ஆனந்தம் அடைவோம் நாளும் ! மகாதேவஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா

உறவுகள் வாழ்வில் என்றும் உணர்வுடன் கலக்க வேண்டும்                         
அளவிலா அன்பை நாளும் அள்ளியே வழங்க வேண்டும்
தெளிவுடன் என்றும் வாழ வழியினை காட்ட வேண்டும் 
நலமுடன் இருக்க வேண்டில் நாடுவோம் நல்லுறவை என்றும் !

பற்பல உறவை எங்கள் பண்பாட்டில் காணு கின்றோம்
பாட்டியாய் தாத்தா என்று பரம்பரை வளர்ந்தே போகும்
பெரியம்மா சித்தி அத்தை பெரியப்பா மாமா மச்சான் 
அன்புடை அக்கா அண்ணா அருகினில் வந்தே நிற்பார் !

ஆசையாய் கொஞ்சும் அம்மா ஆவலாய் அணைக்கும் அப்பா
கோபமாய் கிள்ளும் மாமி கொஞ்சியே பேசும் மச்சாள்
பாசமாய் பார்க்கும் தங்கை பரிவுடன் அணைக்கும் பாட்டி
நேசமாய் நிறையும் உறவால் நெஞ்சமே நிறையும் வாழ்க்கை !


இத்தனை உறவைக் காட்டும் எங்களின் பண்பாட்டைப் பார்க்க
எத்தனை பெருமை என்று எண்ணி நாம் பார்ப்பதில்லை
தமிழிலே நிறைந்து நிற்கும் அமிழ்தான உறவை நாங்கள்
அகமதில் எண்ணி எண்ணி ஆனந்தம் அடைவோம் நாளும் !
No comments: