இலங்கைச் செய்திகள்

'வடக்கு நோக்கிய நட்புறவு பயணம்' 

ஓட்டமாவடியில் இதுவரை 31 ஜனாஸாக்கள் அடக்கம்

இரணைதீவில் அடக்கம்; இதுவரை அனுமதியில்லை

மூன்றாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்கள் போராட்டம்

யாழ்.- சென்னை நேரடி விமான சேவை; விரைவில் ஆரம்பிக்க திட்டம்

தீ விபத்து; 16 வீடுகள் முற்றாக தீக்கிரை 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் நிர்க்கதி

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் நேற்று யாழ்ப்பாணம் விஜயம்


'வடக்கு நோக்கிய நட்புறவு பயணம்' 

கரித்தாஸ்- கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 'வடக்கு நோக்கிய நட்புறவு பயணம்' எனும் தொனிப்பொருளில் தென்மராட்சி - எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள ஆயர் ஜஸ்ரின் தோட்டத்தில் நேற்று காலை மாபெரும் மரநடுகைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கரித்தாஸ் அமைப்பின் யாழ் மாவட்ட இயக்குனர் அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் கலந்துகொண்டிருந்தார்.

மேலும் நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, கரித்தாஸ் கியூடெக் நிறுவன தேசிய இயக்குனர் மகேந்திர குணதிலக, யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கிருசாந்தி கமலராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் மர நடுகை, சமாதானப் புறாக்களை சுதந்திரமாக பறக்கவிடல், கைப்பணிக் கைத்தொழில் பொருட்களின் கண்காட்சி நிகழ்வு ஆகியன நடைபெற்றன. மேலும் நிகழ்வில் மதகுருமார்கள், 521 மற்றும் 522 படைத் தலைமையகங்களின் தளபதிகள், கரிதாஸ் அமைப்பின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சாவகச்சேரி விசேட நிருபர் - நன்றி தினகரன் 
ஓட்டமாவடியில் இதுவரை 31 ஜனாஸாக்கள் அடக்கம்

மட்டக்களப்பு - ஓட்டமாவடி - சூடுபத்தினசேனையில் கொரோனா ஜனாஸாக்களை புதைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் நேற்றைய தினம் மேலும் 7 பேரின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதன்படி இதுவரையில் அங்கு 31 கொரோனா ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.     நன்றி தினகரன் 
இரணைதீவில் அடக்கம்; இதுவரை அனுமதியில்லை

- அமைச்சர் ரமேஸ் பத்திரன

கொவிட் 19தொற்று சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லையென அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். 

இரணைதீவில் கொவிட் 19தொற்று சடலங்களை அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் (09) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார். 

அதற்குப் பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன, கொவிட் 19காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை மட்டக்களப்பு - ஓட்டமாவடி - சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்வதற்கான அனுமதி மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.  எனினும், உரிய ஆய்வின் பின்னரே சுகாதார அமைச்சு இரணைதீவில் கொவிட் 19தொற்று சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.   நன்றி தினகரன் 

மூன்றாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்கள் போராட்டம்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் மூன்றாவது நாளாகவும் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வடக்கு மாகாண  சுகாதார தொண்டர்கள் போராட்டம் 10ஆவது நாளாக தொடர்கின்றது.

கடந்த முதலாம் திகதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமக்கு எவருமே  தீர்வினை வழங்காத நிலையில் நேற்றைய தினம் முதல் தமது போராட்ட வடிவத்தை உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றி முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாக கடமையாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக சுகாதார பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

எனினும் இந் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், நிரந்தரநியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறும் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் வைத்தியசாலைகளில் கடமையாற்றியதாகவும் எனவே தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர், ஐ.சிவசாந்தன் - நன்றி தினகரன் 
யாழ்.- சென்னை நேரடி விமான சேவை; விரைவில் ஆரம்பிக்க திட்டம்

கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இரத்மலான, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இடையேயான உள்நாட்டு விமான சேவையை விரைவில் தொடங்கவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்யவும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் மடு தேவாலயத்துக்குச் செல்லும் யாத்திரிகர்களுக்காக அமைக்கப்படும் இடைத்தங்கல் வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்றுமுன்தினம் மடுவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்திய அரசாங்கத்தின் ஆதரவோடு மன்னாரில் உள்ள மடு தேவாயல மைதானத்தில் இடைத்தங்கல் வீட்டுவசதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துகிறது.

இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகைதரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். தற்போது, கொவிட் தொற்றுநோய் காரணமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை நிறுத்திவிட்டனர். இந்திய உயர் ஸ்தானிகராலயம் மாற்றுத் திட்டமொன்றை இதற்காக பரிந்துரைத்துள்ளது. அதற்கு நாமும் அனுமதியை வழங்கியுள்ளோம்.

இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலாவை விரைவில் தொடங்க எதிர்பார்க்கிறோம்.

இரத்மலான, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்புக்கு உள்நாட்டு விமான சேவைகளைத் தொடங்குவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம். யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்.

யாழ் விமான நிலையத்தின் வளர்ச்சிக்கான இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம்.

கொவிட் தொற்றுநோய் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மற்றும் சென்னை இடையேயான நேரடி விமான சேவையை விரைவில் தொடங்க எதிர்பார்க்கிறோம் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன் -  நன்றி தினகரன் 

தீ விபத்து; 16 வீடுகள் முற்றாக தீக்கிரை 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் நிர்க்கதி

பாடநூல்கள், ஆவணங்கள், பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்

இராகலை தோட்டம் 2ஆம் பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட தொடர்குடியிருப்பில் நேற்று (12) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின. வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 26 பேரும், பெண்கள் 32 பேரும், 05 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 03 பேரும் அடங்குகின்றனர்.

இத்தோட்டத்தில் முதலாம் இலக்க தொடர்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர். இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய வகையில் இருக்குமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.

இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன.

வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன. ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்கக்கூடியதாக இருந்தது.

இவர்களை தோட்ட ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிதங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் நுவரெலியா பிரதேச சபை ஆகியன ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கும் இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஹற்றன் சுழற்சி நிருபர்  - நன்றி தினகரன் 
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் நேற்று யாழ்ப்பாணம் விஜயம்

நல்லூரில் வழிபாடு; நல்லை ஆதீனத்துடன் சந்திப்பு

வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்திருந்தார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றுக் காலை விஜயம் செய்த அவர், நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நல்லை ஆதீனத்திற்குச் சென்று ஆதீன குருமுதல்வரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்பின்னர், இந்திய உதவியில் அமைக்கப்படும் யாழ். கலாசார மத்திய நிலையத்திற்குச் சென்று நிர்மாணப் பணிகளைப் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்குச் சென்று நூலகத்தைப் பார்வையிட்டதுடன் யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். - நன்றி தினகரன் 
No comments: