சிரித்தனன் இறைவன் செப்பினான் விடையை !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 


மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் 
மெல்பேண் ... அவுஸ்திரேலியா



அழைப்பினை ஏற்று ஆண்டவன் வந்தான்
அடியவா உந்தன் அவாவெது வென்றான்
அழகுடை இளமையை இழந்தேன்  வாழ்வில்
முதுமையைப் பெற்று வலிமையை இழந்தேன்

நிமிர்ந்துமே நிற்கும் நிலையினை இழந்தேன்
நினைவெனும் பதிவில் பலவற்றை இழந்தேன்
வந்திட்ட ஆசைகள் அனைத்தையும் இழந்தேன்
இழந்திட்ட அனைத்தையும் தந்திடு என்றேன்

சிரித்தனன் இறைவன் செப்பினான் விடையை

கல்வியைக் கற்று கசடினை இழந்தாய்
கற்றவர் உறவால் கயவரை இழந்தாய்
ஆசைகள் அடக்கி அவலத்தை இழந்தாய்
அன்பினைப் பெருக்கி ஆணவம் இழந்தாய்

உழைத்ததன் பயனாய் வறுமையை இழந்தாய்
உறவுகள் இணைப்பால் தனிமையை இழந்தாய்
பாசத்தைப் பெருக்கி மோசத்தை இழந்தாய்
பக்குவம் பெருக்கு பகமையை இழந்தாய்

தர்மத்தைச் செய்து அதர்மத்தை இழந்தாய்
தயவினைப் பேணி கோபத்தை இழந்தாய்
அறிவினைப் பெருக்கி மடமையை இழந்தாய்
அகத்தினைத் திருத்த அழுக்குகள் இழந்தாய்

இழந்ததை தரவா என்றனன் இறைவன்
மெளமாய் நானும் கண்ணீரில் மிதந்தேன்
ஆண்டவா நீயே அடைக்கலம் என்றேன்
அமைதியும் நிறைவும்  அகத்தினை அடைந்தது 

No comments: