உலகச் செய்திகள்

அவசரமாகக் கூடுகிறது பிரிட்டன் அரச குடும்பம்

கமலா ஹாரிஸ் ஆவஸ்திரேலிய பிரதமரிடம் பேச்சுவார்த்தை

மியன்மார் ஆர்ப்பாட்டங்களில் மேலும் இருவர் சுட்டுக்கொலை

மியன்மார்: சுற்றிவளைக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுவிப்பு

சவூதியின் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல்: எண்ணெய் விலை உயர்வு

ஹரி, மேகன் கருத்து: மகாராணி வருத்தம்

மியன்மாரில் தடுப்புக்காவலில் 2ஆவது கட்சி அதிகாரி மரணம்


அவசரமாகக் கூடுகிறது பிரிட்டன் அரச குடும்பம்

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மேர்கல் வழங்கிய பரபரப்பான தொலைக்காட்சி நேர்காணலை அடுத்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பங்கேற்கும் அவசர கூட்டம் ஒன்று கூட்டப்பட்டுள்ளது.

இந்த பேட்டிக்கு பதில் அளிப்பது தொடர்பில் பக்கிங்ஹாம் அரண்மனை ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுபற்றி கூற அரண்மனை அவசரப்படவில்லை என்று பி.பி.சி அரச குடும்ப செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்ரா வின்பரி தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு அளித்த பேட்டியில் ஹரி மற்றும் மேகன் இருவரும் அரச குடும்பத்திற்குள் இருக்கும் இனவாதம், மனநிலை மற்றும் ஊடகம் தொடர்பில் வெளிப்படையாக கூறியிருந்தனர்.

நவீன வரலாற்றில் பிரிட்டன் அரச குடும்பத்தில் இணைந்த முதல் கலப்பினத்தவராக மேகன் இருக்கும் நிலையில், ஒரு கட்டத்தில் அவரது குழந்தையின் தோல் நிறம் பற்றி அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் ஹரியிடம் கேட்டதாக மேகன் குறிப்பிட்டார்.

எனினும் மகாராணி அல்லது எடின்பரோ கோமகன் இதனைக் கேட்கவில்லை என்பதை இளவரசர் ஹரி பின்னர் உறுதி செய்துள்ளார்.    நன்றி தினகரன் கமலா ஹாரிஸ் ஆவஸ்திரேலிய பிரதமரிடம் பேச்சுவார்த்தை

சீனா, இந்தோ -பசிபிக் மீதான ஒத்துழைப்பு குறித்து விவாதம்

அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் செவ்வாயன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பேசினார். காலநிலை மாற்றம், சீனா மற்றும் மியான்மார் உள்ளிட்ட உலகளாவிய மற்றும் பிராந்திய சவால்களுக்கு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்.

இரு தலைவர்களும் அமெரிக்க- ஆஸ்திரேலியா கூட்டணியின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தியதாக வெள்ளை மாளிகை அறிக்கை கூறியுள்ளது.

"காலநிலை மாற்றம், சீனா, பர்மா மற்றும் பிற பிராந்திய பிரச்சினைகள் உள்ளிட்ட உலகளாவிய மற்றும் பிராந்திய சவால்களில் மேலும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து துணை ஜனாதிபதியும் பிரதமரும் விவாதித்தனர்" என்று வெள்ளை மாளிகை வாசிப்பு தெரிவித்தது.

இரு தலைவர்களும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மேலும் ஒத்துழைப்பதாக உறுதியளித்தனர்.

"பிற கூட்டாளிகள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும், தொற்று நோயிலிருந்து பொருளாதார மீட்சியை ஊக்குவிப்பதிலும், உலகளவில் ஜனநாயக விழுமியங்களை முன்னேற்றுவதிலும் அவர்கள் உடன்பட்டனர். துணை ஜனாதிபதியும் பிரதமரும் இந்தோ, -பசிபிக் மற்றும் அதற்கு அப்பால் அமெரிக்க -ஆஸ்திரேலியா ஒத்துழைப்பை உறுதிப்படுத்த உறுதியளித்தனர் ”என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், கமலா ஹாரிஸ் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் பேசினார். அமெரிக்க துணை ஜனாதிபதியின் சமீபத்திய அழைப்புகள் இராஜதந்திரத்தில் அவரது பங்கை அதிகரிக்கின்றன என்று தி நியூ​யோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.   நன்றி தினகரன்  


மியன்மார் ஆர்ப்பாட்டங்களில் மேலும் இருவர் சுட்டுக்கொலை

மியன்மாரின் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக பலம் மிக்க வர்த்தக சங்கம் ஒன்று நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தலையில் சுடப்பட்ட நிலையில் இரு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு நகரான மிட்கினா வீதியில் இரு ஆண்களின் உடல்கள் கிடக்கும் படங்கள் பேஸ்புக் சமூகதளத்தில் போடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் அருகில் இருக்கும் கட்டடங்களில் இருந்து பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மியன்மாரில் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் நாளாந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இதுவரை 50 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெரிய நகரான யாங்கோன், அதேபோன்று இரண்டாவது பெரிய நகரான மண்டலாய் மற்றும் ஏனைய பல நகரங்களிலும் நேற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறைந்தது ஒன்பது தொழில் சங்கங்களை உள்ளடக்கிய பலம்மிக்க தொழிற்சங்கம் ஒன்று நேற்று தேசிய அளவில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் யாங்கோன் நகரில் கடைகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வங்கிகள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் பதவி கவிழ்க்கப்பட்ட ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் பிரசார முகாமையாளர் ஒருவர் பொலிஸ் தடுப்புக்காவலில் உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சோதனைகளில் 41 பேர் கைது செய்யப்பட்டதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான பாதுகாப்பு படையினரின் பலப்பிரயோகம் மேற்குலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளாகி இருப்பதோடு இராணுவத்தின் மீதான சர்வதேச அழுத்தங்களும் அதிகரித்துள்ளன.    நன்றி தினகரன் 

மியன்மார்: சுற்றிவளைக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுவிப்பு

மியன்மாரின் யங்கோன் நகரில் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அமைதியான முறையில் கடந்த திங்களன்று பேரணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 பேர், குடியிருப்புக் கட்டடங்களில் தடுத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் அவர்கள் கட்டடங்களிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டதாக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

எனினும் கடந்த திங்கட்கிழமை இரவு 40 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தடுத்துவைக்கப்பட்டோரை விடுவிக்கும்படி ஐக்கிய நாடுகள் சபை தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கேட்டுக்கொண்டிருந்தார். வன்முறையைப் பயன்படுத்தாமலும் கைது செய்யாமலும் இராணுவம் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

சில வெளிநாட்டுத் தூதரகங்களும் குட்டரஸின் கருத்துகளை எதிரொலித்தன. கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியை அடுத்து மியன்மாரில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதோடு இந்த போராட்டங்களில் இதுவரை 54 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுவேளை, மியன்மார் இராணுவம், மக்கள்மீது போர் தொடுத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான மியன்மாரின் தூதர் டொக்டர் சாசா கூறியுள்ளார்.

அவர் கலைக்கப்பட்ட மியன்மார் பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்டவர். நாட்டின் இராணுவம் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலியையும் துன்பத்தையும் ஏற்படுத்துவதாக டொக்டர் சாசா குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் 
சவூதியின் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல்: எண்ணெய் விலை உயர்வு

சவூதி அரேபியாவில் எண்ணெய்க் கிணறுகள், சேமிப்புக் கிடங்குகள் மீதான தாக்குதலையடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 2 வீதம் உயர்ந்து 70 டொலர் 82 சென்ட்களாக உள்ளது.

சவூதி அரேபியாவில் அரசுக்குச் சொந்தமான அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகள், சேமிப்புக் கிடங்குகள் மீது யெமனைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி துறைமுகங்களில் ஒன்றான ராஸ் டனுராவில் இருக்கும் எண்ணெய் களஞ்சிய தொட்டி ஒன்றின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவூதி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அன்று மாலையில் சவூதி அராம்கோ எண்ணெய் நிறுவனம் இருக்கும் தஹ்ரானில் ஏவுகணை ஒன்று விழுந்துள்ளது.

எனினும் இந்தத் தாக்குதலால் உயிர் பொருள் சேதங்கள் ஏற்படவில்லை என்று சவூதி எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்தத் தாக்குதலால் எண்ணெய் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 2 புள்ளி ஒரு வீதம் உயர்ந்து 70 டொலர் 82 சென்ட்களாக உள்ளது. இதன்படி மசகு எண்ணெய் விலை 2019 மே மாதத்தில் இருந்த அளவை 20 மாதங்களுக்குப் பின் மீண்டும் எட்டியுள்ளது. எனினும் எண்ணெய் உற்பத்தியை மட்டுப்படுத்த சவூதி அரேபியா மற்றும் ஒபெக் அமைப்பு கடந்த வாரம் முடிவெடுத்திருக்கும் நிலையில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை ஏற்கனவே வலுவான நிலையில் உள்ளது.   நன்றி தினகரன் ஹரி, மேகன் கருத்து: மகாராணி வருத்தம்

பிரிட்டிஷ் இளவரசர் ஹரி, அவரது மனைவி மேகன் மார்க்கல் ஆகியோரின் சவால்மிக்க அனுபவங்கள் வருத்தமளிப்பதாக, எலிஸபெத் மகாராணி தெரிவித்துள்ளார்.

தம்பதியின் மகன் ஆர்ச்சியின் தோல் நிறம் குறித்துக் கூறப்பட்ட கருத்து, தனிப்பட்ட முறையில் விசாரிக்கப்படும் என அரசியார் உறுதி அளித்தார்.

தொலைக்காட்சிப் பிரபலம் ஓப்ரா வின்ப்ரி இளவரசர் ஹரியையும் மேகனையும் கண்ட நேர்காணல், அரச குடும்பத்தைப் பெரிய சிக்கலில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆர்ச்சியின் தோல் நிறம், எவ்வளவு கறுமையாக இருக்கக்கூடும் என்பதில் அரச குடும்பத்தார் அதிக அக்கறை தெரிவித்ததோடு, தமக்குத் தற்கொலை எண்ணம் தோன்றி உதவி கேட்டபோது அது புறக்கணிக்கப்பட்டதாகவும், மேகன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

நேர்காணலில் வெளியிடப்பட்ட சில தகவல்கள் மாறுபட்டு இருக்கலாம் என்று பக்கிங்ஹாம் அரண்மனை குறிப்பிட்டது.

எனினும், அவற்றைத் தீவிரமான ஒன்றாய்க் கருதுவதாக அரசியார் சார்பாக வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

இளவரசர் ஹரி, மேகன், ஆர்ச்சி மூவருமே எப்போதுமே அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்கள்தாம் என்றும் அறிக்கை தெரிவித்தது.    நன்றி தினகரன் 


மியன்மாரில் தடுப்புக்காவலில் 2ஆவது கட்சி அதிகாரி மரணம்

மியன்மார் இராணுவத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பதவி கவிழ்க்கப்பட்ட ஆளும் தேசிய லீக் கட்சி அதிகாரி ஸாவ் மியாட் லின் உயிரிழந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை அதிகாலையில் இராணுவத்தால் ஸாவ் கைது செய்யப்பட்டார். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு உயிரிழந்த இரண்டாவது கட்சி அதிகாரியாக இவர் உள்ளார்.

“அவர் ஆர்ப்பாட்டங்களில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார்” என்று அந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ மருத்துவமனையிலிருந்து ஸாவின் சடலத்தைப் பெற, அவரது உறவினர்கள் முயன்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரது வயிற்றுப் பகுதியில் பெரிய காயம் ஒன்று இருப்பதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார். எனினும் தடுப்புக் காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது காயம் ஏற்பட்டிருப்பதாக இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

மியன்மாரில் அன்றாடம் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க, இராணுவம் வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை அங்கு 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 1,800க்கும் மேற்பட்டோர் தடுத்துவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  நன்றி தினகரன் 


No comments: