ஈழத்தமிழரும் கலைத்துறைப் பயணமும்!



கலைஞர்களாக இருந்தாலும், ரசிகர்களாக இருந்தாலும், மனதில் படும் கருத்துகளை வெளிப்படையாக பதிவுசெய்வது  உற்ற துறையில் மாற்றம் ஏற்பட, வளர்ச்சிபெற வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கை. நாம் கலைத்துறையில் வளரவேண்டும் என்ற ஆதங்கத்தில்தான்  கீழ்வரும்  கருத்துகளை, எனது கருத்தாக மட்டுமே பதிவுசெய்கிறேன். யாரினது மனதையும்  புண்படுத்தும் எண்ணத்தில் எழுதவில்லை. தவறாக இருந்தால்  தயவுசெய்து மன்னிக்கவும்.


ஈழத்தமிழர் தமிழ் அமிர்தமானது, ஈழத்தமிழர் கலையில் வல்லவர்கள், ஈழத்தமிழரின்  கலாச்சாரம் மேன்மையானது, இதுபோன்ற வாழ்த்துரைகள் காதுக்கு இனியவை, ஆனால், அவை அத்தனையும் இன்றைய நடைமுறையில் உள்ளனவா என்று கேட்டால் ஆம் என்று எங்களால் கூறமுடியுமா?  ஆம், ஈழத்தமிழர் தமிழ் அமிர்தமானது, ஆனால் இன்று சிதைந்துகொண்டு போகிறது, சங்கத்தமிழ் இலக்கியங்களை பிரித்துக் கருத்துணரும் திறன் இன்று எத்தனை பேரிடம் உள்ளது? அதற்கான பட்டரை பயிற்சிகள் எத்தனை எங்கெங்கு நடக்கிறது? ஆம், ஈழத்தமிழர் கலையில் வல்லவர்கள், ஆனால்  அறுவது  ஆண்டு காலத்துக்கு மேல் ஒன்றும் சாதிக்க முடியாமல் துடித்துக்கொண்டு இருக்கிறோம், ஆம், ஈழத்தமிழர் கலாச்சாரம் மேன்மையானது, இன்று சுக்குநூறாக உடைந்துக்கொண்டு போகிறது. தமிழ் பேசும் பிள்ளைகளை பட்டியலிட்டு   எண்ணிப்பார்க்கும் பரிதாபம் இன்று, ஈழ மண்ணின் விடுதலைக்காக  கொலைக்கருவி ஏந்திய போராளிகள் சிலரின் வாரிசுகள் கூட இன்று வெளிநாடுகளில் அம்மாவை மம்மி என்றும் அப்பாவை டாடி என்றும் அழைக்கும் அவலம். எத்தனை திறமை இருப்பினும், இந்திய சூப்பர் சிங்கரில் பாடினால் மட்டுமே எமது பிள்ளைகள் பாடகர்கள் என அங்கீகாரம் பெற முடியும். கலை நிகழ்வுகளுக்கு  இந்திய பிரபலங்களை அழைத்தால் மட்டுமே மக்கள் கூட்டம் கூட்டமாக பெருகுவர். இதுதான் எங்களது உண்மையான நிலமை. இந்திய திரைத்துறை நூறு வருடத்துக்கு மேல் பரிமாண வளர்ச்சியடைந்து வெற்றிநடை போடும் பெருமையுடையது, அவர்களுடன் சேர்ந்து பயணிப்பது அவசியம்தான், பிரபலங்களை அழைத்து நிகழ்வுகள் நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் ஈழத்துக்கலைஞர்களையும் இணைத்துக்கொண்டால்  அது எமது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பது எனது எண்ணம். ஈழத்துக்கலைஞர்களை அடையாளம் காணாமலும், அங்கீகரிக்காமல் உதாசீனப்படுத்துவது மனதிற்கு வேதனையளிக்கிறது. ஈழத்தில், யாழ் பல்கலைக்கழகங்களிலும் மட்டக்களப்பு விபுலானந்தர் கல்லூரியிலும்  தமிழர் பாரம்பரிய  பண்பாட்டுக் கலைகளை   பயிற்சிப்பதற்கு ஒரு துறையே நிறுவப்பட்டு  பாடமாக மட்டும் இல்லாது ஆராய்சிகளும் செய்து பயிற்சிகள் வழங்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. இதனால் பல கலைஞர்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் ஏன் புலன்பெயந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் அடையாளம் காணப்படவோ அங்கீகரிக்கப்படவோ இல்லை?

இதற்கெல்லாம் என்ன காரணம்? எங்களிடம் என்ன வலிமை உள்ளது? அதை எவ்வாறு நாங்கள் உபயோகிக்கின்றோம்?  புலம்பெயர்ந்த தமிழரை உபயோகித்து பலர் குளிர் காய்ந்துகொண்டு இருக்கிறார்கள், நாங்களோ எமது வலிமையையும் ஆற்றலையும் அறியாமல் மற்றவர்களை வளர்த்து வாழவைத்துக்கொண்டு இருக்கிறோம். கலையை கலையாய் பார்க்காமல், நிதி சேகரித்து  தொண்டு செய்வதற்காக  மட்டுமே  உபயோகித்து, ஒருவித போர்வையில் எங்களையே நாங்கள் ஏமாற்றிக்கொண்டு எமது வருங்கால கலை ஆர்வமுள்ள  சந்ததியினருக்கு துரோகம் செய்துகொண்டு இருக்கின்றோம். ஒரு கலைஞன், என்று கலையால் பொருளாதார பலன் அடைகிறானோ அன்றுதான் அவன் கலையை ஒரு துறையாக அமைத்துக்கொள்வான். கலையால் வரும் பொருளாதாரத்தை எல்லாம் தொண்டு என்ற  போர்வையில் தற்பெருமைக்காகவும் தன்னலத்திற்காகவும் உபயோகித்துக்கொண்டு இருந்தால், எங்களிடையே எப்படி கலை ஒரு துறையாக வளரும்? மாறும்?.

நாடக ஜாம்பவான்கள் திரு.க.சொர்ணலிங்கம், திரு.தாசிசீயஸ்,  திரு. சண்முகநாதன் , எஸ். டீ . அரசு. சுகேர் ஹமீது, சுந்தரலிங்கம், லடீஸ் வீரமணி, ரொசாரியோ பீரீஸ்,  போன்ற பலர்  வாழ்ந்து கலைத்துறையில் பல சாதனைகளை செய்த இனம் எமது இனம். இன்று திரு.எ.ரகுநாதன், திரு. இளய பத்மநாபன், திரு.சிதம்பரநாதன் திரு.பாலேந்திரா, பரா, வில்லுப்பாட்டு ராஜன், மரிய சேவியர், அன்டன் பொன்ராஜ், குழந்தை சண்முகலிங்கம், சாம் பிரதீபன்,  போன்றவர்கள் அவர்களால் முடிந்த படைப்புகளை தந்துகொண்டு இருக்கிறார்கள், இருப்பினும் எமது வேகமும் வளர்ச்சியும் பெருகவேண்டுமானால் நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்க வேண்டும் என்பது எனது அவா. எமது சிந்தனைத்திறனுடன் காலத்திற்கேற்ப தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தவேண்டும் என்பது எனது வேண்டுகோள். வரைமுறைக்கும் இலக்கணத்திற்கும்  களங்கம் ஏற்படுத்தாமல், காலத்திற்கேற்ப மாற்றங்களை புகுத்துதலும் தவறில்லை என்பது எனது கருத்து. ஒருவேளை, மாற்றத்தை விரும்பாத எமது மனநிலையும் எமது வளர்ச்சிக்கு தடங்கலாக இருக்குமோ என்பதும்  ஒரு சந்தேகம். முக்கியமாக அநேகமான ஈழத்தமிழர் படைப்புகளை பார்த்தோமேயானால், ஓன்று எமது இயல்பான பேச்சுநடை இல்லாது இந்திய திரைப்பட பாணியை பயன்படுத்த முயற்சிப்பதாக இருக்கும், அல்லது முப்பது வருடங்களுக்கு முன் நமது மூத்தவர்கள் உபயோகித்த ஒருவிதமான நையாண்டி பேச்சுநடையாய்  இருக்கும். இவை இரண்டுமே இன்றைய ரசிகர்களால்  ரசிக்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறது என்பதும் எனது ஐயம். ஈழத்தமிழ் பேச்சுநடையில் நாடகமோ திரைப்படமோ செய்தால் ரசிக்க மாட்டார்கள் என்பது தவறான கருத்து என்பதை என்னால்  ஆணித்தரமாக கூறமுடியும். யதார்த்தமான எமது இயல்பான பேச்சுநடையில் படைப்புகள் அமையுமேயானால், எமது படைப்புகள் புலம்பெயர்ந்த மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுவதோடு, பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.

படைப்பாளிகள்  பிறப்பதில்லை, உருவாகிறார்கள் , அப்படி உருவாகும் படைப்பாளிகளை வளர்க்க வேண்டியது சமுதாயத்தின் கடமை. கலைஞர்களும் தங்களின் கலைத்திறனை அடையாளம் கண்டு, ஆர்வமும் ஆற்றலும் உள்ள குறித்த துறையில் மட்டும்  முறையான பயிற்சிகளை பெற்று, அது போன்று, ஒரு படைப்பை படைக்க மற்றைய துறைகளில் ஆர்வமும் ஆற்றலும் மேன்மையும்  பெற்றவர்களுடன் சேர்ந்து  படைப்புக்களை படைக்க முயற்சிக்க வேண்டும். அதாவது எம்மால் என்ன முடியுமோ அதை மட்டும்தான் நாம் செய்யவேண்டும், என்பது எனது கருத்து. அதற்கு முதலில் எமது திறனை நாங்களே மதிப்பீடு  செய்ய  கற்றுக்கொள்ள வேண்டும், அத்தோடு இன்னொருவரின் திறனை பாராட்டும் மனப்பான்மையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு படைப்பை ரசிகனின் இடத்தில் இருந்து படைக்கும் படைப்பாளியே மக்களின் மனதில் இடம் பிடிப்பான் என்பது எனது ஆணித்தரமான கருத்து. அதேபோல் நிதி திரட்டும் நோக்கோடு ஒரு நிகழ்வை நடத்தும்  ஒரு ஒருங்கிணைப்பாளர் கலைஞர்களின் கலை கற்பனைத்திறனில் தலையிட்டு மாற்றங்களை திணிக்கும் நிலை மாறவேண்டும்.

திரைப்பட துறையில் ஈழத்தமிழர் பெரும் சாதனைகளோ வெற்றியோ அடையவில்லை என்றால் அதை நாங்கள் மறுக்க முடியாது. எமக்கென்று ஒரு தளம் வேண்டும் என்பதில் நாம்  மிக உறுதியாக இருக்கவேண்டும். எங்களிடம் சொந்தக்கதைகளே ஏராளமாக இருக்கிறது, ஆகவே நாங்கள் கதைகளை தேடித்திரியவேண்டிய அவசியம் இல்லை. எங்கள் கதைகளை நாம் கூறாமல் வேறு யார் கூறமுடியும்? அதுமட்டும் அல்ல, எமது கதைகளை வரலாற்று பதிவுகள்  செய்யவேண்டிய கடமையும் எங்களிடம் உள்ளது.

எனது இயக்கத்தில் உருவான "சாட்சிகள் சொர்க்கத்தில்"  திரைப்படம் விரைவில் உலகெங்கும் வெளிவர இருக்கிறது. உலகில் உள்ள மக்களை உலுக்கிய, தேசியத்தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனினதும் ஊடகவியலாளர் சகோதரி இசைப்ரியாவினதும் கொடூர கொலைச்சம்பவங்களை மனதில் கொண்டு உருவான இத்திரைப்படம், எந்தவொரு வன்முறையும் திரைக்கதையில் இல்லாது, வன்முறையால் பாதிக்கப்படட பலரின் வலிகளை வலுவாக சித்தரிக்கும் படமாக அமைந்துள்ளது. இத்திரைப்படத்திற்கு  இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

"சாட்சிகள் சொர்க்கத்தில்" திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி சென்னையில் பிரசாத் திரையரங்கில் 28 07 2018 அன்று  நடைபெற்றது. அதில் கவிஞர் சினேகன் உட்பட, தோழர் தியாகு, தந்தை  ஜகர் காஸ்பெர், தமிழ் ஆர்வலர் கம்பம்  குனாஜி, திரைப்பட இயக்குனர் மீரா கதிரவன், திரைப்பட இயக்குனர் தங்கர்சாமி மற்றும் பல திரைப்பட இயக்குனர்களும்  பல பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும்  தெரிவித்திருந்தனர். அநேகமானவர்கள் கருத்துக்களும், நேர்த்தியான  திரைக்கதை , ஆழமான, அழகான கதை, காலத்திற்கு அவசியமான திரைப்படம், என்றும், நடித்தவர்கள் இயல்பாக, இயற்கையாக எதார்த்தமாக நடித்திருந்தார்கள் என்றும், அடுத்த காட்சி என்னவரும் என்பது போய் அடுத்த வசனமும் வரியும் என்ன வரப்போகிறது என்ற நிலை ஏற்பட்டது என்றும்,  திரைப்பட வரலாற்றில் முற்றிலும் வித்தியாசமான ஒரு  கதை  என்றும் கூறப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் 16ஆம் தேதி 6ஆம் மாதம்  நடைபெற்ற முன்னோட்டக் காட்சிக்கு பல முக்கிய பிரமுகர்கள் வந்து திரைப்படத்தை கண்டு களித்து வாழ்த்தினர். பாலச்சந்திரன், இசைப்பிரியா என்றதும், ஈழத்து இறுதிப்போரின்  போது நடைபெற்ற காட்சிகளை திரையில் காணும் மனபலம் இருக்குமோ இருக்காதோ என்ற சந்தேகத்தில் வந்த எங்களுக்கு இந்த திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது என்றும், இயக்குனர் பாலுமகேந்திராவின் திரைவடிவு சாயலில் " சாட்சிகள் சொர்க்கத்தில்"  இருக்கிறது என்றும், இது ஒரு வரலாற்று பதிவு என்றும், நீண்ட நாளைக்குப்பின் ஒரு நல்ல படம் பார்த்திருப்பதாகவும்  படம் பார்த்தவர்கள் கருத்துக்கூறினர்.

பொதுவாக புலம்பெயர்ந்த தமிழர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் திரையிடும் போது, தயாரிப்பாளர்களே தனிப்பட்ட முறையில் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து, ஒருசில காட்சிகள் மட்டுமே திரையிடுவது வழக்கம். இந்திய திரைப்படங்களை திரையிடும் விநியோகஸ்தர்களோ அல்லது திரையரங்குகளோ இதுபோன்ற வெளிநாட்டு உள்ளூர் தயாரிப்புகளை திரையிட முன்வருவதில்லை.

இந்தப்படத்தை  உலகெங்கும் திரையிட முயற்சிகள் நடந்துவரும் வேளையில், ஆஸ்திரேலியாவில்  "ஈவென்ட் சினிமா" (EVENT CINEMA) எனும் திரையரங்க நிர்வாகத்தினர்  ஹாலிவுட் திரைப்படங்கள் திரையிடுவது போலவே "சாட்சிகள் சொர்க்கத்தில்" திரைப்படத்தையும் அவர்களாகவே திரையிட முன்வந்தனர். பதினோராம் (November ) மாதம் ஆஸ்திரேலியாவில் அணைத்து மாநிலங்களிலும் மற்றும் நியூசீலாந்து (New Zealand ) நாட்டில்  ஆக்கலாந்த்து (Auckland ) மாநிலத்திலும் இத்திரைப்படம் திரையிடப்பட்டு பெரும் பாராட்டுக்களையும்  வரவேற்பையும் பெற்றது.  இதனால் தமிழர்கள் மட்டுமின்றி அனைத்தினத்தவரும் இப்படத்தை கண்டுகளித்தனர். ஈழத்தமிழர் துயர்களை அறவே அறிந்திராத பலர் இத்திரைப்படத்தை பார்த்தபின் ஒரு இனத்திற்கு இவ்வளவு கொடுமை நடந்திருக்கின்றதா என்று கண்கலங்க வினாவினார். மற்றும் பலர் ஈழத்தமிழர் வரலாறு பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று இத்திரைப்படம் தூண்டுகிறது என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து  "ஈவென்ட் சினிமா" (EVENT CINEMA)  எம்மை  விநியோகஸ்தராகவும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதாவது, "சாட்சிகள் சொர்க்கத்தில்" திரைப்படத்தைத் தொடர்ந்து, எதிர்காலத்திலும் மற்றைய திரைப்படங்களையும் "ஈவென்ட் சினிமா" (EVENT CINEMA) மூலமாக திரையிடும் அந்தஸ்து எமது  "அம்மா படைப்பகம்" நிறுவனத்திற்கு  அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. இது புலம்பெயர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று கூறலாம். இத்திரைப்படம் ஈழத்தமிழர் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் திரைத்துறையில் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. இணைந்து பயணிப்போம், இமயம் தொடுவோம்.

தாயை போற்றுவோம்! தாய் மண்ணை பேணுவோம்! தாய் மொழியில் பேசுவோம்! வாழ்க தமிழ்!



இவன்
ஈழன் இளங்கோ








No comments: