கூட்டமைப்புக்கு வரலாற்றுத் தோல்வி! 25 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம்


திருகோணமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் இரண்டு முறை தோல்வி கண்டதை அடுத்து இன்று நடந்த தவிசாளர் தேர்வில் 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கைமாறியது.

மாகாண சபைத் தேர்தல் வரலாற்றின் ஆரம்பம் தொட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியதை அடுத்து பிரதேச சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவம் செய்துவரும் ஆர்.ஏ.ரி. எஸ்.டீ. ரத்நாயக்க தெரிவானார்.

இன்று காலையே அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. அதில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் 22 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

2018ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 07 உறுப்பினர்களுடன் சபையைக் கைப்பற்றியது.

இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவுக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் 12 வாக்குகள் பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 10 வாக்குகளே கிடைத்தன.

சபையில் கூடுதலான உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்புக்கு விருப்பம் தெரிவித்ததற்கமைய திறந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் க.தங்கராசாவின் பெயர் முன்னாள் தவிசாளர் வைத்தியர் ஞானழிகுணாளனினால் முன்மொழியப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் திருமதி ஆர். அமுதவல்லியால் வழிமொழியப்பட்டது.

பொதுஜன பெரமுன சார்பில் உறுப்பினர் ரத்னாயக்காவின் பெயர் உறுப்பினர் ஏ.ஸி.பைரூஸால் முன்மொழியப்பட்டு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணனினால் வழிமொழியப்பட்டது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களில் இரு உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன உறுப்பினருக்கு சார்பாகவும் மற்றைய உறுப்பினர் நவ்பர் (உபதலைவர்) தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினருக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

அத்துடன் வரதர் அணி உறுப்பினர் சி. விபுசன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காலிகிரஸ் உறுப்பினர் இருவர் ஆகியோர் பொதுஜன பெரமுன உறுப்பினருக்கு சார்பாக வாக்களித்தனர்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் 3 உள்ளூராட்சி சபைகள் உள்ள நிலையில் இச்சபையை அது பறிகொடுத்துள்ளது.

நன்றி IBC தமிழ் 

No comments: