பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல் ; முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கைது!
விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் அச்சிடப்பட்ட பத்திரிகையை விநியோகிக்க சென்றவர் இராணுவத்தால் கைது !
3 வீடுகளுக்குள் புகுந்த மர்ம கும்பல் அடாவடியில் ஈடுபட்டுவிட்டு தப்பியோட்டம்
யாழ். நகரில் அமைக்கப்பட்ட 5ஜி கம்பங்கள் குறித்து யாழ் முதல்வர் வெளியிட்டுள்ள புதிய தகவல்
வைத்தியர் ஷாபிக்கு விளக்கமறியல்
அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் காலமானார்
கன்னியா பிள்ளையார் ஆலயம் மீண்டும் உடைப்பு
வைத்தியர் ஷாபி விவகாரம்: நீதிமன்றில் நடந்தது என்ன?
திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர் வரலாற்றுச் சின்னங்கள்..? : வாவெட்டி மலைக்கு சென்ற பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி !
"வைத்தியர் ஷாபி விவகாரம் ; முறைப்பாடளித்த பெண்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதில் சிக்கல் இல்லை"
யாழில் தனியார் காணியில் விகாரையை ஒத்த கட்டடமொன்றை அமைக்கும் இராணுவத்தினர்
மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் ; மக்கள் விசனம்
விமல் வீரவன்ச கொக்கிளாய் விகாரை , பழைய செம்மலை நீராவியடிக்கு இரகசிய விஜயம்
பொது மக்களின் காணிகளை அபகரித்துள்ள வன இலாகா ; மக்கள் விசனம்
பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல் ; முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கைது!
08/07/2019 சிங்களப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உப்பாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி லலித் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2009 ஜனவரி 23 ஆம் திகதி உப்பாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி மீது அடையாளம் தெரியாதோரால் கம்பஹா பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.
எனினும் அது குறித்து பல வருடகாலமாக சரியான விசாரணைகள் இடம்பெறாத நிலையில், 2015 ஆம் ஆண்டு இதன் விசாரணைகள், குற்றப் புலனாய்வுப் பிரிவின் மற்றுமொரு பிரிவுக்கு குறித்த விசாரணை பாரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், தாக்குதல் சம்பவமானது மருதானை திரிப்போலி இராணுவப் புலனாய்வு முகாம் வீரர்களின் செயல் என்பது தொடர்பில் சாட்சிகள் வெளிப்படுத்தப்பட்டு சிலர் கைதுசெய்யப்பட்டனர்.
மேஜர் புளத்வத்த உள்ளிட்ட அந்த குழுவினரே, 2008 ஆம் ஆண்டு த நேஷன் பத்திரிகையின் ஆசிரியர் கீத் நொயார், ஊடகவியலாளர் நாமல் பெரேரா ஆகியோர் மீதான தாக்குதல்களுடனும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவித்து சி.ஐ.டி.யினர் அவர்களை கைதுசெய்து நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தினர்.
எனினும் உப்பாலி தென்னக்கோனின் காரில் இருந்து பெறப்பட்ட கைவிரல் ரேகையை மையப்படுத்தி, திரிப்போலி முகாமின் லலித் ராஜபக்ஷ எனும் இராணுவ புலனாய்வு அதிகாரியை கைதுசெய்வது தொடர்பில் சி.ஐ.டி.யினர் சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரியிருந்ததுடன், அதற்கான அனுமதி நேற்றைய தினம் வழங்கப்பட்டிருந்தது.
இந் நிலையிலேயே முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி லலித் ராஜபக்ஷ இன்று காலை ஹங்வெல்ல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரியை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் அச்சிடப்பட்ட பத்திரிகையை விநியோகிக்க சென்றவர் இராணுவத்தால் கைது !
09/07/2019 தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் அச்சிடப்பட்ட வாராந்த பத்திரிகையை கடைகளுக்கு விநியோகிக்க சென்றவர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் .

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடைகளுக்கு நேற்று(8) விநியோகிப்பதற்க்காக யாழிலிருந்து வெளிவரும் வாராந்த பத்திரிகையை பத்திரிகை விநியோகஸ்தர் கொண்டுசென்ற போது ஒட்டுசுட்டான் நெடுங்கேணி வீதியில் வீதிசோதனை சாவடியில் நின்ற படையினரால் குறித்த நபர் கொண்டு சென்ற பத்திரிகைகள் சோதனையிடப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார் .பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டவரை விசாரித்த பொலிஸார் பின்னர் விடுதலை செய்துள்ளனர் .
போதைபொருள் கடத்தலில் விடுதலைபுலிகளிள் ஈடுபட்டார்கள் என இலங்கை ஜனாதிபதி கடந்தவாரம் தெரிவித்த கருத்துக்கு தென்பகுதியை சேர்ந்த சிங்கள அரசியல் தலைவர்கள் பொன்சேகா உட்பட மறுப்பு தெரிவித்து விடுதலை புலிகள் அமைப்பு அவ்வாறான செயல்களில் ஈடுபடவில்லை என கருத்து வெளியிட்டிருந்தனர் .
இதனை ஒப்பீட்டு பத்தியாக ஒரு பக்கத்தில் எழுதியுள்ளதோடு பத்திரிகையின் முதல் பக்கத்தில் "காலத்தால் உணர்த்தப்படும் வாக்கு மூலங்கள் - பக்கம் 6" என தலைப்பிட்டு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை குறித்த பத்திரிக்கை அச்சிட்டிருந்தது.
குறித்த பத்திரிகை யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு கடந்த சிலவருடங்களாக வாராந்த பத்திரிகையாக வெளிவருகிறது . நன்றி வீரகேசரி
09/07/2019 கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.

3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டுத் தப்பித்தது என பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலுக்கு அண்மையாக உள்ள மூன்று வீடுகளில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது.
வன்முறைக் கும்பல், வீடுகளின் படலை, ஜன்னல்கள் உள்பட பெறுமதியான தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நன்றி வீரகேசரி
யாழ். நகரில் அமைக்கப்பட்ட 5ஜி கம்பங்கள் குறித்து யாழ் முதல்வர் வெளியிட்டுள்ள புதிய தகவல்
11/07/2019 5ஜி என்ற விடயம் என்பது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு புரளி. ஒரு தொழில் நுட்பம் வந்தால் இலங்கை என்ற நாட்டிற்கு வருவதன் ஊடாக இலங்கை அந்தப் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டால் இலங்கையிலிருக்கின்ற ஏனைய மாகாணங்களிலே இருக்கின்ற மக்கள் அதனை பயன்படுத்த முடியும் என்று சொன்னால், நாங்கள் எவ்வாறு தயக்கம் காட்ட முடியும்? என யாழ்ப் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குள் ஸ்மார்ட் லாம் போல் (SMART LAMP POLE) அமைக்கும் திட்டத்திற்கு முன் ஏற்பாடாக கடந்த வருடம் நவம்பர் மாதமளவில மாதிரி ஸ்மார்ட் லாம் போல் ஒன்று யாழ்ப்பாணம் நகரில் மின்சார நிலைய வீதியில் (தனியார் பேருந்துச் சேவை இடம்பெறும் இடத்தில்) அமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக விடப்பட்டது.
அந்த ஸ்மார்ட் லாம் போல் திட்டத்திலே பாதுகாப்பு கருதி பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்தப்படுவதுடன், வெளிச்சத்திற்காக மின் விளக்குகளை பொருத்துதல், எதிர்காலத்திலே வரயிருக்கின்ற கிறீன் சிட்டி திட்டம் உலகமயமாக்கலில் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் எலக்ற்றோனிக் கார் வருகின்ற பட்சத்தில் கார்களுக்கு சார்ஜ் செய்யக்கூடிய வசதி மற்றும் மழைகாலங்களிலே முன்னேற்பாடாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய இடிதாங்கிகள் உள்பட அந்த கம்பங்களை அமைப்பதென்றும், ஏதேனும் தொழிநுட்ப சாதனங்களை மேலதிகமாக அதிலே பொருத்துவதாக இருந்தால் அதற்கு மேலதிகமான ஒரு உடன்படிக்கை எங்களுடைய உடன்படிக்கையில் பேசப்படும் என்ற விடயங்கள் உள்ளடங்களாக கடந்த ஒரு வருடமாக இந்த விடயம் எங்களுடைய சபையிலே பல தடவைகள் பேசப்பட்டது.
இறுதியாக ஸ்மார்ட் லாம் போல் கம்பங்களை நிறுவுவதற்கு உரிய ஏற்பாடுகள் அனைத்துக்கும் ஏதுவான காரணங்கள் அனைத்தும் ஆராயப்பட்டு இதிலே அன்டணா பொருத்துவது என்ற விடயம் மாநகரத்திற்கு தெரியாமல் அவர்கள் பொருத்தவும் முடியாது, அதிலே பொருத்தப்படுகின்ற அன்டணா தற்பொழுது என்ன அலைவரிசையை நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றோமோ அந்த தொலைத் தொடர்பு சேவையை அந்த பரிவர்த்தனையை செய்வதற்கு ஏற்ற வசதிகளை எந்த எந்த இடங்களிலே மக்களுக்கு அசௌகரியங்களாக இருக்கின்ற இடங்களை அடையாளப்படுத்தி அந்த இடத்திலே இந்த பரிவர்த்தனையை அமைப்புக்களை போடுவதன் மூலமாக அந்த மக்களுக்கு ஒரு சிறிய சேவையை வழங்க முடியும் என்ற உயர்ந்த நோக்கம்தான் அந்த ஸ்மார்ட் கம்பத்திலே இருக்கின்றது.
ஆனால் இது சபையிலே கொண்டுவந்து ஒரு வருடத்திற்கு பிறகு பல சர்ச்கைகள் தோற்றுவிக்கப்பட்டு இதை அனுமதிப்பதா? இல்லையா? என்று நிலை உருவாகியிருக்கின்றது. இலவசமாக கொண்டுவரப்பட்ட இத்திட்டம் தாங்களாகவே முன்வந்து இதனுடைய நன்மை தீமைகளை நீங்கள் அறிந்து தரும் பட்சத்தில் நாங்கள் இதனை செய்கின்றோம் என்று வந்த ஒரு நிறுவனத்திற்கு விலை மனுக் கோர வேண்டும் என்று சபை தீர்மானித்தமையினால் அதனையும் நாங்கள் கோரியிருந்தோம்.
சகல விடயங்களும் சபையினுடைய அங்கத்தவர்களுக்கு தெரியாது என்ற எண்ண நிலைப்பாட்டுக்கு அப்பால் சகல விடயங்களும் மிக வெளிப்படைத்தன்மையோடு முன்னெடுக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.
சிலர் தங்களுக்கு தெரியாது, சபையிலே அனுமதி எடுக்கவில்லை என்றெல்லாம் கூறுகின்றார்கள். அவர்கள் அந்த நேரத்திலே எங்கே இருந்தார்கள் என்று எனக்குச் சொல்ல முடியாது. அது அல்ல பிரச்சினை. ஆனால் இவ்வாறான அனுமதியை வழங்கும் போது இறுதியாக நடந்த கூட்டத்திலே அனுமதி வழங்கப்படுகின்றது.
கம்பங்கள் எங்கெங்கே பொருத்தப்படுகின்றன என்ற விடயத்திற்கு எங்களுடைய மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மாநகர பொறியியலாளர்கள், அதுபோன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளர்கள், சகலருடைய அனுசரணையோடு, இந்த இணைப்புக்கள் அந்தந்த வட்டாரங்களிலே வரும் என்று சொன்னால் அந்த உறுப்பினர்களோடு சென்று பொருத்தமான இடத்தை தெரிவு செய்யும் பட்சத்தில் அது அந்தந்த இடத்திலே பொருத்துவதற்கு அனுமதிப்பது என்ற தீர்மானம் என்னால் சொல்லப்பட்டது.
அதற்கு ஒரு உறுப்பினர் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார், இடங்களை மீண்டும் சபைக்கு கொண்டு வந்து அனுமதிப்பது தொடர்பில், நான் அதற்கு மீண்டும் சபைக்கு இடங்கள் வராது, அனுமதி வழங்கப்பட்டிருந்கின்றது, நீங்கள் பொருத்தமான இடத்தை தெரிவு செய்து கொடுக்கும் பட்சத்தில் அந்த இடத்திலே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தேன். உடன்படிக்கையின் பிரதியும் சபையிலே கொடுக்கப்பட்டு அதனுடைய சரி பிழைகள் ஆராயப்பட்டு சில திருத்தங்கள் சொல்லப்பட்டன. அந்த திருத்தங்கள் தெளிவுபடுத்தப்பட்டு சகல உடன்படிக்கையும் முறைப்படி எந்தவித மாற்றமும் இல்லாமல் நாங்கள் அந்த நிறுவனத்தோடு உத்தியோகபூர்வமாக செய்திருக்கின்றோம். அதன் பிறகு அந்த வேலையை அவர்கள் முறைப்படி ஆரம்பித்திருக்கின்றார்கள்.
ஆனால் இப்பொழுது பார்த்தால் 5ஜி (5G) கொண்ட பரிவர்த்தனையை யாழ்ப்பாணம் மாநகரத்திலே கொண்டுவந்து மாநகர முதல்வர் பொருத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றார், இதனால் 5 மாதக் குழந்தையும் கருவிலே கரைந்து விடும் என்ற செய்திகள் மட்டுமன்றி மிக மோசமான உள நோயாளர்களைப் போன்று சில கற்பனைகளை அவர்கள் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவிவிட்டிருக்கின்றார்கள்.
ஆகவே என்னிடம் இருக்கக்கூடிய கேள்வி இந்த உலகளாவிய ரீதியில் 5ஜி (5G) என்ற பரிவர்த்தனை வழங்கப்பட்டிருக்கின்றதா என்ற கேள்வி இருக்கின்றது. அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய வல்லரசுகளுடைய ஆதிக்கத்திற்கு போட்டித்தன்மை நிறைந்த இந்த பொருளாதார காலங்களில் எந்த நாடு இதனை முதலில் எடுப்பது என்ற இந்த தொழில்நுட்பத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் அவ்வாறான நாடுகளுக்கு இந்த 5ஜி (5G) தொழிநுட்ப பரிவர்த்தனை செல்லாதவிடத்து இந்த 5ஜி (5G) என்ற பரிவர்த்தனை நேராக இலங்கையிலே இலங்கை அரசுக்கு தெரியாமல், யாழ்ப்பாணம் நகரத்திலே கொண்டு வந்து பூட்டுவதாக ஒரு புரளியை கிளப்பிவிட்டிருக்கின்றார்கள்.
இது உலகலாவிய ரீதியில் இருக்கின்றதா? ஏனைய நாடுகளிலே பயன்படுத்தப்படுகின்றதா? அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் இந்த பரிவர்த்தனை ஆசியாக் கண்டத்திற்கு வருவதற்கு ஒரு நடைமுறை இருக்கின்றது. ஆசியாக் கண்டத்திற்கு வருமாக இருந்தால் தென்கிழக்காசிய நாடுகளில் இருக்கக்கூடிய நாடுகளுக்கென்று, அந்தப் பிராந்தியத்திற்கு வழங்கப்படவேண்டும். அதிலே இலங்கை என்றால் இலங்கையினுடைய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRC) அனுமதி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டால் இந்த தொழில் நுட்பம் இலங்கைக்கு அந்த நிறுவனம் அனுமதித்தால் அந்த திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதில் என்ன தயக்கம் நாங்கள் காட்ட வேண்டும் என்பதுதான் எனது கேள்வி?
இவ்வாறான 5ஜி (5G) என்ற விடயம் என்பது ஒரு கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு புரளி. இவ்வாறான ஒரு தொழில் நுட்பம் வந்தால் இலங்கை என்ற நாட்டிற்கு வருவதன் ஊடாக இலங்கை அந்தப் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டால் இலங்கையிலிருக்கின்ற ஏனைய மாகாணங்களிலே இருக்கின்ற மக்கள் அதனை பயன்படுத்த முடியும் என்று சொன்னால், நாங்கள் எவ்வாறு தயக்கம் காட்ட முடியும்?
தற்பொழுது 4G என்ற தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். உலகிலே பல்வேறு நாடுகளிலே உற்பத்தி செய்யப்பட்ட அதிதிறன் அலைபேசிகளை நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு இந்த நவீன தொழிநுட்ப முறையின் ஊடாக இருக்கக்கூடிய சில பல பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதவை. இருப்பினும் பெரியோர்களிலிருந்து சிரியோர்கள் வரை இந்த நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டிக்கின்றார்கள். அவ்வாறு இருந்தால் யாழ்ப்பாணத்திலே இந்த தொழில் நுட்பம் 4G இருக்கின்றது. அது போல் இலங்கையிலும் இருக்கின்றது.
இதேபோன்று இலங்கையில் இந்த 5ஜி (5G) என்ற தொழில் நுட்பம் வந்தால் அதனை யாழ்ப்பாணம் நகரத்திலே மக்கள் பாவிக்கக் கூடாது அல்லது யாழ்ப்பாண குடாநாட்டு மக்களோ, அல்லது வடபுலத்திலிருக்கக்கூடிய மக்களோ, அல்லது வடக்கு கிழக்கு இணைந்த எங்களுடைய பிரதேசங்களிலே இது இருக்கக்கூடாது என்று யாரும் தடை போட முடியாது. ஆகவே அவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் வருவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று நாங்கள் அறியோம்.
இன்றிருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை சீரிய முறையில் எங்களுடைய மக்களுக்கு சிறப்பாக கொடுப்பதற்காக நகரங்களை நவீனமயப்படுத்தல் என்ற திட்டத்தை நாங்கள் பல நாடுகளுக்கு போயிருக்கின்றோம். ஸ்மார்ட் சிற்றி, மொடர்ன் சிற்றி, மொடல் சிற்றி என்ற எண்ணக்கருக்குக் கீழே பல்வேறு மாநாடுகள் நடைபெறுகின்றன. இவ்வாறான மாநாடுகளில் பங்குபற்றுவதற்காகத்தான் நான் மாநகர சபையில் இருக்கக்கூடிய எங்களுடைய உறுப்பினர்களை அவ்வாறான இடங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு புதிய தகவல் தொழில் நுட்பங்களை அறிவதற்காக 10 மில்லியன் ரூபாய் நிதியை வரவு செலவுத் திட்டத்திலே ஒதுக்கியிருந்த போதும் அதனை நிராகரித்து இன்று அவ்வாறான தொழில்நுட்ப அறிவுகளை சீரியமுறையில் பெறாமல் பிழையான தகவல்களையும், எதிர்மறையான எண்ணங்களையும் மக்கள் மனதிலே கட்டவிழ்த்துவிட்டு மக்களுடைய எண்ணங்களிலே சலசலப்பை ஏற்படுத்தி இந்தத் திட்டங்கள் மீது மோசமான பரப்புரையை மேற்கொள்கின்றார்கள். ஆகவே இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடு அல்ல.
ஒரு முதல்வராக நான் எங்களுடைய மக்களுக்கு கூறுகின்ற செய்தி என்னவென்றால் என்னுடைய அடிப்படை எண்ணம் என்னவென்றால், எங்களுடைய பண்பாட்டு விழுமியங்கள், கலாசாரங்கள் எந்த நேரத்திலும் பாதிப்படையாத வகையில், மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய, எதிர்கால சந்ததிக்கு ஒரு ஆரோக்கியமான ஒரு நகரத்தை நவீன வசதிகளோடு உரிய சுத்தமான பசுமை மாநகரத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நான் முன்வைத்து இந்த பொறுப்பை ஏற்றிருக்கின்றேன்.
ஆகவே நான் கூறுகின்ற விடயம் என்னவென்றால் நாங்கள் ஒரு இலக்கை தீர்மானித்துவிட்டோம். அந்த இலக்கை அடைவதற்கு சில சீரான, நேர்மையான பாதையிலே முன்னெடுக்கின்றோம். வழியிலே இருந்து கல்லெறிந்து கொண்டு இருப்பவர்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்னுடைய இடத்தை நான் சேரும் வரை.
ஆகவே அந்த அடிப்படையில் தவறான, நெறிபிறழ்வான பக்க விளைவுகளையோ ஆபத்துக்களையோ ஏற்படுத்துகின்ற எந்த ஒரு செயல்பாட்டையும் ஒரு முதல்வராக நான் முன்னெடுக்கமாட்டேன். ஒரு சூரிய ஒளியிலே ஏற்படுகின்ற ஆபத்தை விட, ஒரு உயரமான கோபுரத்திலுள்ள அலைவரிசையினால் ஏற்படுத்தப்படுகின்ற பக்கவிளைவுகள் ஆபத்துக்களை விட 1000 இல் ஒரு மடங்கு ஆபத்து குறைந்த நவீன ஸ்மார்ட் லாம் போல் (SMART LAMP POLE ) களைதான் நாங்கள் நிறுவிக்கொண்டிருக்கின்றோம்.
அதிலே தற்போதுள்ள 4G இனை பொருத்துவதற்கு அவர்கள் பரிவர்த்தனை நிலையம் ஊடாக அனுமதியை பெற்று வந்த பிறகு அவர்களுடைய அனுமதி கிடைக்கப்பெற்றால் மட்டுமே அதிலே நாங்கள் பொருத்துவதற்கு அனுமதிப்போம். அதுவரையில் ஏனைய சேவைகள் அந்தக் கம்பங்கள் ஊடாக மக்களுக்கு கிடைக்கும்.
எனவே தவறான, பொய்யான பரப்புரைகளை நம்பி உங்களையும், மக்களையும் குழப்பத்திற்குட்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் தயவு செய்து ஒரு நேர்மையான முறையில் முன்னெடுக்கப்படுகின்ற மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய கருமங்களை ஆற்றுவதற்கு வழிவிடவேண்டும் என்று தயவாகக் கேட்டு மக்கள் அஞ்சத் தேவையில்லை. என்றும் அவர்களோடு பணியாற்ற கடமைப்பட்டிருக்கின்றோம் அதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம் என்பதையும் குறிப்பிட்டு நிறைவு செய்கின்றேன் – என்றுள்ளது. நன்றி வீரகேசரி
வைத்தியர் ஷாபிக்கு விளக்கமறியல்
11/07/2019 குருநாகல் மாவட்ட வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வைத்தியர் ஷாபி விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று குருநாகல் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த நிலையில் சி.ஐ.டியினர் விஷேட விசாரணை அறிக்கை ஒன்றை குருநாகல் நீதிமன்றில் முன்வைத்தனர் .
இதையத்து வைத்தியர் ஷாபி இன்று முற்பகல் குருணாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் அவரின் மூன்று மாத கால தடுப்புக் காவல் உத்தரவை சட்ட மா அதிபர் திணைக்களம் மீளப் பெற்றதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வைத்தியரை தடுத்துவைக்க போதியளவு காரணங்கள் 8இல்லையென பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதன்போது இன்றைய தினம் சிங்கள அமைப்புக்கள் சில நீதிமன்ற வளாகத்தில் கூடி வைத்தியரின் விடுதலையை எதிர்த்தபடி கருத்துக்களை ஆங்காங்கே வெளியிட்டு வந்ததால் அங்கு ஒருவித பதற்ற நிலை கானப்பட்டது,
இதையடுத்து குறித்த வைத்தியரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் காலமானார்
12/07/2019 அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதனின் மறைவுக்கு தமிழர் மரபுரிமை பேரவை தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது .
தமிழர் மரபுரிமை அன்னாரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது ,

இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் உச்சம் தொட்ட கொடூரங்களில் ஒன்றான வலைஞர் மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து அத்தாக்குதலின் இரத்த சாட்சியமாக இறுதிவரை குரல் கொடுத்துக் கொண்டிருந்த அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் இறைபதமடைந்தார் என்ற செய்தி தமிழ் இனத்தை ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.
1996இல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்கப்பட்டு முல்லைத்தீவு நகரையும் சூழ இருந்த கிராமங்களையும் சேர்ந்த மக்கள் அரசின் உதவிகள் எதுவுமின்றி மீள்குடியமர்ந்து கொண்டிருந்த இடர் மிக்க நாட்களில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் முல்லைத்தீவின் பங்குத்தந்தையாக பொறுப்பெடுத்தார் .
உட்கட்டுமானங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் சிங்கள ஏகாதிபதியத்தால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைக்கும் முகம் கொடுத்துக்கொண்டு மீள்குடியேறிய இம்மக்களுக்கு மதம் கடந்து பல்வேறு மனிதாபிமான பணிகளையும் உதவிகளையும் செய்து அம்மக்களின் நேசிப்பை பெற்றார் .
2004 இல் முல்லைத்தீவை கொடூரமாகத் தாக்கிய சுனாமியின் போது தெய்வாதீனமாக உயிர் தப்பிய இவர் சுனாமியால் அனைத்தையும் இழந்து போன அம்மக்களிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன. மதம் கடந்த இவரின் அன்பு செலுத்தல் அனைத்தும் மக்களையும் இவர்பால் ஈர்த்தது .

2009 இல் முள்ளியவாய்க்காலில் தமிழர் இன அழிப்பு உச்சம் தொட்ட நாட்களில் சிங்கள இராணுவத்தால் அரங்கேற்றப்பட்ட வலைஞர் மடம் தேவாலயத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலில் காயமடைந்து முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் இரத்த சாட்சியமாக இறுதி வரை பல்வேறு தளங்களிலும் தனது சாட்சியை துணிவுடன் பதிவு செய்தவர் .
தமிழ் மக்களின் விடுதலை போராட்ட வரலாற்றில் தலைமையாலும் தளபதிகளாலும் போராளிகளாலும் நேசிக்கப்பட்ட மகத்தான மனிதம் ஒன்று இன்று எம்மிடையே இல்லை. அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதனுக்கு எமது இறுதி அஞ்சலிகளை செலுத்தி நிற்கின்றோம் என தமிழர் மரபுரிமைப் பேரவை இரங்கல் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
கன்னியா பிள்ளையார் ஆலயம் மீண்டும் உடைப்பு
12/07/2019 திருகோணமலை கன்னியா வெந்நிருற்று பிள்ளையார் ஆலய அத்திவாரம் மீண்டும் உடைக்கப்பட்டு வருகின்றது.
கடந்த மாதம் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான குழுவினர் பௌத்த குருமாருடன் கலந்துரையாடி உடைக்கப்படும் வேலைகள் தடைசெய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த திங்கள் முதல் மக்கள் நடமாட்டம் இல்லாத சமயங்கள் மீண்டும் உடைக்கப்பட்டு வருகின்றது.என கன்னியாவில் இயங்கி வருகின்ற தென் கையிலை ஆதனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களிடம் வினவிய போது உடைப் பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அதற்கான அனுமதிக்கடிதத்தை தமக்கு காட்டுவதனாக குருமுதல்வர் தெரிவிக்கின்றார்.
இக்கடிதத்திற்கான அனுமதி இன்று கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அதனைப் போல சம்மந்தபட்ட அமைச்சுக்களிடமும் ஜனாதிபதி செயலகத்திடமும் இருந்து அனுமதி பெற்று இந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் உடைக்கும் தரப்பினர் தெரிவிப்பதாக குரு முதல்வர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
வைத்தியர் ஷாபி விவகாரம்: நீதிமன்றில் நடந்தது என்ன?

பயங்கரவாத , அடிப்படைவாத குழுக்களோடு தொடர்புபட்டு சட்டவிரோதமாக சொத்து சேர்த்தமை, சட்ட விரோதமான முறையில் சிங்கள பெண்களுக்கு கருத்தடை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வைத்தியர் ஷாபி கடந்த மே மாதம் 24 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அன்று முதல் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்த ஷாபி நேற்று முதன் முதலாக நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். குற்றப்புலனாய்வு பிரிவின் விஷேட ஜீப் வண்டியில் கொழும்பிலிருந்து குருணாகலுக்கு அழைத்து வரப்பட்ட வைத்தியர் ஷாபி குருணாகல் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் முற்பகல் 10.40 மணியளவில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது குருணாகல் நீதிமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விஷேட பொலிஸ் மற்றும் அதிரடிப்படை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. வைத்தியர் ஷாபியை குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சர் ஜயசிங்க , உதவி பொலிஸ் அத்தியட்சர் டி.எஸ்.திஸேரா , பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜர்படுத்தினர்.
சீ.ஐ.டியினருக்கு கூடுதல் பலம் சேர்க்க சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் துஷித் முதலிகே மன்றில் ஆஜரானார். சந்தேகநபரான வைத்தியர் சாபி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொடவின் கீழ் சிரார்த் நூர்தீன் சப்ராத் அம்சா, நதீஷா கண்டம்பி, பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு ஆஜரானது.
சட்ட விரோத கருத்தடைக்கு உள்ளானதாகக் கூறப்படும். முறைப்பாடளித்துள்ள தாய்மார் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் செனவிரத்ன, சட்டதரணிகளான சேனாரத்ன , சானக உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர். முதலில் முற்பகல் வேளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொடவின் வருகையை மையப்படுத்தி பிற்பகல் 1.30 வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீள வழக்கானது பிற்பகல் 2 மணிக்கே விசாரணைக்கு வந்தது.
முதலில் மன்றில் விசாரணையின் மேலதிக அறிக்கையை சீ.ஐ.டி சமர்ப்பித்தது. அதனையடுத்து முறைப்பாட்டாளர் தரப்பான விசாரணையாளர் தரப்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்ட ஜெனரால் துஷித் முதலிகே விடயங்களை மன்றுக்கு தெளிவுபடுத்தினார்.
அவர் தெ ளிவுபடுத்துகையில்,
' இந்த விவகாரம் தொடர்பில் குருணாகல் பொலிஸார் மூன்று குற்றச்சாட்டுக்களை மையப்படுத்தி வைத்தியர் சாபியை பயங்கரவாததத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த மே 24 ஆம் திகதி கைது செய்திருந்தனர். இந்நிலையிலிலேயே சீ.ஐ.டியினர் அவரைப் பொறுப்பேற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். குறிப்பாக சீ.ஐ.டி முன்னெடுத்த விசாரணைகளில் வைத்தியர் ஷாபிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த பயங்கரவாத அமைப்புக்களுடனான தொடர்பு மற்றும் வருமானத்தை மீறிய சொத்து குவிப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீண்ட விசாரணைகள் இடம்பெற்றன. பயங்கரவாத தொடர்புகள் குறித்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெற்ற விசாரணைகளில் அக்குற்றச்சாட்டு எந்த அடிப்படையும் அற்றது என்பது தெளிவாகியது. சொத்து குவிப்பு தொடர்பில் பணச்சலவை சட்டத்தின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டன. இது வரையிலான விசாரணைகளில் அந்த குற்றச்சாட்டு தொடர்பிலும் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தும் எந்த விடயங்களும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் வைத்தியர் சாபியை தொடர்ந்து தடுத்து வைப்பது பொருத்தமற்றது. அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அவரது தடுப்பு காவல் உத்தரவு இரத்து செய்யப்பட்டது. அதன்படியே இன்று (நேற்று) அவரை நாம் இம்மன்றில் ஆஜர் செய்கிறோம். அதே நேரம் வைத்தியருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மூன்றாவது குற்றச்சாட்டான சட்ட விரோத கருக்கலை தொடர்பில் நீண்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. குற்றவியல் சட்டத்தின் 32 (1) ஆம் பிரிவின்படி ஒரு குற்றச்சாட்டு தொடர்பில் நியாயமான சந்தேகங்களை தோற்றுவிக்கும் காரணிகள் இருப்பின் மட்டுமே அக்குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட முடியும். இதுவே சட்டம். எனினும் வைத்தியர் சாபி விவகாரத்தில் இது வரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நியாயமான சந்தேகங்களை தோற்றுவிக்கும் எவ்வித காரணிகளும் சீ.ஐ.டிக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் நியாயமான சந்தேகத்துக்கு அப்பாலேயே வைத்தியர் சாபி குருணாகல் பொலிஸாரால் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். எது எவ்வாறாயினும் சிசேரியன் சத்திர சிகிச்சைகளின் இடையே சட்ட விரோத கருத்தடை நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நீண்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. முறைப்பாட்டளர்களின் முறைப்பாடுகளுக்கு அமைவாக தற்போதைக்கு தண்டனை சட்டக்கோவையின் 311 (4) ஆம் பிரிவின் கீழ் காயம் ஏற்படுத்துதலுடன் தொடர்புடைய விடயமாகக் கருதி விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விசாரணைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய அறிவியல் ரீதியிலான பரிசோதனைகள் மிக அவசியமானதாகும். அவ்வாறான அறிவியல் ரீதியிலான பரிசோதனைகளிலேயே இந்த விசாரணை தங்கியுள்ளது.
ஏற்கனவே இந்த நீதிமன்றம் இவ்விசாரணைகள் தொடர்பில் ஆலோசனை வழங்க கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் காசல் வைத்தியசாலையில் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுனர் ருவன் பத்திரன டீ சொய்சா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுனர் ஜே.கருணாசிங்க ஆகியோர் அடங்கிய விஷேட நிபுனர்கள் குழுவை நியமித்துள்ளது. அக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் முறைப்பாடளித்த 615 பேரில் 147 பேரை எஸ்.எச்.ஜி. பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. அந்த பரிசோதனைகளின் முடிவை அடுத்தே எம்மால் மேலதிக நடவடிக்கை எடுப்பது குறித்தான முடிவுகளுக்கு வர முடியும். கடந்த தவணையின் போது இந்த எச்.எச்.ஜீ சோதனைகளை முன்னெடுக்க பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் தடை விதித்தது. எனினும் அத்தடையை தளர்த்தி அந்த சோதனைகளை முன்னெடுக்க அனுமதியளிக்க வேண்டும். அப்போதே இந்த விசாரணைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்' என்றார்.
இதனையடுத்து சந்தேகநபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட பிணை கோரிக்கையை முன்வைத்தார்.
அவர் கோரிக்கையை முன்வைக்கையில்,
' எந்த நியாயமான சந்தேகங்களும் இன்றி எனது சேவை பெறுநர் கைது செய்யப்பட்டு கடந்த இரு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவரது கைது சட்ட விரோதமானது. தடுப்பு காவல் உத்தரவு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. எந்த குற்றச்சாட்டுக்களுக்கும் இது வரை சாட்சியங்கள் இல்லை என்பது விசாரணை அறிக்கைகளின் பிரகாரம் தெளிவாகின்றது. எனவே எனது சேவை பெறுநருக்கு பிணை வழங்குவது தொடர்பில் பிணைச்சட்டத்தின் விதிவிதானங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அதில் பிணை மறுப்பதற்கான காரணிகளாக குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் எவையும் எனது சேவை பெறுநர் விடயத்தில் தொடர்பற்றது. இந்த வழக்கு நீடிக்கப்பட்டது. ஊடகங்களுடாக வளர்க்கப்பட்டது. சட்ட ரீதியாக எவ்வித குற்றமும் சுமத்த காரணிகள் இல்லாத நிலையில் அவரை தடுத்து வைப்பது நியாயமற்றது. எனவே எந்தவொரு நிபந்தனையின் அடிப்படையிலும் அவருக்கு பிணை வழங்குமாறு கோருகிறேன். அத்துடன் குறிப்பாக எனது சேவை பெறுநரின் குற்றமற்ற தன்மையை நிரூபிப்பதற்காகவும் இந்த விசாரணைகளின் வெற்றிகரமான முன்னேற்றத்திற்காகவும் கோரப்பட்டுள்ள எஸ்.எச்.ஜீ பரிசோதனைகளை அவசியம் முன்னெடுக்க வேண்டும் என்பதே எமுத கோரிக்கையாகும். பிறப்புறுப்பூடாக ஒரு வகை சாயத்தை உட்செலுத்தி பலோபியன் குழாய்களை ஊடறுத்து அதனை கற்பப் பை வரை செலுத்தும் இந்த எஸ்.எச்.ஜீ சோதனை இவ்விசாரணைகளில் திருப்பத்தை ஏற்படுத்தும். இதனூடாக பலோபியன் குழாய்களில் தடைகள் ஏற்படுத்தப்பட்டு சட்ட விரோத கருத்தடை இடம்பெற்றுள்ளதா என்பதை கண்டறிய முடியும்' என்றார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா , ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் சில்வா, சட்டத்தரணிகளான சேனாரத்ன மற்றும சானக ஆகியோர் கருத்துக்களை மன்றில் முன்வைத்தனர். அவர்கள் வைத்தியரை பிணையில் விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தடுப்பு காவலை வாபஸ் பெற்றமையை வன்மையாக எதிர்த்தனர். சீ.ஐ.டி விசாரணைகள் பக்கச்சார்பாக இடம்பெறுவதாகக் கூறிய அவர்கள் அதனை சீ.ஐ.டியின் சமூக கொள்ளை விசாரணை அறையிலிருந்து வேறு ஒரு விசாரணை பிரிவிற்கு மாற்றுமாறும் கோரினர்.
'இந்த விசாரணைகள் சரியான கோணத்தில் நடக்கிறதா? என்பது தொடர்பில் பாரிய சந்தேகம் உள்ளது. குற்றப்புலான்வுப்பிரிவு வைத்தியர் சாபிக்கு சார்பாகவே விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து அவரை குற்றவாளியாகக் காட்ட முனைகிறது. பிணை சட்டத்தின் கீழ் பிணை மறுப்பதற்கான காரணிகள் ஏராளம் உள்ளன. குறிப்பாக வைத்தியர் சாபி வருமானத்தை மீறி சொத்து சேர்த்த விடயத்தில் பல சொத்துக்களை கொள்வனவு செய்ய தரகராக செயற்பட்ட மொஹான் எனபவரது உயிருக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர் இவ்விவகாரத்தின் பிரதான சாட்சியாளர். இது பிணை சட்டத்தின் கீழ் பிணை மறுப்பதற்கான காரணிகளில் ஒன்றாகும். இதனை விட வைத்தியர் ஷாபியுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த ஒரு இந்தியர் மற்றும் அரேபியர் தொடர்பில் சில விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. அது தொடர்பில் எந்த விசாரணைகளும் இல்லை. அப்படி இருக்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எந்த காரணிகளும் வெளிப்படுத்தப்படவில்லை எனக் சீ.ஐ.டி கூறுவது வேடிக்கையானது. இந்நிலையில் சந்தேகநபருக்கு பிணையளிப்பதால் விசாரணைகள் பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அது பெரும் அநியாயமாகும். எஸ்.எச.ஜீ பரிசோதனைகள் செய்வதில் பல பிரதி கூலங்கள் உள்ளன. தாய்மாருக்கு பரிசோதனையைத் தொடர்ந்து மலட்டுத் தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அதற்கு அனுமதிக்கக் கூடாது. குருணாகல் பொலிஸாரிடம் சீ.ஐ.டி முன்னெடுத்த விசாரணைகளின் போது அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குருணாகல் பொலிஸ் அத்தியட்சரின் வாக்குமூலம் மன்றில் முழுமையாக சமர்ப்பிக்க்படவில்லை ' என்றனர்.
இந்த வாதப்பிரதி வாதங்கள் மாலை 5 மணியளவில் நிறைவடைந்தன. இதனை அடுத்து பிணை தொடர்பிலான உத்தரவும் ஏனைய தீர்மானங்களுக்குமாக வழக்கு மாலை 5.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. எவ்வாறாயினும் மீண்டும் வழக்கு மாலை 6 மணிக்கே விசாரணைக்கு வந்தது. இதன் போது தனது தீர்மானங்களை அறிவித்த குருணாகல் பிரதான நீதிவான் சம்பத்சேவா வசம் வைத்தியர் சாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் பாரதூரத்தன்மை , சொத்து கொள்வனவு தொடர்பிலான தரகருக்கு உள்ள உயிர் அச்சுறுத்தல் பிணை வழங்குவதால் ஏற்படவல்ல பொது மக்கள் குழப்பம் ஆகியவற்றை மையப்படுத்தி பிணை வழங்க மறுப்பு வெளியிட்டார்.
அத்துடன் இதுவரை விசாரணைகளுக்கு ஆலோசனை வழங்கிய கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தலைமையிலான நிபுனர்கள் குழுவின் செயற்பாடுகளுக்கு தடை விதித்து அக்குழுவை கலைத்தார். அத்துடன் இந்த விசாரணைகளுக்கு ஆலோசனைகளை சீ.ஐ.டிக்கும் நீதிமன்றுக்கும் வழங்க கொழும்பு பல்கலைகழகத்தின் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியின் கீழ் ஐந்து பேருக்கு குறையாத நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை அமைமக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இதனைவிட குருணாகல் பொலிஸ் அத்தியட்சரின் முழுமையான வாக்கு மூலத்தை அடுத்த தவணையின் போது மன்றில் சமர்ப்பிக்க சீ.ஐ.டிக்கு நீதிவான் உத்தரவிட்டதுடன் வைத்தியரின் சொத்துக்கள் தொடர்பில் அரச மதிப்பீட்டு திணைக்களத்தின் ஊடாக பெறுமதி மதிப்பீடொன்றை செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் க்டடளையிட்டார்.
இதனையடுத்தே இது குறித்த வழக்கை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அதுவரை வைத்தியர் சாபியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். நன்றி வீரகேசரி
திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர் வரலாற்றுச் சின்னங்கள்..? : வாவெட்டி மலைக்கு சென்ற பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி !
14/07/2019 ஈழத் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடையதும், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடையதுமான வாவெட்டி மலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் . தொல்பொருள் வலயமாக காணப்படும் இந்த மலையில் பாரிய அளவில் கல் அகழ்வு இடம்பெற்றுச் செல்கின்றமையே இதற்கு காரணமாகும்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடைய வாவெட்டி மலையில் அமைந்துள்ள வாவெட்டி ஈஸ்வரர் ஆலயத்தில் நேற்று மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா அன்று ஆலயத்திலிருந்து வாவெட்டிமலை சிவன் ஆலயத்துக்குச் சென்று அங்கு விசேட பூசைகள் நடைபெற்று வேட்டையாடி ஆலயம் திரும்புவது வழமையாகும். போரால் இது தடைப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா நடைபெறும் நாளில் மக்கள் வாவெட்டி மலைக்கு சென்று அங்கு வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். அந்தவகையில் நேற்று ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா நடைபெறும் நிலையில் இந்த மலையில் வழிபாடுகள் இடம்பெற்றன .

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக உயர்ந்த மலையாக இது காணப்படுகின்றது. இந்த மலையில் சுமார் 1800ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வன்னியை ஆட்சி செய்த மன்னர்களால் ஆலயம் உருவாக்கப்பட்டு வழிபட்டு வந்தமைக்கான சான்றுகள் இன்றும் அங்கு காணப்படுகின்றன.
மலையின் உச்சியில் ஆலயம் இருந்தமைக்கான கற் தூண்கள், மலையின் உச்சியில் கொடி நாட்டப்பட்டமைக்கான கொடிப்பீடம் ஆகியன இன்றும் காணப்படுகின்றன.
இந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தால் தொல்பொருள் அடையாளச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த மலையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கருங்கல் அகழ்வு பணிகள் மிக தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன . நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான டிப்பர் கருங்கல் வெளியிடங்களுக்கு இங்கிருந்து கொண்டு செல்லப்படுகின்றது . தென்பகுதியை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் அனுமதிகளை பெற்று இங்கே கல்லுடைக்கும் ஆலைகளை அமைத்து பெருமெடுப்பில் கல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலை அழிவடைந்து போகும் அபாயம் தோன்றியுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் தொல்பொருள் திணைக்களத்தின் ஆளுகையில் இருக்கும் இந்த மலையில் தொல்பொருள் இடங்கள் அழிவடையும் வகையில் எவ்வாறு அகழ்வுப் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்க முடியும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஈழத் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடைய இந்த மலையை தொல்பொருள் திணைக்களம் பாதுக்காக்கவேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நன்றி வீரகேசரி
"வைத்தியர் ஷாபி விவகாரம் ; முறைப்பாடளித்த பெண்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதில் சிக்கல் இல்லை"
13/07/2019 வைத்தியர் ஷாபி விவகாரத்தில் முறைப்பாடளித்த பெண்களை எச்.எஸ்.ஜீ பரிசோதனைக்கு உட்படுத்துவதன் ஊடாக அவர்களுக்கு எவ்வித சிக்கல்களும் ஏற்படாது.

இந்த இலகுவான பரிசோதனையை முன்னெடுப்பதன் ஊடாகவே முறைப்பாடளித்தவர்கள் மலட்டுத்தன்மை ஆக்கப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்ற இறுதி முடிவைக் கண்டறிய முடியும்.
அதனைவிடுத்து சத்திரசிகிச்சைக் கூடத்தில் பணியிலிருந்த தாதிமார் மற்றும் வைத்திய சேவையாளர்களிடம் இவ்விடயம் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்ட முனைவது நேரத்தையும், நிதியையும் வீணடிக்கும் செயலாகும் என்று பேராசிரியர் வில்பர்ட் எஸ்.ஈ.பெரேரா சுட்டிக்காட்டியிருக்கிறார்.
நாட்டின் மூத்த மகப்பேற்று வைத்தியரும், மகளிர் நோய் தொடர்பான இலங்கை மகப்பேற்று வைத்தியக் கல்லூரியின் முன்னாள் தலைவரும் காப்பாளருமான பேராசிரியர் வில்பர்ட் எஸ்.ஈ.பெரேரா குருணாகலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரத் வீரபண்டாரவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். நன்றி வீரகேசரி
யாழில் தனியார் காணியில் விகாரையை ஒத்த கட்டடமொன்றை அமைக்கும் இராணுவத்தினர்
14/07/2019 வலி.வடக்கு தையிட்டி பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியில் இராணுவத்தினர் விகாரையை ஒத்த கட்டடமொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 28 வருடங்களுக்கு மேலாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள குறித்த பகுதிகளில் சில இடங்கள் அண்மைக்காலமாக இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து , விடுவிக்கப்பட்டு வருகின்றன.

அந்நிலையில் இன்னமும் விடுவிக்கப்படாது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணி ஒன்றில் புதிதாக விகாரையை ஒத்த கட்டடம் ஒன்றை அமைக்கும் பணியினை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

நாவற்குழி பகுதியில் பல எதிர்ப்புக்களின் மத்தியில் கட்டப்பட்ட விகாரை நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் ; மக்கள் விசனம்
14/07/2019 முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலயப் பிரிவுக்குட்பட்ட, தமிழ் மக்களின் பல பூர்வீக விவசாய நிலங்களை உள்ளடக்கி, வனஜீவராசிகள் திணைக்களம் சரணாலயத்திற்காக அபகரித்து வைத்துள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அபகரிப்புச் செய்யப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குரித்தான பூர்வீக அறுதி உறுதி விவசாய நிலங்களுக்குள், தற்போது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாதென வனஜீவராசிகள் திணைக்களம் தடை விதிப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
குறிப்பாக கோட்டைக்கேணியிலிருந்து வெள்ளைக்கல்லடி வரையான சுமார் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட, தமது பூர்வீக அறுதி உறுதி மானாவாரி விவசாய நிலங்களான குஞ்சுக்கால்வெளி, தீமுந்தல், பணம்போட்ட கேணி, அம்பட்டன் வாய்க்கால், வெள்ளைக்கல்லடி போன்ற வயல் நிலங்களை இவ்வாறு வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்துள்ளது.
மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு வனஜீவராசிகள் திணைக்களம், சரணாலயத்திற்குரிய இடமென குறித்த பகுதிகளில் பெயர்ப்பலகை நாட்டி அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்ககைகள், குறித்த விவசாய நிலங்களினுடைய உரிமையாளர்களான எமது அனுமதியின்றியே மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையினால் நாம் பெரிதும் அதிர்ப்பதிக்குள்ளாகியிருந்தோம்.

இந் நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து அங்கு விவசாய நடவடிக்கை செய்யக்கூடாதென வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தடை விதிக்கின்றனர்.
இவ்வாறு எமது வாழ்வாதார நிலங்கள் அபகரிக்கப்படுவதனால், எமது வாழ்வாதராமானது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்தகாலங்களில் 30 வருடத்திற்கும் மேலாக நீண்டகால இடப்பெயர்வைச் சந்தித்து, கடந்த 2011ஆம் ஆண்டு எமது பகுதிகளில் மீளக்குடியமர்ந்த நாம், எமது விவசாய நிலங்களினூடாக எமது வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். அதுவும் இப்போது பொய்த்துவிட்டது என்றே உணர்கின்றோம். என்று கவலை தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள எமது பூர்வீக விவசாய நிலங்களை விடுவித்து, எமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்த உரியவர்கள் முன்வரவேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நன்றி வீரகேசரி
விமல் வீரவன்ச கொக்கிளாய் விகாரை , பழைய செம்மலை நீராவியடிக்கு இரகசிய விஜயம்
14/07/2019 பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச இன்று முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சர்சைக்குரிய விகாரை மற்றும் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கும் இரகசிய விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார் .

முல்லைத்தீவு மணலாறு பகுதியில் சிங்கள மக்களுடனான "வடக்கையும் தெற்க்கையும் இணைக்கும் சகோதரத்துவத்தின் மக்கள் சந்திப்பு " என்னும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள விமல் வீரவன்ச குழுவினர் முன்னதாக கொக்கிளாய் விகாரை மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைந்துள்ள விகாரை என்பனவற்றுக்கு இரகசியமாக திடீர் விஜயம் மேற்கொண்டனர்.

இந்த திடீர் விஜயம் குறித்து ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் வினவியபோது கருத்துக்கள் எதையும் கூற மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.. நன்றி வீரகேசரி
பொது மக்களின் காணிகளை அபகரித்துள்ள வன இலாகா ; மக்கள் விசனம்
14/07/2019 முல்லைத்தீவு - கொக்குத் தொடுவாய்ப்பகுதியில், கடந்த1981ஆம் ஆண்டு காலப்பகுதியில் உப உணவுப் பயிற் செய்கைக்கென தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை, வன வளத் திணைக்களம் அபகரித்துள்ளது.

தமது காணி விடுவிப்பைக் கோரியிருந்த நிலையில், வன வளத் திணைக்களத்தினர் தமது காணிகளை விடுவிப்பதாக தெரிவித்திருந்தபோதும் இதுவரை விடுவக்கவில்லை என காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தமது காணிகளை உடனடியாக விடுவிக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எமக்கு கடந்த 1981ஆம் ஆண்டு காலப்பகுதியில் குஞ்சுக்குளம், கோட்டைக்கேணி, குளத்துச் சோளகம், காயாவடிக் குளம் போன்ற பகுதிகளில் உப உணவுப் பயிற்செய்கைக்காக வழங்கப்பட்ட காணிகளைத் தற்போது வன வளத் திணைக்களத்தினர் அபகரித்துள்ளனர்.
இதேவேளை காயாவடிக் குளம் பகுதியில் 1984ஆம் ஆண்டு இடப்பெயர்விற்கு முன்னர், 36இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு குடியிருந்தன.
இவ்வாறு கடந்த 1984ஆம் ஆண்டு எமது பகுதிகளிலிருந்து வலுக்கட்டாயமாக இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட நாம், கடந்த 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டோம்.
ஏறக்குறைய 30ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நீண்ட கால இடப்பெயர்வை நாம் சந்தித்திருந்ததால், எமது பயிர்ச்செய்கை நிலங்கள் அனைத்தும் பெருங் காடுகளாக காட்சியளிக்கின்றன.
இந் நிலையில் பாரிய காடாக காணப்படும் எமது பயிர்ச்செய்கை நிலங்களை தமக்குரியதெனத் தெரிவித்து, வன வளத் திணைக்களத்தினர் கடந்த 2016ஆம் ஆண்டு எல்லைக் கற்களை நாட்டினர்.
வன வளத் திணைக்களத்தின் இத்தகைய செயற்பாட்டிற்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்தோம். அதையும் மீறி அவர்கள் தமது எல்லைக் கற்களை நாட்டினர்.
இவ்வாறு அபகரிக்கப்பட்ட எமது காணிகளை விடுவிக்குமாறு வனவளத் திணைக்களத்தினரிடம் கோரியிருந்த நிலையில், அளவீடு செய்து 95ஏக்கர் வரையன காணிகளை விடுவிப்பதாக தெரிவித்திருந்தனர். எனினும் இதுவரை அவர்கள் எமது காணிகளை விடுவிக்கவில்லை.
குறிப்பாக இந்தப் பகுதிகளில் எமக்கு 200 ஏக்கருக்கு மேற்பட்ட உபஉணவுப் பயிர்ச்செய்கைக்கு வழங்கப்பட்ட காணிகள் காணப்பட்டன.
இப் பகுதியில் பெரும்பான்மை இன மக்களுக்கு ஒருவருக்கு 25ஏக்கர் வீதம் பழமரச் செய்கைக்கென காணிகள் வழங்கப்பட்டிருந்தன. அதில் 105ஏக்கருக்கும் மேற்பட்ட எமது காணிகளும் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாம் காணி விடுவிப்பைக் கோரியிருந்த நிலையில், அளவீடுகளைச் செய்து 95ஏக்கர் வரையான காணிகளை விடுவிப்பதாக வனவளத் திணைக்களத்தினர் தெரிவித்திருந்தபோதும் இதுவரை விடுவிக்கவில்லை.
இவ்வாறு எமது காணிவிடுவிப்பில் இழுத்தடிப்புச் செய்து மீதமாகவுள்ள காணிகளையும் பெரும்பான்மை இன மக்களுக்கு வழங்க எத்தனிக்கின்றனரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
எனவே உரிய அதிகாரிகள் எமது காணிகளை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். என்றனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment