தமிழ் அறிஞர் பேராசிரியர் இரா. மோகனுக்கு கண்ணீர் அஞ்சலி - புன்சிரிப்பு மோகன் புறப்பட்டு போய்விட்டார் !




                                  

image1.jpg                        தமிழ்த்தேனீ  பறந்தது  தமிழறிஞர்  கலங்குகிறார் 
                        அறிவுநிறை  தமிழறிஞர்  அழவிட்டே  அகன்றுவிட்டார் 
                        அறிஞராம் முவவின் அருமைமிகு செல்லப்பிள்ளை
                        அனைவரையும் அழவிட்டே அவ்வுலகு போனதேனோ  !

                        மோகனென்று நினைத்தவுடன் புன்னகைதான் வந்துநிற்கும் 
                        காதலுடன் தமிழ்படித்து காத்திரமாய் எழுதிநின்றார்
                        நோதலுடன் பேசாதா  நுண்ணறிவும் பெட்டகமாய்
                        பூதலத்தில் இருந்தமோகன் புறப்பட்டு போனதேனோ ! 

                         பட்டம்பல பெற்றாலும்  பதவிபல  வகித்தாலும்
                         மற்றவரை நோகடிக்கும் வகையிலவர் இருந்ததில்லை 
                         கற்றபடி ஒழுகிநின்றார் கண்ணியத்தைக் காத்துநின்றார்
                         கண்ணீரில் மிதக்கவிட்டு காணாமல் போய்விட்டார் ! 

                          அவர்படைத்த  நூல்களெலாம் அழுதபடி இருக்கிறது 
                          அவர்பெற்ற விருதுகளோ அலமந்தே நிற்கிறது 
                          பட்டிமன்றம் கவியரங்கம் பரிதவித்தே நிற்கிறதே 
                          கட்டழகு சிரிப்பழகர் கலங்கவிட்டுப் போனதேனோ ! 

                    இலக்கியத்தில் இரட்டையராய் இருந்தார்கள் இணைபிரியா 
                    இப்போது இராமோகன் இணையைவிட்டு ஏகிவிட்டார்
                    பிரிந்தஇணை நிர்மலாவோ  புரண்டேங்கி அழுகின்றார் 
                    சிரித்தமுகம் காணாமல்  சென்றவிடம்  தேடுகிறார் !

                    புன்சிரிப்பு  மோகன்  புறப்பட்டு  போய்விட்டார் 
                    என்கின்ற செய்தி இடியெனவே இருந்ததுவே
                    அவர்நட்பை எண்ணியெண்ணி அழுதபடி நிற்கின்றேன்
                    அறிவுநிறை இராமோகன் அழவிட்டுப் போனதேனோ !


        மகாதேவஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா 
                     










No comments: