பயணியின் பார்வையில் - அங்கம் 11 - முருகபூபதி


சீதையின் கண்ணீரும் ஈழப்பெண்களின் கண்ணீரும் சொல்லும் கதைகளும் சாப விமோசனமும்
    " அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

                      ஆலயம் பதினாயிரம் நாட்டல்
   அன்ன வாயினும் புண்ணியங்கோடி
                    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

                                                                  --  மகாகவி பாரதியார்

காட்பாடி - வேலூரிலிருந்து அதிகாலையே புறப்பட்டு, சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து இலங்கை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் வரும்போதே, அந்த ஒரு மணிநேரப்பயணத்தில், தாயகத்தில்  என்ன செய்யவேண்டும்?  எங்கெங்கே செல்லவேண்டும்?  யார் யாரைப் பார்க்கவேண்டும்?  என்று மனதில் பதிவுசெய்துகொண்டேன்.
இலங்கையில் பெப்ரவரி 22 ஆம் திகதி முதல், மார்ச் 12 ஆம் திகதிவரையில்தான் நிற்கமுடியும். என்னைப் பொறுத்தவரையில் வருடங்களில் வரும் பெப்ரவரி மாதம் உவப்பானதில்லை. இந்த மாதத்தில் நாட்கள் குறைவு. இம்மாதத்தில் தாயகம் சென்றால், மேலும் மூன்று நாட்களுக்காக நேரத்தை சேமித்து இயங்கவேண்டும்.
அவ்வாறு இயங்குவதாயின் அதிகாலை மூன்று மணிக்கே துயில் எழ வேண்டும். நாட்டுக்கு நாடு நேர வித்தியாசம் இருப்பதனால், அவ்வாறு எழுதல் சாத்தியமானது.
நீர்கொழும்பில் அக்காவின் வீட்டிலிருந்து, ஒரு நாள் அதிகாலை எழுந்து கணினியில்,  இலங்கைப்பயண ஒழுங்குகளை தீர்மானித்து எழுதிக்கொண்டேன். அதனை பிரதி எடுத்துவைத்துக்கொண்டு பணிகளை தொடங்கினேன்.
அந்த நிகழ்ச்சி நிரலில் இலங்கைத் தலைநகரம் கொழும்பு வரவேயில்லை என்பது   ஆச்சரியமாகவும் இருந்தது. இவ்வளவு தூரம் வந்துவிட்டு கொழும்பிலிருக்கும் ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகளை சந்திக்காமல் திரும்பினால், அவர்கள் கோபிக்கப்போகிறார்களே? என்ற எண்ணமும் வந்தது.
நீடித்த போருக்குப்பின்னர்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் - முன்னேற்றம்  வந்ததோ இல்லையோ, ஆனால்,  நாட்டின் போக்குவரத்துச்சேவையில் துரிதமான மாற்றமும் முன்னேற்றமும் வந்திருக்கிறது.
ஒருகாலத்தில் மலையகம் மற்றும் வடக்கு - கிழக்கு - தென்னிலங்கை செல்வதாக இருந்தால், தலைநகரம் சென்றுதான் ரயில் ஏறவேண்டியிருந்தது. வீதிகள் அகலிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டதின் பின்னர்,  நாட்டில் எங்கிருந்தும் எந்தவொரு திசைக்கும் இலகுவாகச்செல்லத்தக்கதாக பஸ் போக்குவரத்து உருவாகிவிட்டது.
எங்கள் நீர்கொழும்பிலிருந்தே நுவரேலியா, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ,மன்னார், வவுனியா , காலி, மாத்தறை உட்பட எந்தப்பிரதேசத்திற்கும் செல்லத்தக்கதாக போக்குவரத்து வசதி இருக்கிறது.
எங்கள் ஊரின் முதல் தமிழ் ஆசான் பண்டிதர் மயில்வாகனன் அவர்களின் நூற்றாண்டு விழாவுக்காகத்தான் இந்த வெளிநாட்டுப்பயணத்தை பிரான்ஸிலிருந்து ஆரம்பித்திருந்தேன். அவரது விழா பாரிஸ் மாநகரில் முடிந்ததும், அங்கிருந்து லண்டன் வந்து, அங்கிருந்து தமிழ்நாடு வந்து. பின்னர் இலங்கைக்குச்சென்றிருந்தேன்.
பண்டிதரின் மாணவனாக இருந்தமையால் ( இவர் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்) அன்னாருக்கு நீர்கொழும்பிலும் நூற்றாண்டு விழாவை நடத்தும் எண்ணத்தில்தான் இந்த நெடிய பயணத்தை மேற்கொண்டிருந்தேன்.
எங்கள் ஊரில் இறங்கியதும், முதல் வேலையாக விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரிக்குச்சென்று, அதிபர் புவனேஸ்வரராஜா அவர்களைச்சந்தித்து, பழைய மாணவர் மன்றம் - அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். பண்டிதர் நூற்றாண்டு தொடர்பாக அவருடன் ஏற்கனவே தொலைபேசியில் உரையாடியிருந்தமையால், அந்தச் சந்திப்பும் தாமதமின்றி நடந்தது.
  கல்லூரி அதிபரின் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில்,  மருத்துவர் ஆர். வரதன் ( செயலாளர் கல்லூரி அபிவிருத்திச்சங்கம்) , திருவாளர்கள் ஆர். ஆர். சிவலிங்கம் ( தலைவர் – கல்லூரி பழைய மாணவர் மன்றம்) , அநுரகணேஷ் ( செயலாளர் – கல்லூரி பழைய மாணவர் மன்றம்) ,  ஜி. சுதாகரன் ( ஆசிரியர் – உறுப்பினர் கல்லூரி அபிவிருத்திச்சங்கம்) , திருமதி ஶ்ரீகுமார் ( ஆசிரியர் – பொருளாளர் - கல்லூரி அபிவிருத்திச்சங்கம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பில் கலந்துகொண்ட அவர்களுக்கு, பாரிஸ் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட மலரையும் கையோடு எடுத்துச்சென்றிருந்த பண்டிதரின் பெரிய உருவப்படத்தையும் காண்பித்தேன்.
மார்ச் 09 ஆம் திகதி வித்தியாலய சமூகம் விழாவை சிறப்பாக நடத்துவது எனவும், பழைய மாணவர் மன்றமும் எதிர்நோக்கப்படும் செலவுகளுக்கு பங்களிப்பு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டதையடுத்து, அழைப்பிதழ், பெனர் முதலானவற்றை வடிவமைத்துக்கொடுத்துவிட்டு, நுவரேலியாவுக்குச்சென்றேன்.
இக்கல்லூரியில் படித்த செல்வி பாமினி செல்லத்துரை என்பவர் எனது மனைவி மாலதியின் மாணவி. தனது இளம் பராயத்திலேயே தந்தையை இழந்தவர். வறுமைக்கோட்டில் இருந்த இம்மாணவியை எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் புலமைப்பரிசில் திட்டத்தில் இணைத்திருந்தோம். அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த ஓய்வுபெற்ற மருத்துவர் நாகரத்தினம் இம்மாணவிக்கு உதவ முன்வந்தார். அவர் மறைந்த பின்னர் அவருடைய பேரனும் எனது இலக்கிய நண்பர் நடேசனின் மகனுமான நவீன் நடேசனின் உதவியில்  பாமினி கல்வியைத் தொடர்ந்து,  பட்டதாரியாகி, முதலில் கொழும்பில் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் திட்ட அதிகாரியாக பணியாற்றிவிட்டு, தற்போது நுவரேலியாவில் பிரதி கல்விப்பணிப்பாளராக பணியாற்றுகிறார்.
நான் இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் மறக்காமல் வந்து சந்திக்கும் முன்னாள் மாணவர்களில் இவரும் ஒருவர். நுவரேலியா செல்லவிருக்கும் எண்ணத்தைக்கூறியதும், " அங்கிள் வாருங்கள். நானே அழைத்துச்செல்கின்றேன். எங்கள் ஊரிலிருந்து அதிகாலை 4 மணிக்கு வெலிமடைக்குப்புறப்படும் இ.போ.ச.பஸ்ஸில் சென்றால், நுவரேலியாவில் 10 மணிக்கு இறங்கிவிடலாம் " என்றார். அவ்வாறே அங்கு  சென்றடைந்தோம். அன்று மாலை,  சீதை இரவணனால் சிறைவைக்கப்பட்ட சீதா எலிய என்ற இடத்திற்குச்சென்றோம்.
அங்கு ஆசிரியையாக பணிபுரியும் செல்வி சாதினி ஜெயசீலனுக்கும் பாமினியை நன்கு தெரியும். அதனால் அந்தப்பயணமும் இலகுவாக அமைந்தது.
சீதையம்மன் கோயில் அமைந்துள்ள பிரதேசம் ரம்மியமானது. இதமான குளிர் காற்று வருடிச்செல்ல இயற்கை எழில் பூத்துக்குலுங்குகிறது. சீதையை சிறைவைத்த இராவணன், அவள் மஞ்சள் அறைத்துப்பூசிக் குளிப்பதற்கும் அனுமதித்திருக்கின்றான். இக்காலத்தில் பெண்கள் பேர்ஷியல் எனப்படும் ஒப்பனைக்கு பழக்கப்பட்டிருப்பதற்கு முழுமுதல் வழிகாட்டி சீதையாகத்தான் இருக்கவேண்டும்.
சீதையை சந்திப்பதற்கு இராமனால் தூதுவனாக அனுப்பப்பட்ட அனுமான்தான் இலங்கைக்கு வந்த முதலாவது இராஜதந்திரி. சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் உலக நாடுகளிலிருந்து நாளுக்கொரு ராஜதந்திரிகள் வந்துகொண்டிருப்பதை பார்க்கிறோம்.
இலங்கையில் சீதா எலியவில் சீதைக்கு ஒரு கோயிலையும் நுவரேலியா செல்லும் பாதையில் இறம்பொடையில் அனுமாருக்கு ஒரு கோயிலையும் எழுப்பிவிட்டார்கள். உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை கவரும் முக்கிய பிரதேசமாக இவை கருதப்படுகின்றன.
அனுமாரின் வாரிசுகள் எம்மை அங்கு வரவேற்றார்கள். அங்கு வரும் பக்தர்கள் அவற்றுக்கு பழங்கள் கொடுத்து உபசரிக்கின்றார்கள். ஒரு பெரிய வானரக்கூட்டத்தையே வைத்துக்கொண்டு போரிட்டு சீதையை மீட்டுச்சென்ற இராமன், மீண்டும் ஏன் அவளை காட்டுக்கு அனுப்பினான்? இதுபற்றி புதுமைப்பித்தன் எழுதியிருக்கும் சாபவிமோசனம் கதை அச்சந்தர்ப்பத்தில் எனது நினைவுக்கு வந்தது.
இலங்கை மக்களும் இலங்கை அரசும் இந்தியாவைத்தான் இன்றளவும் பல விடயங்களில் நம்பியிருக்கிறார்கள். இந்தியாவை பகைத்துக்கொள்ளத் தயாரில்லை. அதற்கு இராவணன் - இராமன் யுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு பெண்ணுக்காக அன்று நடந்த யுத்தம் பற்றி சின்னவயதில் எனது பாட்டி சொன்ன கதைகள் அங்கு நின்றபோது நினைவுக்கு வந்தன.
" பெண்பாவம் பொல்லாதது. எரிந்த பூமி பெண்ணின் சாபத்தால் மீண்டும் மீண்டும் எரியும்.,  பல தலைமுறைகளுக்குப்பின்னர்தான் அந்த சாபத்திலிருந்து எங்கள் நாட்டுக்கு விமோசனம்  கிடைக்கும் " என்று எங்கள் பாட்டி 1958 ஆம் ஆண்டு நடந்த கலவர காலத்தில் சொன்னதை அன்றும் நான் நம்பவில்லை. இன்றும் நம்பவில்லை.
சீதை வடித்த கண்ணீர் பற்றி கம்பர் எழுதிவைத்திருக்கிறார். ஆனால், அவற்றை படித்து புரிந்துகொள்ளும் வயது அன்றிருக்கவில்லை. ஆனால், பாட்டியின் கதைகளின் ஊடாக அந்தக்கணீரை அன்று தெரிந்துகொண்டேன்.
சீதைக்கும் கண்ணகிக்கும் கோயில் கட்டி வழிபடும் முறை இலங்கையில்தான் தலைசிறந்து விளங்குகிறது. கண்ணகியின் சாபத்தால் மதுரை எரிந்தது. சீதையின் சாபத்தால் இலங்கை காலத்துக்கு காலம் எரிகிறது  என்று ஒரு பெரியவர் சொன்னார்.
" அதற்கு அப்பாவிகள் என்ன பாவம் செய்தார்கள் ?"  எனத்திருப்பிக்கேட்டேன். ஐதீகத்தையும் வரலாற்றையும் மீண்டும் படிக்கவும். இவற்றை மறுவிசாரணைக்கு உட்படுத்தும் உண்மைகள் புரியும் " எனச்சொல்லிவிட்டு அவர் அகன்றார்.
சீதையம்மன் கோயிலுக்கு பின்புறமாக  பறைகளை ஊடறுத்து ஓடும் அருவி சல சலவென ஒலி எழுப்பியவாறு அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் பாறைகளில் இருக்கும் தடங்கள் அனுமாருடையது என்றும் சொல்கிறார்கள்.
எது எப்படியோ,  கம்பனின் காவியத்திலும் நுவரேலியா சீதா எலியவிலும் சீதை,  வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.
சீதையின் கண்ணீர் குறித்து ஆராய்ந்துகொண்டே வடக்கு நோக்கி புறப்பட்டேன். அங்கு 1980 முதல் 2009 வரையில் மூன்று தசாப்த காலமாக நீடித்த போரில் பெற்றவர்களை இழந்தவர்களினதும்  கணவன்மாரை இழந்தவர்களினதும் கண்ணீர் இன்னமும் ஓயவில்லை.
ஆனால், ஐ.நா.விலிருந்தும் உலக நாடுகளிலிருந்தும் இராஜதந்திரிகள் வந்து வந்து திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு வந்ததும் நண்பர்களின் ஆதரவுடன் ஆரம்பித்த இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் ஆதரவுடன் கல்வியைத் தொடரும் ஏழைத்தமிழ் மாணவர்களின் ஒன்றுகூடல்களை, யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலும், வவுனியா வேப்பங்குளத்திலும்,  கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில், கல்முனை பெரியநீலாவணையிலும் நடத்துவதற்கு நாட்களைக்  குறித்துவிட்டு முதலில் வடக்கு நோக்கிப்பயணமானேன்.
இச்சந்தர்ப்பத்தில் எமது கல்வி சார்ந்த தொண்டு நிறுவனம் இதுவரையில் மேற்கொண்ட பணிகள் பற்றி சுருக்கமாக தெரிவிக்கின்றேன்.
அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனைத் தளமாக கொண்டியங்கும் இலங்கை மாணவர் கல்விநிதியம்  அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலிருந்தும் அன்பர்களின் ஆதரவுடன் 1988 ஆம் ஆண்டு உதயமாகியது.  பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட  இரக்கமுள்ள பல அன்பர்கள் இந்த  அமைப்பில் இணைந்தனர். விக்ரோரியா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இயங்கும் இந்தத் தொண்டு நிறுவனம், இலங்கையில் வடக்கு, கிழக்கு, மாகாணங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும்,  போர்க்காலத்தில் இடம்பெயர்ந்து மேற்கிலங்கைக்கு சென்ற மாணவர்கள் வதியும் கம்பஹா மாவட்டத்தில் கல்வி பயிலும்  பாதிக்கப்பட்ட  மாணவர்களுக்கும் உதவுகிறது.
 போரினால் தாய், தந்தை மற்றும் குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக இந்த நிதியம் உதவி வருகிறது.


முதலாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழக புகுமுக வகுப்பு ( .பொ.. உயர் தரம்) வரையில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் இந்த உதவித்திட்டத்தினால் நல்ல பலனையும் பயனையும் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியினைப்பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசித்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் தமது பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்து, பட்டமும் பெற்று தொழில் வாய்ப்புகளும் பெற்றுள்ளனர்.


மாணவருக்கு உதவும் அன்பர்கள் விடுமுறை காலங்களில் இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில், தாம் உதவும் குறிப்பிட்ட மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நடைமுறையினால் பல உதவும் அன்பர்கள் இலங்கை சென்று தாம் உதவிய மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் மேலதிக தேவைகளையும் கவனித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.


இலங்கை மாணவர் கல்வி நிதியம், 2004 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட சுனாமி கடற்கோளினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வன்னியில் நடந்த போரினால் பாதிப்புற்று அகதி முகாம்களில் தஞ்சமடைந்த மாணவர்களுக்கும் உதவி வழங்கியிருப்பதுடன், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வி நலன்களை கவனித்து, அவர்களை விடுவித்து .பொ. சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்பு பரீட்சைகளில் அவர்கள் தோற்றுவதற்கும் பெற்றோர்களிடம் இணைந்துகொள்வதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
எமது கல்வி நிதியத்தின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அவதானித்த சிட்னியில் முன்னர் இயங்கிய தமிழ் மனித உரிமை அமைப்பு தனது சேமிப்பிலிருந்து 25 ஆயிரம் அவுஸ்திரேலியன் வெள்ளிகளை நன்கொடையாக வழங்கியது. அதனை வங்கியில் நிரந்தர வைப்பிலிட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டிப்பணத்திலிருந்தும் உதவும் அன்பர்கள் கிடைக்காத மாணவர்களுக்கு உதவி வருகின்றோம்.
 2014 ஆம் ஆண்டு இந்நிதியத்தின் வெள்ளிவிழாவின்போதும் நிதி திரட்டி அதனையும் அந்த நிரந்தர வைப்பு நிதியில் இணைத்தோம். தற்பொது 35 ஆயிரம் வெள்ளிகளில் வருடாந்தம் கிடைக்கும் வட்டிப்பணம் பல மாணவர்களுக்கும் உதவுகிறது.
சிட்னி - மெல்பனில் சில நடன ஆசிரியர்களும் தங்கள் நடனப்பள்ளிகள் ஊடாக நிகழ்ச்சிகள் நடத்தி உதவியிருக்கின்றனர். மெல்பனில் செல்வவன் பிரகதீஸ் சண்முகராஜா என்ற பல்கலைக்கழக மாணவர் தனது மிருந்தங்க அரங்கேற்றத்தில் கிடைத்த நன்கொடை அனைத்தையும் இந்நிதியத்திற்கு வழங்கி முன்மாதிரியாகத் திகழுகின்றார்.
அவுஸ்திரேலியா கன்பரா ஈழத்தமிழ்ச்சங்கமும்,  கன்பரா அன்பர்  திரு. ரவீந்திரன் தலைவராக இருந்த காலப்பகுதியில்,  இக்கல்வி நிதியம் ஊடாக இலங்கையில் கிழக்கு  மாகாணத்தில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் சில தொண்டர் ஆசிரியர்களுக்கு இரண்டு வருடகாலம் மாதாந்த வேதனம் (Allowance) வழங்கியிருக்கிறது.
இந்தப்பின்னணிகளுடன் எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  கன்பராவில் இலங்கை மாணவர்கல்வி நிதியத்தின் தகவல் அமர்வும் அன்பர்களின் ஒன்றுகூடலும்  நடைபெறவிருக்கிறது.
நிதியத்தின் கன்பரா தொடர்பாளர் பல் மருத்துவர் ரவீந்திரராஜா தலைமையில் இந்நிகழ்ச்சி கன்பரா தமிழ் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
( தொடரும்)


    

-->










No comments: