மல்லிகை ஜீவாவின் ( 1927 – 2021 ) வாழ்வில் சுவாரசியமான பக்கங்கள் - அங்கம் - 07 ஜீவாவின் பார்வையில் கைலாஸ் – சிவத்தம்பி ! தெருவோரம் நின்று விசிலடித்த வில்லாதி வில்லன் !! முருகபூபதி


ஈழத்து இலக்கிய உலகில் பெரிய ஆளுமைகளாக விளங்கிய விமர்சகர்கள் – பேராசிரியர்கள் கைலாசபதி – சிவத்தம்பி ஆகியோர் மீது  மல்லிகை ஜீவா பெருமதிப்பும்  பேரபிமானமும் கொண்டிருந்தவர்.

சிவத்தம்பி,  ஜீவா இணைந்திருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் ( மாஸ்கோ சார்பு )  அங்கத்துவம்பெற்றிருந்தவர்.

கைலாசபதி சீனசார்பு நிலையெடுத்தவர்.  எனினும் அக்கட்சியில்  ( பீக்கிங்  சார்பு )  இணையாமல்,  தொழிலாளி – செம்பதாகை முதலான இதழ்களில் புனைபெயர்களில் எழுதினார்.   தேசிய கலை இலக்கியப்பேரவை கைலாசபதியை கொண்டாடியது.

அத்துடன் கைலாஸ் சீனாவுக்குச்சென்று திரும்பி, தமது மனைவி சர்வமங்களத்துடன் இணைந்து  மக்கள் சீனம் -காட்சியும் கருத்தும்  என்ற நூலையும் எழுதினார்.

சிவத்தம்பி, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தார். அத்துடன்   இச்சங்கம் நடத்திய மாநாடுகளின்போது தீர்மானங்களை வரைவதற்கும்  செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரனுக்கு பக்கத்துணையாக விளங்கினார்.

ஜீவா கைலாசபதியை  பன்மையில் மரியாதையுடன் அழைப்பார். ஆனால், சிவத்தம்பியுடன்  ஒருமையில் ,                                    “ என்னடாப்பா,  நீ….  வா… போ….”  என்று உரிமையுடன் பேசுவார்.

ஒருசந்தர்ப்பத்தில்  ஜீவாவிடம் இந்த இரண்டு


இலக்கியப்பேராளுமைகள்  பற்றியும் உங்களது பார்வை என்ன..?  என்று கேட்டபோது,  ஜீவா பின்வருமாறு தெரிவித்தார்.

அச்சமயம் கைலாசபதி உயிரோடு இல்லை.  அவர் 1982 டிசம்பரில் மறைந்துவிட்டார்.

ஜீவா சொல்கிறார்:

இந்தக்கேள்விக்கு பதில்சொல்வது அத்தனை சுலபமானது அல்ல. ஒரே கேள்வி – பதிலில் சட்டென சொல்லக்கூடியதுமல்ல. இருவரையும் சமகாலத்தில் தெரிந்துகொண்டவன். சமமாகவே தெரிந்துவைத்திருப்பவன்.

மிக நெருக்கமாகவும் பேசிப்பழகியவன். இதில் சங்கடம் என்னவென்றால் ஒருவர் ( கைலாஸ் ) மறைந்துவிட்டார். எனவே கருத்துச்சொல்வதில் கஷ்டம் இதில் உள்ளது.

கைலாசின் மனவுணர்வுகளை லேசில் புரிந்துகொள்ளமுடியாது. உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளவே மாட்டார்.

சிவத்தம்பி அப்படி அல்ல ! குழந்தைப்பிள்ளை. நேசிப்புக்கு மிக நெருக்கமானவர். கைலாசின் நேர் சம்பாஷணையை வைத்து அவரது அறிவின் ஆழத்தை அளவிட்டுவிட முடியாது. ஆனால், சிவத்தம்பியுடன் பேசும்போது, அவரது எழுத்தைவிட அவருடன் சம்பாஷிக்கும் ஒவ்வொரு வேளையும் நான் பிரமித்துப்போவதுண்டு.

இப்படியானவரிடம் நான் ஒரு மாணவனாக ஓரிரு வருடங்கள் இருந்திருந்தால் எத்தனை அறிவுபெற்றிருப்பேன்…? என்று  எனது  மனம்  ஏக்கமடைவதுண்டு.

கைலாசின் எழுத்தில் எளிமையும் அதேசமயம்


புரிந்துகொள்ளும் தன்மையும் ஆழமும் வியாபித்திருக்கும். அதற்குக்காரணம் அவர் ஒரு வெகுஜனப்பத்திரிகையில்                         ( தினகரன் ) பொறுப்புவாய்ந்த  ஆசிரியர் பதவி வகித்ததுதான் என்பது என் எண்ணம்.

சிவத்தம்பியின் எழுத்தில் ஆழமும் அகலமும் இருக்கும். அதேசமயம் புரிந்துகொள்வதற்குக் கஷ்டம் என பலபேர் எனக்குச்சொல்லியுள்ளார்கள்.  புதுச்சொற்றொடர்களை பாவிப்பதில் இவர் வல்லவர்.  புரியாமைக்கு இதுவும் ஒரு  காரணமாக இருக்கலாம்.  கைலாஸ், மலேசியா – கொழும்பு என வாழ்ந்து – வளர்ந்து பழக்கப்பட்டவர்.

சிவத்தம்பி, கரவெட்டி மண்ணில் ஊறிப்பதப்பட்டவர்.  இவர்களுடைய இருவேறு ஆளுமைகளுக்கும் இது ஒருவேளை காரணமாக இருக்கலாமோ…?!  என நான் எனக்குள்ளே விமர்சித்ததுண்டு.

கைலாஸ், திட்டமிட்டு உழைத்துப் பழகிய அசுரத்தனமான  உழைப்பாளி.  சிவத்தம்பி அப்படி உழைக்கவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்  குடும்ப – இனச்சூழ்நிலையால் திட்டமிட்டபடி செயலாற்றமுடியாமல் முடங்கிப்போய்த் தயங்குபவர்.

இருவரும் தமிழ் உலகம் போற்றும் மகா விமர்சகர்கள்தான். ஆனால், இருவரது பாணியும்  பார்வையுமே வேறு  வேறு ! அதேசமயம் சோஷலிஸ எதார்த்த வாதக்கண்ணோட்டத்தில் சமூகத்தில் இருந்து முகிழ்த்துவந்த படைப்பாளிகளுக்கு இவர்கள் இருவரும் வழங்கிய ஒத்துழைப்பும்  ஆலோசனைகளும் அளப்பரியன.  இதை நன்றியறிவுடன் குறிப்பிடத்தான் வேண்டும். 

கைலாசபதி அறிஞன்.  சிவத்தம்பி சிந்தனையாளன். மேலும் விரிவாகச் சொல்ல இப்போது சந்தர்ப்பமில்லை.  நான் எழுதத் திட்டமிட்டுள்ள எழுத்தாளர் குறிப்பு நூலில் விரிவாகப்பின்னர்


எழுதுகின்றேன்.  “

இவ்வாறு  சொல்லியிருக்கும் மல்லிகை ஜீவா,  அந்த நூலை எழுதாமலேயே விடைபெற்றுவிட்டார்.

விசிலடித்த ஜீவா !  

இந்தப்பதிவில் முதலில் நான் குறிப்பிட்ட இரண்டுபேராசிரியர்களும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய காலத்தில்,  அங்கு தமிழ்த்துறையில் பயின்ற பல மாணவர்களும்  தமது ஆய்வுகளுக்கு மல்லிகை இதழ்களை நன்கு பயன்படுத்திக்கொண்டனர்.

சிலர் தமது MPhil ஆய்வுக்காகவும் யாழ்ப்பாணத்தில் இயங்கிய மல்லிகை காரியாலயத்திற்கு அடிக்கடி வந்துள்ளனர்.

பின்னாளில் பத்திரிகையாளராக வளர்ந்த தேவகௌரியும் யாழ். பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில், மல்லிகை காரியாலயத்திற்கு வந்தார்.  அதுபற்றி , ஜீவா மறைந்த பின்னர் தேவகௌரி எழுதியிருக்கும் கட்டுரையில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 

 “  பாடத்திட்டக் கல்வியில் ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த டொமினிக் ஜீவாவைத் தேடி,   “ 80 களில் ஈழத்து விமர்சனப் போக்கு எப்படி இருந்தது..?  “   என்று ஆய்வு செய்வதற்காக, 1991இல் நான், பல்கலைக்கழக மாணவியாக இருந்தபோது,  மல்லிகை காரியாலயம் சென்றேன். அப்போது அது அச்சுக்கூடமாக இருந்தது. வாசலில் வெள்ளை வேட்டியும் நஷனலுமாக நின்றிருந்தவர்,  “வாங்கோ என்ன விசயம்..? ” என்று கேட்டார்?  விடயம் சொல்லப்பட்டது. “ எனக்குத் தெரியும், பல்கலைக்கழகம் ஒரு நாள் என்னைத்தேடி வரும் எண்டு ” எனச் சொல்லி, புன்முறுவல் பூத்தார்.

பின்னாளில் தேவகௌரி எழுதிய அந்த ஆய்வு, மல்லிகைப்பந்தல் வெளியீடாகவே  நூலுருவில் வந்தது.


யாழ்ப்பாணத்தில்   ஜீவா இருந்த காலத்தில்  அவரது தினசரி கடமைகளில் ஒன்று வாசிப்பு.   காலையில், மல்லிகை காரியாலயம் செல்வதற்கு முன்னர், யாழ். பஸ்நிலையத்திற்கு அருகில் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்த பூபாலசிங்கம் புத்தகக்கடை வாசலில் சில நிமிடங்கள் தரித்துநின்று அன்றைய தமிழ்த்தினசரிகளை வாசிப்பார்.

எவரேனும் தெரிந்தவர்கள் அருகில் வந்து, அவரிடம் சுகநலன் விசாரித்துச்செல்வார்கள்.  அவ்வேளையில் அவர்களிடம் பேச்சை வளர்க்காமல் பத்திரிகைகளின் பக்கங்களிலேயே கவனத்தை கூர்மைப்படுத்தியிருப்பார்.

அவ்வாறு ஒருநாள் காலையில் அவர் அங்கே நின்று பத்திரிகை படித்துக்கொண்டிருந்தபோது, எதிர்ப்பக்கம்  தரித்து நின்ற  ஒரு காரிலிருந்து விசில் சத்தம் கேட்டது,

ஜீவா விசில் வந்த பக்கம் பார்த்தார்.

அக்காரின் ஆசனத்தில் கனவான் தோற்றத்துடன் அமர்ந்திருந்த ஒருவர்,  விசில் அடித்து,  ஜீவாவை அருகில் வருமாறு கையால் சைகை காட்டினார்.

  ஜீவா,  “   என்ன …?  “ என்று கேட்டார்.

அந்தக்கனவான் மீண்டும் ஆள்காட்டி விரலால் ஜீவாவை ஒரு பிராணியை அழைப்பதுபோன்ற தோரணையில் கூப்பிட்டார்.

ஜீவாவின் தர்மாவேசம் விழித்துக்கொண்டது.

ஜீவாவும் பதிலுக்கு விசிலடித்து தனது ஆள்காட்டி விரலை நீட்டி அந்தக் கனவானை அழைத்தார்.

அந்த மனிதர் காரை விட்டு எழுந்துவந்தார்.

 “ என்ன விஷயம்… ?   “ ஜீவா கேட்டார்.

“  எனது மகள் பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள்.  அவளுக்கு


ஆய்வுசெய்வதற்கு மல்லிகை இதழ்கள் தேவைப்படுகின்றன. மகள் காருக்குள் இருக்கிறாள். இந்தநேரத்தில் உங்களை இந்த இடத்தில் காணமுடியும் என்று மகள் சொன்னதால் அவளையும் அழைத்துவந்தேன்  “ என்றார் அந்த மனிதர்.

உடனே ஜீவா,  “ இது வீதியோரம். பஸ் நிலையம்.  மல்லிகைக்கென்று ஒரு காரியாலயம்  இருக்கிறது. அங்கே மகளை அழைத்துவாரும். இவ்வாறு தெருவில் நின்று விசிலடித்து என்னை அழைக்கவேண்டாம். நானும் ஒரு மனுஷன். உமது வீட்டு செல்லப்பிராணி அல்ல  “ என்றார்.


 

 


(  தொடரும் )

No comments: