடு எடுத்தவர். செ. கணேசலிங்கனின் குமரன் இதழ்களிலும் வரதபாக்கியான் என்ற புனைபெயரில் எழுதினார்.
எனது இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடர் தற்போது 1977 - 1987 காலப்பகுதியை சித்திரிக்கிறது. இந்த பத்தாண்டு காலத்தில் இலங்கையில் பல அரசியல் – சமூக – பொருளாதார
மாற்றங்கள் நிகழ்ந்தன.
1977 – 1981 – 1983 ஆகிய மூன்று ஆண்டுகளில் எங்கள் தாயகம் கலவரங்களையும் யாழ். பொது நூலக எரிப்பையும், வெலிக்கடை சிறை படுகொலைகள் உட்பட ஏராளமான தாக்குதல் சம்பவங்களையும் இயக்க மோதல்களையும், சகோதரப்படுகொலைகளையும், கண்டது.
இக்காலப்பகுதியில் வீரகேசரியில் என்னுடன் அரசியல் பேசுவதற்கு சிறந்த தெரிவாக இருந்தவர் நண்பர் தனபாலசிங்கம்.
என்னையும் தனபாலசிங்கத்தையும் முழுநேர ஊடக வாழ்க்கைக்கு திசை திருப்பியவர் நண்பர் ஆ. சிவநேசச் செல்வன். தற்பொழுது கனடாவில் வதியும் அவர் 1983 இல்
வீரகேசரியில் பிரதம ஆசிரியருக்கு வெற்றிடம் வந்தபொழுது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நூலகராக இருந்துவிட்டுவந்து இணைந்துகொண்ட விரிவுரையாளர்.
அவரை எனக்கு ஏற்கனவே கைலாசபதி யாழ். பல்கலைக்கழகத்தில் தலைவராக இருந்தபொழுது நடத்திய தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு காலத்திலிருந்து நன்கு தெரியும். அவர் வீரகேசரியில் இணையும்பொழுது நானும் ஆசிரிய பீடத்திலிருப்பதாகத்தான் நம்பிக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டார். ஆனால், அவர் பதவி
யேற்ற முதல் நாள் ஒரு திங்கட்கிழமை. அன்று எனக்கு விடுமுறைநாள். என்னைத் தேடியிருக்கிறார்.
நான் ஆசிரிய பீடத்தில் இல்லை, ஒப்புநோக்காளர் பிரிவில் இருப்பது , அறிந்து மறுநாள் நான் பணிக்கு வந்ததும் தமது அறைக்கு அழைத்து உரையாடிவிட்டு முகாமையாளருடன் கலந்துபேசி எனக்கு எந்த நேர்முகப்பரீட்சையும் நடத்தாமல் துணை ஆசிரியராக இணைத்துக்கொண்டார். அன்று முதல் அவருடனும் இதர ஆசிரிய பீடத்தவர்களுடனும் தொடர்ச்சியாக சகோதர வாஞ்சையுடனான நட்புறவை இன்றுவரையில் பேணிவருகின்றேன்.
பிரதம ஆசிரியர் சிவநேசச்செல்வன் அப்பொழுது செய்தி ஆசிரியர் ' நடா ' நடராஜா வாரவெளியீட்டுக்குப் பொறுப்பாசிரியர் பொன். ராஜகோபால் ஆகியோரின் நம்பிக்கைக்குரிய ஊடகவியலாளனாக பணிதொடர்ந்த பொழுது ஒரு நாள் நண்பர் தனபாலசிங்கம் பற்றி சிவநேசச்செல்வனிடம் பிரஸ்தாபித்தேன். தோழர் ‘ பீக்கிங் ‘ சின்னதம்பியின் மருமகன் முறையான தனபாலசிங்கத்திடம் நல்ல ஆற்றல் இருக்கிறது. நிறைய வாசிப்பவர். அவரையும் பயன்படுத்துங்கள் என்றேன். சிவநேசச்செல்வனுக்கு பீக்கிங் சின்னத்தம்பியையும் நன்கு தெரியும். நான் சொல்லி மறுகணம் தனபாலசிங்கத்தை தமது அறைக்கு அழைத்தார். தனபாலசிங்கமும் ஆசிரியபீடத்துக்கு வரப்போவது அறிந்த அங்கிருந்த சிலர் முகம் சுழித்தனர்.
தொடர்ந்தும் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்து ஆட்களை ஆசிரியபீடத்திற்கு எடுத்தால் தமது இமேஜ் பாதிக்கப்பட்டுவிடும் என்ற தயக்கம்தான் அந்த முகச்சுழிப்புக்குக் காரணம்
ஏற்கனவே ஸி.எஸ். காந்தி என்பவரையும் ஆசிரியபீடம் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்து எடுத்திருந்ததை அவர்கள் மறந்திருந்தார்கள்.
காந்தி, மூத்த மலையகப்படைப்பாளியும் தொழிற்சங்க வாதியும் முன்னாள் சட்டசபை உறுப்பினருமான எழுத்தாளர் சி.வி. வேலுப்பிள்ளையின் நெருங்கிய உறவினர். அத்துடன் கவிஞர். முன்னர் அந்த ஆசிரியபீடத்தில் அன்ரன் பாலசிங்கம், கலாநிதி காசிநாதன், எழுத்தாளர்கள் சட்டநாதன், செ. கதிர்காமநாதன் ஆகியோரும் பணியாற்றியிருக்கிறார்கள். ஒரு காலத்தில் மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பராக விளங்கி வ.ரா. அவர்களும் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார்.
புதுமைப்பித்தனுக்கும் ஒரு சந்தர்ப்பம் வந்தது. ஆனால், அவர் தமது குடும்பத்தைவிட்டு இலங்கைவருவதற்கு விரும்பவில்லை. இப்படி ஒரு பாரம்பரியமும் நீண்ட வரலாறும் கொண்ட வீரகேசரியில் நான் 1983 இலும் நண்பர் தனபாலசிங்கம் 1984 இலும் ஆசிரியபீடங்களுக்குள் பிரவேசித்தோம்.
வட - கிழக்கில் நீடித்துக்கொண்டிருந்த போர் நடவடிக்கை தொடர்பான செய்திகளை நான் எழுதியபொழுது, தனபாலசிங்கம் வெளிநாட்டுச் செய்திச்சேவைகளான பி.ரி.ஐ. - ரோய்டர் முதலானவற்றிலிருந்து கிடைக்கப்பெறும் ஆங்கிலச்செய்திகளை மொழிபெயர்த்துக்கொடுத்தார்.
தனபாலசிங்கம் அழகாக மொழிபெயர்ப்பார். இவருடைய மொழிபெயர்ப்பினால் கவரப்பட்ட ஒருவர் அடிக்கடி வீரகேசரி அலுவலக வாசலில் தோன்றுவார். ஆனால், உள்ளே வரமாட்டார். அதற்கு வேறும் சில காரணங்கள் இருந்தன என்று தற்பொழுது கனடாவில் வதியும் முன்னாள் வீரகேசரி விளம்பர - விநியோக முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம் சொல்வார்.
அந்த மனிதர்தான் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸின் தலைவர் குமார் பொன்னம்பலம். தாம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எடுத்துவந்து தனபாலசிங்கத்திடம் கொடுத்து மொழிபெயர்த்து வாங்கிச்செல்வார்.
இந்தத்தொடர்பையும் எனக்கு உதவி செய்வதற்காக தனபாலசிங்கம் பயன்படுத்தியிருக்கிறார். அரியாலையைச் சேர்ந்த எனக்குத் தெரிந்த ஒரு இளைஞர் தடுப்புக்காவலில் இருந்தபொழுது அவரை விடுவிக்க சில சட்ட ஆலோசனைகளை குமார்பொன்னம்பலத்திடம் அழைத்துச்சென்று பெற்றுக்கொடுத்தார்.
தனபாலசிங்கம் எனக்குச்செய்த மற்றும் ஒரு முக்கிய உதவியை மறக்கவே முடியாது.
1985 ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக சோவித்துக்கு செல்லும் அழைப்பு எனக்கு கிடைத்தது. அவ்வேளையில் மாஸ்கோவில் சர்வதேச மாணவர் இளைஞர் விழாவும் மாநாடும் சோவியத் அதிபர் கொர்பச்சேவ் தலைமையில் நடந்தது. ஆனால், வீரகேசரியில் அன்று இருந்த நிருவாக இயக்குநர் எனக்கு மாஸ்கோ சென்று திரும்பி வருவதற்கு லீவு அனுமதிக்க மறுத்ததுடன் - வழக்கமாக அவ்வாறு வெளியே பிரதிநிதிகளாக தெரிவாகி செல்பவர்களுக்குத்தரப்படும் சன்மானம் ஐம்பது டொலர்கள் தருவதற்கும் மறுத்துவிட்டார். நான் எனது சொந்த லீவில் செல்வதற்கு மாத்திரம் அனுமதி தரப்பட்டது.
அம்மகாநாட்டிற்கு செல்லும் வெளிநாட்டுப்பிரதிநிதிகள் அங்கத்துவப்பணமாக 100 ரூபிள்கள் செலுத்தவேண்டும். அப்பொழுது ஒரு அமெரிக்க டொலர் ஏழு ரூபிள்கள் பெறுமதியானது.
வீட்டில் எனது குழந்தைகளுக்கு பால் மாவு வாங்கிக்கொடுப்பதற்காகவே வாரம் ஒரு தடவை 15 ரூபாவுக்கு வீரகேசரியில் கட்டுரைகளும் மித்திரனில் புனைபெயரில் தொடர்கதையும் எழுதிக்கொண்டிருந்த நான், அவ்வளவு பணத்திற்கு எங்கே செல்வேன். அந்த எதிர்பாராத பயணத்தை தவிர்க்கவே விரும்பினேன். எனது நிலையறிந்த நண்பர் தனபாலசிங்கம் தனது வீட்டுக்கு அனுப்புவதற்காக சேமித்துவைத்திருந்த பணத்தைத்தந்து என்னை மாஸ்கோவுக்கு விமானம் ஏற்றிவிட்டார்.
ஆயினும் அந்தப்பணத்தை காலம் கடந்துதான் 1987 இல் அவுஸ்திரேலியா வந்த ஆண்டு அலுவலக ஒளிப்படப்பிடிப்பாளர் நண்பர் சுரேந்திரன் ஊடாக சேர்ப்பித்தேன். ஏனென்றால் 1977 இல் கொழும்புக்கு வந்திருந்த தனபாலசிங்கத்திடம் பல ஆண்டுகள் வங்கிக்கணக்கும் இருக்கவில்லை.
1985 ஆம் ஆண்டளவில் தனபாலசிங்கம் ஆங்கில ஆசிரியர்களுக்கான விண்ணப்பத்தை கல்வி அமைச்சு கோரியபொழுது அதற்கு விண்ணபித்து தெரிவானார். அத்துடன் அவருக்கு உடனடியாகவே ஆங்கில ஆசிரியர் நியமனமும் கிடைத்தது. ஆனால், ஆசிரியபீடத்திலிருந்த சிவநேசச்செல்வன், ராஜகோபால், நடராஜா ஆகியோரும் தோழர் சண்முகதாசனும் அதனை விரும்பவில்லை. திறமையுள்ள பத்திரிகையாளனை அவர்கள் இழக்கவிரும்பவில்லை.
" அந்த ஆசிரியப்பணிக்குச்சென்றால் பத்தோடு பதினொன்றாக ஆசிரியர் உலகில் காணமல்போய்விடுவாய் “ என்றே அவர்கள் அறிவுறுத்தினார்கள். கோழி மேய்த்தாலும் அரசாங்கத்தின் சம்பளத்தில் மேய்க்கவேண்டும் என விரும்பும் யாழ்ப்பாணத்தின் சராசரிப் பெற்றோர்களுக்கிருந்த எண்ணம்தான் அவருடை தந்தை வீரகத்திக்கும் இருந்தமை இயல்பே.
அவர் பொன். ராஜகோபாலுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு மகனை அந்த ஆசிரிய நியமனத்தை ஏற்கச் சொல்லுமாறு தூண்டினார். " எதிர்காலத்தில் ஊடகத்துறையில் தனபாலசிங்கம் பிரகாசிக்கும் சந்தர்ப்பத்தை இழப்பதை தான் விரும்பவில்லை " என்றார் ராஜகோபால். அதற்குத் தந்தையார் வீரகத்தி, " எங்கே சம்பளம் எடுத்தாலும் ஒன்றுதான். “ சிங்காரிதான் காவேரி. காவேரிதான் சிங்காரி" என்று பாடினார்.
முடிவில் தனபாலசிங்கம் ஆசிரியப்பணிக்குச்சென்று சில நாட்களிலேயே திரும்பி வந்து மீண்டும் பத்திரிகையில் இணைந்தார். இவருடன் ஆங்கில ஆசிரியராக தெரிவாகி, பின்னாளில் துறைமுக அதிகாரசபையின் துணைத்தலைவராக நியமனம் பெற்றவர்தான், பின்னாளில் நான் அவுஸ்திரேலியாவில் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் இணைந்துள்ள இப்ரகீம் ரஃபீக்.
1987 இல் நான்அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் நண்பர் தனபாலசிங்கத்துடன் இற்றைவரையில் தொடர்பில் இருக்கிறேன்.
நண்பரின் முதலாவதுநூல் ஊருக்கு நல்லது சொல்வேன் கொழும்பில் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் நடந்தபொழுது என்னையும் வந்து பேசுமாறு அழைத்திருந்தார். கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் மண்டபம் நிறைந்திருக்க நடந்த அந்த வெளியீட்டு அரங்கில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள், மற்றும் மனோ கணேசன் உட்பட பல ஊடகவியலாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். தினக்குரலில் தனபாலசிங்கம் தொடர்ந்து எழுதிய ஆசிரியத்தலையங்கங்களின் தொகுப்பு ஊருக்கு நல்லது சொல்வேன். அந்த விழாவில் கலந்துகொண்ட அவருடைய தந்தையார், அன்று தனது மகனை மற்றவர்கள் உள்ளத்தால் " சான்றோன்" எனக்கேட்ட நிலையில் பெருமிதத்துடன் இருந்தார். ஆனால், அந்தக்காட்சியைப் பார்ப்பதற்கு தோழர் சண்முகதாசனும் ராஜகோபாலும் இல்லை.
அந்த மேடையில் தனபாலசிங்கம் தன்னை ஊடகத்துறைக்குள் அழைத்த சிவநேசச்செல்வனுக்கும்,அரச ஆசிரிய உத்தியோகத்திலிருந்து மீட்டு எடுத்து மீண்டும் பத்திரிகை உலகத்திற்கு அனுப்பிய தந்தையாருக்கும் உரியமுறையில் மரியாதை செலுத்தினார்.
அந்த நூலை புரவலர் புத்தக பூங்காவின் சார்பில் பதிப்பித்து வெளியிட்டவர் புரவலர் ஹாஷிம் உமர். ஆசிரியத்தலையங்கங்களை தேர்வுசெய்து தொகுத்தவர் கலைச்செல்வன். அந்த நூலுக்கு தமிழ்நாடு நாமக்கல் சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதும் கிடைத்தது.
அதனைத்தொடர்ந்து மற்றுமொரு ஆசிரியத்தலையங்கத்தொகுப்பு நோக்கு என்ற நூலையும் வெளியிட்டார். இதனை கொழும்பு குமரன் புத்தக இல்லம் பதிப்பித்துள்ளது.
90 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள வீரகேசரியின்
சமகாலம் என்ற அரசியல் விமர்சன இதழின்ஆசிரியராகவும் தனபாலசிங்கம் பணியாற்றினார்.
மல்லிகை ஜீவாவுக்கு 80 வயது பிறந்ததினம் வந்தபோது அவரை வாழ்த்தி தினக்குரலில் விரிவான ஆசிரியத்தலையங்கம் எழுதினார்.
நாம் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடத்தியபோது, அன்றைய தினமும் எமது மாநாட்டை வரவேற்று ஆசிரியத்தலையங்கம் எழுதினார். பின்னர் 2011 ஜனவரி மாதம் 6 ஆம் திகதி மாநாடு தொடங்கியவேளையிலும் ஆசிரிய தலையங்கம் எழுதி எழுத்தாளர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.
தோழர் சண்முகதாசன் நினைவாக சண் முன்னர் எழுதிவைத்திருந்த கார்ல் மாக்ஸ் பற்றிய ஆக்கங்களையும் தொகுத்து வெளியிடுவதில் முன்னின்றார். இவ்வாறு தனபாலசிங்கம் மேற்கொண்ட பணிகளை எழுதிக்கொண்டே போகலாம்.
முன்னர் வீரகேசரியில் எம்முடன் ஒப்புநோக்காளராக பணியாற்றிய நண்பர் பிரணதார்த்திஹரன் பின்னர் தினக்குரல் ஆசிரியபீடத்தில் இணைந்து, சிறிதுகாலத்தில் செய்தி ஆசிரியராகவும் தற்பொழுது ஆசிரியத்தலையங்கங்களும் எழுதும் பிரதம ஆசிரியராகவும் பணி தொடருகின்றார்.
இவரைப்போன்றே எம்முடன் ஒப்புநோக்காளராக பணியாற்றிய சிவராஜா ஊடகத்துறையில் பணியாற்றுகிறார். முன்னர் அங்கு அச்சுக்கோப்பாளராக விருந்த நண்பர் நெவில் அந்தனி தற்பொழுது அங்கு விளையாட்டுத்துறை செய்திகள் எழுதும் ஊடகவியலாளராக அவுஸ்திரேலியா முதலான நாடுகளுக்கும் வந்து விளையாட்டுத்துறை செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதிவருகிறார்.
இந்தத்தகவல்கள் கூறும் வலிமையான செய்தியை இந்தப்பத்தியை வாசிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்.
ஆற்றலும் உள்ளார்ந்த திறமைகளும் மிக்கவர்கள் சரியாக இனம் காணப்பட்டு, ஆக்கபூர்வமான திசையில் அழைத்துச் செல்லப்பட்டால் அவர்களினால் நாட்டுக்கும் சமூகத்திற்கும்தான் நன்மைகள் அநேகம். எனவே எவரையும் புறம்ஒதுக்காமல், அவரவர் ஆற்றல்களை இனம்கண்டு வளர்த்துவிடவேண்டியது மூத்ததலை முறையினரின் தார்மீகக் கடமையாகும்.
சமூகத்திற்காகப் பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதும்தான் படைப்பாளிகளினதும் ஊடகவியலாளர்களினதும் பிரதான கடமை என்பதையும் புரிந்துகொண்டு பணிதொடரும் பொழுது, தமது பணிகள் வெற்றுப்புகழாரங்களுக்கானது அல்ல என்ற தெளிவும் உள்ளத்தில் இருக்கவேண்டும்.
நண்பர் தனபாலசிங்கத்தைப்போன்று பல ஆளுமைகளின் வாழ்வும் பணிகளும் இன்றைய தலைமுறைகளுக்கு குறிப்பாக ஊடகத்துறைக்கு வருவதற்கு ஆர்வம் காண்பிப்பவர்களுக்கு பாடநூலாகத்திகழும். ஏனென்றால் நானும் தனபாலசிங்கமும் இந்த ஊடகத்தறையில் பிரவேசித்த காலத்தில் கணினி - மின்னஞ்சல் இல்லை, கைத்தொலைபேசி, ஐபேட், ஸ்கைப், முகநூல், ட்விட்டர் என்று எவையும் இருக்கவில்லை. கையில் இருந்தது காகிதமும் பேனையும்தான். ரோய்டரையும், பி.ரி.ஐ. யையும் வானொலிகளையும் தொலைபேசிகளையும் மாத்திரமே நம்பியிருந்தோம்.
இன்றுபோல் இலகுவான Download Journalism அன்று இருக்கவில்லை.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் பத்திரிகை ஆசிரியர் சங்கமும் வழங்கும் "வாழ்நாள் சாதனையாளர்' விருதையும் தனபாலசிங்கம். பெற்றுள்ளார்.
எனது இனிய நண்பர் தனபாலசிங்கம் விரைவில் பூரண குணமடைந்து பல்லாண்டு வாழவேண்டும் என இந்தத் தொடர் பதிவின் ஊடாக வாழ்த்துகின்றேன்.
letchumananm@gmail.com
No comments:
Post a Comment