அஞ்சலிக்குறிப்பு: யுகமாயினி சித்தன் கலை, இலக்கியத்தில் பல்துறை ஆற்றல் மிக்க படைப்பாளி யுகமாயினி சித்தன் தமிழக - இலங்கை - புகலிட எழுத்தாளர்களின் உறவுப்பாலமாக திகழ்ந்தவரும் விடைபெற்றார் - முருகபூபதி


 "பல மொழிகளிலும் ஒருவரது படைப்பு மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவில் வெளியாவதும் ஒரு வகையில் படைப்பாளிக்கு கிட்டும் அங்கீகாரம்." எனச்சொன்னார்  நாமக்கல் கு. சின்னப்பபாரதி. என்னருகில் அமர்ந்திருந்த யுகமாயினி சித்தன் உடனே அதனை மறுத்துரைத்தார்.
மொழிபெயர்ப்பில் ஒரு நாவல் வெளியானால் அதனை இலக்கிய அங்கீகாரம் என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு நாவல் சர்வதேச தரத்தில் எழுதப்பட்டால் மாத்திரமே அதற்கு அங்கீகாரம் தரமுடியும். ஒரு நாவல் இந்திய மொழிகளிலும் அய்ரோப்பிய மொழிகளிலும் வெளியாகிவிட்டால் , அந்தப்படைப்பு உன்னதமானது, தரமானது, உலக அங்கீகாரம் பெற்றது என்ற முடிவுக்கு வந்துவிடலாமா?” எனக்கேட்டார் சித்தன்.
சின்னப்ப பாரதி நிமிர்ந்து அமர்ந்தார்.
ஒரு நாவல்,  அந்தநாவலின் படைப்பாளியின் தாய்மொழியில் எழுதப்பட்டு அதனை பிறமொழி வாசகருக்கு அறிமுகப்படுத்துவதற்காக ஒரு மொழிபெயர்ப்பாளர்  பிறமொழியில் தரமுனைவதுகூட அங்கீகாரம்தான். மொழிபெயர்ப்பாளர் அந்தப்படைப்பை மொழிபெயர்க்கவிரும்பியதனால்தானே பிறமொழி வாசகனுக்கு அந்தப்படைப்பு கிடைக்கிறது. அத்துடன் மொழிபெயர்ப்புக்கு தகுதியான படைப்பு என்ற சிந்தனை மொழிபெயர்ப்பாளரிடம் இருப்பதனால் அவர் குறிப்பிட்ட படைப்பை மொழிபெயர்க்கின்றார். ஒருவகையில் இது ஒரு அங்கீகாரம்தான்.” என்றார் சின்னப்பபாரதி.
 அய்யா,  எத்தனை படைப்புகளும் மொழிபெயர்க்கப்படலாம்,  ஆனால்,  அவை சர்வதேச தரத்திற்கு உயர்ந்திருக்கிறதா? என்பதுதான் எனது கேள்வி.” எனக்கேட்ட  சித்தன், சற்று அட்டகாசமாகவும் சிரித்தார்.
அந்தச்சிரிப்பை இனி நாம் கேட்கமுடியாமல் நிரந்தரமாக மௌனித்துவிட்டார் எங்கள் சித்தன்.
மேற்குறிப்பிட்ட உரையாடல் சில வருடங்களுக்கு முன்னர் தமிழகம் நாமக்கல்லில் இலக்கிய நண்பர் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி அவர்களின் இல்லத்தில் ஒரு மதியவேளையில் நடந்தது.
சித்தனை அன்றுதான் முதல் முதலில் சந்தித்தேன். எனது நாமக்கல்  வருகை அறிந்து,    கோயம்புத்தூரிலிருந்து தேடிக்கொண்டு வந்துவிட்டார்.
சித்தன் ஆங்கில இலக்கிய பரிச்சயம் மிக்கவர். பலர் தமிழில் மொழிபெயர்த்த பல மேலைத்தேய மற்றும் ஆபிரிக்க  இலக்கியங்களை ஏற்கனவே ஆங்கில மூலம் படித்திருப்பவர். மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபடுபட்டவர். (சித்தனின் மொழிபெயர்ப்புக்கூட  புகலிட நாட்டில்  வதியும் ஒருவரது பெயரில் வெளியாகியிருப்பது எனது காதில் விழுந்த வியப்பான தகவல்) அவர் சில நல்லமொழிபெயர்ப்புகளை குறிப்பிட்டார். எனினும் தமிழில் குறிப்பிட்டுச்சொல்லும்படியான சர்வதேச தரத்தில் அமைந்த நாவல்கள் எதுவும் இன்னமும் வரவில்லை என அன்று  தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் சின்னப்பபாரதிக்கு சித்தனின் கருத்துக்கள் எரிச்சல் ஊட்டியதையும் அவதானித்தேன். அவர் திடீரென எழுந்து,                                                       மதியமாகிவிட்டது. சாப்பிட்டுவிட்டு பேசுவோமா?” என்றார். மதிய உணவருந்தும்போதும் சித்தன் விட்ட இடத்திலிருந்து தனது வாதத்தை வலியுறுத்தினார்.
முதலில் சாப்பிடுங்கய்யா. அதன் பிறகு பேசுவோம்என்று சின்னப்ப பாரதி சொன்னபிறகே சித்தன் அமைதியடைந்தார்.
மதிய உணவின்பின்னரும் விவாதம் தொடர்ந்தது. தமிழ்நாவல் இலக்கியம்  நூற்றாண்டை கடந்திருந்தபோதிலும் இதுவரையில் தமிழில் குறிப்பிடும்படியான சர்வதேச தரம்வாய்ந்த நாவல்கள் வெளியாகவே இல்லை என்பதையே சித்தன் தொடர்ந்து வலியுறுத்தி வாதிட்டுக்கொண்டிருந்தார்.
ஒருவரது படைப்புகள் எத்தனை மொழியிலும் வரலாம். அந்தப்பட்டியல் மாத்திரம் அவற்றின் மூல ஆசிரியரின் தரத்தை தீர்மானிக்காதுஎன்றார்.
2012  இல் தமிழ்நாட்டில் வெளியாகியிருக்கும் பூமணியின் அஞ்ஞாடி என்ற பெரிய நாவல் தன்னைப்பொறுத்தவரையில் சர்வதேச தரத்தில்வைத்து ஓரளவு--- ஓரளவுதான் பேசக்கூடிய நாவல். அதனை படியுங்கள் என்றும் சித்தன் சொன்னார்.
அன்று மாலை சித்தனுடன் நாமக்கல்லிலிருந்து புறப்பட்டு, ஈரோடு வழியாக கோயம்புத்தூர் சென்று,  இரவு அவரது இல்லத்தில் தங்கியிருந்து மறுநாள் காலை கோவை ஞானியிடம் வந்து,  அதன் பின்னர் சென்னை திரும்பி, அடையாறில் தமிழச்சி சுமதி தங்கபாண்டியனையும் சந்தித்தோம். அந்தப்பயணத்தில் கவிஞர் அக்கினிபுத்திரனையும் சந்திக்க ஏற்பாடுசெய்தார்.
இரண்டு மூன்று நாட்கள் என்னுடன் பயணித்தவர்,  நீண்டபொழுதுகள் உரையாடியவர்.  அவ்வப்போது தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் தொடர்புகொண்டவர் சித்தன்.
இன்று அவரும் இல்லையென்றாகிவிட்டதும் மனதில் வெறுமை தோன்றுகிறது. கடந்துகொண்டிருக்கும் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து அண்மிக்கும் இவ்வாண்டிற்கான இறுதிப்பகுதிவரையில் இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழர் புகலிடம் பெற்ற நாடுகளிலும் பல கலை, இலக்கியவாதிகளை அடுத்தடுத்து இழந்துவருகின்றோம்.
எஞ்சியிருக்கப்போவது அவர்கள் பற்றிய நினைவுகள் மாத்திரமே!
சித்தனை கலை, இலக்கியத்துறையில் ஒரு சகல கலா வல்லவன் என்றுதான் சொல்லவேண்டும். அவரால் இலக்கியம் படைக்கமுடியும். ஓவியம் தீட்டுவார். கேலிச்சித்திரம் வரைவார். இதழ்கள், நூல்களுக்கு அட்டைப்படங்கள் வடிவமைப்பார். அழகாக மொழிபெயர்ப்பார். செம்மைப்படுத்துவார். ஒளிப்படக்கலைஞர். நாடகம் எழுதுவார். நடிப்பார். இத்தனைக்கும் மத்தியில் தொடர்பாடலை நன்கு பேணுவார். இவ்வாறு பல தளங்களில் இயங்கியிருக்கும் அவரிடம் வாதத்திறமையும் குடியிருந்தது.
சில திரைப்படங்களில் துணை ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருப்பவர். சுறுசுறுப்பாக இயங்குபவர்.
சிட்னியிலிருந்த  மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவர்கள் சென்னை சென்று,  மித்ர பதிப்பகம் தொடங்கி நூல்களை வெளியிட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் சித்தன் அவருக்கு அறிமுகமாகியதைத்தொடர்ந்து, 2007 ஆம் ஆண்டு முதல் சித்தன் யுகமாயினி என்னும் மாத இதழைத்தொடங்கினார்.
அதற்கு அந்தப்பெயரைச்சூட்டியதும் எஸ்.பொ. அவர்கள்தான். எஸ்.பொ.வும் மாயினி என்னும் பெயரில் ஒரு நாவல் எழுதியுள்ளார்.
சித்தன்,  யுகமாயினி இதழை தமிழகத்திற்குள் மாத்திரம் வரையறுத்துக்கொள்ளாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் அய்ரோப்பிய நாடுகளிலிருந்து எழுதிக்கொண்டிருப்பவவர்களுக்கும் களம் வழங்கும் நோக்கத்துடன் வெளியிட்டார். எஸ். பொ. நிறுவக ஆசிரியராகவும், அதன் ஆலோசனைக்குழுவில் இந்திரா பார்த்தசாரதி, சிற்பி, இன்குலாப், வி.கே.டி பாலன் (தமிழகம்) செங்கை ஆழியான்                     ( இலங்கை) தர்மகுலசிங்கம் (டென்மார்க்) ஆகியோரையும் இணைத்துக்கொண்டார்.
யுகமாயினி இதழுக்குரிய பதாகையை எழுதியர் எஸ்.பொ. இவ்வாறு அது அமைந்திருந்தது:  முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம் கலகத்தில் மலரும் சுதந்திரம்.
அவுஸ்திரேலியாவிலிருந்து  நானும் நடேசன், கிருஷ்ணமூர்த்தி உட்பட சிலரும் யுகமாயினியில் எழுதியிருக்கின்றோம். எனது சொல்ல மறந்த கதைகள் தொடர் யுகமாயினியில்தான் முதலில் வெளியானது.
சிட்னியில் வதியும் இலக்கிய சகோதரி யசோதா பத்மநாதன் யுகமாயினி இதழ்களை தருவித்து எமக்கும் விநியோகித்தார். தரமான இதழ். சிற்றிதழ்களுக்கு நேரும் துன்பியல் யுகமாயினிக்கும் நேர்ந்து சில வருடங்களில் மறைந்துவிட்டது.
திராவிட இயக்கத்தின் பேச்சாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தமிழக தொலைக்காட்சி ஒன்றில் வாராந்தம் தான் படித்த இதழ்கள், நூல்கள், படைப்புகள் குறித்து பேசி வந்த சமயத்தில் ஒரு தடவை யுகமாயினி இதழில் வெளியான எனது சொல்லமறந்த கதைகள் தொடரில் இடம்பெற்ற கண்ணுக்குள் சகோதரி என்ற அங்கம் பற்றி விதந்து தனது நயப்புரையை வழங்கியதைக்கண்ணுற்ற சித்தன், தாமதமின்றி என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு அச்செய்தியை பகிர்ந்து மகிழ்ச்சியடைந்தார்.
அதனையடுத்து அந்த அங்கத்தின் தொடர்ச்சியாக மேலும் ஒரு பதிவை நான் எழுதியனுப்பியதும் அதனை தமிழகத்தில் வெளியான தளம் என்னும் இலக்கியச்சிற்றேட்டில் வெளிடுவதற்கு ஆவன செய்தார்.
தளம் இதழை நடத்தியவர் பா. ரவி. இவர் மூத்த எழுத்தாளர் அகிலனின் மருமகனாவார். அதன்பின்னர் பா. ரவி அவர்களுடன் இன்றளவும் எனக்குத் தொடர்பு நீடிக்கிறது. சென்னைப்பயணத்தில் திருவல்லிக்கேணியில் பா. ரவி அவர்களுடனும் மற்றும் சில இலக்கியவாதிகளுடனும் ஒருநாள் இலக்கியச்சந்திப்புக்கும் சித்தன் ஏற்பாடு செய்திருந்தார்.
கோயம்புத்தூரில் கோவை ஞானியுடன் மாலை வேளை உலாத்தலுக்கும் உடன் வந்தார்.
2011 ஆம் ஆண்டில் நாம் கொழும்பில் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக அதற்கு முன்னர் 2010 இல் அதுபற்றி ஆலோசித்தபோது ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்தவர் சித்தன். எமது ஏற்பாடுகளை முதலில் வரவேற்றவர்தான் எஸ்.பொ. இடையில்  மனம்மாறிய எஸ். பொ., சென்னையில் சில ஊடகங்களுடன் தொடர்புகொண்டு அதற்கு முதல்கொள்ளி வைக்க முனைப்புக்கொண்டதை அறிந்து அவருடன் வாதித்தவர் சித்தன்.
இதனால் அவர்கள் இடையே கருத்துமோதல்களும் வெடித்தன. எஸ்.பொ. , சென்னை  ஊடகத்துறைசார்ந்தவர்களையும்  மற்றும் சினிமா - அரசியல் பிரபலங்களையும்  அழைத்து கண்டனக்கூட்டம் நடத்துவதற்கு எத்தனித்தபோது எனக்கு தகவல் தந்தவரும் சித்தன்தான்.
இதுதொடர்பாக எஸ்.பொ.வுடன்  பேசுவதற்கு  பல முறை முயன்றும் எஸ்.பொ. இணைப்புக்கு வரவேயில்லை. இந்த விவகாரத்தினால், கோவை ஞானி,  பொன்னீலன், தி. க. சிவசங்கரன் ஆகியோர் உட்பட பல ஊடகங்களுடனும் நான் உரையாடுவதற்கு  ஏற்பாடுகளை செய்தவர் சித்தன்.
மாநாட்டில் வெளியிடப்பட்ட மலரிலும் கட்டுரைக்கோவையிலும் சில தமிழக எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வெளிவருவதற்கும் தூண்டுகோளாக இருந்த சித்தன்,  அந்த மலரிலும்  ஒரு கட்டுரை எழுதினார்.
இவ்வாறு நெஞ்சத்திற்கு நெருக்கமாக இருந்தவரின் தனிப்பட்ட வாழ்வு குறித்து எனக்கு சற்று ஏமாற்றமும் கவலையும் இருந்தது. தன்னைப்பற்றிய - தனது எதிர்காலம் பற்றிய எந்தச்சிந்தனையுமற்று கலை - இலக்கியமே மூச்சென வாழ்ந்தவர். அவரைச்சுற்றி இலக்கிய நூல்களும் இதழ்களும் இருக்கும். அவர் இருக்கும் இடத்தில் யாராவது ஒரு கலைஞனோ அல்லது இலக்கியவாதியோ இருப்பார்.
அவரது பேக்கில் எப்பொழுதும் ஏதும் ஒரு  புத்தகமும் ஒரு  சிகரட் பக்கட்டும் இருக்கும்.
இறுதியாக சில வருடங்களுக்கு முன்னர்  நான், சித்தனைச்  சந்தித்தபோது ஒரு திரைப்படத்தை எடுக்கவிருப்பதாகவும், அதற்கான திரைக்கதை வசனமும் எழுதி,   படப்பிடிப்பிற்கான இடங்களும் தேர்வாகி, தயாரிப்பாளர்களை தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்.  அடையாறில் ஒரு ஹோட்டலில் இந்திய தேசியக்கட்சி ஒன்றின்  அரசியல்  பிரமுகருக்கு என்னை அறிமுகப்படுத்தியவாறு தனது திரைப்பட முயற்சி பற்றிப் பேசினார்.
ஒரு குறிப்பிட்ட துறையில் மாத்திரமே அவரது கவனம் சிதறாமல் குவிந்திருக்குமாயின், அவர் பெரிய உச்சங்களை தொட்டிருப்பார் என்பது  எனது நம்பிக்கை!  இறுதிக்காலத்தில் ஒரு ஆங்கில ஊடகத்தையும் தொடங்கியிருந்தார். இலக்கிய நண்பர் நடேசனின்  400 பக்கங்கள் கொண்ட அசோகனின் வைத்தியசாலை நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டுத்தான் சித்தன் விடைபெற்றுள்ளார்.
நடேசன் தனது நாவலை எனக்குச் சமர்ப்பித்துள்ளார். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை எழுதிய சித்தனுக்கு அதனை சமர்ப்பிக்கவிருக்கிறார்.
இதுவும்   விதிப்பயன்தானா !!??
சித்தத்தில் கலந்திருக்கும் சித்தனுக்கு  ஆழ்ந்த இறுதி அஞ்சலி.
--------------0-----------
  
-->



No comments: