உலகச் செய்திகள்

ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்திற்கு மூத்த குடியரசு கட்சியினர் இடையே ஆதரவு

ஆயுதமேந்திய போராட்டத்திற்கு ட்ரம்ப் ஆதரவாளர்கள் திட்டம்

அமெரிக்க வரலாற்றில் ட்ரம்புக்கு ஏற்பட்ட பரிதாபநிலை


ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்திற்கு மூத்த குடியரசு கட்சியினர் இடையே ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக அவரது குடியரசுக் கட்சியின் முத்த உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளனர்.

அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் அத்துமீறி, கலகத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பிலேயே ட்ரம்ப் மீது அந்நாட்டு பாராளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியின் மூன்றாவது மூத்த உறுப்பினரான லிஸ் சென்னி இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கான வாக்கெடுப்பு விரைவில் இடம்பெறவுள்ளது.

ஐந்து பேர் கொல்லப்பட்ட இந்த கலகம் தொடர்பில் பொறுப்பேற்க ட்ரம்ப் மறுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பில் சென்னி முதல் முறை கருத்துக் கூறியுள்ளார்.

இந்த வன்முறையை ட்ரம்பே தூண்டியதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனை ஒட்டியே அவர் மீது ஜனநாயகக் கட்சியினர் பதவி நீக்கத் தீர்மானத்தை கொண்டுவரவுள்ளனர்.

பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையை பெற்றிருக்கும் நிலையில், பதவிக் காலத்தில் இரு தடவைகளில் பதவி நீக்கத் தீர்மானத்திற்கு முகம்கொடுக்கும் முதலாவது ஜனாதிபதியாக ட்ரம்ப் இடம்பெறவுள்ளார். கடந்த 2019 டிசம்பரில் ட்ரம்புக்கு முதல் முறையாக பதவி நீக்க தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டபோதும் அது தோல்வி அடைந்தது.

இதன்படி ட்ரம்ப் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் மேல் அவையான செனட் சபை அவர் மீது விசாரணை நடத்தும். அதில் குற்றங்காணப்பட மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவைப்படும். இது நிறைவேற்றப்பட குறைந்தது 17 குடியரசு கட்சி உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

இந்நிலையில் 20 வரையான குடியரசுக் கட்சியினர் ட்ரம்ப் மீது வெளிப்படையாக குற்றம்சாட்டி வருவதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. எனினும் இந்த விசாரணை நடத்தப்படும் கால எல்லை இன்னும் உறுதி செய்யப்படாதுள்ளது. வரும் ஜனவரி 20 ஆம் திகதி ட்ரம்ப் பதவியில் இருந்து வெளியேறி புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்கவுள்ளார்.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை 25ஆவது திருத்தச் சட்டத்தை பயன்படுத்தி ட்ரம்பை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றும்படி துணை ஜனாதிபதி மைப் பென்ஸுக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் ஒன்று பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 223 வாக்குகளும் எதிராக 205 வாக்குகளும் பதிவாகின.

எனினும் ஜனநாயகக் கட்சியினரின் இந்தத் தீர்மானத்தை நிராகரித்து பென்ஸ் ஏற்கனவே பிரநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசிக்கு கடிதம் எழுதியுள்ளார். “எமது அரசியலமைப்பின் கீழ், 25 ஆவது திருத்தச் சட்டம் என்பது தண்டிப்பது அல்லது அபகரிப்பது என்று அர்த்தம் கொள்ள முடியாது” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

உடல்நலம் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டுப் பணியாற்ற முடியாமல் போகும்போதுதான் அந்தச் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்றும் மைக் பென்ஸ் கூறியுள்ளார்.   நன்றி தினகரன் 

 



ஆயுதமேந்திய போராட்டத்திற்கு ட்ரம்ப் ஆதரவாளர்கள் திட்டம்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்கும் தினத்தில் நாடெங்கும் ஆயுதம் ஏந்திய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பதவி ஏற்பு நிகழ்வு இடம்பெறும் ஜனவரி 20 ஆம் திகதி 50 மாநிலங்களினதும் தலைநகரங்கள் மற்றும் வொசிங்டன் டி.சியில் ஆயுதம் தரித்த குழுக்கள் ஒன்றுகூட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்து கலகத்தில் ஈடுபட்ட சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களின் பின்னரே பதவி ஏற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதனை ஒட்டி பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மறுபுறம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது இன்று புதன்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதாக பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் 'கிளர்ச்சியை தூண்டியதாக' ஜனாதிபதி மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதோடு டிரம்பை பதவி நீக்கம் செய்ய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தவறும் பட்சத்திலேயே இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதனைச் செய்ய தயார் நிலையில் இருப்பது குறித்து பென்ஸ் இடம் இருந்து எந்த சமிக்ஞையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கெப்பிட்டல் கட்டிடத்தில் இடம்பெறும் நிகழ்விலேயே ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவி ஏற்கவுள்ளனர். கடந்த ஜனவரி 6 ஆம் திகதி இடம்பெற்றது போல் மற்றொரு அத்துமீறல் நிகழ இடமளிப்பதில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல் முடிவு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களால் உறுதி செய்து வாக்களிப்பு இடம்பெறும் சந்தர்ப்பத்திலேயே ஆயிரக்கணக்கான ட்ரம்ப் ஆதரவாளர்கள் அந்தக் கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக ட்ரம்ப் ஆதாரமின்று குற்றம்சாட்டி வந்த சூழலிலேயே இந்த வன்முறை இடம்பெற்றது. இதில் ஐவர் கொல்லப்பட்டனர்.

அது தொடக்கம் டிரம்பை பதவி விலகும்படி அழுத்தம் அதிகரித்திருப்பதோடு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவர ஜனநாயகக் கட்சியினர் தயாராகி வருகின்றனர். தவிர, டிரம்பின் சமூக உடகங்கள் இடைநிறுத்தப்பட்டிருப்பதோடு, குறிப்பாக டிவிட்டர் அவரது கணக்கை நிரந்தரமாக நிறுத்தியது.

இதனிடையே ட்ரம்ப் ஆதரவாளர்கள் பல போராட்டங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்தப் போராட்டம் எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி ஆரம்பித்து ஜனவரி 20ஆம் திகதியன்று தலைநகர் வொஷிங்டன் டி.சியை நோக்கி பயணப்பட இருப்பதாக, டிரம்புக்கு ஆதரவான மற்றும் வலதுசாரியினரின் வலைதளப் பதிவுகளில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனவரி 16 முதல் 20 ஆம் திகதி வரை எல்லா மாநில தலைமையகங்களிலும் போராட்டங்கள் நடக்கலாம் என எப்.பி.ஐ எச்சரித்திருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநில சபைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உள்ளூர் காவல் துறையினரிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ட்ரம்ப் பதவிக் காலத்துக்கு முன்னதாகவே பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ அல்லது பதவியேற்கும் நாளில் ட்ரம்ப் பங்கேற்கவில்லை என்றாலோ, உள்ளூர், மாநில மற்றும் ஐக்கிய நீதிமன்றங்களில் முற்றுகையிட ஒரு குழு அழைப்பு விடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.   நன்றி தினகரன் 



 



அமெரிக்க வரலாற்றில் ட்ரம்புக்கு ஏற்பட்ட பரிதாபநிலை


15/01/2021 தகுதிநீக்கம் மட்டுமல்லாமல் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளையும் இழக்கும் நிலைக்கு டொனால்ட் ட்ரம்ப் தள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக இரண்டு முறை கண்டன தீர்மானத்தை சந்தித்தவர் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்தான். அமெரிக்க வரலாற்றிலேயே கண்டன தீர்மானத்தை சந்தித்த மூன்றாவது அதிபரும் டொனால்ட் ட்ரம்ப் ஆவார். இந்த முறை ட்ரம்ப் சில சீரியஸான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என தெரிகிறது.

கடந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற கலவரங்களுக்கு ட்ரம்ப் மீது குற்றம்சாட்டப்படுகிறது. செனட்டில் அவை இயங்கிக் கொண்டிருக்கும்போதே ட்ரம்ப் தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு வன்முறை நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ட்ரம்ப் மீது குற்றம்நிறைவேற்றப்பட்டால் அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற வேண்டும். ஆனால், அவரது பதவிக்காலம் முடிய இன்னும் சில தினங்களே இருப்பதால் அந்த தேவை இல்லை. எனினும், இனி ட்ரம்ப் அதிபர் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் அவரை தகுதிநீக்கம் செய்ய தனி வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு, செனட்டில் பெரும்பான்மை கிடைத்துவிட்டாலே போதும், ட்ரம்பை தகுதிநீக்கம் செய்துவிடலாம். முதலில் ட்ரம்ப் மீதான குற்றங்களை செனட் நிரூபித்துவிட்டால், பின்னர் அவரை தகுதிநீக்கம் செய்துவிடலாம். இதன் விளைவாக, அதிபர் பதவி மட்டுமல்லாமல் எந்தவொரு பெடரல் பதவியையும் ட்ரம்ப் வகிக்க முடியாது.

இதுபோக, முன்னாள் அதிபர்கள் சட்டம் 1958-இன் கீழ் கிடைக்கும் சலுகைகளை டொனால்ட் ட்ரம்ப் அனுபவிக்க முடியாது. அதாவது, ட்ரம்புக்கு கிடைக்க வேண்டிய வாழ்நாள் முழுவதுமான ஓய்வூதியம், வருடாந்த பயண பட்ஜெட், அலுவலகம் மற்றும் ஊழியர்களுக்கான நிதியுதவி ஆகியவை அவருக்கு கிடைக்காமல் போகும்.

ட்ரம்புக்கு தொடர்ந்து இரகசிய சேவை பாதுகாப்பு கிடைக்கும். ஆனால் அமெரிக்க காங்கிரஸ் சட்டத்திருத்தம் மேற்கொண்டால் அந்த பாதுகாப்பும் அவருக்கும் கிடைக்காமல் போகும்.    நன்றி IBC தமிழ் 





No comments: