பயணியின் பார்வையில் - அங்கம் 14 வடக்கில் பதினைந்து தமிழ் அரசியல் கட்சிகள் !? அதிகாரம் கேட்கும் தமிழ் அரசியல் கட்சிகளும் வாழ்வாதாரம் கேட்கும் பாதிக்கப்பட்ட மக்களும் - முருகபூபதி


இலங்கையில் சில முக்கியமான தேர்தல்கள் விரைவில் வரப்போவதாகவும், தேர்தல் ஆணையாளர் தமது பதவியை விலக்கிக்கொள்ள விரும்புவதாகவும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன.

இந்தப்பின்னணியிலிருந்து எனது பயணியின் பார்வையில் தொடரில் - வடக்கிலிருந்து  விடைபெற்ற அந்தத் தருணம் பற்றி சொல்லிக்கொண்டு , கிழக்கிற்கு சென்ற பயணத்தை அடுத்த அங்கத்தில் பதிவுசெய்கின்றேன்.

அன்று யாழ். நல்லூர் நாவலர் மண்டபத்தில் எனது நூல்களின் அறிமுக அரங்கு முடிந்ததும், நண்பர் கருணாகரன் கிளிநொச்சிக்கு அழைத்துச்சென்று தனது இல்லத்தில் தங்கவைத்தார்.

அவரது இல்லத்தை , கலை இலக்கிய சங்கமத்திற்கான தளம் என்றும் சொல்லலாம். அத்துடன் வெளிநாடுகளிலிருந்து வரும் கலை இலக்கியவாதிகளுக்கு   ட்ரான்ஸிட்  சந்திப்பு எனவும் கூறலாம்.
கருணாகரனும் அவரது துணைவியாரும் வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பார்கள். இலங்கையில் எனக்கு மற்றும் ஒரு இல்லம் என்றால், அது கருணாகரனின் அந்த இல்லம்தான் என்றும் உரிமையுடன் சொல்லமுடியும். அவர் இதற்கு முன்னரும் அந்த இல்லத்திலும்  கிளிநொச்சியிலும் எனக்காக சந்திப்புகளை நடத்தியவர். எனக்கு மட்டுமல்ல என்னைப்போன்று வரும்  கலை இலக்கியவாதிகளுக்கும் அவர் அவ்வாறே நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர். அதனால் அவரது இல்லத்திற்கு வரும் கலை இலக்கியவாதிகள் நன்றிகூறக்கடமைப்பட்டவர்கள்!

இம்முறை பயணம் பல அவசரப்பணிகளுடன் நிறைந்திருந்தமையால்,  கிளிநொச்சியில் சந்திப்புகள் எதுவும் நடைபெறவில்லை. மறுநாள் காலை யாழ்ப்பாணத்திலிருந்து எமது கல்வி நிதியத்தின் தொடர்பாடல் அமைப்பான சிறுவர் அபிவிருத்தி நிலைய அலுவலர்கள் ஒரு வாகனத்தில்  முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கு என்னை அழைத்துச்செல்லவந்தனர்.
அவர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்து யாழ். நிகழ்ச்சிகளில் பங்கேற்ற  நண்பர் இராஜரட்ணம் சிவநாதன் அவர்களையும் அழைத்துவந்தனர்.

இச்சந்தர்ப்பத்தில் வடக்கிற்கான எமது தொடர்பாளர்கள் பற்றி சில வார்த்தைகள் சொல்லத்தான் வேண்டும்.
அவர்கள் அனைவரும் மனிதாபிமானத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இயல்பினர்.
அவர்களிடத்தில் எந்தவொரு அரசியல் நோக்கமும் இல்லை.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கும் உதவிகளை உரிய முறையில் பாதிக்கப்பட்டவர்களிடம் சேர்ப்பித்து, பெறுபேறுகளை தெரிவிப்பவர்கள்.
 ஊடகங்களில் அறிக்கை விடுத்து தங்களை முன்னிலைப்படுத்தாதவர்கள்.


இவ்வாறு இலங்கையில் பல பாகங்களிலும் பலர் மனிதநேயத்துடன் இயங்கிவருவதை அவதானிக்கின்றோம். அதேசமயத்தில் போருக்குப்பின்னர் வடக்கில் தமிழர்களுக்காக  அரசியல் நடத்துபவர்களின்  “அக்கப்போர்  பட்டிமன்றங்களையும் அவதானித்துவருகின்றோம்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி,  டெலோ,  புளட்  ஆகியனவும்,  சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி. ஆர். எல். எஃப்,  டக்ளஸ் தேவானந்தவின் ஈ.பி. டீ. பி, சந்திரகுமாரின் - சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு,   முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக்கூட்டணி,    வரதராஜப்பெருமாளின் - தமிழர் சமூக ஜனநாயக கட்சி, அனந்தி சசிதரனின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம்,  கணேஷ் வேலாயுதத்தின்  மக்கள் முற்போக்கு முன்னணி,  பிரபாகரனின் ஈரோஸ் ,  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய முன்னணி, ஜனநாயகபோராளிகள் கட்சி ,  செந்திவேலின் புதிய சனநாயக மார்க்ஸிஸ லெனினிஸ கட்சி, இவை தவிர காவியுடுத்திருக்கும் சச்சிதானந்தனின் சிவசேனா இயக்கம்,

( இன்னும் இருக்கிறதா…?)

இவ்வாறு தமிழர்களுக்காக பத்துக்கும் மேற்பட்ட  அரசியல் கட்சிகள் – இயக்கங்கள் அங்கு இருப்பதாக ஊடகங்கள் அடையாளப்படுத்தியுள்ளன.

உள்ளுர் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் போன்று  எனவும் இவற்றை சொல்லமுடியாது. !   பழைய மாணவர் சங்கங்களை இவற்றுடன் ஒப்பிடவும் முடியாது. இச்சங்கங்கள் அதிகபட்சம்  வடபிரதேச மாணவர்களின்  கல்விக்காக வெளிநாடுகளில் இயங்கும் கிளைகளின் ஆதரவுடன் தொண்டு செய்யும்  அமைப்புகள். அதனால், இவற்றை அரசியல் கட்சிகளுடன் ஒப்பிட்டு  தாழ்த்திவிடக்கூடாது!

அங்கிருக்கும் அரசியல் இயக்கங்களுக்கும்  புகலிட மக்களின் ஆதரவு இருக்கிறது. ஆனால், பழைய மாணவர் சங்கங்கள் மேற்கொள்ளும் அரிய பல சமூகத்தொண்டுகளை அவை செய்வதேயில்லை!

                           அங்குள்ள அரசியல் கட்சிகள்  அனைத்தும் ஏக ( ஏகாந்தமாக) குரலில் சொல்லும் ஒரு வசனம் இருக்கிறது:

  “எங்களிடம் அதிகாரத்தை தாருங்கள் தமிழ் இனத்தையும் தமிழ்த் தேசியத்தையும் காப்போம்.”

இந்தக்குரலுடன் ஒன்றிணையவும் மாட்டார்கள். ஒன்றிணைந்தால் ஊடகங்கள் பாடு பெரும் திண்டாட்டமாகிவிடும்.  ஊர் இரண்டுபட்டால்தான்  கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்களே! அதுபோலத்தான் அந்த அரசியல் கட்சிகள் இரண்டு பட்டு மூன்றுபட்டிருந்தால்தான் ஊடகங்களுக்கும் தீனி கிடைக்கும்.

அண்மையில் சென்னையில் நடிகர் சங்கத்தேர்தல் நடந்தபோது, பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களைச்  சேர்ந்தவர்கள் படையாக திரண்டு வந்து வாக்களித்துவிட்டு வந்த அரிதாரம் பூசும் நடிகர்களிடம் கருத்துக்கேட்டனர்.
அவ்வேளையில் தமிழகத்தை வரட்சி தாக்கியது. குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு வந்தது.
அதேசமயம் குடிதண்ணீருக்காக பெண்கள் குடங்களுடன் தெருவில் இறங்கி போராடினார்கள்.

சமூக நலத்தொண்டர்கள் மரம் நடும் இயக்கத்தில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

நடிகர் சங்கத் தேர்தல் நடந்த இடத்திற்கு வந்த ஊடகவியலாளர்களிடம்,   தமிழ்நாட்டில் தண்ணீருக்காக எத்தனையோ பேர் வெளியே போராடிக்கொண்டிருக்கிறார்கள். அந்தச்செய்திகளை சேகரிப்பதை விடுத்து இங்கே வந்தீர்களா?  “ என்று சின்னக்கலைவாணர் நடிகர் விவேக் கேட்டார்!


நீடித்த போர் முடிந்து பத்து ஆண்டுகளாகிவிட்டன. அதற்குப்பின்னர் முளைத்த கட்சிகள் பற்றி தெரியும்தானே?  இக்கட்சிகளின் கோலங்களின் பின்னணியை அவதானித்துக்கொண்டு வாருங்கள். அப்படியே இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களும் வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் தமிழர்களும் தயவுசெய்து ஒரு தடவையாவது இறுதிப்போர் முடிவுற்ற பிரதேசங்களில் வதியும் எமது மக்களை சென்று பாருங்கள்!

நாம் அன்று கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கு பயணமானோம். அங்கு விசுவமடு கணினி  வள பயிற்சி நிலையத்தில் எமது கல்வி நிதியத்தின் உதவிகளைப்பெறும் இறுதிப்போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட சில மாணவர்களும் தாய்மாரும் எமக்காக  காத்திருந்தனர்.  வன்னிப்பிரதேச மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் நிதிக்கொடுப்பனவும்  யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் அலுவலர் திரு. இன்ப ரூபன் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களின் தாய்மார் தங்களது கருத்துக்களையும் தேவைகளையும் தெரிவித்தனர்.

சில மாணவர்கள் உரையாற்றினர். அவர்களில் சிலர்  கவிதை எழுதிவந்து வாசித்தனர். ஆற்றல் மிக்க அந்தச்செல்வங்கள் இன்னமும்  கண்களில் சஞ்சரிக்கின்றனர்.


இம்மாணவர்கள் இறுதிப்போரில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள்.  தமது தந்தையரை இழந்தவர்கள். இவர்களுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் எமது கல்வி நிதியம் உதவிவருகிறது. அதுபோன்று பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் போரில் காயமுற்ற ஊனமுற்ற மாற்றுத்திரனாளிகளுக்கும் விதவைத்தாய்மாருக்கும் வாழ்வாதார உதவிகளை வழங்கிவருகின்றன.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், இலங்கையில் எவ்வளவுக்கெவ்வளவு சர்வதேச பாடசாலைகள்,  கல்லூரிகள் தொடங்கியிருக்கிறதோ, அந்தளவுக்கு சற்றும் குறையாமல்   அதிகபட்சமாகவே  தரமுயர்த்தப்படாத, வளங்கள் குறைந்த அரச பாடசாலைகள் இயங்குகின்றன.

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது காணாமல் போனவர்களின் மனைவிமார், உறவினர்களின் அறப்போராட்டம் முற்றுப்பெறாமல் தொடருகிறது.

அவர்களின் வாழ்வாதாரம் குறித்து, மேற்சொன்ன அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஊடகங்களில் அறிக்கை  விடுவதுடன் ஓய்ந்துவிடுகின்றன.
 தமிழ் ஊடகங்கள் கள ஆய்வு மேற்கொண்டு, உடனுக்குடன் ஆளுநருக்காவது தெரிவிக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பில் ஈடுபடல் வேண்டும்.

போர் நடந்த அந்தப்பிரதேசங்களில் பல பிள்ளைகளின் உடல்களில் எறிகணைத்துகள் இன்னமும் இருக்கின்றன. நாம் சந்தித்த தாய்மார்கள் பிள்ளைகளின் குறைகளை கேட்டறிந்து,  அவர்களின்  தேவைகளை கவனித்தோம்.

இவ்வாறுதான்  சிறிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தம்மிடமிருக்கும் குறைந்த வளங்களுடன் இயங்க முடிகிறது.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு பன்முக வரவு செலவுத்திட்ட  நிதியிலிருந்து  அரசு வருடந்தம்  நிதி  வழங்குகிறது. அதனை   அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவுசெய்கிறார்கள்?  என்பது குறித்து இதுவரையில் இந்த ஊடகங்கள் கள ஆய்வு செய்துள்ளனவா?

வடக்கில் இயங்கும் இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் அவ்வப்போது ஊடகங்களின் ஊடாக  வெளியிடும் அறிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகத்தான் இருக்கிறது.

போருக்குப்பின்னர் இந்த அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குகளுக்காக,  தங்களுக்கு  அரசியல் அதிகாரம் கேட்கிறார்கள்!

ஆனால், பாதிக்கப்பட்ட மக்களோ தங்களுக்கு வாழ்வாதாரம்தான் கேட்கிறார்கள்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, வவுனியாவுக்கு அன்று மாலைசென்றோம்.

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள எமது கல்வி  நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பின்  ( Voluntary Organization for Vulnerable Community Development )   பணிமனை முன்றலில் மாணவர் ஒன்றுகூடலை நடத்தினோம்.

இவ்வாறு இலங்கையில் நாம் நிகழ்ச்சிகள் நடத்தும்போது அங்கிருக்கும் தொடர்பாளர்களுக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளோம்.
இந்நிகழ்ச்சிகளுக்கு அரசியல்வாதிகளையோ அரசியல் பிரமுகர்களையே  அழைத்துவிடாதீர்கள். பொன்னாடை பூமாலை எடுத்துவராதீர்கள்.
 கல்வி சார்ந்த அதிகாரிகளை , ஆசிரியர்கள், அதிபர்களை சமூகப்பணியாளர்களை அழைத்து வாருங்கள்.

சில சந்தர்ப்பங்களில் உதவி பெறும்மாணவர்கள் தாமாகவே பூக்களை சேகரித்து மாலை தொடுத்து எடுத்துவருவார்கள்.  அவர்களது அன்புத் தொல்லையால் நாம் நெகிழ்ந்துவிடுவதுமுண்டு.

அவ்வாறு சில இடங்களில் எனக்குத்தரப்பட்ட மாலைகளை மாணவர்களுக்கே அணிந்துவிடுவது எனது சுபாவம்.

“ பிள்ளைகளே,  போரிலே உங்கள் அப்பாமார் இறந்த பின்னர், கிடைக்கும் சொற்ப வாழ்வாதார உதவிகளுடன் உங்களை சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்குகிறார்களே உங்கள் அம்மாமார்! அவர்களின் தன்னலமற்ற சேவையை அந்த புனிதமான தாயுள்ளத்தை எண்ணி அவர்களை என்றைக்காவது மாலை சூட்டி மரியாதை செலுத்தி பாராட்டியிருக்கிறீர்களா..? இல்லையென்றால், இனிமேலாவது செய்யுங்கள்”   என்றுதான் அந்த மாணவர் சமுதாயத்திடம் சொல்லிவருகின்றேன்.

அன்றைய தினம், முல்லைத்தீவு – வவுனியா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு,  அன்றிரவு வவுனியாவில் தங்கிநின்று, மறுநாள் காலை மட்டக்களப்பிற்கு இ.போ. ச. பஸ்ஸில் புறப்பட்டேன்.


( தொடரும்)








-->










No comments: