உலகச் செய்திகள்


இன்று முதல் அமுலுக்கு வருகிறது ஈரான் மீதான பொருளாதார தடை

அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி ; 10 ற்கும் மேற்பட்டோர் காயம்

 ஏமன் போரில் 58 பேர் பலி

தீவிரவாத தாக்குதலில் 12 பேர் பலி

அமெரிக்க இடைத்தேர்தல் ; பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சி வசம் ; செனட் சபையை தக்க வைத்தது குடிரசுக் கட்சி

பட்டாசு வெடித்ததற்காக 1534 பேர் மீது வழக்குப் பதிவு


இன்று முதல் அமுலுக்கு வருகிறது ஈரான் மீதான பொருளாதார தடை

05/11/2018 ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையானது இன்று முதல் அமுலுக்கு வருகின்ற நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொது மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 
அமெரிக்காவின் இந்த பொருளாதார தடையின் மூலமாக ஈரனின் எணணெய் ஏற்றுமதி, வங்கி சேவைகள், கப்பல் நிறுவனங்கள், விமான சேவை உள்ளிட்ட 700 வகையான பாதிப்புகள் ஏற்படும்.
மேலும் அமெரிக்காவின் 100 மிகப்பெரிய நிறுவனங்கள் ஈரானில் இருந்து வெளியேறும். அதன் காரணமாக ஈரான் பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்படும்.
ஆகவே அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக தெக்ரானில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடி அமெரிக்காவுக்கு எதிரான கோ‌ஷங்களை எழுப்பியதுதடன் மேலும் பல நகரங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந் நிலையில் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்த தடையை ஏற்க மறுத்த இவர்கள் ஈரானுடனான வர்த்தகத்தை டாலர் இன்றி வேறு விதமான பணபரிமாற்றத்துடன் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 


அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி ; 10 ற்கும் மேற்பட்டோர் காயம்
08/11/2018 அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள மதுபானசாலையில் மர்ம நபர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட மர்மநபரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 10 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு மதுபான விடுதியில் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள பார்டர்லைன் பாரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 

 ஏமன் போரில் 58 பேர் பலி

09/11/2018 ஏமனில் அரச ஆதரவு படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏமன் நாட்டின் ஜனாதிபதி அப்துரப்பா மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த 2015 ஆண்டு உள்நாட்டுப்போர் ஆரம்பமாகி நீடித்து வருகின்றது.
இதில் ஜனாதிபதி அப்துரப்பா படைகளுக்கு சவுதி கூட்டுப்படைகள் ஆதரவு வழங்கி வருகின்றன.
அங்குள்ள 6 இலட்சம் மக்கள் வசித்து வரும் செங்கடல் துறைமுக நகரமான ஹொதய்தா, 2014 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. 
அந்த நகரை மீட்பதற்காக ஜனாதிபதி ஆதரவு படைகள், சவுதி கூட்டுப்படைகள் உதவியுடன் களத்தில் குதித்து கடந்த ஒரு வாரமாக கிளர்ச்சியாளர்களுடன் போரிட்டு வருகின்றனர். ஒரு பக்கம் தரை வழி தாக்குதலும், இன்னொரு பக்கம் வான்தாக்குதலும் நடந்து வருகிறது. 
இந் நிலையில் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேர் கொல்லப்பட்டதுடன் ஜனாதிபதி ஆதரவு படையைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் அந் நகரை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்தும் படையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 

தீவிரவாத தாக்குதலில் 12 பேர் பலி

05/11/2018 சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் மேற்கொண்ட கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த தாக்குதல் காரணமாக 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையில் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து மோதல் இடம்பெற்று வருகின்றது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி அமெரிக்க இடைத்தேர்தல் ; பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சி வசம் ; செனட் சபையை தக்க வைத்தது குடிரசுக் கட்சி

07/11/2018 அமெரிக்க இடைத் தேர்தலில் ஜனநாயக கட்சி, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியுள்ளது என்றும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கம் வகிக்கும் குடிரசுக் கட்சி, செனட் சபையின் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
அமெரிக்க இடைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இந்த வாக்கெடுப்பானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது இரு வருட காலப் பதவிக் காலம் தொடர்பான மக்களின் கருத்தை அறியும் ஒரு வாக்கெடுப்பாக நோக்கப்படுகிறது.
அத்துடன் இது அவரது எஞ்சியுள்ள இரு வருட பதவிக் காலம் தொடர்பில் தீர்மானிப்பதாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி தேர்தல் மூலம் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான அனைத்து 435 ஆசனங்கள் மற்றும் செனட் சபையின் 100 ஆசனங்களின் 35 ஆசனங்கள் என்பவற்றுக்கான தெரிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 
மேலும் 50 மாநிலங்களில் 36 மாநிலங்களுக்கான ஆளுநர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 
இந் நிலையில் நடைபெற்று முடிந்த அமெரிக்க இடைத் தேர்தலில், ஜனநாயக கட்சி, பிரதிநிகள் சபையைக் கைப்பற்றியுள்ளது என்றும், குடியரசுக் கட்சி, செனட் சபையில் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டது எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 
அத்துடன் பிரதிநிதிகள் சபையில் தேவையான 23 இடங்களைக் கைப்பற்றி ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெரும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் விர்ஜினியா, ஃப்ளோரிடா, பென்சில்வேனியா, கொலராடோ ஆகிய இடங்களில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதே நேரத்தில் 100 பேர் இருக்கும் செனட் சபையில், குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றிருப்பதாகவும், இண்டியானா மற்றும் வடக்கு டகோடா மாகாணங்களில் ஜனநாயக கட்சியை, குடியரசு கட்சி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. 
எனினும் தென்னஸி மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் தொடர்ந்து இழுபறியான நிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 


பட்டாசு வெடித்ததற்காக 1534 பேர் மீது வழக்குப் பதிவு

07/11/2018 இந்தியாவின், தமிழகத்தில் நேரக் கட்டுப்பாட்டினை மீறி தீபாவளி நாளில் பட்டாசு வெடித்த குற்றச்சாட்டின் கீழ் 1534 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இம் முறை தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க இந்திய உச்ச நீதிமன்றம் காசு மாசுபடுவதை கருத்திற் கொண்டு தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மாத்திரம் அனுமதி வழங்கியது. 
இந் நிலையில் தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணிமுதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவத்ததுடன், இந்த உத்தரவை மீறி ஏனைய நேரங்களில் பட்டாசு வெடித்தால் 6 மாத சிறை தண்டனை கிடைக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.
இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை மீறி நேரக் கட்டுப்பாட்டினை மீறி பட்டாசு வெடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இன்று காலை வரை 1534 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் நெல்லை, மதுரை, தஞ்சை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 219 பேர் கைதுசெய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 


No comments: