உலகச் செய்திகள்


மெங்வான்ஜவ் ரொக்கப் பிணையில் விடுதலை 

பிரித்தானியாவில் தப்பியது 'மே' ஆட்சி 

பிரான்சில் கிறிஸ்மஸ் சந்தை மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொலை

துருக்கியின் கோரிக்கையை மறுத்த சவுதி 

ஆளும் கட்சியான பா.ஜா.கா.வுக்கு பெரும் பின்னடைவு 

 11 பேருக்கு யமனான பிரசாதம்

இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேத்தை அங்கீகரித்தது  அவுஸ்திரேலியா

அமெரிக்காவின் மேற்காசிய கொள்கையில் சவூதி செல்வாக்கின் இன்றைய நிலை?


மெங்வான்ஜவ் ரொக்கப் பிணையில் விடுதலை

12/12/2018 சீனத் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்வான்ஜவ் 10 பில்லியன் கனேடிய டொலர் ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 
அமெரிக்காவினால் ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளை மீறி, ஈரானுக்கு இலத்திரனியல் உபகரணங்களை அனுப்ப முயற்சித்த குற்றச்சாட்டின் கீழே சீனத் தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவெய் நிறுவன அதிபரின் மகளும் அந் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கடந்த முதலாம் திகதி கனடாவில் வான்கூர் நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
இந் நிலையில் வான்கூர் நீதிமன்றில் கடந்த மூன்ற நாட்களாக இடம்பெற்று வந்த விசாரணைகளின் பின்னர் இவர் ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர் 24 மணித்தியாலயங்கள் முழுவதும் கண்காணிக்கப்படவுள்ளதுடன் மின்னணு கணுக்கால் பட்டியை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 


பிரித்தானியாவில் தப்பியது 'மே' ஆட்சி 

13/12/2018 ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே எதிர்கொண்ட பிரேரணையில் 200 பேர் தெரேசா மேயுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக பிரித்தானிய பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து பெரும்பான்மையானோர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிந்து விட்டது.
எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இரு தரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால ஒப்பந்தங்களை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தயாரித்து வந்தார். 
இவரின் இந்த நடவடிக்கைகளை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த முதன்மை அமைச்சர்களும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்து வந்தனர்.
இந் நிலையிலேயே தெரேசா மேயை பதவியிலிருந்து விலக்குவதற்கு திட்டமிட்டு, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 48 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடிக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து தெரேசா மேவுக்கு எதிராக நேற்று இரவு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 
இதில் கலந்து கொண்டு வாக்களித்த 317 எம்.பி.க்களில் 200 பேர் தெரசா மேவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் தெரசா மே வெற்றி பெற்றார். 
எனினும் 117 எம்.பி.க்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில் அவரது ஆட்சிக்கு எப்போது வேண்டுமானாலும் சிக்கல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. தற்போதுள்ள சூழலில்  பிரேக்சிட் விவகாரம் தொடர்பில் மே அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த முடிவும் சிக்கலையே ஏற்படுத்தும் எனவும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 
பிரான்சில் கிறிஸ்மஸ் சந்தை மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொலை

14/12/2018 பிரான்ஸின் ஸ்டிரஸ்பேர்க் நகரின் கிறிஸ்மஸ் சந்தை மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டுவந்த நபர் இன்று பிரான்ஸ் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
செவ்வாய்கிழமை சம்பவம் இடம்பெற்ற அதே நகரில் பயங்கரவாத சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக சந்தேகநபரான செகாட்டை தேடிவந்த பொலிஸார் அவரை போன்ற நபர் ஒருவரை பார்த்ததாகவும் அவரை நிற்குமாறு உத்தரவிட்டவேளை அவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் எனவும் பிரான்சின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் கொல்லப்பட்டார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செகாட்டை கண்டுபிடிப்பதற்காக கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது
மேலும் சந்தேகநபரின் குடும்பத்தவர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்
சுட்டுக்கொல்லப்பட்ட நபரை பொலிஸார் நன்கு அறிந்திருந்ததுடன் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்ககூடியவர் என்ற அடிப்படையில் கண்காணித்தும் வந்திருந்தனர்
பல குற்றச்செயல்களிற்காக சிறைக்கு சென்றவேளை அங்கு இவர் தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்   நன்றி வீரகேசரி 

துருக்கியின் கோரிக்கையை மறுத்த சவுதி 

10/12/2018 சவுதி ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை நாடு கடத்துமாறு துருக்கிய அரசாங்கம் விடுத்த கோரிக்கையினை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது.
ஜமால் கசோக்கியின் கொலையுடன் தொடர்புடைய 11 நபர்களை நாடு கடத்துமாறு துருக்கிய ஜனாதிபதி சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 
இந் நிலையில் தமது நாட்டின் பிரஜைகளை நாடு கடத்துவதில்லை என தெரிவித்து சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் அந்த கோரிக்கையை மறுத்துள்ளார்.  
அத்துடன் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை பிறப்பிப்பதற்கும் துருக்கி நீதிமன்றம் கடந்த புதன்கிழமை நடவடிக்கை எடுத்திருந்தமை‍ குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 


ஆளும் கட்சியான பா.ஜா.கா.வுக்கு பெரும் பின்னடைவு 

12/12/2018 இந்தியாவின் சத்தீஸ்கார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசேரம் ஆகிய ஐந்து மாகாணங்களில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல்களின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட 5 மாநில சட்டமன்றத்துக்கான இத் தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தெலங்கானாவில் மாநில கட்சியான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, மிசோரம் மாநிலத்தில் மிசோரம் தேசிய முன்னணி ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும், மத்திய பிரதேசம், மிசோரமில் நவம்பர் 28 ஆம் திகதியும் தேர்தல் நடத்தப்பட்டது.
ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 7 ஆம் திகதி வாக்குகள் பதிவானது. 
இந்த நிலையில் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 
மத்திய பிரதேசதம் : 
230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் ஒரு கட்சி பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்கள் தேவை. இங்கு காங்கிரஸ் 115 இடங்களிலும், பாஜக 108 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ராஜஸ்தான் : 
200 தொகுதிகளில் வேட்பாளர் ஒருவர் மறைவால் 199 இடங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. பெரும்பான்மைக்கு 100 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 101 இடங்களிலும், பா.ஜ.க 73 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் 8 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் 19 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன.
சத்தீஸ்கர் : 
90 தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் 68 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 15 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளளன.
தெலங்கானா: 
119 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 88 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் மற்ற கட்சிகள் 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
மிசோரம் : 
40 தொகுதிகளைக் கொண்ட இங்கு மாநில கட்சியான மிசோரம் தேசிய முன்னணி 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 5 இடங்களும், பாஜகவுக்கு ஒரு இடமும் மற்ற கட்சிகளுக்கு 8 இடங்களும் கிடைத்துள்ளன.  நன்றி வீரகேசரி  11 பேருக்கு யமனான பிரசாதம்

15/12/2018 கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள  கோவில்  ஒன்றில் பிரசாதம் உட்கொண்ட பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். 
இது குறித்து மேலும்  தெரியவருவதாவது,
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் ஹனுர் தாலுகாவில் சுல்வாடி கிராமத்தில் அமைந்துள்ளது  கோவிலில்  இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பூஜைகள் முடிந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சிறிதுநேரத்தில் பிரசாதம் உட்கொண்ட  பக்தர்களுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதில் 2 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
 இதனையடுத்து, சுமார் 40க்கு மேற்பட்ட பக்தர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மேலும், பிரசாதம் உட்கொண்ட 60க்கு மேற்பட்ட காகங்களும் இறந்து கிடந்தன என முதல் கட்ட தகவல் வெளியானது.  நன்றி வீரகேசரி 

இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேத்தை அங்கீகரித்தது  அவுஸ்திரேலியா

15/12/2018 மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய  நாட்டுபிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் எனத் தெரிவித்து வருகிறது. 1967ஆம் ஆண்டு  கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றயதிலிருந்தே, இஸ்ரேல் இந்நகரை தனது தலைநகராகக் கருதுகிறது. இது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. இதேபோல் பாலஸ்தீனர்களும் கிழக்கு ஜெருசலேமை தங்கள் தலைநகராக கருதுகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தை திறந்தது. அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா உள்ளிட்ட சில நாடுகளின் தூதரகமும் ஜெருசலேம் நகரில் திறக்கப்பட்டன.
இந்நிலையில், மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஆஸ்திரேலியா அங்கீகரித்திருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஆனால், அமைதி உடன்படிக்கை ஏற்படும்வரை தூதரகத்தை டெல்அவிவ் நகரிலிருந்து மாற்ற மாட்டோம் என்றும் கூறியுள்ளார். 
அமைதி உடன்படிக்கையில் கிழக்கு ஜெருசலேம் நகரின் நிலை குறித்து தீர்மானிக்கும்போது, எதிர்கால பாலஸ்தீனத்தின் நலன்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்  நன்றி வீரகேசரி 


அமெரிக்காவின் மேற்காசிய கொள்கையில் சவூதி செல்வாக்கின் இன்றைய நிலை?

14/12/2018 சவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கியை கொலை செய்யுமாறு சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மானின் தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டதாக அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனம் ( சி.ஐ.ஏ.) முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி துணைத் தூதரகத்திற்குள் கடந்த அக்டோபர் 2 ஆம் திகதி  இடம்பெற்ற அந்தக் கொலை எம்.பி.எஸ்.என்று பிரபலமாக அறியப்பட்ட முடிக்குரிய இளவரசர் மீது  உலகில் பரவலாக ஆவேசத்தை தோற்றுவித்திருந்தது.ஆனால்,  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது புலனாய்வு நிறுவனதத்தின் கண்டுபிடிப்பினாலோ அல்லது அதிகரிக்கும்  உலகளாவிய கண்டனங்களினாலோ கவலைப்படுபவராக இல்லை.சிஐ.ஏ.யின் கண்டுபிடிப்பு ' அவசரத்தில் செய்யப்பட்டது' என்று அவர் வர்ணித்திருக்கும் அதேவேளை, அவரின் வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ சவூதி அரேபியாவுக்கான அமெரிக்காவின் 'வரலாற்றுரீதியான கடப்பாடு'  அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் மத்திய கிழக்கில் அதன் நலன்களுக்கும் முற்றிலும் முக்கியமானது என்று கூறியிருக்கிறார். 
யதார்த்தமாகச் சிந்திப்பவர்கள் என்று அமெரிக்காவில் வர்ணிக்கப்படுகிறவர்கள் சவூதியுடனான உறவுகள் அந்த இராச்சியத்தின் நடத்தைகள் தொடர்பிலான குறிப்பிட்ட சில அம்சங்களைக் கண்டும்காணாமல் விடவேண்டிய அளவுக்கு அமெரிக்காவின் நலன்களுக்கு முக்கியமானவை என்று வாதிடுகிறார்கள்.கஷொக்கி கொலையை அடுத்து றியாத்துக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்காமல் இருப்பதை நியாயப்படுத்துவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் இந்த வாதத்தையே திரும்பத் திரும்ப ஒப்புவிக்கிறது.ஆனால், சவூதி அரேபியா மெய்யாகவே அமெரிக்கா மேலாக அத்தகையதொரு செல்வாக்கைக் கொண்டிருக்கிறதா?
 சவூதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்த நெருங்கிய கூட்டுறவு ஜனாதிபதி பிராங்ளின் டி ரூஸ்வெல்டுக்கும் நவீன சவூதியின் தாபகரும் இன்றைய மன்னர்  சல்மான் பின் அப்துலசீஸின் தந்தையுமான மன்னர் அப்துலசீஸ் இப்ன் சவூத்திற்கும் இடையில் நடந்த  1945 சந்திப்பில் இருந்து தொடங்கியதாகும்.  சுயெஸ் கால்வாயில் யூ.எஸ்.எஸ். குயின்ஸி போர்க்கப்பலில் நடந்த அந்தச் சந்திப்பின்போது இரு தலைவர்களும் இரு வழி உடன்படிக்கையொன்றுக்கு வந்தார்கள்.அதாவது  அமெரிக்கா சவூதி அரேபியாவுக்கு ஆதரவையும் இராணுவப் பயிற்சியையும் வழங்கும்.அதற்குப் பிரதியுபகாரமாக சவூதி அரேபியா அமெரிக்காவுக்கு எண்ணெயையும் அரசியல் ஆதரவையும் வழங்கும். அந்தக் கூட்டு கெடுபிடி யத்த காலகட்டத்தில் இரு நாடுகளுக்குமே பயனுடையதாக இருந்தது. அரபு / முஸ்லிம் உலகிற்குள் கம்யூனிசத்தின் விஸ்தரிப்பு குறித்து சவூதி அரேபியா கலக்கம் கொண்டிருந்தது.1967 இல் யேமனின் அரைவாசிப் பகுதி மார்க்சிஸ்டுகளின் கைகளில் வீழ்ந்தது.1978 இல் ஆப்கானிஸ்தானில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்துக்கு வந்தார்கள்.தனது சொந்த பொருளாதார விரிவாக்கத்துக்காகவும் உலக மகாயுத்தத்திற்கு பின்னரான ஐரோப்பாவின் பனர்நிர்மாணத்துக்காகவும் தங்குதடையின்றி எண்ணைய் விநியோகம் இருக்கவேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது.
அத்துடன் அமெரிக்காவுக்கு மேற்காசியாவில் அரசியல் நேச அணியொன்றும் தேவைப்பட்டது. ஆனால், அந்த கூட்டுறவுக்கான அத்திபாரத்தைப் போட்ட சூழ்நிலைகள் மாறிவிட்டன.சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் சோவியத் யூனியன் விழ்ச்சி கண்டு சின்னாபின்னமானது.எண்ணெய்க்காக சவூதி அரேபியா மீது அமெரிக்கா தங்கியிருக்கும் போக்கும் கடந்த பல வருடங்களாக குறைந்துகொண்டு வந்துவிட்டது.அமெரிக்காவுக்கு முக்கியமான எண்ணெய் விநியோக நாடாக சவூதி அரேபியா தொடர்ந்தும் விளங்குகிறது என்பது உண்மையே.ஆனால், எகிப்துடனான யொம் கிப்புர் போரின்போது இஸ்ரேலுக்கு ஆதரவளித்தமையை ஆட்சேபித்து மேற்குலக நாடுகள் மீது அரபு நாடுகள் எண்ணெய் தடையை விதித்த 1973 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மேலாக கொண்டிருந்த செல்வாக்கு இப்போது சவூதிக்கு இல்லை.ரஷ்யா, சவூதி அரேபியாவுடன் சேர்ந்து  அமெரிக்காவும் உலகில் மூன்று மிகப்பெரிய மசகு எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. 
  பலமான கூட்டுறவுக்கு ஆதரவாக முன்வைக்கப்படுகின்ற இன்னொரு முக்கிய காரணிகளாக காண்பிக்கப்படுபவற்றில் ஒன்று அமெரிக்காவில் சவூதி அரேபியா செய்திருக்கும் பாரிய முதலீடுகளாகும்.அரசாங்க பிணைமுறிகளாகவும் தனியார் வாணிபமாகவும் இந்த முதலீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.ஆனால், அது விடயத்தில் சவூதி அரேபியா அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு உதவும் நோக்குடன் அல்ல தனது சொந்த நலன்களுக்காகவே செயற்படுகிறது. அமெரிக்காவில் உள்ள அதன் சொத்துக்களை சவூதி விற்குமேயானால் அதன் பொருளாதாரமும் கடுமையாகப்  பாதிக்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக உள்நாட்டில் பல்வகைப் பொருளாதார விரிவாக்கம் தொடக்கம் பாதுகாப்பு உத்தரவாதங்கள் வரை சவூதி அரேபியாவுக்கே அமெரிக்கா கூடுதலாகத் தேவைப்படுகிறதே தவிர, மறுதலையாக அல்ல.அதனால் கேந்திர நகர்வுகளைச் செய்வதற்கு வாஷிங்டனுக்கு கூடுதல் வாய்ப்பு கிட்டுகிறது.
 இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவின் விளைவான கேந்திரமுக்கியத்துவ ஆற்றல்  சுருங்கிவிட்ட அதேவேளை, குறிப்பாக 9/11 க்குப் பின்னரான உலகில் சவூதி அரேபியாவுக்கு அளிக்கின்ற ஆதரவுக்காக அமெரிக்கா மிகவும் கூடுதலானளவுக்கு சந்தேகத்துடன் உன்னிப்பாக நோக்கப்படுகின்றது.
உலக அரங்குகளில் அமெரிக்கா போதிக்கின்ற -- ஜனநாயகம் தொடக்கம் மனித உரிமைகளுக்கான மதிப்பு, மதசுதந்திரம் மற்றும் சுதந்திர ஊடகம் வரை -- சகலவற்றையும் எதிர்த்து நிற்கின்ற ஒரு வஹாபி இராச்சியத்துக்கு ஆதரவை எவ்வாறு வாஷிங்டனால் அளிக்கமுடிகிறது என்ற கேள்வியே அந்தச் சந்தேகத்தின்பின்னால் இருக்கிறது.இந்த பரந்த பின்புலமே சவூதி அரேபியா தொடர்பில் வேறுபட்டதொரு அணுகுமுறையை கடைப்பிடிக்க முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை அனுமதித்தது.வர்த்தக - பொருளாதார உறவுகள், ஆயுத விற்பனை மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் என்று கூட்டுறவின் அடிப்படையான அம்சங்களை அவர் தொடர்ந்து பேணிய அதேவேளை சவூதியின் சார்பில் சிரியாவில் செயற்படுவதற்கு மறத்ததுடன் மேலும் ஒருபடி மேலே சென்று ஈரானுடன் அணு உடன்படிக்கையையும் செய்துகொண்டார்.மேற்காசிய பிராந்தியத்தில் " நட்பார்வமில்லாத சமாதானம்" ஒன்றை ஏற்படுத்தக்கூடியதாக விட்டுக்கொடுத்துச் செயற்படுமாறு சவூதியையும் ஈரானையும் கேட்குமளவுக்கு ஒபாமா சென்றார்.
ஆனால் , ஒபாமாவின் அந்த அணுகுமுறையை தலைகீழாக்கிய ஜனாதிபதி ட்ரம்ப், சவூதி அரேபியாவை மையப்புள்ளியாகக்கொண்டு தனது நிருவாகத்தின் மேற்காசியக் கொள்கையைக் மீளக்கட்டியெழுப்பினார்.இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் ஈரானின் செல்வாக்கை முறியடிப்பதுமே ட்ரம்பின் கொள்கையின் இரட்டைக் குறிக்கோளாகும். இந்த பக்கச்சாய்வுதான் சவூதிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலிருந்து அவரைத் தடுத்துக்கொண்டிருக்கிறது. 
தனது ஈரான் கொள்கை என்னவென்பதை ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கெனவே பிரகடனம் செய்துவிட்டது. ஈரானுடனான அணு உடன்படிக்கையில் இருந்தும் அமெரிக்கா ஏற்கெனவே வெளியேறிவிட்டது.அத்துடன் ஈரானைத் தனிமைப்படுத்தி பலவீனப்படுத்தும் தங்களது முயற்சிகளுக்கு சவூதியின் ஆதரவு அமெரிக்கர்களுக்குத் தேவையாக இருக்கிறது. இதையே இஸ்ரேலும் கூட பலவருடங்களாக கேட்டுக்கொண்டிருந்தது.ஆனால், இது பெரியளவிலான ஒரு தேசிய பாதுகாப்பு வாதமாகவோ அல்லது யதார்த்தபூர்வமானதாகவோ இல்லை. சவூதியுடனான கூட்டுறவின் அடிப்படைகள் பலவீனபட்டு, பிராந்தியமும் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகும்போது, மேற்காசியா தொடர்பான கொள்கைகளை ஈரானைப்பற்றிய தனது பிரமை தீர்மானிப்பதற்கு எவ்வளவு காலத்துக்கு அமெரிக்காவினால் அனுமதிக்கக் கூடியதாக இருக்கும் ?.
 நடைமுறைச் சாத்திய அரசியலின் அடிப்படையில் நோக்குகையில், ஈரானின் செல்வாக்கை மட்டுப்படுத்த அமெரிக்கா விரும்பினாலும் கூட ,அந்த நோக்கத்துக்கு எம்.பி.எஸ்ஸின் அதிகாரத்தின் கீழான சவூதி அரேபியா உதவுவதாக இல்லை.அது சிரியாப் போரில் தோற்றுவிட்டது.யேமினில் அதன் தலையீடு ஹௌதிஸ்களை ஈரானின் அரவணைப்புக்குள் தள்ளிவிட்டது.கட்டார் மீது விதிக்கப்பட்ட தடைகள் அரபுலகைப் பிளவு படுத்திவிட்டது.( கட்டார் இப்போது ஒபெக் என்று அழைக்கப்படுகின்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டது.)கடந்த வருடம் லெபனான் பிரதமரை தடுத்துவைத்த சவூதியின் செயல் ஈரானின் நேச அணியான ஹிஸ்புல்லா இயக்கத்தின் கைகளுக்குள் லெபனான் அரசியலைத் தள்ளிவிட்டது.
தனது மேற்காசியக் கொள்தகயை சீர்குலைத்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வின் அடிப்படையில் ஜனாதிபதி ட்ரம்ப் இப்போதைக்கு சவூதி அரேபியாவுடன் ஒத்துப்போகக்கூடும். ஆனால், சவூதியுடனான நெருக்கமான கூட்டுறவு அமெரிக்க காங்கிரஸின் கடுமையான கண்டனத்துக்குள்ளாக ஆரம்பித்திருப்பதை அவரால் அலட்சியம் செய்யமுடியாது.யேமன் போரில் அமெரிக்காவின் ஈடுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர சட்டமூலம் ஒன்றை இரற்றுவதற்கான பிரேரணை ஏற்கெனவே செனட் சபையில் பெரிய பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.சவூதியின் முடிக்குரிய இளவரசருக்காக அந்தரங்கமாக  வேலைசெய்கின்ற ஒரு பொதுஜனத் தொடர்பு நிறுவனம் போன்று வெள்ளை மாளிகை செயற்படுவதாக குடியரசு கட்சியின் செனட்டர் பொப் கோர்க்கர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். "  சேட்டைகள் போதும் .இனிமேல் நிறுத்துங்கள் " என்று அமெரிக்கா துணிச்சலுடன் எழுந்துநின்று சவூதி அரேபியர்களுக்கு சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று இன்னொரு குடியரசு கட்சி செனட்டரான ராண்ட் போல் கூறுகிறார்.இவையெல்லாம்  உதிரியான தர்மாவேச குரல்கள் அல்ல.மாறிவருகின்ற  உள்ளுணர்ச்சிகளை அவை உணர்த்தி நிற்கின்றன.அமெரிக்காவின் மேற்காசியக்கொள்கையின் சவூதித்தூண் பலவீனமடைந்துகொண்டுவருகிறது என்ற புரிதல் வாஷிங்டனில் அதிகரித்துவருகின்றது.தனது கற்பிதமான பிரமைகளின் தூண்டுதல்களினால் செயற்படுகின்றவரான ட்ரம்ப் இவற்றைக் கவனிக்காமல் விடக்கூடும்.ஆனால், எதிர்கால அமெரிக்க ஜனாதிபதிகளினால்   அவ்வாறு செய்யமுடியாது. ஒபாமா விட்ட இடத்தில் இருந்து அவர்கள் தொடங்கவேண்டியிருக்கும்.
( இந்து)
நன்றி வீரகேசரி


No comments: