‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ - ஒரு பார்வை ( யோகன், கன்பெரா)


2016 கணக்கெடுப்பின் படி  சிட்னியில் 30,000 தமிழர்களும், மெல்பேணில் 25, 000 தமிழரும் வசிப்பதாக அறிய முடிகிறது. இந்த மக்கள் தொகை தொடர்ந்துஅதிகரித்து வருகிறது. அதாவது தமிழர்கள் செறிவாக வாழும் நகரங்களாக சிட்னி மெல்பேண் நகரங்கள் தொடர்ந்து இருக்கப் போகின்றன.
இவ்வகையில் தமிழ் கலை இலக்கிய செயற்பாட்டு மையங்களாக இந் நகரங்கள் இருந்து வருகின்றன என்பதும் உண்மையே. இந்தப் பின்னணியில் சிட்னியில் வசிக்கும் ஈழன் இளங்கோ தயாரித்த  திரைப்படமொன்றை பார்க்கலாம்.   இவர் ஏற்கனவே இன்னொரு திரைப்படத்தையும்  முன்னர் தயாரித்திருத்ததாக அறிந்திருந்தேன். ஏற்கனவே அவுஸ்திரேலிய தமிழ் முரசில் இத்திரைப்படம் குறித்து ஒரு கட்டுரை திரைப்படம்  இங்கு வெளியாக முன்னரே வந்திருந்தது.
கன்பெராவில்  சில வாரங்களுக்கு முன்பு  'சாட்சிகள் சொர்க்கத்தில்'  என்ற இத்திரைப்படம் காண்பிக்கப்பட்டது . ஒன்றரை மணி நேரம் வரை ஓடும் இத்திரைப் படம் கடந்த 2009 ஈழ யுத்ததில் பாதிக்கப்பட்டோரின் சில குடும்பங்களின் அல்லது சிலரின்  தனித்தனிக்  கதைகளின்  ஒரு தொகுப்பு  என சொல்லலாம் .   இது எடுக்கப் பட்ட விதத்தை வைத்துப் பார்க்கும்  போது இது இரு வகையான பார்வையாளர்களுக்கு  எடுக்கப்பட்டிருக்கலாம் என்று  தோன்றுகின்றது. ஒன்று தமிழ் பார்வையாளராகிய ஈழம், தமிழ் நாட்டை சேர்ந்தவர்களுக்கு  மற்றையது இங்குள்ள வெள்ளையினத்தவர்களுக்கும் மற்றும்  மனித உரிமை அமைப்புகள் அகதிகளுக்கான அமைப்புகளுக்காகவும் என்று எண்ணத் தோன்றுகிறது.

கதை அவுஸ்திரேலியாவில் நிகழ்கிறது. ஒரு  எழுத்தாளராக இருக்கும் இளம் பெண்ணொருத்தி தனது அடுத்த நூல்  வெளியீட்டை பற்றி எண்ணிக்கொண்டிருக்கையில் அதில் மேற்சொன்ன ஈழப் போரில் பாதிக்கப் பட்டோரின் கதைகளை சொல்லவேண்டுமென்ற ஒரு ஆலோசனைக்கமைய  அவர் சில குடும்பங்களையும்  தனி மனிதர்களையும் சந்தித்து அறிந்து கொண்டதை காட்சிப்படுத்துவதாகவும் குறிப்பாக அதின் காரணமாக அவர்  தற்கொலைக்கு   முயல்வதாகவும் திரைக்கதையில் சொல்லப்பட்டது.  தற்கொலை முயற்சியை  காட்டுவதுடன் ஆரம்பிக்கும் படம் அப்பெண்  தான் அறிந்த  அக்கதைகளை உளவியல் மருத்துவருக்கு சொல்வதாக திரைப்படம் பிளாஷ் பாக் இல் ஓடுகிறது. இடையில் அப்பெண்ணின் காதலனுடன்  சில பாடல் காட்சிகளும் காண்பிக்கப்பட் டன.
யதார்த்தமாக சொல்லப்பட்ட கதைகளை அடுத்து இறுதியில்  சிகிச்சைக்காக மருந்து  கொடுக்கப்பட்ட நிலையில் அப்பெண் காணும் கனவு என்று சொர்க்கத்தில் நிகழும் சில காட்சிகளை காட்டுகிறார்கள். ஈழ போர்க்குற்றங்களின் சாட்சியங்களாக சொர்க்கத்தில் இருப்பவர்களை சந்தித்து நடந்தவைகளை அறிந்து கொள்வது  என்று ஒரு  புனைவுக்  காட்சியுடன் திரைக்கதை முடிகிறது. அதற்காகவே இத்திரைப்படத்தின் தலைப்பு வைக்கப்பட்டதென்பதையும் அறிய முடிகிறது. சனல் 4 தொலைக்காட்சி கிளிப் களும் இடம் பெற்றன.   இத்திரைப்படம் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிந்தேன்.
ஏற்கனவே ஈழத்தில் தமிழ் சினிமாவில் நடித்தும், இயக்குநராகவுமிருந்த ஏ. ரகுநாதனும் மற்றும் சிட்னி நாடக கலைஞர்கள்  சிலரும், ஏனைய இளம் தலைமுறை நடிகர்களும்  படத்தில் வந்த பாத்திரங்களை நடித்திருந்தனர்.
திரைப்படத்தின் தொழிநுட்பம் மற்றும் ஒலி,ஒளிப்பதிவு, காட்சியமைப்பு  என்பவற்றை  பார்க்கும் போது இது  அவுஸ்திரேலிய தமிழ் சினிமாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க திரைப்படம்  என்றே சொல்ல முடியும். இந்த  திரைப்படத்தில் தொண்ணூறு நிமிடத்தில்  நான்கு  கதைகள் சொல்லப்பட்டதால் இதை ஒரு முழு நீள சினிமாவாக பார்க்காமல் ஒரு ஆவணப்  படம்  என்று பார்க்கலாமா என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு தோன்றக்கூடும்.
ஒரு இளம் தலை  முறையைச் சேர்ந்த படித்த பெண்ணாக இருக்கும் ஒருவர் தற்கொலை செய்து சொர்க்கம் சென்று சாட்சிகளை  சந்திக்க எண்ணுவதென்பது யதார்த்தத்தை மீறியதாகப் பட்டதெனினும்  இயல்பான அவரின்  நடிப்பும் ஏனைய நடிகர்களின் நடிப்பும் பாத்திரங்களுக்கு இசைவானதாகவே  இருந்தது.
சப் டைட்டிலில் சில இடங்களில் தமிழ் தவறாக போடப்பட்டிருந்ததையும் காண  நேர்ந்தது.
ஈழத்தில் வெளிவந்த மொத்த   தமிழ் சினிமாவுமே ஒரு நூறுக்குள்தான் என்பது எனது கணிப்பு . இதை பற்றி தம்பிஐயா தேவதாஸ் என்கனவே நூலொன்றின் பதிவு செய்துள்ளார். இப்பொழுது குறும் படங்கள் வெளிவருகின்றன.
ஈழத்தில் தமிழ் நாடகங்கள் அடைந்த வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் திரைப்படம் வளரவில்லை என்பது உண்மை .  பல காரணங்களில் முதன்மையானது அதற்கான முதலீடு தான்.
இந்த  திரைப்படம் ஈழத்து தமிழ் சினிமாவல்ல.  அவுஸ்திரேலிய தமிழ் சினிமா. அந்த வகையில் ஒரு புதிய பாதைக்கான ஆரம்பமாக  இதனைக்  கருதக்கூடும்.   
சினிமாவில் வெற்றி என்பது இலகுவானதொன்றல்ல. அதற்கு தேவையான முதலீடு, தொழில் நுட்பம், மற்றும் அதன் சந்தைப் போட்டிகள் அதில் வரும் சவால்களைத்  துணிந்து எதிர் கொள்வது போன்றன ஏனைய துறைளைப் போலல்லாது சினிமாவுக்கென்றே உரித்தான நெருக்கடிகள்.
-->
இச்சவால்களை எதிர் கொள்ளவும் அதில் வெற்றி பெறவும் இளங்கோவுக்கு வாழ்த்துக்கள்.

No comments: