ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் - இறுதிப் போட்டி


கிண்ணம் யாருக்கு? இங்கிலாந்து - நியூஸிலாந்து இன்று மோதல்!

44 வருடகால கனவை சூப்பர் ஓவரில் நனவாக்கிய இங்கிலாந்து !

அன்று பந்து வீச்சில் கோட்டை விட்ட பென்ஸ்டோக் இன்று துடுப்பாட்டத்தில் மிரட்டினார்

எவ்வாறு உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இங்கிலாந்து ; பவுண்டரிகளே தீர்மானித்தன !


கிண்ணம் யாருக்கு? இங்கிலாந்து - நியூஸிலாந்து இன்று மோதல்!
14/07/2019 முதலாவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் நோக்குடன் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதுகின்றன.
அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரானது கடந்த 31 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆர்பமாகி இடம்பெற்று வருகின்றது. மொத்தமாக 10 நாடுகள் கலந்துகொண்ட இத் தொடரில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற, இங்கிலாந்து, நியூஸிலாந்து, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அணியும், இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. 
‘நம்பர் வன்’ அணியான இயன் மோமர்கன் தல‍ைமையிலான இங்கிலாந்து அணியானது 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் நான்காவது (1979, 1987, 1992)முறையாவும் அடியெடுத்து வைத்துள்ளது.
துடுப்பாட்டத்திலும் சரி பந்து வீச்சிலும் சரி திடமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான பெயர்ஸ்டோவும், ஜோசன் ரோயும் அந்த அணியின் ஆணிவேராக உள்ளனர். ஜோ ரூட் (549 ஓட்டம்), இயான் மோர்கன் (362 ஓட்டம்), பென் ஸ்டோக்ஸ் (381 ஓட்டம் ), ஜோஸ் பட்லர் (253 ஒட்டம்) ஆகியோரும் இங்கிலாந்தின்  துடுப்பாட்டத்துக்கு வலுவாகவுள்ளனர்.
பந்து வீச்சிலும் கிறிஸ் வோக்ஸ் (13 விக்கெட்), ஜோப்ரா ஆர்ச்சர் (19 விக்கெட்), மார்க் வுட் (17 விக்கெட்), சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் (11 விக்கெட்) ஆகியோரும் சவால் விடக்கூடியவர்கள்.
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரையில் கணிக்க முடியாத அணியாவுள்ளது. நியூசிலாந்து இறுதிப்போட்டி வரும் என பெரும்பாலானவர்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. எனினும் லீக் சுற்றில் 5 வெற்றிகளுடன் தட்டுத்தடுமாறிய நியூஸிலாந்து அணி, பலம்மிக்க இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது.
தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் குப்தில் கடைசி 5 ஆட்டத்தில் வெறும் 34 ரன் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் ஆரம்பமே நிலையற்ற நிலையில் உள்ளது. எனினும் கேன் வில்லியம்சனும் (2 சதத்துடன் 548 ஓட்டம்), ரோஸ் டெய்லரும் (3 அரைசதத்துடன் 335 ஓட்டம்) தான் அந்த அணியின் சுமை தாங்கிகளாக உள்ளனர். இவர்களின் செயல்பாட்டை பொறுத்தே நியூசிலாந்தின் தலைவிதி அமையும். 
பந்து வீச்சிலும் லோக்கி பெர்குசன் (18 விக்கெட்), மேட் ஹென்றி (13 விக்கெட்), டிரென்ட் பவுல்ட் (17 விக்கெட்), கிரான்ட்ஹோம் உள்ளிட்டோர் தனது பந்து வீச்சி மூலம் எதிரிகளை திக்குமுக்காட வைக்கும் திறமை கொண்டவர்கள்.
2015 ஆம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவிடம் ‘சரண்’ அடைந்த நியூசிலாந்து அணியினர் இந்த முறை தவறுக்கு இடம் கொடுக்காமல் முதல்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்குவதற்காக எல்லா வகையிலும் முனைப்பு காட்டுவார்கள்.
ஏறக்குறைய ஒரே பலத்துடன் இரு அணிகளும் களம் காணுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாகை சூடும் அணி உலக கிண்ணத்தை ருசித்த அணிகளின் பட்டியலில் 6 ஆவது அணியாக இணையும்.
லண்டன் லோர்ட்ஸை வானிலையை பொறுத்தவரை மழை பாதிப்பு இருக்காது. உள்ளூர் நிலவரப்படி காலையில் கொஞ்சம் மேகமூட்டம் இருக்கும். அதுவும் போக போக மறைந்து வெயில் நன்கு அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  நன்றி வீரகேசரி 










44 வருடகால கனவை சூப்பர் ஓவரில் நனவாக்கிய இங்கிலாந்து !

15/07/2019 நியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை இலங்கை நேரப்படி 3.10 மணியளவில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பமானது. 
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.
242 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக ஜோனி பெயர்ஸ்டோ - ஜோசன் ரோய் ஆகியோர் களமிறங்கினர்.
நியூஸிலாந்து அணியினர் மேற்கொண்ட பந்துப் பரிமாற்றங்களினால் திக்குமுக்காடிய ரோய் 17 ஓட்டத்துடன் 5.4 ஆவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியாறினார் (28-1). 
முதல் விக்கெட் 28 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டதனால் இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஜோ ரூட்  நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர மறுமுணையில் பெயர்ஸ்டோ ஓட்டங்களை வேகமாக பெற முற்பட்டார்.
இதனால் இங்கிலாந்து அணி 10 ஓவரில் 39 ஓட்டத்தையும், 15 ஓவரில் 56 ஓட்டத்தையும் பெற்றது. 17 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட கிரேண்ட்ஹோம் அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ரூட்டை 7 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்ற, 19.3 ஆவது ஓவரில் பெயர்ஸ்டோ 36 ஓட்டத்துடன் லொக்கி பெர்குசனின் பந்தில் போல்ட் ஆனார் (71-3).
ரூட்டின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் இயன் மோர்கன் 23.1 ஆவது ஓவரில் 9 ஓட்டத்துடன் ஜேம்ஸ் நீஷமின் பந்தில் லொக்கி பெர்குசனின் அபார பிடியொடுப்பினால் களம் விட்டு நீங்கினார்.
இதனால் இங்கிலாந்து அணி 86 ஓட்டத்துக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து நிலை தடுமாறியது. இந் நிலையில் 5 ஆவது விக்கெட்டுக்காக பென் ஸ்டோக் மற்றும் பட்லர் ஜோடி சேர்ந்து நியூஸிலாந்து அணியின் பந்துகளை அனைத்து திசைகளிலும் அடித்தாட அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்தது.
அதன்படி 27.3 ஆவது ஓவரில் பென்ஸ்டோக் ஒரு நான்கு ஓட்டத்தை விளாச இங்கிலாந்து அணி 100 ஓட்டங்களை கடந்ததுடன், 37.2 ஆவது ஓவரில் 150 ஓட்டங்களையும் கடந்தது.
ஒரு கட்டத்தில் 40 ஓவருக்கு 170 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றவேளை வெற்றிக்கு 60 பந்துகளுக்கு 72 ஓட்டம் என்ற நிலை இருந்தது. ஆடுகளத்தில் பென் ஸ்டோக் 43 ஓட்டத்துடனும், பட்லர் 42 ஓட்டத்துடனும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வந்தனர்.
தொடர்ந்து 43.2 ஆவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி பட்லர் அரைசதம் கடக்க மறுமுணையில் பென் ஸ்டோக் அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் அரைசதம் பெற்றார்.
32 பந்துகளுக்கு 46 ஓட்டம் என்ற இக்கட்டான நிலையிருந்த வேளையில் பட்லர் 44.5 ஆவது ஓவரில் மொத்தமாக 60 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 59 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற ஆட்டம் சூடு பிடித்தது.
45 ஓவர்களுக்கு இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 196 ஓட்டங்களை பெற, வெற்றிக்கு 30 பந்துகளுக்கு 46 என்ற நிலையானது. (பென்ஸ்டோக் - 51, கிறிஸ் வோக்ஸ் - 0).
46.1 ஆவது ஓவரில் கிறிஸ் வோக்ஸ் லொக்கி பெர்குசனின் பந்து வீச்சில் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க (203-6), நியூஸிலாந்து அணிப் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசத் தொடங்கியது.
7 ஆவது விக்கெட்டுக்காக பிளாங்கட் களமிறங்கி துடுப்பெடுத்தாட 18 பந்துகளுக்கு 34 என்ற நிலையும் 12 பந்துகளுக்கு 24 என்ற நிலையுமிருக்க பிளாங்கட் 48.3 ஆவது ஓவரில் 10 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (220-7).
தொடர்ந்து வந்த ஜோப்ர ஆர்ச்சரும் 49 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் எதுவித ஓட்டமின்றி டக்கவுட் ஆக இங்கிலாந்தின் வெற்றிக்கு 6 பந்துகளுக்கு 15 என்ற இக்கட்டான நிலையானது.
ஆடுகளத்தில் பென்ஸ்டோக் 70 ஓட்டத்துடனும், அடில் ரஷித் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இறுதி ஓவரை எதிர்கொண்ட பென்ஸ்டோக் அந்த ஓவரின் முதல் இரு பந்துகளையும் டொட் ஆக்கினார். எனினும் மூன்றாவது பந்தில் 6 ஓட்டத்தை விளாசித் தள்ளினார். அத்துடன் நான்காவது பந்தில் 2 ஓட்டங்களை பெற முற்பட்ட வேளை இங்கிலாந்துக்கு அதிர்ஷ்ட காற்று வீசி அந்த பந்தில் மொத்தமாக 6 ஓட்டம் பெறப்பட்டது. இதனால் இங்கிலாந்துக்கு 2 பந்துகளில் 3 ஓட்டம் நிலையானது.
அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் இரண்டு ஓட்டம் பெற முற்பட்டபோது அடில் ரஷித் ரன் அவுட் ஆக, ஒரு பந்துக்கு 2 ஓட்டம் என்ற நிலையானது. இறுதிப் பந்தை பென்ஸ்டோக் எதிர்கொண்டார். எனினும் அந்த ஓவரில் 2 ஓட்டம் பெற முற்பட ஒரு ஒட்டம் மாத்திரம் பெறப்பட்டதுடன், மார்க்வூட் ரன் அவுட் ஆனார்.
இதனால் சூப்பர் ஓவர் என்ற நிலையானது. சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.
பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் லொக்கி பெர்குசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், கிரேண்ட்ஹோம் மற்றும் மேட் ஹென்றி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15 ஓட்டங்களை பெற, நியூஸிலாந்தின் வெற்றிக்கு 16 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.
16 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணிக்கும் இறுதிப் பந்தில் இரண்டு ஓட்டம் என்ற நிலையானது எனினும் அந்தப் பந்தில் ஒரு ஓட்டம் மாட்டும் பெறப்பட, சூப்பர் ஓவர் விதிப்படி ஒரு அணி அதிகபடியான நான்கு ஓட்டங்களை பெற்ற அணிக்கே வெற்றி கிட்டும்.
அதன்படி இப் போட்டியில் இங்கிலாந்து அணியே அதிகபடியான நான்கு ஓட்டங்களை விளாசித் தள்ளியமையினால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத்தை கைப்பற்றி 44 வருடகால கிரிக்கெட் கனவை நனவாக்கியது.
நன்றி வீரகேசரி











அன்று பந்து வீச்சில் கோட்டை விட்ட பென்ஸ்டோக் இன்று துடுப்பாட்டத்தில் மிரட்டினார்

15/07/2019 ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து முதன் முறையாக சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இப் போட்டியின் வெற்றிக்கு இங்கிலாந்து அணியின் சகல துறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக் முக்கிய காரண கருத்தாவாக அமைந்துள்ளார்.
லண்டன் லோர்ட் மைதானத்தில் நேற்றைய தினம் ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை குவித்தது. 
242 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் முதல் 4 விக்கெட்டுக்களும் 86 வீழ்த்தப்பட்டது.
எனினும் பென்ஸ்டோக் மற்றும் பட்லர் ஜோடி சேர்ந்தாடி இங்கிலாந்தின் வெற்றிக்காக பெரிதும் பாடுபட்டனர். குறிப்பாக பென்ஸ்டோக் இறுதி வரை ஆட்டமிழக்காதிருந்தார். 
இறுதி ஓவருக்கு 15 ஓட்டங்கள் என்ற நிலை வந்தபோது அந்த ஓவரில் பென் ஸ்டோக் முதல் இரு பந்துகளில் ரன்களை பெற தவறினார். எனினும் அவர் அதன் பின் பின்னர் ஒரு ஆறு ஓட்டத்தை விளாசித் தள்ள 50 ஓவர் முடிவில் போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது.
மொத்தமாக இந்த இன்னிங்கிஸில் பென் ஸ்டோக் 98 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக 84 ஓட்டத்தை ஆட்டமிழக்காது பெற்றார்.
அத்துடன் சூப்பர் ஓவரிலும் அவர் 3 பந்துகள‍ை எதிர்கொண்டு 8 ஓட்டங்களை பெற்று அணியின் பெற்றிக்கு பெரும் பங்காற்றியிருந்தார்.
இதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டு கொல்கத்தாவின், எடன்கார்டின் மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியமைக்கு பென் ஸ்டோக் முக்கிய புள்ளியாக காணப்பட்டார்.
காரணம் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வெற்றிக்கு இறுதி ஒவருக்கு 19 ஓட்டங்கள் என்ற நிலையிருக்க, அந்த ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட பென் ஸ்டோக் முதல் நான்கு பந்துகளிலும் 4 ஆறு ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தார்.
இந் நிலையில் நேற்றைய ஆட்டத்தின் மூலம் அந்த தோல்விக்கு மாற்றீடாக நியூஸிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்தின் 44 வருட உலகக் கிண்ண கனவை நனவாக்கினார்.
மொத்தமாக இந்தத் தொடரில் பென் ஸ்டோக் 11 போட்டிகளில் விளையாடி 5 அரைசதங்கள் உள்ளடங்கலாக 468 ஓட்டங்களை குவித்துள்ளார். 
* அதிகபடியான ஓட்டம்   - 89
* நான்கு ஓட்டம்  - 38
* சிக்ஸர்கள்          - 11
* பிடியெடுப்புகள் - 03
* கைப்பற்றிய விக்கெட் - 07

நன்றி வீரகேசரி









எவ்வாறு உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இங்கிலாந்து ; பவுண்டரிகளே தீர்மானித்தன !

15/07/2019 இங்கிலாந்தின், லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கிண்ணத்தை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
உலகக்கிண்ணத்தை இங்கிலாந்து அணி பவுண்டரி எண்ணிக்கையின் அடிப்படையிலேயே கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்தில் இடம்பெற்றுவந்த 12 ஆவது உலகக் கிண்ணதொடரின் இறுதிப் போட்டி நேற்றையதினம் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.
இப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் பதிலுக்கு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி 242 ஓட்டங்களைப் பெற்றால், உலகக்கிண்ணத்தை கைபற்றிவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்கள் ஜேசன் ரோய் 17 ஓட்டங்களுடனும் ஜோனி பேர்ஸ்டோவ் 36 ஓட்டங்களுடனும் வெளியேறினர். 
பின்னர் வந்த ஜோ ரூட் 7 ஓட்டங்களுடன்ம் மோர்கன் 9 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 
அடுத்து வந்த பட்லர், ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் அரைச் சதம் கடந்த நிலையில் பட்லர் 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  இறுதியில் வெற்றி பெற இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவை பட்ட நிலையில்  இங்கிலாந்து அணியால் 14 ஓட்டங்களை மாத்திரமேபெற்றதால் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ஓட்டங்களை பெற்றது. 
சுப்பர் ஓவரில் 16 ஓட்டங்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 6 பந்துகளில் 15 ஓட்டங்கள் அடித்தது. இதையடுத்து பவுண்டரிகள் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றி தீர்மாணிக்கப்பட்டது. 26 பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணிக்கு கிண்ணம் வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கிண்ணத்தை முதல் முறையாக இங்கிலாந்து அணி கைப்பற்றி சாதனை படைத்தது. 
எவ்வாறு சம்பியனானது இங்கிலாந்து
போட்டி 2 ஆவது முறையாகவும் சமநிலையாகும் பட்சத்தில் ஆட்டத்தில் அதிக பவுண்டரி அடித்த அணி வெற்றிபெற்ற அணியாக அறிவிக்கப்படும். 
அந்த வகையில் நியூசிலாந்தை விட இங்கிலாந்து அணி 6 பவுண்டரிகள் கூடுதலாக அடித்திருந்ததால் இங்கிலாந்து உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியில் சுப்பர் ஓவரையும் சேர்த்து இங்கிலாந்து அணி 24 பவுண்டரிகளையும் நியூசிலாந்து அணி 14 பவுண்டரிகளையும் பெற்றுக்கொண்டன.
44 ஆண்டு கால உலகக்கிண்ண வரலாற்றில் இங்கிலாந்து உலகக் கிண்ணத்தை வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியால் இங்கிலாந்து  முழுவதும் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.  நன்றி வீரகேசரி 














No comments: