ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தள்ளுபடி: விடுதலையானார் பிள்ளையான்
யாழ்.பல்கலை துணைவேந்தர் திறமையான நிர்வாகியானால் இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் உணர்வுகளை சிதைத்திருக்க கூடாது!
ரஞ்சன் ராமநாயக்கவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது?
மீண்டும் முள்ளிவாய்க்கால் தூபி அமைப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
கோட்டாபயவின் பேச்சுக்கு எதிராக கொழும்பில் ஒன்றுதிரண்ட சஜித் அணி
முள்ளிவாய்க்கால் நினைவுதூபி உடைப்பு! தமிழ் நாட்டிலிருந்து வந்த அழுத்தம்??
பல்கலைக்கழக வளாகத்தில் இடித்தழிக்கப்பட்ட நினைவுத்தூபி மீண்டும் புத்துயிர்!
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தள்ளுபடி: விடுதலையானார் பிள்ளையான்
13/01/2021 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்யை தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்த சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, 2015ஆம் ஆண்டு தாங்கள் கைதுசெய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட முதலாம் 2ஆம் எதிரிகளின் வாக்குமூலமானது சுயேட்சையாக வழங்கப்படவில்லை, தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வாக்குமூலத்தினை வழங்கியிருந்தார்கள், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் வழங்கியிருந்ததாக தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு விண்ணப்பித்தனர்.
இதன் பிரகாரம் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தன் அடிப்படையில் 24ஆம் திகதி மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் பிணை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கினை தொடர்ந்து நடாத்தமுடியாது என மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்திருந்த நிலையில், வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நன்றி IBC தமிழ்
யாழ்.பல்கலை துணைவேந்தர் திறமையான நிர்வாகியானால் இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் உணர்வுகளை சிதைத்திருக்க கூடாது!
13/01/2021 யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை இடித்தழிக்க முன்னின்ற பல்கலைக்கழக துணைவேந்தர், மூன்று நாட்களுக்குப் பின்னர் அதனை மீள அமைக்க அடிக்கல் நாட்டியமை தொடர்பில் இலங்கையின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்தழித்த துணைவேந்தர், அதனை மீள அமைக்க அடிக்கல் நாட்டியமை, இடிபாடுகளை வழிபட்டு, ஸ்தோத்திர பாடல்களைப் பாடியமை தொடர்பில் வடக்கின் ஊடகவியலாளர்கள் அறிக்கையிட்டிருந்தனர்.
ஜனவரி 8, வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டமைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதன் பின்னர் நினைவுச்சின்னத்தை மீளமைக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ் ஸ்ரீசற்குணராஜா ஜனவரி 11 ஆம் திகதி திங்களன்று அடிக்கல் நாட்டியும் வைத்தார்.
அசல் நினைவுச்சின்னம் அகற்றப்படுவதை நியாயப்படுத்திய பல்கலைக்கழக மானியங்கள் ஆணையக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, “சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட அனுமதிக்காத” வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பேராசிரியர் அமரதுங்கவின் கூற்றை பொருட்படுத்தாது கருத்து வெளியிட்ட துணைவேந்தர், நினைவுச்சின்னத்தை அகற்றுமாறு “உயர் அதிகாரிகள்” அவருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறினார்.
“நிர்வாகப் பொறுப்புகளைக் கொண்ட ஒரு குடிமகனாக, உயர் அதிகாரிகளிடமிருந்து எனக்கு ஆலோசனை கிடைத்தது. அந்த உயர் அதிகாரிகள் இலங்கையின் பாதுகாப்பு, புலனாய்வுப் பிரிவு மற்றும் கல்வி அமைச்சு ”என துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீற்குணராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜாவின் நிர்வாகத் திறனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின், சுட்டிக்காட்டியுள்ளார்.
“சிறந்த விஞ்ஞானி மற்றும் திறமையான நிர்வாகியான பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, இன்றைய சூழ்நிலைக்கும் எதிர்காலத்திற்குப் பொருந்தாது என்ற அடிப்படையில் இந்த நினைவுச்சின்னத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து அகற்ற முடிவு செய்துள்ளார் என பேராசிரியர் சம்பத் அமரதுங்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது”
அத்தகைய தீர்மானத்தின் அடிப்படையில் நினைவுச்சின்னம் அகற்றப்பட்டால், எந்த அடிப்படையில் துணைவேந்தர் மீள் நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பது குழப்பமான நிலையை தோற்றுவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மாணவர்களின் ஒற்றுமைக்காக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிடுவது போல் ஒரு திறமையான நிர்வாகி, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுடன் கலந்தாலோசித்து தீர்மானம் மேற்கொண்டிருக்க வேண்டுமே தவிர, இராணுவத்தைப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டிருக்கக் கூடாது எனவும், இது கவலைக்குரிய விடயம் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதிகாரிகள் நினைவுச்சின்னத்தை இடித்தழிக்க எடுத்த நடவடிக்கைக்கு எதிராக கடந்த திங்கட்கிழமை வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் ஹர்த்தாலை முன்னெடுத்திருந்தனர்.
தெற்கில் பல பல்கலைக்கழங்களில் பல நினைவுச்சின்னங்கள் அமைக்கபட்டுள்ளதாகவும், குறிப்பாக நினைவுச்சின்னங்கள், இலக்கிய படைப்புகள், சிற்பங்கள், ஓவியங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றின் ஊடாக ஒருவரின் கருத்துக்களை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவது மனித உரிமை என ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டார்லின் குறிப்பிட்டுள்ளார். “யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாத்திரம் அந்த உரிமையைப் பயன்படுத்துவது சிக்கலானது அல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலகட்டத்தில் மாத்திரமன்றி, யுத்த காலத்திலும் சிங்கள மாணவர்களும், சிங்கள பேராசிரியர்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதை பல்கலைக்கழக மானியங்கள் மறந்துவிட்டமை பாரதூரமான விடயமென சுட்டிக்காட்டியுள்ள ஜோசப் ஸ்டார்லின், சிங்கள மொழி பேராசிரியர் சுச்சரித்த கம்லத், தர்மசேன பதிராஜ் உள்ளிட்ட பிற கலைஞர்கள் அந்த நேரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வளவு நீண்ட வரலாற்றைக் கொண்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஒரு போர் நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டதையும், மனித உரிமைகளை மீறியதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது.
“இது போரில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து, இழப்பில் வாழும் தமிழ் மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் செயலாகும். இது இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாகும்.” என இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. நன்றி IBC தமிழ்
ரஞ்சன் ராமநாயக்கவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது?
14/01/2021 உச்ச நீதிமன்றத்தால் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டள்ள ரஞ்சன் ராமநாயக்க 11 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபட முடியாது என சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்றையதினம் அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் இ்ன்னும் 06 மாதங்களில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நீதித்துறையை அவதூறு செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற ஆசனத்தை இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இதேவேளை சட்டவல்லுனர்கள், ரஞ்சன் ராமநாயக்க தனது நான்கு வருட சிறைவாசத்தை முடித்து வெளியே வந்தாலும் அவர் தனது சிவில் உரிமைகளை இழக்க நேரிடும் எனவும் இது தொழில்நுட்ப ரீதியாக அவரை 11 ஆண்டுகாலம் அரசியலில் இருந்து வெளியேற்றும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் இது தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாக ரஞ்சனின் சட்டவல்லுனர்க்ள குழு தெரிவித்துள்ளது. நன்றி IBC தமிழ்
மீண்டும் முள்ளிவாய்க்கால் தூபி அமைப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
13/01/2021 யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் இன்றைய சபை அமர்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன்போது கடந்த 8ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.மாநகர சபை மூன்று கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியது.
நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து சபை அமர்பு ஐந்து நிமிடங்கள் ஒத்திவைத்தல், யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் உள்நுழைந்தமையை கண்டித்தல் மற்றும் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைத் தூபி அமைத்தல் ஆகிய மூன்று தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முடிவினை முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்திருந்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து உரிமைக்காக போராடிய அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒரு பொதுவான நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு.
அந்த வகையில் யாழ்.பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் படுகொலை மற்றும் அவருக்கு நீீதி கேட்டு போராடிய விமலேந்திரன் உள்ளிட்ட மாணவர்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் தமது கட்சியின் கருத்தினை பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து சபையின் ஏனைய உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவித்ததை அடுத்து முதல்வர் சபை அமர்வை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐந்து நிமிடத்தின் பின்னர் ஏனைய விடையங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டு தற்போதும் நடைபெற்று வருகின்றது.
நன்றி IBC தமிழ்
கோட்டாபயவின் பேச்சுக்கு எதிராக கொழும்பில் ஒன்றுதிரண்ட சஜித் அணி
14/01/2021 அம்பாறையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேச்சு சுதந்திரத்தை வலியுறுத்தியும் இன்றையதினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்மொன்றை மேற்கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இந“த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சிவப்பு பாதுகாப்பு ஜக்கெட்டுகளை அணிந்திருந்தனர், நாட்டில் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த எதிர்ப்பு எனக்கு எதிரான ஜனாதிபதியின் கூற்றுகளுக்கு எதிரானது மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஆதரவாகவும் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னாண்டோ தெரிவித்தார்.
"எம்.ஜே. ராமநாயக்க தொடர்பாக சட்ட நடைமுறைகளில் எமது கட்சி தலையிடவில்லை, ஆனால் கருத்துச் சுதந்திரத்திற்கான தனது உரிமைக்காக அவர் நிற்கிறார்," என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு நகரத்திலும் பேச்சு சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்து மேலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி IBC தமிழ்
முள்ளிவாய்க்கால் நினைவுதூபி உடைப்பு! தமிழ் நாட்டிலிருந்து வந்த அழுத்தம்??
13/01/2021 யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபி உடைக்கப்பட்டவுடன் தமிழ் நாட்டு தலைவர்கள் எதிர்ப்பு எழுந்ததை அடுத்தே இந்த விடயத்தை சற்று தணிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த கொடூரச் செயலைக் கண்டித்த ஒன்டாறியோ முதல்வர் டக் போட், தென் ஆசியா மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் தரீக் அஹமது, தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள், இலங்கையில் முஸ்லிம், சிங்கள அரசியல் தலைவர்கள் உள்ளடங்கலாக அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
யாழ்ப்பணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் கடந்த 8ஆம் திகதி இரவோடு இரவாக அழிக்கப்பட்டது.
இதையடுத்து பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் மாணவர்கள் பலர் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் மேலிடத்தின் உத்தரவிலேயே இதை செய்ததாக பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்திருந்தார். எனினும் அவராகவே திடீரென பல்கலை மாணவர்களை சந்தித்து மீண்டும் நினைவுத்தூபி அமைக்க உறுதியளித்ததுடன் அடிக்கல்லினையும் நாட்டியமை குறிப்பிடத்தக்கது. நன்றி IBC தமிழ்
பல்கலைக்கழக வளாகத்தில் இடித்தழிக்கப்பட்ட நினைவுத்தூபி மீண்டும் புத்துயிர்!
13/01/2021 யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அதே இடத்தில் கட்டுவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பல்கலை நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்டது. அதனையறிந்து மாணவர்களும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் சம்பவ இடத்தில் திரண்டனர்.
அதனையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் குவிக்கப்பட்டு மாணவர்கள் உட்பட யாருமே உள்நுழைய முடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மாணவர்கள் தொடர்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
மறுநாள் காலையில் மாணவர்களுக்கும் துணைவேந்தருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில் மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே தூபியை இடித்ததாகவும் தான் எதுவும் செய்ய முடியாது எனவும் பதிலளித்துள்ளார்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்த சுகாதாரப்பிரிவினர் தற்போது நிலவும் கொரோனா தொற்று காரணமாக ஒன்று கூடலைத் தவிர்க்குமாறும் மீறி கூடினால் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தனர்.
அதனையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மாணவர் ஒன்றிய தலைவரால் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சில மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். அதன் காரணமாக இராணுவத்தினரும் பொலிஸாரும் பல்கலைக்கழக வளாகத்திலேயே நிலை கொண்டிருந்தனர்.
மாணவர்கள்னி தொடர் போராட்டம் காரணமாகவும் பல்வேறு அமைப்புக்கள், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் எழுந்த பெரும் கண்டனத்தையடுத்து துணைவேந்தர் இடிக்கப்பட்ட தூபியை மீண்டும் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
இந்நிலையிலேயே இன்றைய தினம் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடாக பொறியியலாளர்கள், நிலஅளவையியலாளர்கால் குறித்த பகுதி பார்வையிடப்பட்டு அளவீடு செய்யப்பட்டது. ஆகவே கட்டுமானப் பணி வெகு விரைவாக நடைபெற்று முடிவடையும் என யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு விடுத்துள்ளது.
நன்றி IBC தமிழ்
No comments:
Post a Comment