”நாளே அன்பெனும் தீபத்தை ஏற்றி நீ
வைத்தால் நாளையும் எரியும் உன் பேர் சொல்லும் ஜோதி ".
காந்தியார் பிறந்த அக்டோபர் மாத இறுதி ஞாயிற்று கிழமையில் மெல்பன் வாசகர்
வட்டத்தில் கல்யாண சுந்தரம் என்கிற கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் அவர்களின் "சின்னு முதல் சின்னு வரை " நூல் பற்றிய வாசிப்பு அனுபவம் பகிர்ந்து
கொள்ளப்பட்டது .

அன்பைவிட கொடிய ஆயுதமும் வன்முறையும் ஏதுமில்லை, காயங்களும்
வலிகளும் ரணமானவை .
சந்தியா நடராஜன் அவர்கள் தனது முன்னுரையில் "உணர்வுகள் வதைபடும்
கணங்களின் உக்கிரம்” என்பதும் "தானாக நிகழ்வதுதான் தரிசனம் "என்கிற லா
.சா .ரா வின் வரிகள் வண்ணதாசன் அவர்களின் வாழ்வுக்கும் அவரை வந்தடைகின்ற
வாசகர்களுக்கும் முற்றிலும் பொருந்தும் எனச் சொன்னது
வாசகர் வட்டத்திற்கும் பொருந்தும்.
கல்யாண்ஜி என்னையும் எப்போதோ கை குலுக்கி நட்புசெய்துவிட்டார்,
தரிசனம் இப்போதுதான்.
சாலை விபத்தில் பலியாகிப் போன என் அன்பு நண்பன் அ .வடிவேல் ஹோசிமின்
"அகத்தினிலே" எனும் கவிதை தொகுப்பை எழுதி முடித்திருக்க, அவன்
மறைவிற்கு பின் அதை புத்தகமாய் நண்பர்கள் ஆக்கியது
அப்புத்தகத்திற்கு அவன் மிகவும் நேசித்த கல்யாண்ஜி
"எதுவாகயிருந்தாய்" என முன்னுரை ஏற்றிருப்பது அன்பினால் அன்றி
வேறொன்றில்லை .
கல்யாண்ஜியின் முன்னுரையில்
எதிர் வருபவர் /எவராயிருப்பினும்
எவராய் இருப்பினும் என்ன
தொகுப்புகள் /எவருடையதாய் /இருப்பினும்
இப்படி எல்லாவற்றுக்கும் மத்தியில்
எது எப்படி இருப்பினும்
எதுவாயினும் பகிர்ந்துகொள்வதற்கு '
வடிவேல் ஹோசிமின் நீ எதுவாக இருந்தாய், எவராக இருந்தாய் என்று என்னால்
உணரமுடிகின்றது . எவ்வித திட்டமிடலும், முன் தயாரிப்புமற்ற ஒரு நாள்
காலைப்பொழுதில் நானும் உன்னை எதிர் கொள்வேன் .எந்தத் தயாரிப்புகளுமின்றி
,எப்பவும் போல, "வா நாயே "என்று எனக்கு வரவேற்புச் சொல். இதைச் சொல்லி
என் கை குலுக்கியும் செல்கிறார் கல்யாண்ஜி .
இந்தப் பின்னணியில் புத்தகத்தின் பக்கங்களை பிரித்தால் முன்னுரையிலேயே
மூச்சு முட்டி நிற்க வேண்டியுள்ளது.
கல்யாண்ஜி அவர்களின் முன்னுரையில்
சேர்தலே வினை - சேர்தலே விதி
எனச் சொல்லி ஆரம்பிக்கும் முன்னுரையில், "இந்த வாழ்வின் அடிப்படை மாயமே! நாம் விரும்பியும் விரும்பாமலும், அறிந்தும்
அறியாமலும் இப்படி ஒவ்வொருவரிடமாகப் போய் சேர்வதுதான். சேர்ந்தோமா
சேர்க்கப்பட்டோமா என்றுகூடத் தெரியாது .
இந்தச் சேர்தலே வினை - சேர்தலே விதி.
இது சம்பந்தமான மெல்லிசை பாடல்களில் மனம் செல்ல ஆரம்பித்தது.
"இதழ் நுனி துளிப்பனி சுமந்தாலும்
அதை ஒரு கதிரவன் கொண்டு செல்வான்
தன் வசம் தன் மனம் இருந்தாலும்
எவர் வசம் அது செல்லும் யார் அறிவார்
இயற்கை நடத்தும் வேள்வியிது
விடைகள் தெரியா கேள்வியிது
ஓர் ஆயிரம் - அதிசயம் உள்ளது-
அன்புதான் இழைகளாய் அனைத்திலும் ஓடுது -
சரிதான் - வாலி சார்.
"உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போலே " மீண்டும் வாலி சார்.
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்.
அன்பே சிவம் பாடல் வரிகள்.
திருவள்ளுவர் அன்புடைமையில்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் ஆர்வலர்
புன்கணீற் பூசல் தரும். என்பதும்
பாரதி " ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே " என்பதுவும்
அன்பினை சொல்லத்தானே?
அடுத்து வண்ணதாசன் அவர்களின் முதற் பதிப்பின் முன்னுரை-
அவர் அருகில் கூப்பிட்டு, அமரச்சொல்லி, ஆற அமர சிற்றுண்டியோடு
தேநீரும் அருந்தியபடி அவரோடு உரையாடியதைப்போன்றது. அதில் சுவாரசியமான சில:
"வாழ்க்கை என்றால் மனிதர்கள் என்று இருந்த பிடிமானம் கூடத் தளர்ந்து
கொண்டே வந்துவிட்டது "
"இத்தனை வருடங்களும் நுட்பமாக கொண்டு சேர்த்திருந்த ஒரு மன
உலகம் சிதையாமல் காப்பாற்றி மேல் செல்வதே கடினமாகி விட்டது "
"ஒரு பக்கம் நடுத்தர வயது தாண்டின பருவத்தில் வந்தடைகின்ற
அனுபவத்துடன் அதனதன் இடத்தோடு எல்லாவற்றையும் பார்க்கிற நிதானம், அந்த
நிதானத்தில் நின்று கொண்டு எதையும் அணுக முடியாத நடைமுறையின் தூரம் "
"ஆனாலும் உயர்ந்தவற்றை விழைந்து கொண்டே இருக்கிறது மனம் "
"சிறிது வெளிச்சமே இதம் "
"எப்போதும் எதிலுமே தானாக நிகழ்வதின் அருமை வேறெதிலும் இல்லை"
"ஒரு முதிர்ந்த கனிவு எப்போதுமே ஆதரவுதான், எவ்வளவோ நிகழ்த்துகிறது
அது”.
"ரொம்ப நாளைக்கப்புறம் பிடித்த வண்ணத்துப்பூச்சியை இன்னொரு கைக்கு
நானடைந்த சந்தோசத்துடன் மாற்றிவிட முடியவில்லை, மாற்றிவிட முடிகிறவர்கள்
பாக்கியவான்கள் "
வண்ணத்துப்பூச்சியை மெல்பன் வாசகர்வட்டத்தில் பலரின் கைகளில் அதே
பரவசத்துடன் மாற்றி விட்டார் வண்ணதாசன் . சின்னுவின் வாசிப்பு அனுபவ பகிர்வை
சகோதரி ஜீவிகா தன் யாழ்ப்பாணத் தமிழில் யாழ் இசைபோல, உணர்வோடு பகிர்ந்ததும் பட்டாம்பூச்சி
கடத்தும் முயற்சியே!
சின்னுவை பார்த்து நலமா என கேட்கச் செல்லும் ஓர் அன்பு
மனம் படும் பாடே கதை.
உடன் நாம் பயணிக்கும் போது வண்ணதாசன் கல்யாண்ஜியாக ஒவ்வொரு அடியையும் மிக
ரசனையுடன் எடுத்துவைக்கிறார். நாமும் கன்றுக்குட்டிக்கு முதுகு சிலிர்ப்பது
போல சிலிர்த்துக்கொண்டே நடக்கவேண்டியுள்ளது .
ஒரு சாயங்காலத்திற்குள் உருட்டப்படுவதற்காக, ஆயுள் முழுவதும் கஷ்டப்பட்டு
ஒரு மலையில் ஏறவேண்டுமா? எனும் அவரின்
கேள்வியில் தொங்குகிறது நம் வாழ்க்கை.
சின்னு வாசிப்பில் அவரோடு இணக்கமாக பயணித்த உணர்வே,பக்கங்கள்
புரட்டும் போது நம் வாழ்வும் புரட்டப்படுகிறது.
அன்பெனும் மெல்லிய இழையில் பின்னப்பட்ட வண்ணதாசன் எழுத்துக்கள் உணர்வு
பூர்வமாக பரவசமூட்டியதை வாசித்தே உணர வேண்டும்.
நீங்களும் பயணித்துப்பாருங்கள் .
( மெல்பன் வாசகர் வட்டத்தில்
சமர்ப்பிக்கப்பட்டது)
1 comment:
சாலை விபத்தில் பலியாகிப் போன நண்பன் அ .வடிவேல் ஹோசிமினின் கவிதையை யாரோ காட்சி படுத்தியுள்ளனர்.
நண்பர்களே முடிந்தால்
சு. வெங்கடேசன் இடம் இதை அனுப்புங்கள், இதை பகிருங்கள்
"எதிர் வருபவர் /எவராயிருப்பினும்....என்ற கவிதை.🙂
( பின் குறிப்பு இந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதை)
Post a Comment