தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
மன்னார் மனித புதைகுழியை நேரடியாக பார்வையிட்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பிரதிநிதிகள்
யாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்
மன்னார் மனித புதைகுழியிலிருந்து 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு
மன்னார் மனித புதைகுழியை ஐ.நா. சபை பொறுப்பேற்கக் கோரி போராட்டம்
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் ; மூவர் காயம்
ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி
வரலாற்று தீர்ப்பு ஐ.தே.க. கோலாகல கொண்டாட்டம்
நீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி!
ரணிலும் மைத்திரியும் நேற்றிரவு ரகசிய சந்திப்பு : பேசியது இதுதான்..!
சற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ
"திங்கள் புதிய அரசாங்கம் ; ரணிலை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரினால் நான்
ஒன்றும் செய்ய முடியாது"
சிறிசேனவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி – சுதந்திரகட்சியின் 21 பேர் தெரிவித்தது என்ன?
மீண்டும் பதவியேற்றார் ரணில்
பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரும் தமிழ் மக்கள்
தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
10/12/2018 சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம், இனவாத குடியேற்றங்களுக்கு எதிரான இயக்கம் மற்றும் சமவுரிமை இயக்கம் என்பன இணைந்து பொதுமக்களைத் திரட்டி அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு, தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வு, இனங்களுக்கு இடையிலான சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
போராட்டக்காரர்கள் எமது காணிகளை விடுதலை செய், இராணுவமே வெளியேறு, அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய், புதிய பயங்கரவாதத்தடைச் சட்டத்தை உடன்நிறுத்து, காணாமல் போனோருக்கு என்ன நடந்தது?, தோட்டத்தொழிலாளர் கூலியை 1500 ரூபாவாக அதிகரிக்க வேண்டும், இனவாதக் குடியேற்றத்தை உடன்நிறுத்து, மகாவலியின் போர்வையில் நடத்தப்படும் தமிழர் காணிக்கொள்ளையை நிறுத்து, மைத்திரி கொடுத்த வாக்கை நிறைவேற்று, எங்கள் தாயகத்தை துண்டாடாதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர். நன்றி வீரகேசரி
மன்னார் மனித புதைகுழியை நேரடியாக பார்வையிட்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பிரதிநிதிகள்
11/12/2018 மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'சதொச' வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை நேரடியாக விஜயம் செய்து அகழ்வு பணிகளை பார்வையிட்டனர்.
மன்னார் மனித புதை குழி அகழ்வுப்பணியானது 115 ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (11) சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது தற்போது வரை 266 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அகழ்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அகழ்வு பணியை நேரடியாக பார்வையிட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதி நிதிகள் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை 10.30 மணியளவில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு இடம் பெறும் பகுதிக்குச் சென்று நேரடியாக அகழ்வு பணிகளை அவதானித்ததோடு,குறித்த மனித எலும்புக்கூடுகளின் அகழ்வு மற்றும் ஏனைய விபரங்களை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.
இதே வேளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதி நிதிகள் மனித புதை குழியை பார்வையிட சென்ற போது புலனாய்வுத்துறையினர் பலர் குறித்த பகுதியை சூழ்ந்து கொண்டதோடு,கையடக்கத்தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
யாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்
11/12/2018 நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையில் தெற்கே தெய்வேந்திர முனையில் ஆரம்பித்த நாட்டில் சமாதானமும் சாந்தியும் வேண்டி கோப்ரல் கருணாரட்டவின் முச்சக்கரநாற்காலி வண்டி பயணமானது இன்று பிற்பகல் 4 மணியளவில் பருத்தித்துறை பேதுறு முனையில் நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் முப்படைகள், பொலிஸார் மற்றும் அரச உயர் அதிகாரிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
பருத்தித்துறை பேதுறு முனையை சென்றடைந்ததும் நான்கு மத தலைவர்களின் ஆசிர்வாத பிரார்த்தனைகளுடன் நிறைவு விழா இடம்பெற்றது.
இதில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி உட்பட மாவட்ட முப்படைகளின் தளபதிகளின் உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
மன்னார் மனித புதைகுழியிலிருந்து 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு
12/12/2018 மன்னார் மனித புதை குழி அகழ்வுகளின் போது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இது வரை 21 சிறுவர்களுடைய எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
மன்னார் மனித புதை குழியின் அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (11) 115 ஆவது நாளாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது.
அதனைத்தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை (11) மாலை 3.30 மணியளவில் அகழ்வு பணிகள் இடம் பெறும் இடத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த புதை குழியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (11) மாலை வரை 276 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அகழ்வு பணிகளின் போது எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மாதிரிகள் 'காபன்' பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் அளவில் காபன் பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்பப்படும்.கடந்த வாரம் அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது சுமார் 2 மீற்றர் அளவில் சந்தேகத்திற்கு இடமான மனித எலும்பு மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மனித எலும்பு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை இவ்வாறான 3 மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளது.
இது வரை அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 21 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
மன்னார் மனித புதைகுழியை ஐ.நா. சபை பொறுப்பேற்கக் கோரி போராட்டம்
12/12/2018 மன்னார் நகர நுழைவாயிலுள்ள 'சதொச'வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்று அதற்கான உரிய ஆய்வுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வடக்கு,கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களை உள்ளடக்கிய வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் இன்று காலை போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இன்று காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற குறித்த அமைதி போராட்டத்தின் போது மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை உட்பட 8 மாவட்டங்களிலிருந்து மக்கள் வருகை தந்திருந்தனர்.
குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட ,கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,அரசியல் பிரதி நிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உற்பட ஆயிரக் கணக்கானவர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழி தொடர்பாக ஐ.நா.சபை பொறுப்பேற்று அதற்கான உரிய ஆய்வுகளை செய்ய வேண்டும் எனவும்,குறித்த புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் யார்?, புதைத்தவர்கள் யார்?,என்பது தொடர்பாக வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தனர்.
எனவே ஐ.நா.சபை குறித்த மனித எலும்புக்கூடுகளை பொறுப்பேற்று ஆய்வு செய்து நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததோடு, பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நாட்டில் இடம்பெற்று வரும் அரசியல் பிரச்சினை காரணமாக தாம் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததோடு, குறித்த மனித எலும்பக்கூடுகள் தொடர்பாக ஆய்வுகளையும், வேளைத்திட்டங்களையும் முன்னெடுத்து வரும் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் இறுதியில் ஐ.நா.சபைக்கு எழுதப்பட்ட மகஜர் ஏற்பாட்டுக் குழுவினரால் வாசிக்கப்பட்டதோடு,ஐ.நா.சபைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் ; மூவர் காயம்
12/12/2018 யாழ்.பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்கள், அதே பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இரண்டாம் வருட மாணவர்கள் தமக்கு மரியாதை தருவதில்லை என்ற காரணத்தை முன்வைத்து அம்மாணவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று மாணவர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டாம் வருட மாணவர்களுடன் தங்கியிருந்த சக மாணவன் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.
அம்முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி
ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி
12/12/2018 ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஜவினால் சபையில் முன்வைக்கப்பட்ட ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் இடம்பெற்றது.
ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 117 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணியினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
வரலாற்று தீர்ப்பு ஐ.தே.க. கோலாகல கொண்டாட்டம்
13/12/2018 பாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி கையளிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பான தீர்ப்பானது இன்றைய தினம் உயர் நீதிமன்றினால் வழங்கப்பட்டது.
ஜனாதிபதிக்கு பாராளுமன்றை கலைக்க அதிகாரம் கிடையாது என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நீதியரசர்கள் ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்றமே இந்த தீர்ப்பினை வழங்கியது.
கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து தரப்பு மனு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பானது இன்றைய தினம் மாலை நான்கு மணிக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும் மாலை ஐந்து மணிக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்து
வரலாற்று சிறப்பு மிக்க இத்தீர்ப்பினையடுத்து நாட்டில் கலவரம் தோற்றுவிக்கப்படாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கொழும்பு மாநகரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்ததோடு, அளுத்கடை நீதிமன்ற பிரதேசமே கடும் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.
நீதிமன்றுக்கு உள்நுழையும் இருமருங்கிலும் நீர்த்தாரை பிரயோகிக்கும் வானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததோடு, கலகமடக்கும் பொலிஸாரும், விசேட அதிரடி படையினரும் குவிக்கப்பட்டிருந்ததனர். அந்த வீதியினால் செல்வோர்களுக்கும் பொலிஸாரின் கெடுபிடிக்கள் அதிகமாகவே காணப்பட்டது. நீதிமன்ற பிரதேசத்தில் அநாவசியமான முறையில் தரித்திருந்த அனைவரும் அகற்றப்பட்டனர்.
வீதி போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அரண்கள் போடப்பட்டிருந்தது. நீதிமன்ற வளாகத்தினுள் வழக்குக்கு தொடர்புடையவர்களின் வாகனங்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டன. நீதிமன்ற வளாகம் பொலிஸாரினால் நிறைந்திருந்ததோடு, மோப்ப நாய்களும் அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தினுள்ளும் வளாகத்திலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவ்வாறு இன்றைய தினம் பாரளுமன்றம் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும், நீதியரசர்கள் குழாமிட்கும் பாதுகாப்பு அதிகரித்தே வழங்கப்பட்டிருந்தது.
ஆதரவாளர்களின் நடவடிக்கை
ஜனாதிபதிக்கு பாராளுமன்றை கலைக்க அதிகாரம் கிடையாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் நீதிமன்ற பிரதேசத்தில் பேரணியாக சென்றனர். இப்பேரணிகாரர்கள் ஜனாதிபதி மடையர், மனநோயாளி என திட்டி தீர்த்தவண்ணமே சென்றனர்.
வெற்றிக் கொண்டாட்டம்
நீதிமன்ற தீர்ப்பையடுத்து குறித்த பகுதியில் அரை மணிநேரத்துக்கும் அதிகமாக பட்டாசு சத்தம் கேட்ட வண்ணமே காணப்பட்டது. வீதிமுழுவது பட்டசு கொழுத்தப்பட்டிருந்தது. இதன்போது கொழும்பு மாநகரமே பாட்டாசு கொழுத்தி தமது சந்தேசத்தை தெரியப்படுத்தியதை அவதானிக்க முடிந்தது. அதனுடன் நீதிமன்றுக்கு வெளியே கேக் வெட்டியும், பால் சோறு ஊட்டியும் ஐ.தே.க ஆதரவாளர்கள் தமது வெற்றிக் களிப்பை கொண்டாடினர். கொழும்பு நகரமே இன்றைய தினம் கேக் வெட்டி தமது சந்தேஷத்தை வெளிப்படுத்தியிருந்தது.
நீதிமன்ற வளாகம்
இந்த தீர்ப்பை நாட்டு மக்களுக்கு விரைவாக வழங்கும் நோக்குடன் உள்நாட்டு ஊடகங்களோடு, சர்வதேச ஊடகங்களும் ஆர்வமாக செயற்பட்டிருந்தன. சட்டக்கல்லூரி மாணவர்களும், சட்டத்தரணிகளும் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர். உயர் நீதிமன்றம் தீர்ப்புக்காக சர்வதேசத்தின் பார்வை முழுவதும் இன்றைய தினம் உயர் நீதிமன்றை நோக்கியமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
நீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி!
13/12/2018 நீதிமன்றின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கின்றேன் ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாளை நாட்டின் பாதுகாப்புக் கருதியே மேற்கண்ட தீர்மானத்தை தான் எடுத்ததாகவும், நாளை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் மஹிந்த தரப்பின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த சந்திப்பின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் உயர் நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதித்து நடப்பாரென நம்புகின்றோம் என முன்னாள் பிரதர் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ரணிலும் மைத்திரியும் நேற்றிரவு ரகசிய சந்திப்பு : பேசியது இதுதான்..!
14/12/2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமை தவறு என உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்தே, ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரியும் நேற்றிரசு திடீரென ரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
மூடிய அறைக்குள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, சபாநாயகர் கரு ஜயசூரியவை பிரதமராக நியமிக்க தான் விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்தாகவும் எனினும் ரணில் விக்கிரமசிங்க இதற்கு உடன்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் எதிர்வரும் திங்கட்கிழடை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் அமைய உள்ள அரசாங்கம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
மேலும் சில நிபந்தனைகளுடனே பிரதமர் பதவியில் ரணிலை நியமிக்க உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயர் கரு ஜயசூரியவையும் ரகசியமாக மூடிய அறைக்குள் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.
இதன்போது பிரதமர் பதவியை தான் ஏற்குமாறு கரு ஜயசூரியவிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, பாராளுமன்றில் பெரும்பான்மையை பெற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கே பிரதமர் பதவியை வழங்க வேண்டும் ஜனாதிபதியிடம் சபாநாயகர் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் திங்கட் கிழமை ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமைய பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நன்றி வீரகேசரி
சற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ
15/12/2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.
கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள இல்லத்தில் இடம்பெற்ற சர்வமத அனுஸ்டானங்களை தொடர்ந்து தனது இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டார். நன்றி வீரகேசரி
"திங்கள் புதிய அரசாங்கம் ; ரணிலை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரினால் நான் ஒன்றும் செய்ய முடியாது"
14/12/2018 எதிர்வரும் திங்கட்கிழமையன்று புதிய அரசாங்கம் அமைக்கப்படும். ஜனாதிபதியாக நாம் தொடர்ந்து செயற்படுவேன் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணியினர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரினால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதியாக நான் இருக்கும் வரையில் ரணிலுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே நான் செயற்படுவேன். ஆனால், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவிரும்புபவர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர் இதன்போது கூறினார்.
இந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்றிரவு இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பாக ஆராயப்பட்டது.
அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இணைந்து கொள்ள விரும்பினால் அவர்களை ஏற்றுக்கொள்வது என்றும் ஆனால், கடந்த காலங்களை போன்று சம அந்தஸ்து கோர முடியாது என்றும் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் விமர்சிப்பதற்கு அனுமதிக்க முடியாது என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியினர் ஒரு குழுவாக வருவார்களாயின் அவர்களை புதிய கூட்டணியில் இணைத்து கொள்வதற்கும் இந்தக் கூட்டத்தில் உடன்பாடு காணப்பட்டது. ஆனாலும், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, திலங்க சுமதிபால ஆகியோரை மீளவும் அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வதற்கு இந்தக் கூட்டத்தில் பெரும்பாலானா உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 17ஆம் திகதி திட்டமிட்டபடி கொழும்பில் ஆர்ப்பாட்டத்தினை நடத்துவது என்றும் அதற்குள் அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதனை வெற்றிக் கொண்டாட்டமாக மேற்கொள்வது என்றும் அரசாங்கம் அமைப்பதற்கு ஜனாதிபதி அனுமதியளிக்காது இழுத்தடிப்புக்களை மேற்கொண்டால் ஜனாதிபதி செயலகத்தை சுற்றி வளைக்கும் வகையிலான ஆர்ப்பாட்டமாக அதனை மேற்கொள்வது என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இவ்வாறு ஜனாதிபதி கருத்து கூறவில்லை என்று சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திங்கட்கிழமை அரசாங்கம் அமையுமென்றும் சுதந்திரக் கட்சியில் விரும்பியவர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளலாம் என்றும் மஹிந்த தரப்புடன் இணைந்து செயற்பட விரும்புபவர்கள் அவ்வகையில் செயற்படலாம் என்றும் ஜனாதிபதி கூறியதாக சுதந்திரக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
புதிய அரசாங்கம் அமைக்கப்படுமாயின் பிரதமர் தணித்து முடிவுகளை எடுக்காது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் குழுவாக செயற்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிகின்றது. இந்த விடயம் குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
சிறிசேனவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி – சுதந்திரகட்சியின் 21 பேர் தெரிவித்தது என்ன?
16/12/2018 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தங்களால் எதிரணியில் அமர முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன
இது குறித்து தெரிவிக்கப்படுவதாவது
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் தனியாக பேசுவதற்காக கூட்டம் முடிவடைந்த பின்னரும் காத்திருந்தனர்
ஏதிரணியில் அமர்வதால் எந்த அரசியல் எதிர்காலமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை என சிறிசேனவிடம் தெரிவித்த அவர்கள் எதிரணியில் அமர்வதன் மூலம் நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் கருத்துக்களையே பிரதிபலிக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.
அரசாங்கத்தில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் மாத்திரமே கட்சியை பலப்படுத்த முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கத்தில் இணைந்தாலும் நாங்கள் உங்களிற்கு ஆதரவு வழங்குவோம் என அவர்கள் சிறிசேனவிடம் தெரிவித்தனர்.
இதற்கான வாய்பு கிடைக்காத பட்சத்தில் சிறிசேனவிற்கு ஆதரவளிக்க முடியாத நிலையேற்படும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் வெளியிட்ட இந்த நிலைப்பாட்டினால் சிறிசேன அதிர்ச்சியடைந்தவராக காணப்பட்டார் எனினும் அது உங்களுடைய முடிவு என தெரிவித்தார்.
எனினும் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஐக்கியதேசிய கட்சியுடன் எந்த உடன்படிக்கையையும் செய்துகொள்ளப்போவதில்லை என சிறிசேன மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார். நன்றி வீரகேசரி
மீண்டும் பதவியேற்றார் ரணில்
16/12/2018 ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகைக்கு விஜயம் மேற்கொண்டு விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார். நன்றி வீரகேசரி
பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரும் தமிழ் மக்கள்
16/12/2018 சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒன்றுதிரண்ட தமிழ் மக்கள் ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரியுள்ளனர்.
சர்வதேச மனித உரிமைகள் நாளை முன்னிட்டு பிரித்தானியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக ஒன்றுகூடி ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிகோரி ஒன்று திரண்டுள்ளனர்.
இரண்டாம் உலக்போரில் நிகழ்த்தப்பட்ட மனிதப்பேரழிவுகள் படுகொலைகள் வன்முறைகள் சொத்துக்கள் அழிக்கப்பட்டதன் பின்னர் இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐநா சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் 10-12-1948 ஆம் ஆண்டு பாரிஸிசில் நடைபெற்ற ஐ.நா பொதுச்சபைக்கூட்டத்தொடரில் 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியதைத் தொடர்ந்து அந்த நாளை சர்வதேச மனித உரிமைகள் நாளாக பிரகடனம் செய்து உலக நாடுகளால் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகின்றது,
அதன் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட 70வது மனிதஉரிமைகள் தினம் பிரித்தானிய பாராளுமன்;ற முன்றலில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, நாடு கடந்த தமீழீழ அரசின் மனித உரிமைகள் அமைச்சர் மணிவண்ணன் பத்மநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது,
இதில் ஈழுத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச சமுகம் நீதியைப் பெற்றுத்தரவேண்டும் என்றும் பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக ஒன்றுகூடிய ஈழத்தமிழர்கள் வலியுறுத்தியுள்ளனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment