அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 49 – தொட்டாலு மற்றும் சீங்குழல் – சரவண பிரபு ராமமூர்த்தி



தொட்டாலு
:  தொட்டாலு என்பது உலக்கை போல அமைப்பு உடைய மிகப்பெரிய குழல் இசைக்கருவி. தொட்ட என்றால்  பெரிய  என்று தெலுங்கில் அர்த்தமாம். தொட்டிலி  என்றும் வழங்கும். பெரிய மூங்கில் மரத்தில் 5 துளையிட்டு செய்யப்படும் மிக நீளமான இசைக்கருவி தொட்டாலு. 3 அடி முதல் 5 அடி வரை நீளம் இருக்கும். இக்கருவி தமிழகத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் இன மக்களால் மாடுகளை மேய்க்க பயன்படுகிறது. அவர்களின் குல தெய்வ வழிபாடுகளிலும் மாலை தாண்டும் சடங்கிலும் இடம்பெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பெரியகோட்டை, வேடசந்தூர், குஜிலியம்பாறை பகுதிகளில் கம்பளத்து நாயக்கர்களிடம் இருந்து வருகிறது இக்கருவி. மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் வேளையில் வாசிப்புக்கு ஏற்ப அவை தண்ணீர் குடிப்பது, நடப்பது, ஓய்வெடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.

 

சீங்குழல்: சீங்குழல் என்பது (மூங்கிலில் இருந்து) சீவிய குழல்


என்கிறது அகராதி.  காட்டில் புதராய் வளர்ந்து செழித்திருக்கும் மூங்கிலில் வண்டுகளால் துளைக்கப்படும் துளைகள் வழியே காற்றுப் புகுந்து இன்னிசையாய் வெளியேறும் நிகழ்வே குழல் வாத்திய தோற்றத்திற்கு தூண்டுகோல் என்பர். அதனால் முதல் துளை வாத்திய கருவியான புல்லாங்குழல் சீங்குழல் என்றும் குறிப்பிடப்படுகிறது (சீம்பால், சீமந்தம் போல்). மிகப்பெரிய அளவில் உள்ள மூங்கில் சீங்குழல்களை ராஜகம்பள நாயக்கர் இன மக்கள் ஜக்கம்மா வழிபாட்டில் இசைக்கிறார்கள். இவர்களின் குழலில் சுமார் அரை அடி இடைவெளியில் 5 துளைகள் இருக்கும். சிறிய அளவு சீங்குழலும் இவர்களிடம் உண்டு. இக்குழல் பெருமாள், ஜக்கம்மா, பொம்மையாசாமி, பொம்மக்கா போன்ற தெய்வ வழிபாடுகளின் போதும், தைப் பொங்கல், எருது ஓட்டத்திற்கும் இசைக்கப்படும். இருவர் எதிர், எதிரே அமர்ந்து இரவு முழுவதும் ஊதுகின்றனர்.

 

கொடைக்கானல், பழனி மலைகளில் வாழும் பளியர் பழங்குடிகளும் சீங்குழல் இசைக்கிறாகள். இவர்கள் இதை சிட்டு மூங்கில்/பொத்தல் மூங்கில் ஆகியவற்றில் செய்கிறார்கள். குரும்பர் பழங்குடியினர் மத்தியிலும் இக்குழல் புழக்கத்தில் உள்ளது. திருமண நிகழ்வுகளிலும் சேவையாட்டத்திலும் பயன்படுத்துகிறார்கள். தற்பொழுது வழக்கொழிந்து வருகிறது.

 


மேல் உதடு இல்லாதவன் சீங்குழல் வாசிச்ச மாதிரி” என்பது நாட்டார் சொல்வழக்கு. தமிழர் நாட்டுப்பாடல்கள் பலவற்றில் சீங்குழல் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவை பெரும்பாலும் மேய்ச்சல் சமூகத்துடன் தொடர்புடையது. சிவன்  தனது கையில் வைத்திருந்த சித்துடுக்கை, சீங்குழல் இரண்டையும் கொடுத்து, இவற்றை வைத்துக் குறி சொல்லிப் பிழைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியதாக குடுகுடுப்பைக்காரர்கள் நம்புகிறார்கள்.

காணொளி:

https://www.youtube.com/watch?v=uHPpnSnNnq0

https://www.youtube.com/watch?v=na5Djr0cC0Q

https://www.youtube.com/watch?v=MZhsxPQfl58

https://www.youtube.com/watch?v=j_Az5UGy3Kw

 

-சரவண பிரபு ராமமூர்த்தி

 நன்றி:

  1. பல்லடம் திரு க.பொன்னுசாமி அவர்கள்வரலாற்று ஆய்வாளர்பல்லடம்
  2. திரு சிவலிங்கம் நாயக்கர் அவர்கள், கரூர்.

 

 

No comments: